கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 13
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
வந்தது அமைதி
பூக்களுடன் காட்சியளித்த கிளை தனக்கு அருகிலிருந்த கிளையிடம் சொன்னது: ‘இன்றைய நாள் ரொம்பவும் மோசமா இருக்கும்போல இருக்கே!’
அதற்கு அருகிலிருந்த கிளை சொன்னது: ‘உண்மைதான். வெட்டித்தனமான நாள்தான்.’
அப்போது ஓரு குருவி அந்தக் கிளையில் வந்து உட்கார்ந்தது. இன்னொரு குருவி அருகிலிருந்த கிளையில் வந்து உட்கார்ந்தது.
குருவிகளிலொன்று ‘க்றீச் க்றீச்’ என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டு சொன்னது: ‘என் ஜோடி என்னை விட்டு போயிடுச்சு.’
‘என் ஜோடியும் என்னை விட்டு போயிடுச்சு. அவள் இனி திரும்பி வரப்போறது இல்லைதான். எதுக்கு அதை நெனைச்சுக் கவலைப்படணும்? இரண்டு குருவிகளும் திட்டுவதும் குறை கூறுவதுமாக இருந்தன. அவை இரண்டும் ‘காச் மூச்’ என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவற்றின் உரத்த சத்தம் காற்றில் கலந்து ஒலித்தது.
திடீரென்று வேறு இரண்டு குருவிகள் வானத்திலிருந்து கீழே இறங்கி வந்தன. நிலை குலைந்த மனதுடன் இருந்த முதல் இரண்டு குருவிகளுக்குப் பக்கத்தில் சத்தம் எதையும் உண்டாக்காமல் அந்த குருவிகள் போய் உட்கார்ந்தன. அப்போது அங்கு முன்பில்லாத அமைதி நிலவியது.
அந்த நான்கு குருவிகளும் ஜோடிகளாகி பறந்து சென்றன.
அப்போது முதல் கிளை இரண்டாவது கிளையிடம் சொன்னது: ‘எந்த அளவுக்கு அந்த குருவிகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தன! இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கொண்டு, மேலும் கீழுமா பறந்து கொண்டு... என்ன ஆரவாரம்!’
‘நீ உன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. இப்போது அமைதியா இருக்கா இல்லையா? விருப்பம்போல இடம் இருக்கு. மேலே இருக்குறவங்க அமைதியா இருக்குறப்போ கீழே இருப்பவர்களும் அமைதியா இருக்குறதுதான் சரின்னு நான் நினைக்கிறேன். காற்று வீசுறப்போ மேலம் கொஞ்சம் நெருக்கமா நீங்க வர்றேங்கள்ல! அந்த மாதிரி...’
‘கொஞ்சமும் எதிர்பார்க்காம, அமைதியான சூழ்நிலைக்காக, வசந்த காலம் முடியிறதுக்கு முன்னாடி... அப்படித்தானே?’
பலமான காற்றோடு சேர்ந்து அவன் வேகமாக ஆடினான்- அவளை இறுக அணைத்துக் கொள்வதற்காக.
நிழல்
ஜுன் மாதத்தில் ஒரு நாள். புல் மரத்தின் நிழலைப் பார்த்து சொன்னது:
‘நீ இடது பக்கமும் வலது பக்கமுமா அப்பப்போ ஆடிக்கிட்டு இருக்கே! நான் அமைதியா இருக்கிறதை நீ தொந்தரவு செய்யிற!’
நிழல் அதற்கு பதில் சொன்னது: நான் இல்லை. நான் இல்லை. வானத்தைப் பாரு. காற்றில் கிழக்கும் மேற்குமா அசையிற ஒரு மரம் இருக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் மத்தியில...
புல் மேலே பார்த்தது. முதலில் மரம் கண்ணில் பட்டது. அப்போது அது தனக்குள் கூறிக் கொண்டது: ‘அதை எதற்கு பார்க்கணும்? என்னை விட பெரிய ஒரு புல் அங்கே இருக்கு.’
அடுத்த நிமிடம் புல் அமைதியானது.
அலைந்து திரிந்து நடப்பவர்
நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அங்க வஸ்திரம் அணிந்திருந்த அந்த மனிதரின் கையில் ஊன்றுகோல் இருந்தது. முகத்தில் கவலை நிழல் பரப்பி விட்டிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததும் வணக்கம் கூறிக் கொண்டோம். அதற்குப் பிறகு நான் அந்த மனிதனை அழைத்தேன்: ‘வாங்க. விருந்தாளியாக என் வீட்டுக்கு வாங்க.’
அவர் வந்தார்.
வீட்டு வாசலில் என் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து அந்த மனிதர் புன்னகை செய்தார். அவருடைய வருகை அவர்களுக்கும் பிடித்திருந்தது.
‘நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்தோம். அந்த மனிதன் மிகவும் அமைதியாகவும், ஆழமான சிந்தனையிலும் இருந்ததைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்தோம். அந்த மனிதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்ததைப் பற்றி நான் விசாரித்தேன்.
அன்றும் மறுநாளும் எத்தனையோ கதைகளை அவர் கூறினார். அவர் மிகவும் இரக்க மனம் கொண்டவராக இருந்தார். ஆனால், நான் இங்கு கூறும் கதைகள் அவருடைய வாழ்க்கையில் உண்டான கசப்பான அனுபவங்களில் பிறந்தவை. அவர் தான் நடந்து சென்ற பாதையில் பார்த்த பெரிய விஷயங்களையும், சாதாரண விஷயங்களையும் அடக்கிய கதைகள் அவை!
மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் புறப்பட்டு போய்விட்டார். ஒரு விருந்தாளி போய்விட்டதாக எங்களுக்கு தோன்றவில்லை. எங்களில் ஒருவர் அப்போது கூட வெளியிலிருக்கும் தோட்டத்தில் இருக்கிறார் என்றும் இன்னும் அவர் திரும்பி வரவில்லை என்றும்தான் எங்களுக்கு தோன்றுகிறது.
பைத்தியக்காரன்
‘நீங்க கேக்குறீங்க, நான் எப்படி பைத்தியக்காரன் ஆனேன்னு. நடந்தது இதுதான். பல கடவுள்களும் பிறப்பதற்கு முன்பு ஒருநாள். ஆழமான தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறப்போ, என்னுடைய எல்லா முகமூடிகளும் திருடு போய்விட்டிருந்தன. நான் வடிவமைத்து வைத்திருந்த ஏழு முகமூடிகள். ஏழு பிறவிகளில் நான் அணிந்தவை அவை. மூகமுடி இல்லாமல் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் தெருக்கள் வழியாக நான் ஓடினேன். உரத்த குரலில் கூப்பாடு போட்டேன்: ‘திருடர்கள்! மோசமான திருடர்கள்!’
பெண்களும் ஆண்களும் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினாங்க. சிலர் பயந்து நடுங்கி தங்களின் வீடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.
நான் சந்தை பக்கம் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞன் உரத்த குரலில் சொன்னான்: ‘அதோ ஒரு பைத்தியக்காரன்!’
அவனைப் பார்க்கணும்னு நினைச்சு நான் மேலே பார்த்தேன். சூரியன் முதல் தடவையா முகமூடியில்லாத என் முகத்தை முத்தமிட்டது. என் மனம் சூரியன் மீது கொண்ட காதலால் துள்ளிக் குதித்தது. அதற்குப் பிறகு முகமூடிகள் எனக்கு எந்தச் சமயத்திலும் தேவைப்படவேயில்லை.
உணர்ச்சிவசப்பட்டு நான் சொன்னேன்: ‘ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்! என் முகமூடிகளைத் திருடிய திருடர்களே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்!’
கடைசியில் நான் ஒரு பைத்தியக்காரன் ஆகிவிட்டேன். என் பைத்தியக்காரத்தனத்தில் சுதந்திரத்தையும் பத்திரத் தன்மையையும் நான் உணர்ந்தேன். தனிமையின் சுதந்திரத்தையும் புரிந்து கொள்வதில் கிடைத்த பத்திரத் தன்மையையும் காரணம்- நம்மை புரிந்து கொள்பவர்கள் நம்மிடமிருக்கும் சிலவற்றையாவது அடிமையாக்கத்தான் செய்கிறார்கள்.
அதே நேரத்தில் என்னுடைய பத்திரத் தன்மையைப் பற்றி நான் அதிகமாக ஆணவம் கொள்ளவும் இல்லை. ஒரு திருடன் கூட இன்னொரு திருடனிடமிருந்து பத்திரத் தன்மையுடன் தான் இருக்கிறான்.’