கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 19
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8648
தேவதூதனும் பிசாசும்
தேவதூதர்களும் பிசாசுக்களும் என்னை வந்து பார்ப்பதுண்டு. ஆனால், நான் அவர்களை சீக்கிரமாக விரட்டியடித்து விடுவேன்.
தேவதூதன் வரும்போது நான் ஒரு பழைய பிரார்த்தனையைக் கூறுவேன். அதைப் பார்த்து அவன் ஒரு மாதிரி ஆகி விடுவான்.
பிசாசு வரும்போது நான் ஒரு பழைய பாவத்தைச் செய்வேன். அப்போது அதுவும் ஒரு மாதிரி ஆகிவிடும்.
அடுத்த நிமிடம் அவர்கள் இருவரும் வேகமாக என்னை விட்டு ஓடி விடுவார்கள்.
சிறை
எது எப்படி இருந்தாலும், இது ஒரு மோசமான சிறை அல்ல. எனினும், என்னுடைய அறைக்கும் அடுத்த கைதியின் அறைக்கும் நடுவிலிருக்கும் சுவரை நான் விரும்பவில்லை.
அதற்காக சிறையைக் கட்டியவனையோ அதன் காவலாளியையோ நான் குறை சொல்ல விரும்பவில்லை.
தண்டிக்கப்பட்டவன்
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் ஒரு மனிதன் வாழ்ந்தான். அந்த அளவிற்கு அன்பு செலுத்துபவனும் அன்பு செலுத்தப்படுபவனுமாக இருந்த காரணத்தால் அவன் தண்டிக்கப்பட்டான்.
நான் நேற்று மூன்று தடவைகள் அந்த அன்பான மனிதனைப் பார்த்தேன்.
சட்டத்தைச் செயல்படுத்துபவர்களிடம் விலை மாதுவை சிறைக்குக் கொண்டு போகக் கூடாது என்று அவன் கெஞ்சிக் கொண்டிருந்தபோது- தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மனிதனுடன் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியபோது-
பாதிரியாருடன் தேவாலயத்திற்குள் அவன் கையால் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது-
கேட்கும்போது வினோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை அதுதான்.
இன்னொரு மனிதன்
இன்னொரு மனிதன் உங்களைக் கேலி பண்ணினால் நீங்கள் அவன் மீது பரிதாபப் படலாம். நீங்கள் அவனைக் கேலி பண்ணினால், உங்களுக்கு ஒருமுறை கூட மன்னிப்பு கிடையாது.
இன்னொரு மனிதன் உங்களைக் காயப்படுத்தினால், அந்த காயத்தை நீங்கள் மறக்கலாம். ஆனால், நீங்கள் அவனைக் காயப்படுத்தினால் நீங்கள் அதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.
இந்த இன்னொரு ஆள் உங்களின் மனசாட்சித்தானே? இன்னொரு உடலில் இருக்கிறது என்பது மட்டும்தான் வித்தியாசம்.
மலை ஏற்றம்
நம்முடைய ஆசைகளின் சிகரத்தை நோக்கி நாம் எல்லோரும் ஏறிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு மலை ஏறுபவன் உங்களின் சொத்தையும் பணத்தையும் அபகரித்து தன்னுடைய சுமையைக் கூட்டுகிறான் என்றால், அதற்காக அவன்மீது பரிதாபப்பட வேண்டும்.
மலை ஏறுவது அவனுடைய உடம்புக்கு தொந்தரவாக இருக்கும். அளவுக்கும் அதிகமான எடை அவனுடைய பாதையின் தூரத்தை அதிகமாக்கும்.
அவனுடைய உடல் முன்னோக்கி நகர கஷ்டப்படும்போது, மெலிந்த உடலைக் கொண்ட நீங்கள் அந்த மனிதன் அடி எடுத்து வைக்க உதவ வேண்டும்.
அது உங்களின் வேகத்தை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும்.
குள்ளநரி
இருபது குதிரைக்காரர்களும் இருபது வேட்டை நாய் வைத்திருப்பவர்களும் ஒரு குள்ளநரியை வேட்டையாடினார்கள். அப்போது குள்ளநரி சொன்னது:
‘நிச்சயமா இவர்கள் என்னைக் கொன்னுடுவாங்க. ஆனால், எந்த அளவுக்கு இவர்கள் மோசமான மனிதர்களா இருக்காங்க! இருபது ஓநாய்களின் துணையுடன் இருபது கழுதைகள் மீது ஏறி வரும் இருபது குள்ளநரிகள் வேண்டுமா என்ன ஒரே ஒரு மனிதனை வேட்டையாடுவதற்கும் கொல்வதற்கும்? நான் அந்த அளவுக்கு தகுதியானவன் அல்ல.’
அறிமுகமில்லாதவர்கள்
என்னுடைய நண்பனே, நீயும் நானும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களாக இருப்போம். வாழ்க்கையில் நிரந்தரமாக.
தங்களுக்குத் தாங்களே அவனுக்கு அவனே நாம் அறிமுகமில்லாதவர்களாக இருப்போம். நீ பேசும் நாள் வரை, உன் குரலை என் சொந்தக் குரலாக நான் கேட்கும் நாள் வரை, கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதாக எனக்கு நானே நினைத்துக் கொண்டு உனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது வரை.
விஞ்ஞானம் விற்பனைக்கு
நேற்று சாயங்காலம் தத்துவஞானிகளை நான் கடை வீதியில் பார்த்தேன். தங்களுடைய தலைகளைக் கூடைகளில் வைத்துக் கொண்டு அவர்கள் உரத்த குரலில் கூவிக் கொண்டிருந்தார்கள்: ‘விஞ்ஞானம் வேணுமா? விஞ்ஞானம்... விற்பனைக்கு இருக்கு...’
பாவம் தத்துவஞானிகள்!
தங்களின் சொந்த இதயங்களை உயிருடன் வைத்திருக்க தலைகளை விற்க வேண்டிய கேடு கெட்ட நிலைமையில் அவர்கள் இருக்கிறார்கள்.
தத்துவஞானியும் துப்புரவுத் தொழிலாளியும்
தெருவிலிருந்த துப்புரவுத் தொழிலாளியிடம் தத்துவஞானி சொன்னார்:
‘நான் உன்னைப் பார்த்து இரக்கப்படுறேன். கஷ்டங்கள் நிறைந்த மோசமான வேலை உன் வேலை!’
அதற்கு துப்புரவுத் தொழிலாளி நன்றி சொன்னான். பிறகு அவன் கேட்டான்:
‘உங்க வேலை என்ன?’
‘நான் மனிதர்களின் மனதைப் படிக்கிறேன். அவர்களின் செயல்களையும், விருப்பங்களையும் படிக்கிறேன்.’
தத்துவஞானி பதில் சொன்னார்.
துப்புரவுத் தொழிலாளி தன் வேலையைத் தொடர்ந்தான். அதற்கு மத்தியில் அவன் புன்னகைத்து விட்டு சொன்னான்:
‘நானும் உங்களைப் பார்த்து இரக்கப்படுறேன்.’
இயேசுக்கள்
ஒவ்வொரு நூற்றாண்டிலும் நாசரேத்தின் இயேசு கிறிஸ்தவரான இயேசுவை ஒரு முறை சந்திப்பார். அது லெபனானின் மலைகளுக்கு மத்தியில் நடக்கும்.
அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை பிரியும்போதும் நாசரேத்தின் இயேசு, இயேசு கிறிஸ்துவிடம் கூறுவார்: ‘என் நண்பரே! நாம ஒருமுறை... ஓருமுறை கூட ஒத்துப் போகாமலே இருக்கோம்னு நினைச்சு நான் பயப்படுறேன்.’
காட்டிலிருக்கும் கிளி
அவர் என்னிடம் சொன்னார்:
‘கையிலிருக்கும் ஒரு கிளி காட்டிலிருக்கும் பத்து கிளிகளை விட மதிப்புள்ளது.’
அதற்கு நான் சொன்னேன்:
‘காட்டிலிருக்கும் ஒரு கிளியும் சிறகும் கையிலுள்ள பத்து கிளிகளை விட மதிப்புள்ளவை. அந்த சிறகுக்குப் பின்னால் இருக்கும் உங்களுடைய தேடல், சிறகு இருக்க கால்களைக் கொண்ட உயிர்... வாழ்வுதான்.
இரண்டு உலகங்கள்
அவர் என்னிடம் சொன்னார்:
‘இந்த உலகத்தின் சந்தோஷங்களா? மேலுலகத்தின் அமைதியா? ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
நான் இரண்டையும் தேர்வு செய்தேன். இந்த உலக சந்தோஷங்களையும், மேலுலகத்தின் அமைதியையும். காரணம்- என் இதயத்தில் அந்தப் பெரும் கவிஞன் எழுதியது ஒரே ஒரு கவிதைதான். அது முழுமையானதும் முடிவானதும் கூட.’
நான் பதில் சொன்னேன்.
வெருப்பும் கருப்பும்
ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏழு வெள்ளைப் புறாக்கள் ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து பனி மூடிய மலையை நோக்கி உயர பறந்தன.
பறப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஏழு பேரில் ஒருவர் சொன்னான்:
‘ஏழாவது புறாவிற்குப் பின்னாலிருக்கும் கருப்பு புள்ளியை நான் பார்க்கிறேன்.’
இன்று அந்தப் பள்ளத்தாக்கில் இருக்கும் மனிதர்கள் பனிமூடிய மலையின் உச்சியை நோக்கி பறந்து சென்ற ஏழு கருப்பு புறாக்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.