Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஹோ சி மின் சிறை டைரி - Page 8

ho cie minh's prison diary

ஹோ சி மின்னின் மரண அறிக்கை

மெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான, நாட்டின் விடுதலைக்கான நம்முடைய மக்களின் போராட்டம் இனியும் அதிகமான தடைகளையும் தியாகங்களையும் கடந்து செல்ல வேண்டி இருக்கலாம். எனினும், முழுமையான வெற்றி நமக்குத்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அப்போது தெற்கிலும் வடக்கிலும் பயணம் செய்து நம்முடைய தைரியம் மிக்க நாட்டு மக்களையும் அணிகளையும் படைகளையும் பாராட்டவும், வயதானவர்களையும் நம்முடைய பிரியமான இளைஞர்களையும் குழந்தைகளையும் காணவும் நான் விரும்புகிறேன்.

அந்தச் சமயத்தில் நம்முடைய மக்களின் சார்பாக சோசலிச அமைப்பிலிருக்கும் சகோதர நாடுகளுக்கும் உலகத்தின் நட்பு நாடுகளுக்கும் நான் செல்வேன். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நம்முடைய மக்கள் நடத்திய நாட்டுப் பற்று கொண்ட போராட்டத்திற்கு அவர்கள் தந்த இதயபூர்வமான ஆதரவிற்கும் உதவிக்கும் நன்றி கூறுவேன்.

தாங் காலத்தில் புகழ்பெற்ற சீன கவிஞர் து-ஃபு எழுதினார்: ‘எழுபதாவது வயதை அடைந்தவர்கள் என்று மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள்.’

இந்த வருடம் எழுபத்தொன்பதாவது வயதை அடைந்திருக்கும் நான் அந்த குறைவானவர்களில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன். எனினும் என்னுடைய மனம் இப்போதும் தெளிவாக இருக்கிறது- கடந்து போன வருடங்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய உடல் நலம் சிறிது மோசமாக ஆகியிருந்தாலும், எழுபதின் உச்சத்தை அடைந்திருக்கும் ஒரு மனிதனைப் பொறுத்த வரையில், உடல் நலம் வயதிற்கேற்றபடி சற்று மோசமாகிக் கொண்டு வரத்தான் செய்யும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எனினும், இனியும் எவ்வளவு காலத்திற்கு புரட்சிக்கும் தாய் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய என்னால் முடியும் என்று யாருக்குத் தெரியும்?

அதனால், கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோரைப் போன்ற மூத்த புரட்சிக்காரர்களுடன் நானும் போய் சேரும் நாளை முன் கூட்டியே கண்டு இந்த சில வரிகளை இங்கு குறிக்கிறேன். இப்படிச் செய்தால் நாடு முழுக்க இருக்கும் நம்முடைய மக்களுக்கும் நம்முடைய கட்சி தோழர்களுக்கும் உலக நண்பர்களுக்கும் திடீரென்று ஆச்சரியப்பட வேண்டிய நிலை வராது அல்லவா?

முதலில் கட்சியைப் பற்றி: தொழிலாளி வர்க்கத்திடமும் மக்களிடமும் தாய் மண்ணிடமும் கொண்டிருக்கம் அர்ப்பணிப்பு மூலம், ஆரம்பத்திலிருந்தே மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஒன்று சேர்க்கவும் நீண்ட போராட்டத்தை வெற்றியிலிருந்து வெற்றிக்கு எடுத்துச் செல்லவும் நம்முடைய கட்சிக்கு முடிந்திருக்கிறது.

ஏக மனது நம்முடைய கட்சியின், மக்களின் மிகவும் மதிப்பு மிக்க பரம்பரைச் சொத்து. மத்திய குழு முதல் ஆரம்ப நிலையிலிருக்கும் அமைப்பு வரை இருக்கும் எல்லா தோழர்களும் கட்சிக்குள் ஒருமையும் மன ரீதியான ஒற்றுமையும் நிலவவும், கட்சிக்குள் பரந்த மக்களாட்சி தத்துவம் இருக்கவும் சுய விமர்சனமும் ஆராய்ச்சியும் தொடர்ந்து தீவிரமாக செய்து பார்ப்பதுதான் ஏக மனதையும் ஒருமையையும் உறுதி செய்வதற்கான சரியான வழி. தோழமை உணர்வும், அன்பும் மலர்ந்து இருக்க வேண்டும்.

நம்முடையது அதிகாரத்தில் இருக்கும் கட்சி. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒவ்வொரு அணியும் புரட்சி பாதையை உறுதியாக நம்பவும், கடின உழைப்பு, தீவிர ஈடுபாடு, உற்சாகம், நேர்மை, முழுமையான சுயநலமின்மை, பொது நன்மைக்காக முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருத்தலும் வேண்டும். நம்முடைய கட்சி முழுமையான புனிதத் தன்மையுடன் இருப்பதுடன், மக்களின் தலைவனும நம்பிக்கைக்குரிய சேவகன் என்ற நிலையில் அதன் பகுதிக்கான தகுதியைத் தெளிவுபடுத்த வேண்டும்.

தொழிலாளி, இளைஞர்கள் அமைப்பு உறுப்பினர்களும், பொதுவாக நம்முடைய இளைஞர்களும் மிகுந்த புத்திசாலிகளாவார்கள். அவர்கள் எப்போதும் ஆபத்துகளைப் பார்த்து பயப்படாமல் வளர்ச்சி குறித்த சிந்தனைகளுடன் முன்னோக்கி வர தயாராகவே இருக்கிறார்கள். கட்சி அவர்களின் புரட்சி சிந்தனைகளை வளர்த்தெடுத்து, சிவப்பு சிந்தனை கொண்டவர்களும் சோசலிசத்தின் உருவாக்கத்தில் நிபுணர்களுமான அவர்களை நம்முடைய வழித்தோன்றல்களாக ஆக்கி அவர்களுக்கு முறையான பயிற்சி தர வேண்டும்.

எதிர்கால புரட்சி வீரர்களுக்குப் பயிற்சி தந்த அவர்களுக்குத் தேவையான பாடங்களைக் கற்றுத் தருவதும் மிகவும் முக்கியமான விஷயங்கள்.

நம்முடைய உழைக்கும் மக்கள் சமவெளிகளிலும் மலைப் பகுதிகளிலும் பல யுகங்களாக பலவிதப்பட்ட கஷ்டங்களையும் ஃப்யூடல் காலனியல் துன்பங்களையும் சுரண்டலையும் சகித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போதாதென்று, அவர்கள் பல வருடங்களாக போர்களையும் அனுபவித்திருக்கிறார்கள். எனினும், நம்முடைய மக்கள் மகத்தான தைரியத்தையும், உற்சாகத்தையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, எல்லா நேரங்களிலும் அசாதாரணமான நம்பிக்கையுடன் அதை அவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு கட்சி பயனுள்ள ஒரு சமூக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர் இனியும் தொடரலாம். நம்முடைய தோழர்கள், உடைமை, உயிர் சம்பந்தமாக புதிய தியாகங்களைச் செய்ய வேண்டிய நிலை நேரிடலாம். எது நடந்தாலும், நாம் இறுதி வெற்றி அடையும் வரையில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நிற்கும் நம்முடைய தீர்மானத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

நம்முடைய நதிகளும் நம்முடைய மலைகளும் நம்முடைய மக்களும் என்றும் இருப்பார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை தோல்வியடையச் செய்த பிறகு, நம்மால் பத்து மடங்குகள் அழகான ஒரு நாட்டை உண்டாக்க முடியும். முன்னாலிருக்கும் கஷ்டங்களும் துயரங்களும் எந்த வகையில் இருந்தாலும் நம்முடைய மக்களின் முழுமையான வெற்றி என்பதென்னவோ நிச்சயம். அமெரிக்க ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திக்கப் போவது உண்மை. நம்முடைய அன்னை பூமி மீண்டும் ஒன்றாகும். வடக்கும் தெற்குமாக இருக்கும் நம்முடைய நாட்டு மக்கள் ஒரே மேற் கூரைக்குக் கீழே மீண்டும் ஒன்று சேர்வார்கள். அப்போது ஒரு சிறு நாட்டைச் சேர்ந்த நாம் தைரியமான ஒரு போர் மூலமாக இரண்டு சாம்ராஜ்யங்களை - ஃப்ரெஞ்சையும் அமெரிக்காவையும் - தோல்வியடையச் செய்து தேசிய விடுதலை அமைப்பிற்கு மதிப்பு மிக்க கொடையை அளித்தவர்கள் என்ற பரிசைப் பெற்றிருப்போம்.

உலக கம்யூனிஸ்ட் அமைப்பைப் பற்றி: வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்ட நான் சர்வதேச கம்யூனிஸ்ட் தொழிலாளி அமைப்பின் வளர்ச்சியில் பெருமைப்படுவதுடன் இப்போது நட்புக் கட்சிகளை விமர்சிக்கின்ற கருத்து வேறுபாடுகளுக்காக வருத்தப்படவும் செய்கிறேன்.

நம்முடைய கட்சி மார்க்ஸிஸம் - லெனினிஸத்தின், சர்வதேச தொழிலாளி அமைப்பின் அடித்தளத்தில் அறிவுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், தோழமைக் கட்சிகளின் ஒற்றுமைக்கு தீவிரமாக முயற்சிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன். தோழமைக் கட்சிகளும் நாடுகளும் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உண்டாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தனிப்பட்ட செயல்பாடு பற்றி : ஆயுள் முழுவதும் தாய் மண்ணுக்கும் புரட்சிக்கும் மக்களுக்கும் நிறைந்த இதயத்துடனும் உறுதியுடனும் நான் சேவை செய்திருக்கிறேன். இப்போது உலகத்தை விட்டு நீங்கும் நிலை வந்தாலும், எது குறித்தும் நான் கவலைப்படுவதற்கில்லை- அதிக காலம் மேலும் அதிக சிறப்பாக சேவை செய்ய முடியாமற் போய் விடும் என்பதைத் தவிர.

நான் உலகை விட்டு போகும் போது, மக்களின் நேரமும் பணமும் வீண் செலவாகாமல், பெரிய அளவில் சவ அடக்க சடங்குகளை தவிர்க்க வேண்டும்.

இறுதியாக, அனைத்து மக்களுக்கும் கட்சிக்கும் படைகளுக்கும் என்னுடைய மருமக்களுக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் என்னுடைய அளவற்ற அன்பை இங்கு விட்டுச் செல்கிறேன். உலகமெங்கும் இருக்கும் நம்முடைய தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இறுதி ஆசை, நம்முடைய கட்சியும் மக்களும் தங்களின் முயற்சிகளை ஒன்று சேர்த்து, அமைதியும் ஒற்றுமையும் சுதந்திரமும் மக்களாட்சி தத்துவமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட ஒரு வியட்நாமை உருவாக்கி உலக புரட்சிக்கு விலை மதிப்புள்ள கொடையை அளிக்க வேண்டும் என்பதுதான்.

-ஹோ சி மின்

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version