
ஏழை கவிஞனும் பணக்காரனான முட்டாளும் சாலையில் சந்தித்துக் கொண்டார்கள். இரண்டு பேரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். தங்களின் சந்தோஷமற்ற தன்மையைத்தான் அவர்கள் பெரும்பாலும் வெளிப்படுத்தினார்கள்.
அந்த சாலை வழியாக கடவுளின் தூதர் அப்போது சென்றார். அவருடைய கைகள் கவிஞன், பணக்காரன் இருவரின் தோள்களையும் தொட்டன. அப்போது ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு விஷயம் நடந்தது. அவர்கள் இருவரின் சொத்துக்களும் ஒருவருக்கொருவர் கை மாறியது.
அவர்கள் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மையில் நடந்தது இதுதான். கவிஞன் தன் கைகளைப் பார்த்தான். காய்ந்த மணலைத் தவிர அங்கு எதுவும் இல்லை.
முட்டாள் கண்களை மூடினான். தன் இதயத்தில் மேகங்கள் வேகமாக நீங்கிக் கொண்டிருப்பதை மட்டும்தான் அவனால் உணர முடிந்தது.
பெண் ஆணிடம் சொன்னாள்:
‘நான் உங்களைக் காதலிக்கிறேன்.’
ஆண் அதற்கு பதில் சொன்னான்:
‘உன் காதலுக்குக் காரணமான ஏதோ ஒண்ணு என் இதயத்தில் இருக்கு.’
அப்போது பெண் கேட்டாள்:
‘உங்களுக்கு என் மேல காதல் இல்லையா?’
ஆண் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான். எதுவும் அவன் சொல்லவில்லை.
அந்த நிமிடமே பெண் உரத்த குரலில் சொன்னாள்: ‘நான் உங்களை வெறுக்கிறேன்.’
‘உன் வெறுப்புக்குக் காரணமான ஏதோ ஒண்ணு என் இதயத்தில் இருக்கு’ - ஆண் பதில் சொன்னான்.
ஒரு மனிதன் ஒரு கனவு கண்டான். அவன் கண் விழித்ததும், தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆளைத் தேடிச் சென்றான். தன்னுடைய கனவை ஆராய்ந்து விளக்க வேண்டுமென்று அவன் கேட்டுக் கொண்டான்.
எதிர்கால பலன்களைக் கூறும் மனிதன் சொன்னான்:
‘நீங்கள் கண் விழித்திருக்கிறப்போ, காணுற கனவுகள் இருக்குமல்லவா? அந்தக் கனவுகளுடன் என்னைத் தேடி வாங்க. அவற்றின் அர்த்தத்தை நான் விளக்குகிறேன். ஏன் என்றால், நீங்க தூங்குறப்போ காணும் கனவுகள் என் அறிவுக்கும் உங்களின் செயலுக்கும் சொந்தமானவை அல்ல. நம் விருப்பப்படி நடக்கக் கூடியவையும் அல்ல.
பைத்தியங்கள் தங்கியிருக்கும் இடத்தின் பூந்தோட்டத்தில் நான் ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவனுடைய முகம் வெளிறிப் போயிருந்தது. எனினும், அந்த முகம் அழகானதாகவே இருந்தது.
பெஞ்சில் அவனுக்கு அருகில் போய் நான் உட்கார்ந்தேன். அவனைப் பார்த்து நான் கேட்டேன்: ‘நீங்க எதற்கு இங்கே இருக்கீங்க?’
அவன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தான். பிறகு சொன்னான்:
‘நீங்க கேள்வி கேக்குறதே சரியா இல்ல. இருந்தாலும் நான் சொல்றேன். என் தந்தைக்கு தன் வழியில் என்னைக் கொண்டு வரணும்னு ஆசை. என் மாமாவுக்கு தன் வழியில் என்னைக் கொண்டு வரனும்னு ஆசை. என் தாய்க்கு புகழ் பெற்ற என்னுடைய தாத்தாவைப் போல கொண்டு வரனும்னு ஆசை. என் சகோதரிக்கு தன்னுடைய மாலுமி கணவனைப் போல கொண்டு வரணும்னு ஆசை. என் சகோதரனுக்கு தன்னைப் போல மிகச் சிறந்த ஒரு விளையாட்டு வீரனா நான் வரணும்னு ஆசை. என் ஆசிரியர்களும் இதே மாதிரி என்னைப் பற்றி திட்டம் போட்டு வச்சிருக்காங்க. தத்துவ இயல் ஆசிரியர் என்னை தத்துவவாதியா ஆக்கணும்னு நினைக்கிறார். இசை ஆசிரியர் என்னை இசை வித்துவானாக ஆக்கணும்னு நினைக்கிறார். தர்க்கவியல் ஆசிரியர் என்னை தர்க்கவாதியா ஆக்கணும்னு நினைக்கிறார். ஒவ்வொருவருத்தரும் தாங்கள் கண்ணாடியில் பார்க்கும் முகத்தைப் போல தங்களின் பிரதிபலிப்பாக என்னை உருவாக்கிக் கொண்டு வரணும்னு பிடிவாதமா இருக்காங்க. அதனாலதான் நான் இந்த இடத்துக்கு வந்துட்டேன். இந்த இடம் ரொம்பவும் அமைதியா இருக்கு. ஒண்ணுமே இல்லைன்னாலும் நான் நானாக இங்கு இருக்க முடியுது.’
திடீரென்று அவன் என் பக்கம் திரும்பி கேட்டான்:
‘உங்களையும் இங்கே கொண்டு வந்துவிட்டது கல்வியும் மற்றவர்களின் அறிவுரைகளும்தானா? சொல்லுங்க....’
‘நான் வெறுமனே இந்த இடத்தைப் பார்க்க வந்திருக்கும் மனிதன். அவ்வளவுதான்.’
‘ஒ.... புரிந்து விட்டது. இந்த சுவருக்கு வெளியிலிருக்கும் பைத்தியங்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் ஒருவர் நீங்க.... அப்படித்தானே?’
கோடை காலத்தில் ஒரு நாள் ஆண் தவளை தன்னுடைய ஜோடியிடம் சொன்னது.
‘நம்முடைய இரவு நேர பாடல்கள் கரையில் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு தொந்தரவா இருக்குமோன்னு நான் பயப்படுறேன்.’
அதற்கு பெண் தவளை கேட்டது: ‘அவர்களின் பேச்சு கூட நம்முடைய பகல் நேரத்து அமைதியைக் கெடுக்கிறதே!’
‘நாம இரவு நேரத்துல நீண்ட நேரம் பாடிக் கொண்டிருக்கிறோம்ன்றதை மறக்கலாமா?’
‘அவர்கள் பகல் நேரத்துல நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்காங்க. உரத்த குரல்ல பேசுறாங்க. அந்த விஷயத்தை நாம மறந்துடக் கூடாது.’
‘இந்த இடத்தில் முழு அமைதியையும் கெடுக்கக் கூடிய கடவுள் கூட ஒதுக்கி வச்சிருக்கிற, அந்த குளத்துத் தவளைகளோட ஆரவாரம் எப்படி?’
‘அரசியல் கட்சி தலைவர்களையும், புரோகிதர்களையும், விஞ்ஞானிகளையும் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? அவர்கள் எல்லோரும் இந்தக் கரையில் இருந்து கொண்டு வானமே அதிர்கிற அளவுக்கு முழங்குறாங்களே! கொஞ்சம் கூட இனிமையே இல்லாத கரடு முரடான குரல்கள்ல....’
‘நாம இந்த மனிதர்களை விட நல்லவர்களா இருக்கணும். இரவு நேரங்களில் நாம அமைதியாக இருப்போம். நம்முடைய பாட்டுகளை நம்முடைய இதயங்களுக்குள்ளேயே நாம வச்சிக்குவோம். நிலவும் நட்சத்திரங்களும் நம்முடைய பாடல்களைக் கேட்க விரும்பினாலும் ஒண்ணோ ரெண்டோ மூணோ இரவுகளில் நாம அமைதியா இருப்போம்.’
‘ரொம்ப நல்ல விஷயம். நானும் அதற்கு சம்மதிக்கிறேன். ஈரமான உங்கள் இதயத்தின் பரந்த தன்மையை என்னால புரிஞ்சிக்க முடியுது.’
அன்று இரவு தவளைகள் வாயையே திறக்கவில்லை. அடுத்த இரவிலும் அதற்கடுத்த இரவிலும் அவை எந்த சத்தத்தையும் உண்டாக்கவில்லை.
மூன்றாவது நாள் குளக்கரையிலிருந்த வீட்டிலிருந்த வாயாடியான குடும்பத் தலைவி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு தன்னுடைய கணவனிடம் உரத்த குதலில் சொன்னாள்.’
‘கடந்த மூணு இரவுகளிலும் நான் உறங்கவேயில்லை. தவளைச் சத்தம் காதுல விழுந்து கொண்டிருந்தபோது நான் சுகமா தூங்கினேன். இப்போ என்னவோ நடந்திருக்கு. கடந்த மூணு இரவுகளா தவளைகள் சத்தமே போடல. உறங்க முடியாம நான் பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டேன்.’
அதைக் கேட்ட ஆண் தவளை பெண் தவளையைப் பார்த்து கண்களைச் சுருக்கியவாறு சொன்னது: ‘நாம அமைதியா இருக்குறது நம்மையும் பைத்தியம் பிடிக்க வைக்குதுல்ல?’
‘ஆமா... இரவு நேர அமைதி எவ்வளவு பயங்கரமானதா இருக்கு! ராம பாட்டை நிறுத்த வேண்டிய அவசியமே இல்ல. சுகத்தை விரும்புறவங்க தங்களின் அமைதியை சத்தத்தால நிறைக்கணும்.’
தவளைகளின் பாடல்களைக் கேட்டு நிலவும் நட்சத்திரங்களும் அவர்களை அழைத்தது காரணம் இல்லாமலா?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook