கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 12
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
தேடல்
லெபனான் தாழ்வாரத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இரண்டு தத்துவஞானிகள் சந்தித்தார்கள். முதல் தத்துவஞானி கேட்டார்: ‘நீங்க எங்கே போறீங்க?’
‘நான் இளமையின் ஊற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த மலைகளுக்கு இடையில்தான் இளமையின் ஊற்று இருக்குன்னு எனக்கு தெரியும். அந்த ஊற்று சூரியனைப் பார்த்ததும் விரியும்னு எனக்கு சில ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கு, சரி... அது இருக்கட்டும். நீங்க எதைத் தேடிக்கிட்டு இருக்கீங்க?’
‘மரணத்தைப் பற்றிய ரகசியத்தைத்தான்.’
இரண்டு தத்துவஞானிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டார்கள். தங்களின் தத்துவத்தில் கூட அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்று ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டார்கள். மன ரீதியாக இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பற்றி இருவருமே வெளிப்படுத்தினார்கள்.
இரண்டு தத்துவஞானிகளும் சண்டைபோட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு யாரென்றே தெரியாத, அவனுடைய சொந்த கிராமமே முட்டாள் என்று நினைத்திருந்த ஒரு மனிதன் அந்த வழியே நடந்து வந்தான். கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவன் சிறிது நேரம் நின்றான். அவர்களின் வாதங்களை அவன் கவனமாக கேட்டான். அடுத்த நிமிடம் அவன் தத்துவஞானிகளை நோக்கி சென்றான். அருகில் சென்று அவன் சொன்னான்: ‘நல்ல மனிதர்களே! நீங்கள் இருவரும் ஒரே விஷயத்துக்குச் சொந்தக்காரர்கள்தான். ஒரே விஷயத்தைத்தான் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வார்த்தைகள் வித்தியாசமா இருக்கு. அவ்வளவுதான் விஷயம். ஒருவர் இளமையின் ஊற்றைத் தேடிக் கொண்டிருக்கிங்க. இன்னொருவர் மரணத்தின் ரகசியத்தை. அவை இரண்டுமே ஒண்ணுன்றதுதான் உண்மை. உங்கரெண்டு பேர்களிடமும் ஒண்ணே ஒண்ணா அது இருக்கவும் செய்யுது.’
அந்த அறிமுகமில்லாத மனிதன் அங்கிருந்து நடந்தான். அவன் தனக்குள் மெதுவான குரலில் சொன்னான்: ‘நான் புறப்படுகிறேன். விஞ்ஞானிகளே! எனக்கு விடை தாருங்கள்.’
ஒரு நிமிடம் இரண்டு தத்துவ ஞானிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு பேராலும் எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் தங்களை மறந்து சிரித்து விட்டார்கள். பிறகு அவர்களில் ஒரு தத்துவஞானி சொன்னார்: ‘நல்லதாகப் போய் விட்டது. ரொம்பவும் நல்லதா ஆயிடுச்சு. இப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணா நடந்து போகலாமே! ஒண்ணா தேடிப் போகலாமே!
தங்க செங்கோல்
மன்னன் தன் மனைவியிடம் சொன்னான்: ‘உண்மையாக பார்க்கப் போனால் நீ அரசியே அல்ல. எனக்கு மனைவியாக இருக்க உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. அந்த அளவுக்கு எதைப் பற்றியும் தெரியாத முட்டாளா நீ இருக்குற. நல்ல மனசு கூட உனக்கு இல்ல.’
அரசியும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவள் சொன்னாள்: ‘நீங்க உங்களை மன்னனா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனா, வெறும் வாய்ச்சொல் வீரர்தான் நீங்கன்னு உறுதியா தெரிஞ்சு போச்சு.’
அவள் சொன்ன வார்த்தைகள் மன்னனை கோபம் கொள்ளச் செய்தது. அவன் தன் கையிலிருந்த தங்க செங்கோலை எடுத்து அரசியின் நெற்றியில் ஓங்கி அடித்தான்.
அப்போது அரண்மனை பணியாள் அங்கு வந்தான். அவன் சொன்னான்:
‘நல்ல காரியம்! மன்னா... ரொம்பவும் நல்ல காரியம்! இந்த நாட்டின் மிகப் பெரிய கலைஞன் உருவாக்கின செங்கோல் அது. மன்னனையும் மகாராணியையும் மக்கள் சாதாரணமா மறந்திடுவாங்க. ஆனால், தலைமுறை தலைமுறையாக ஒரு அழகான பொருளாக இந்த செங்கோல் இருந்துட்டு வருது. இப்போ மகாராணி தலையில் இருந்து மன்னரான நீங்க இரத்தம் ஒழுக வச்சிட்டீங்க. அதனால் இந்த செங்கோல் ஒரு தனி கவனத்தைப் பெறும். முன்னால் இருந்ததை விட இது எல்லோராலும் நினைக்கப்படும்.’
கண்ணுக்குத் தெரியாத எல்லையற்ற பரம்பொருள்
மலைகளுக்கு மத்தியில் தாயும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். அந்தச் சிறுவன் அவளுடைய ஒரே வாரிசாக இருந்தான்.
வைத்தியர் என்னதான் காப்பாற்ற முயன்றாலும் முடியாமல் அந்தச் சிறுவன் காய்ச்சலில் படுத்து மரணத்தைத் தழுவி விட்டான்.
அந்தத் தாய் அதனால் அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. அவள் அழுது புரண்டாள்: ‘வைத்தியரே, என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. என் மகனோட மூச்சை ஒரேயடியாக நிறுத்தியது எது? அவனுடைய பாட்டை நிறுத்தியது எது? என்னிடம் சொல்லுங்க...’
‘அவனுடைய மரணத்துக்குக் காரணம் காய்ச்சல்.’
‘காய்ச்சல்னா என்ன?’
‘அதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது. அது உள்ளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒண்ணு. மனிதக் கண்களால் அதை பார்க்க முடியாது.’
அதைச் சொல்லி விட்டு வைத்தியர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.
அந்தத் தாய் தனக்குத் தானே பிதற்ற ஆரம்பித்தாள்: ‘கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஒண்ணு! மனிதக் கண்களால் அதைப் பார்க்க முடியாது!’
அன்று மாலை நேரம் அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக புரோகிதர் அங்கு வந்தார். கண்ணீர் விட்டவாறு அவள் கேட்டாள்: ‘என் மகன் என்னை விட்டு ஏன் போனான்? என்னுடைய ஒரே மகனை எப்படி நான் இழந்தேன்?’
அதற்கு புரோகிதர் சொன்னார்: ‘என் மகளே, அது கடவுளின் விதி.’
‘கடவுள்னா என்ன? எங்கே இருக்கு கடவுள்? நான் கடவுளைப் பார்ப்பேன். என் மார்பை கடவுளுக்கு முன்னால் கிழிச்சு காட்டுவேன். என் இதயத்துல இருந்து வழியிற இரத்தத்தை கடவுளோட பாதங்கள்ல விழச் செய்வேன். கடவுளை நான் எங்கே, பார்க்க முடியும்? சொல்லுங்க... என்கிட்ட சொல்லுங்க...’
‘கடவுள் எல்லையற்று பரந்து இருப்பவர். அவரை மனிதக் கண்களால் பார்க்க முடியாது’- புரோகிதர் சொன்னார்.
‘கண்ணுக்குத் தெரியாதது என் மகனைக் கொண்ணுடுச்சு. எல்லையற்று பரந்து இருப்பவனின் விதியின்படி அது நடந்திருக்கு. அப்படியா நாம யார்? என்ன?’ - அந்தத் தாய் அழுதுகொண்டே கேட்டாள்.
அப்போது அந்தப் பெண்ணின் தாய் அந்த அறைக்குள் வந்தாள். இறந்து போன சிறுவனின் உடலை மூடக்கூடிய துணி அவளுடைய கையில் இருந்தது. புரேரகிதரின் வார்த்தைகளை அவள் கேட்டாள். மகளுடைய பலவீனமான அழுகையையும்தான். துணியால் அவள் சிறுவனை மூடினாள். பிறகு மகளின் கைகளைத் தன்னுடைய கைகளில் எடுத்த அவள் சொன்னாள்: ‘என் மகளே, நாமதான் கண்ணுக்குத் தெரியாததும், எல்லையற்று பரந்து இருப்பதும், அவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வழியும் நாமதான்.’
வண்ணத்துப் பூச்சியும் திமிங்கிலமும்
ஒரு மாலை நேரத்தில் பெண்ணும் ஆணும் சவாரி வண்டியில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்கெனவே சந்தித்தவர்கள்தான்.
அந்த ஆள் ஒரு கவிஞன். பெண்ணின் அருகில் அமர்ந்ததும் கதைகளைக் கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்த அவன் எண்ணினான். சில கதைகள் அவனே படைத்தவை. வேறு சில கதைகள் அவனுக்கு சொந்தம் அல்லாதவை.
அவன் கதை சொல்ல ஆரம்பித்தவுடனே, அவள் தூங்க தொடங்கி விட்டாள். திடீரென்று வண்டி ஒரு பக்கம் சாய்ந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். கண் விழித்த அவள் சொன்னாள்: ‘நீங்க சொன்ன அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. என்ன அருமையான கதை சொல்றீங்க! ‘ஜோனாவும் திமிங்கிலமும்’ கதையைச் சொல்றேன்...’
‘பெண்ணே... நான் சொன்னது என் சொந்த கதை. ‘வண்ணத்துப் பூச்சியும் வெள்ளை ரோஜாவும்’ என்ற கதை. அவை இரண்டு ஒன்றோடொன்று எப்படி நட்பாக இருந்தன என்ற கதை!’