அப்பாவின் காதலி - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7031
பாட்டி கழியை ஊன்றிக்கொண்டு கூன் விழுந்து முதுகுடன் அறைக்குள் வந்தாள்.
பாட்டி கேட்டாள்: ‘‘கிழக்கு வீட்டுல என்ன பிரச்னை?’’
சுமதி அக்கா சொன்னாள்: ‘‘ம்... ஒண்ணுமில்லம்மா...’’
‘‘ஒண்ணுமில்லாமலாடி அம்மாவும் மகளும் ஏதோ கொலை செஞ்சிட்டதைப் போல அப்படியொரு ஆர்ப்பாட்டம் பண்றாங்க?’’
‘‘வீடுன்னு இருந்தா இதெல்லாம் இல்லாமலா இருக்கும்? அழுவுறது, சிரிக்குறது எல்லாம்தான் இருக்கும்.
‘‘அழுவுறதுக்கு ஒரு காரணம் வேண்டாமாடி?’’
‘‘சுண்ணாம்புக்காரி சிருத வந்து சொன்ன விஷயம்தான் எல்லாத்துக்கும் காரணம்.’’
‘‘அப்படிச் சொல்லு. கிழக்குக் கரையில இருக்கிற கவுரி விஷயம்... அப்படித்தானே?’’
‘‘ஆமாம்மா....’’
‘‘லோலாயியா சுத்திக்கிட்டு இருக்குற பொம்பளைங்ககூட உறவு வச்சிருக்குற ஆம்பளைங்க வீட்டுல இதுதான் கதை. பொம்பளைங்க இப்படி ஒண்ணு சேர்ந்து நின்னா அவன் என்ன செய்வான்?’’
‘‘ஆம்பளைங்களைப் பத்தி என்னடி? அவங்களுக்கு எவ்வளோ பிரச்சினைகள்... ஒழுங்கா இருக்க வேண்டியது பொம்பளைங்க தான்டி...’’
‘‘நீ சொல்றது சரிதாம்மா...’’
மெதுவான குரலில் சொன்னாள் சுமதி அக்கா. அது சரியாக பாட்டியின் காதில் விழவில்லை. சுமதி அக்கா மணிக்குட்டனை இறுக அணைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தாள். அக்காவின் மார்பிலிருந்து வந்த மணத்தை அனுபவித்தவாறு அவன் உறங்கினான்.
5
காலப்போக்கில் தன்னுடைய வீட்டைவிட சுமதி அக்காவின் வீடுதான் அவனுக்கு மிகவும் நெருக்கம் என்று ஆகிவிட்டது. அவனுடைய தாய் எப்போது பார்த்தாலும் புலம்பிக்கொண்டே இருந்தாள். யாருடனும் அவள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அந்தக்கணமே அவளுக்குக் கோபம் வந்துவிடும். அதனால் வீட்டின் முழுப் பொறுப்பும் பெரிய அக்காவின் மீது விழுந்துவிட்டது.
நேற்றுவரை தன் தாயைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்த பெரிய அக்காவால் வீட்டை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு திறமை இருக்கிறதா என்ன? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. பள்ளிக்கூடத்தில் முதல் மணி அடித்ததும் அவன் கெஞ்சினான்.
‘‘ஏதாவது சாப்பிட தாங்க அக்கா. முதல் மணி அடிச்சிட்டாங்க...’’
அப்போதுதான் மரவள்ளிக் கிழங்கோ, கஞ்சியோ அடுப்பில் வெந்து கொண்டிருக்கும். பச்சை சுள்ளி விறகை அடுப்பிற்குள் போட்டு தீயை ஊதியதால் புகைந்துபோன கண்களுடன் கோபமடையும் பெரிய அக்கா அவனைப் பார்த்துக் கூறுவாள்.
‘‘டேய்... நீ ஒழுங்கா போறியா இல்லியா? என் உடம்பே ஒரு மாதிரி ஆகிப் போச்சுடா.’’
‘‘அப்படின்னா நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போறதா இல்ல...’’
‘‘சரி... போக வேண்டாம்.’’
அவன் அழுவான். கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிவான். எது நடந்தாலும் அவனுடைய தாய்க்கு அதைப்பற்றி சிறிதுகூட கவலையே இல்லை. தாடையில் கையை ஊன்றியவாறு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு அவள் ஒரு சிலையைப் போல அசையாமல் உட்கார்ந்திருப்பாள். இல்லாவிட்டால் கட்டிலில் போர்வையை மூடித் தூங்குவாள். இரண்டாவது மணி அடித்ததும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடுவான். சாப்பிட ஏதாவது இருந்தால் சாப்பிடுவான். இல்லாவிட்டால் இல்லை. சொல்லப்போனால் ஒருநாள் கூட சரியான நேரத்திற்கு அவன் பள்ளிக்கூடம் போனதே இல்லை. சாக்கோ சார் அவனைப் பார்த்ததும் கூறுவார்.
‘‘களீக்கல் நாயருக்கு இப்பத்தான் பொழுது விடிஞ்சிருக்கு... அப்படித்தானே?’’
அதைக் கேட்டு வகுப்பிலிருக்கும் எல்லா மாணவர்களும் சிரிப்பார்கள். எந்த அளவிற்கு வெட்கக்கேடான ஒரு செயல் அது!
நாட்கள் பல இப்படியே கடந்து கொண்டிருந்தபோது, சுமதி அக்கா அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனாள். பிரச்சினைகளை மற்ற யாரும் புரிந்துகொண்டிருப்பதைவிட சுமதி அக்கா நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஆனால், தான் ஏதோ உதவி செய்கிறோம் என்ற நினைப்பு எந்த நேரத்திலும் சுமதி அக்காவிடம் இருந்ததில்லை. ‘உன் வீட்டுல சரியான நேரத்துக்கு கஞ்சி கிடைக்கலன்றதுக்காக இல்ல... எனக்குக் கூட ஒரு ஆளு இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறதுதான் காரணம்’ என்பது மாதிரி இருக்கும் அவளின் நடவடிக்கை. அவனுக்குத் தெரியாத கணக்கை அவள் சொல்லித் தருவாள். காலையில் அவனைக் குளிக்க வைத்து, காப்பியும் பலகாரமும் தந்து சரியான நேரத்திற்கு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைப்பாள். மதிய உணவு மட்டும் அவனுடைய வீட்டைச் சேர்ந்தது. நான்கு மணிக்கு பள்ளிக்கூடம் விட்டதுதான் தாமதம், நேராக சுமதி அக்காவின் வீட்டிற்குத்தான் அவன் வருவான்.
வாழ்க்கை இந்த அளவிற்கு மகிழ்ச்சிகரமானது என்ற உண்மையே மணிக்குட்டனுக்கு சுமதி அக்காவின் வீட்டில் போய் தங்கிய பிறகுதான் தெரிய வந்தது. ஏழு சென்ட் நிலமும் அதிலிருக்கும் வீடும் மட்டும்தான் சுமதி அக்காவின் சொத்து. கணவன் போலீஸ்காரனாக இருப்பதால், அவளுக்கு வீட்டுச் செலவுக்குப் பிரச்சினையே இல்லை. போலீஸ் என்று கேட்கும்போது உண்டாகக்கூடிய பயத்தை மாற்றியது தாமு அண்ணன்தான். தாமு அண்ணனுக்குச் சிரிக்க மட்டும்தான் தெரியும். எட்டு நாட்களோ, பத்து நாட்களோ, கழித்து வீட்டிற்கு வரும் தாமு அண்ணன் வரும்போது என்னென்னவெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறான்! பூவன் பழம், மாம்பழம், பேரீச்சம்பழம், அல்வா... ஒரு சிறு குழந்தையிடம் நடப்பதைப் போலத்தான் அவன் சுமதி அக்காவிடம் நடப்பான். ஏதாவது நகைச்சுவையாகப் பேசி அவளை அவன் சிரிக்க வைப்பான்.
சிறுவனாக இருந்தாலும் மணிக்குட்டனுக்கு எல்லா விஷயங்களும் நன்கு புரிந்தன. மகிழ்ச்சிக்கான காரணம் சொத்து அல்ல என்பதை அவன் புரிந்து கொண்டான். நூறு ஏக்கருக்குமேல் இருக்கும் புஞ்சை நிலமும் ஐம்பது ஏக்கர் நஞ்சையும், ஏழு அறைகளைக் கொண்ட வீடும் சொந்தத்தில் வைத்திருக்கும் கீழாற்றுக்கரை கிராமத்தின் ஒரு ஜமீன்தாரான களீக்கல் கோன்னக் குறுப்பின் மகனான மணிக்குட்டன், மகிழ்ச்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டது ஏழு சென்ட் நிலத்தின் சொந்தக்காரியான சுமதி அக்காவின் வீட்டில் இருக்கும் போதுதான். ஓணப் பண்டிகையின்போதோ அல்லது விஷு பண்டிகையின்போதோ தவிர மற்ற நேரங்களில் நல்ல சாப்பாடு சாப்பிட்டதாக அவனுடைய ஞாபகத்திலேயே இல்லை. காலையில் கஞ்சி. அதில் சில நேரங்களில் உப்பு இருக்கும். சில நேரங்களில் உப்பு இருக்காது. பகல் நேரத்தில் அரிசிச்சோறும் மோரும். அதற்குக் கூட்டு என்று ஏதாவது இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சிதான். இரவு நேரத்தில் கஞ்சியும் சேம்புக் கூட்டும். இவ்வளவு வருடங்களாக இதை மட்டுமே சாப்பிட்டு பழகிப்போன அவன் ஆச்சரியம் மேலோங்க நினைத்துப் பார்த்தான் - ருசியுள்ள உணவையும் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்! இப்படி தன்னுடைய சொந்த வீட்டிலேயே ஒரு அன்னியனைப் போல அவன் வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில்தான் அவனுடைய தந்தை வயிற்றுவலி வந்து வழியில் விழுந்து கிடந்தார்.