
சுராவின் முன்னுரை
மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்ற ‘Ho Chi Minh’s Prison Diary’ என்ற நூலை ‘ஹோ சி மின் சிறை டைரி’ என்ற பெயரில் நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே முத்திரை பதிக்கும் மனிதர்கள் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே உலக சரித்திரத்தில் இடம் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஹோ சி மின்.
உலக வரலாற்றுத் தலைவர்களைப் பற்றி ஒர் பட்டியல் போட்டால், அதில் ஒரு சிறப்பான இடத்தை ஹோ சி மின்னுக்கு தந்தே ஆக வேண்டும்.
தன்னைப் பற்றிய சிந்தனை சிறிதும் இன்றி வியட்நாம் நாட்டையும், அந்நாட்டு மக்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும், மக்களின் ஒளிமயமான வாழ்க்கையையும், உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களின் செழிப்பான வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக திரண்டெழுந்து போர் புரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்பதையும் தன்னுடைய இறுதி மூச்சு வரை மனதில் வைத்திருந்து வாழ்ந்து இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்ற மாமனிதர்தான் ஹோ சி மின்.
அவரைப் போன்ற தலைவர்கள் எப்போதாவது ஒரு முறைதான் இந்த உலகில் பிறப்பார்கள். மக்களின் நல் வாழ்விற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த அந்த மாபெரும் மக்கள தலைவரின் சிறை சிந்தனைகள் கொண்ட இந்நூலை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காக, உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த நல்வாய்ப்பை எனக்கு அளித்த என் அருமை நண்பர் திரு. இளைய பாரதிக்கு இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
ஹோ சி மின்னின் சிறை டைரியைத் தவிர, அவருடைய மரண அறிக்கையும், அவர் வாழ்க்கையில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் பற்றிய ஒரு தகவல் பெட்டகமும் கூட இந்நூலில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நூலைப் படித்து முடிக்கும்போது, ஹோ சி மின் நம் மனதிற்குள் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக உட்காருவார் என்பது மட்டும் நிச்சயம். அந்த வகையில் அது சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தான்!
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook