அப்பாவின் காதலி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7033
பெரிய அக்கா மனமே இல்லாமல் எழுந்து வந்தாள். மணிக்குட்டன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, சுமதி அக்கா அவனுடைய தாயைத் தேற்றுவது காதில் விழுந்தது.
‘‘தேவையில்லாததையெல்லாம் நினைச்சு வருத்தப்படக்கூடாது. அமைதியா இருக்கணும். பெரியம்மா, நீங்க யாருக்கும் எந்தக் கெடுதலும் இதுவரை செய்யலையே !’’
‘‘நான் இனிமேல் எவ்வளவு காலம் வாழப்போறேன் சுமதி ? என் பிள்ளைங்க இந்த ஊர்ல வாழணுமேன்றதை நினைச்சுத்தான் நான் வருத்தப்படுறேன்.’’
‘‘அவங்க நல்லாவே இருப்பாங்க பெரியம்மா. நீங்க அதைப்பற்றி நினைச்சு கொஞ்சம்கூட கவலைப்படக்கூடாது.’’
சுமதி அக்காவின் வார்த்தைகளைக் கேட்ட மணிக்குட்டனின் தாய் இந்த முறை அழ மட்டும் செய்தாள். தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் எதுவும் பண்ணவில்லை. அவன் தந்தையைப் பார்த்து கோபப்படவில்லை. அன்று இரவு அவனுடைய தந்தை வந்தபோது, அவருடன் நான்கைந்து ஆட்கள் இருந்தார்கள். அய்யப்ப பணிக்கர் ஆசான், அச்சுதக்குறுப்பு மாமா, அப்பு அண்ணனின் தந்தை, சுமதி அக்காவின் கணவர் தாமு அண்ணன்... அதற்குப் பிறகு அவனுக்கு யாரென்று தெரியாத இரண்டு நபர்கள்... வந்தவர்கள் கட்டிலிலும் நாற்காலியிலும் உட்கார்ந்தார்கள். அப்பு அண்ணனின் தந்தை மணிக்குட்டனைப் பிடித்து அருகில்நிற்க வைத்து தடவியவாறு சொன்னார் :
‘‘எப்படிப் படிக்குற ?’’
பிறகு அவனுடைய தாய் கேட்கும்வண்ணம் உரத்த குரலில் ‘‘என்ன... நாலஞ்சு ஆம்பளைங்க வீட்டுக்கு வந்திருக்குறப்போ இந்தப் பக்கம் வராம இருந்தா எப்படி ? காப்பியோ சோறோ தர வேண்டாமா ?’’ என்றார்.
அவனுடைய தாய் மெதுவாக எழுந்து முன்னறையை நோக்கி நடந்து வந்தாள். அறையின் ஒரு மூலையில் அவள் நின்றாள்.
தாமு அண்ணன் சொன்னார் :
‘‘ இங்கே சில விஷயங்கள் நடந்ததை நான் கேள்விப்பட்டேன். அதுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். வந்தது போல விஷயங்கள் போகறதுக்கான வழியை நான் செய்வேன். பெரியம்மா, நீங்க தைரியமா இருங்க...’’
அப்பு அண்ணனின் தந்தை சொன்னார் :
‘‘தைரியமா இருங்க. நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி புகார் எழுதிக்கொடுத்துட்டு வந்திருக்கோம்.’’
மணிக்குட்டனின் தாய் கேட்டாள் : ‘‘என்ன புகார் ?’’
‘‘அநியாயமா முன்கூட்டியே திட்டமிட்டு ஆளைத்தாக்க வந்ததா...’’
‘‘தாக்க வரலியே ! இவர்தானே அங்கே போயிருக்காரு !’’
‘‘அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு விஷயம் நடந்தா, வீட்டிலுள்ளவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து நிக்கணும்.’’
அச்சுதக் குறுப்பு மாமா சொன்னார் : ‘‘உள்ள விஷயத்தை முழுசா திறந்து சொல்றதுதான் சரி. மச்சானுக்கு இனிமேல் ஆயுள் உள்ள காலம்வரை செம்மண் நிலத்துல இருக்குற கவுரிகூட எந்தவிதமான உறவும் கட்டாயம் இருக்காது.’’
‘‘அய்யப்ப பணிக்கார் ஆசான் சொன்னார் :’’
‘‘அது மட்டுமில்ல... அவளை இந்தக் கீழாற்றுக்கரை பகுதியில இருந்தே விரட்டுற விஷயத்¬¬ப் பற்றியும் நாங்க யோசிச்சு வச்சிருக்கோம்.’’
‘‘சரி... மற்ற விஷயங்களையும் சொல்லு...’’ - அப்பு அண்ணனின் தந்தை சொன்னார்.
அச்சுதக்குறுப்பு மாமா, ‘‘சொல்றேன். வடக்குக் கரைப்பக்கம் இருக்குற ஐம்பது சென்ட் நிலத்தை மச்சான் கவுரிக்கு தன் விருப்பப்படி எழுதிக் கொடுத்திருக்கார். அந்த விஷயம் இங்கே உள்ளவங்க யாருக்கும் தெரியாது. தேவன் விவசாயம் செய்யிற இடம் கவுரிக்கு எழுதிக் கொடுத்ததுதான்...’’
ஒரு கற்பனைக் கதையைக் கேட்பதைப் போல கண்களைத் திறந்து கொண்டு கேட்டாள். மணிக்குட்டனின் தாய்.
‘‘அதைப்பற்றி நாம கவலைப்பட வேண்டாம். அடுத்தமுறை நாமதான் அங்கே விவசாயம் செய்யப்போறோம். என்ன தாமு ?’’
தாமு அண்ணன் உடனே அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. காரணம் - தான் ஒரு போலீஸ்காரன் என்பதும் இந்த விஷயத்தில் சட்டம் கவுரியம்மாவிற்கும் சாதகமாயிருக்கிறது என்ற உண்மையை அவன் அறிந்திருந்ததுமே.
மணிக்குட்டனின் தந்தை சொன்னார் : ‘‘இந்த விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டியவன் நான். நான்கு நாட்கள் கழிச்சு நான் அங்கே காளையைப் பூட்டி உழப்போறேன் !’’
7
மணிக்குட்டனின் தந்தையின் வயிற்றில் மீண்டும் வலி உண்டானது. முன்பு வந்த அளவிற்கு மிகவும் பலமாக அல்ல. உடல் அலைச்சலால் அந்த வலி என்றார் ராமக்கணியார்.
அது யாருமே சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயம்தானே ? இந்த நோயுடன் இரவு பகல் பாராமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தார் அவனுடைய தந்தை. மருந்தும் பத்தியமும் மீண்டும் ஆரம்பமானாலும் இந்தமுறை நோயாளியாக அவர் படுக்கையில் படுக்கவில்லை. உடம்பில் இருக்கும் நோயை முழுமையாக மறந்து விட்டு நடந்து அலைந்து திரியவேண்டிய அளவிற்கு அவருக்கு வேலைகள் இருந்தன. ஒரு பக்கம் வாசுப்பிள்ளையுடன் அவர் கொண்ட சண்டை. இன்னொரு பக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விவசாயத்தில் இழப்பும் நஷ்டங்களும்... வேறொரு பக்கத்தில் அந்தச் சமயத்தில் உண்டான வெள்ளப் பெருக்கு புஞ்சை முழுவதையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தது. பந்தளத்துக்காரன் கீவர்கீஸ் மாப்பிள்ளைக்கு சாராயம் குத்தகை எடுப்பதற்காகக் கடனாகத் தந்த இரண்டாயிரம் ரூபாய் அவருக்குக் கிடைக்காமலே போய்விட்டது.
முன்புகூட அவருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த ஒரு மனிதர்தான் கீவர்கீஸ் மாப்பிள்ளை நம்பிக்கையான ஆள். ஆனால், வெள்ளம்போல வந்து வெள்ளம் போல போய்விட்டது என்ற மாதிரிதான் அவர் விஷயத்தில் நடந்தது. பணம் கொடுத்தற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. அப்படியே ஆதாரம் இருந்தாலும், பணத்தை ஈடு செய்தவதற்கான சொத்து அவரிடம் இல்லை என்றாகிவிட்டது.
இப்படி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் வாசுதேவன் பிள்ளையுடன் கொண்ட தகராறு நடக்கிறது. செம்மண் நிலத்தில் கவுரிக்கு மணிக்குட்டனின் தந்தை விருப்பப்பட்டுத் தந்த நிலத்தை மீண்டும் திரும்ப எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது. நிலத்தை எடுப்பதற்கு ஆதரவாக சிலரும், அதை தருவதற்கு எதிராக சிலரும் அந்த ஊரில் இருக்கவே செய்தார்கள். அதற்காக அந்த ஊர் மக்கள் மத்தியில் பலவித விவாதங்கள் நடந்தன. அதற்கான நாள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தனக்கு உதவியாக இருப்பார்களென்று நம்பிய பலரும் தேவையான நேரத்திற்கு உடன் இருப்பார்களா என்ற சந்தேகம் அவனுடைய தந்தைக்கே இருந்தது. போதாதென்று எப்போதும் உடனிருந்த வயிற்றுவலி வேறு அவரைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. வாசுப்பிள்ளை ஒரு முரடன், இரக்கமற்ற குணத்தைக் கொண்டவன் என்ற உண்மையையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
தாமு அண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.