கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
மூன்று பரிசுகள்
நல்ல மனம் கொண்ட ஒரு மன்னன் அந்த நகரத்தில் இருந்தான். மக்கள் அனைவரும் அவன் மீது அன்பு செலுத்தினார்கள். அவனைப் பெரிதாக மதித்தார்கள்.
மிகவும் வறுமையில் சிக்கிக் கடந்த ஒரு மனிதன் மட்டும் மன்னனை வெறுத்தான். அவனுடைய மோசமான நாக்கு மன்னனை கீழ்த்தரமாக எப்போதும் பேசிக் கொண்டே இருந்தது. இந்த விஷயம் நன்கு தெரிந்தாலும், மன்னன் அதைச் சகித்துக் கொண்டான்.
அந்த ஏழையைப் பற்றி மன்னன் தீவிரமாக சிந்தித்தான். மன்னனின் பணியாள் ஒரு நள்ளிரவு நேரத்தில் அந்த ஏழையின் வீடு தேடி வந்து, ஒரு மூட்டை தானிய மாவு, ஒரு மூட்டை சோப்பு, ஒரு மூட்டை சர்க்கரை ஆகியவற்றை கொண்டு வந்து அங்கு வைத்து விட்டு சொன்னான்:
‘இந்த பரிசுகளை மன்னர் உனக்காக கொடுத்து அனுப்பினார்.’
அதைக்கேட்டு அந்த வறுமையில் சிக்கிக் கிடக்கும் மனிதன் உற்சாகமாகி விட்டான். தன்னுடைய அன்பைப் பெறுவதற்காக மன்னன் அந்தப் பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பியிருப்பதாக அவன் நினைத்தான். ஆணவத்துடன் அவன் பாதிரியாரைத் தேடிச் சென்றான். மன்னன் செய்திருக்கும் காரியத்தை அவன் அவரிடம் விளக்கினான்.
‘மன்னன் என் மனதில் இடம் பிடிக்க விரும்புற விஷயத்தை உங்களால இப்போ புரிஞ்சிக்க முடியுதா?’
அதற்கு பாதிரியார் சொன்னார்:
‘மன்னர் எவ்வளவு பெரிய புத்திசாலி! உனக்கு எதுவுமே புரியல. அவர் பொருட்கள் மூலம் உனக்கு விஷயத்தைப் புரிய வைக்க நினைக்கிறார். தானிய மாவு உன்னுடைய காலியாகக் கிடக்கும் வயிறுக்கும், சோப்பு உன்னுடைய அழுக்கு படிந்த தலைமுடிக்கும், சர்க்கரை கசப்பு நிறைந்த உன்னுடைய நாக்கை இனிப்பு உள்ளதா மாற்றுவதுக்கும் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கு...’
அன்று முதல் அந்த ஏழைக்கு தன்னைப் பற்றி நினைக்கும்போது வெட்கமாக இருந்தது. மன்னன் மீது அவன் கொண்ட வெறுப்பு மேலும் அதிகமானது. அதை விட அதிகமான வெறுப்பு அவனுக்கு பாதிரியார் மீதுதான். மன்னனின் மனதை விளக்கி சொன்னவர் பாதிரியார்தானே!
எது எப்படியோ, அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த ஏழை அமைதியான மனிதனாகி விட்டான்.
நாகரீகம்
மூன்று நாய்கள் வெயிலில் நின்றவாறு ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருந்தன.
கனவு கண்டதைப் போல முதல் நாய் சொன்னது:
‘நாய்கள் நிறைந்திருக்கும் இந்தக் கால கட்டத்தில் நாம வாழ்றது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம். கடலுக்கு அடியிலும், கரையிலும், வானத்திலும் நாம் எவ்வளவு சாதாரணமா உலாவிக் கொண்டு இருக்கிறோம்! நாய்கள் சவுகரியமா இருக்கணும்ன்றதுக்காக நம்முடைய கண்களுக்கும் காதுகளுக்கும் மூக்குகளுக்கும் தேவையான கண்டுபிடிப்புகளைப் பற்றி கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க.’
இரண்டாவது நாய் சொன்னது:
‘நாம் கலைகள் விஷயத்தில் மிகவும் அக்கறை உள்ளவர்கள். நம்முடைய முன்னோர்களை விட தாள லயத்துடன் நாம் நிலவைப் பார்த்து குரைக்கிறோம். நீரில் நம்மை நாமே பார்க்குறப்போ, நம்முடைய உடல்ல இருக்குற ஒவ்வொண்ணையும் முன்பை விட தெளிவா நாம பார்க்குறோம்.’
இப்போ மூன்றாவது நாய்:
‘என்னை மிகவும் கவர்ந்தது எது தெரியுமா? நாய்களுக்கு மத்தியில் இருக்குற ஒரு அமைதித் தன்மை. அதுதான் என் மனதை ரொம்பவும் சந்தோஷப்படுத்துற ஒரு விஷயம்.’
அப்போது அந்த நாய்கள் சுற்றிலும் கண்களை ஓட்டின. சற்று தூரத்தில் நாய் பிடிக்கும் மனிதன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் அந்த நாய்களை நெருங்கிக் கொண்டிருந்தான்.
அவ்வளவுதான் –
மூன்று நாய்களும் வேகமாக பாய்ந்து தெருவில் ஓட ஆரம்பித்தன. ஓடிக் கொண்டிருக்கும்போது, மூன்றாவது நாய் சொன்னது:
‘கடவுளே! உயிர் வேணும்னா ஓடிடு. நம்மைப் பிடிக்கிறதுக்காக நாகரீகம் பின்னாடி வந்து கொண்டிருக்கு!
நடனப் பெண்ணின் மனம்
மன்னனின் சபைக்கு பாடகர்களுடன் ஒரு நடனப் பெண்ணும் வந்திருந்தாள். சபை அவளை வரவேற்றது. புல்லாங்குழல், வீணை ஆகியவற்றின் இசைக் கேற்ப அவள் நடனம் ஆடினாள்.
பலவகைப்பட்ட நடனங்களும் அங்கு அரங்கேறின. நெருப்பு ஜ்வாலைகளின் நடனம், வாள், ஈட்டி ஆகியவற்றின் நடனம், நிர்மலமான வானத்தின் - நட்சத்திரங்களின் நடனம், கடைசியாக காற்றிலாடும் மலர்களின் நடனம்...
அதற்குப் பிறகு மன்னனின் சிம்மாசனத்திற்கு முன்னால் உடலை மட்டும் குனிந்து கொண்டு அவள் தொழுதவாறு நின்றாள். மன்னன் மேலும் சற்று அருகில் வரும்படி அவளிடம் சொன்னான்:-
‘அழகிய பெண்ணே! உடல் வனப்பு, சந்தோஷம் ஆகியவற்றின் வாரிசே! உன் திறமைகள் உனக்கு எங்கிருந்து கிடைத்தன? தாளலயங்களுக்கேற்ப நீ எப்படி நடனமாடுகிறாய்?’
மன்னனை வணங்கிய அவள் அதற்கு பதில் சொன்னாள்:
‘கருணையும் அறிவும் கொண்ட மன்னா! உங்களின் கேள்விக்கான பதில்களை எனக்கு கூற தெரியவில்லை. ஒன்று மட்டும் எனக்கு தெரியும். தத்துவ ஞானிகளின் மனம் தலையில் இருக்கிறது. கவிஞர்களின் மனம் இதயத்தில். பாடகர்களின் மனம் தொண்டையில். நடனப் பெண்ணின் மனம் அவளின் முழு உடலிலும்....’
சிலையின் விலை
மலைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஆதிவாசி மனிதனிடம் கை தேர்ந்த ஒரு சிற்பி செதுக்கிய சிலை இருந்தது. அவனுடைய வீட்டு வாசலில் அந்த சிலை தலை குப்புற மண்ணில் கிடந்தது. அவன் அதைப் பற்றி கவலையே படவில்லை.
அந்தச் சிலையைப் பார்த்த ஒரு நகரத்து மனிதன் அதைப் பற்றி அவனிடம் விசாரித்தான்:
‘இந்த சிலையை விற்பதற்கு நீ தயாரா?’
‘இந்த அழுக்கு படிந்த, மங்கிப் போன சிலையை யாரு வாங்குவாங்க?’
'இந்த சிலைக்கு நான் ஒரு வெள்ளி காசு தர்றேன்.'
அதைக்கேட்டு அந்த ஆதிவாசி ஆச்சரியப்பட்டான். மகிழ்ச்சியுடன் அந்தச் சிலையை நகரத்திலிருந்து வந்த அந்த மனிதனுக்கு அவன் அளித்தான்.
சில முழு நிலவு நாட்களுக்குப் பிறகு அந்த மலை வாழ் மனிதன் நகரத்தைப் பார்ப்பதற்காகச் சென்றான். அவன் தெருக்கள் வழியாக நடந்து சென்றான். ஒரு கடையின் முன்னால் ஆட்கள் கூட்டமாக நின்றிருந்தனர். ஒரு ஆள் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்:
‘வாங்க... உள்ளே வாங்க... உலகத்தில் இருக்குறதுலயே அற்புதமான, அழகான சிலை! ஒரு தடவை வந்து பாருங்க... பார்த்து ரசிங்க... பார்க்க ரெண்டு வெள்ளி காசுகள் தான் கட்டணம்!
இரண்டு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து மலை வாழ் மனிதன் உள்ளே நுழைந்தான். உள்ளே அவன் பார்த்தது என்ன தெரியுமா! ஒரு வெள்ளி காசுக்கு அவன் விற்ற அதே சிலைதான்.