அப்பாவின் காதலி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7031
ஆறாவது நாள் திருவிழா தாமரைக் குளக்கரை உண்ணித்தான்மார்களைச் சேர்ந்தது.
எட்டாம்நாள் திருவிழாவும் ஒன்பதாவது நாள் திருவிழாவும் கரைக்காரர்களைச் சேர்ந்தது. திருவிழா காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு முழுமையான விடுமுறை. கொடியேற்றம் முதல் திருவிழா முடிவது வரை திருவிழா நடக்கும் இடத்தைவிட்டு மணிக்குட்டன் நகர மாட்டான். அவனுடன் எப்போதும் அப்பு அண்ணன் துணையாக இருப்பான்.
ஒன்பதாவது நாள் திருவிழான்னு அய்யப்ப பணிக்கர் ஆசானின் ‘நல்லதங்காள் கதை’ இசை நாடகம்தான் அந்த வருடத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. அதுவரை ஒவ்வொரு வருடமும் கதகளிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடகம் இடம்பெற வேண்டும் என்று முடிவெடுத்தது மணிக்குட்டனின் தந்தைதான். அவனுடைய தந்தைக்கு சிறிது இசையறிவு இருந்ததால் பணிக்கர் ஆசான் அவரின் நெருங்கிய நண்பராக மாறியிருந்தார். பெண்களைப் போல நீளமாக முடி வளர்த்துக்கொண்டு வெற்றிலை போட்டச் சிவந்த உதடுகளுடன் ஆசான் தன் தந்தையின் முன்னால் அமர்ந்து கதை சொல்வதைக் கேட்பதே ஒரு சுவையான அனுபவம்தான்.
கதகளிக்குப் பதிலாக நாடகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து ஊரில் ஒரு பிளவு உண்டானது. இந்த விஷயத்தில் கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ அவன் தந்தைதான்.
கிழக்குப்பக்கம் வட்டவடிவ பீடத்திற்குப் பக்கத்தில் மேடை போடப்பட்டிருந்தது. அந்த பீடத்திலிருந்து கிணறு இருக்கும் இடம் வரை மைதானம் முழுக்க ஆட்கள் நிறைந்திருந்தார்கள். பணிக்கர் ஆசானும் பாகவதரும் இணைந்து கீர்த்தனைகளைப் பாடியதோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆர்மோனியமும் மிருதங்கமும் இணைந்து ஒரு மாறுபட்ட அனுபவத்தை அங்கு உண்டாக்கின. கீழாற்றுகாரர்களுக்கு இந்த விஷயங்கள் புதுமையானவையாக இருந்தன.
மணிக்குட்டன் அப்பு அண்ணனுடன் மைதானம் முழுக்க ஓடி ஓடி சுற்றித் திரிந்தான். அப்படி ஓடி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்குப் பின்னால் படர்ந்து நின்றிருந்த பலா மரத்திற்குக்கீழே ஒரு விஷயத்தைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அங்கு அவனுடைய தந்தையும் கவுரியம்மாவும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவனுடைய தந்தையின் கை கவுரியம்மாவின் மேல் இருந்தது. படம் விரித்து ஆடும் பாம்பைப் பார்த்ததைப் போல அவன் திகைப்புற்று நின்று விட்டான். அப்பு அண்ணன் அவன் பின் பாகத்தில் மெதுவாக கிள்ளினான். அவனைவிட மூன்று வயது மூத்தவன் அப்பு அண்ணன்.
அவனுடைய தந்தை அவனைப் பார்த்தார். அடுத்த நிமிடம் சிறிது தள்ளி நின்றார். பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றினார்.
‘‘நீ தேவையில்லாம சண்டை, பொல்லாப்புனு போக வேண்டாம். மற்ற விஷயங்களை நான் பேசிக்கிறேன்.’’
‘‘அண்ணே... நாளைக்கு நீங்க அங்கே வருவீங்களா?’’
‘‘வர்றேன். நீ போ.’’
கவுரியம்மா தெற்குதிசை நோக்கி நடந்தாள்.
அவனுடைய தந்தை அவனைப் பார்த்து சத்தம் போட்டார்.
‘‘உன்னால ஒரு இடத்துல உட்கார்ந்து நாடகத்தைப் பார்க்க முடியலியாடா?’’
இவ்வாறு கத்திய அவன் தந்தை கவுரியம்மா போனவழியே தெற்குப் பக்கமாய் நடந்து போனார்.
அதற்குப் பிறகு நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இல்லாமற்போனது. மனதின் ஒரு மூலையில் முள் பலமாக குத்தியதைப் போல் அவன் உணர்ந்தான். அவனுடைய தாயும் பெரிய அக்காவும் சுமதி அக்காவும் பாட்டியும் ஒன்றாக பீடத்திற்கருகில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரியாமல் தன் தந்தை கவுரியம்மாவுடன் ரகசியமாக ஏன் பேசவேண்டும்?
அப்பு அண்ணன் அழைத்தான்: ‘‘மணிக்குட்டா!’’
‘‘ம்...’’
‘‘உன் அப்பா என்ன பண்றாருன்னு பார்த்தியா?’’
‘‘உனக்கு விஷயம் என்னன்னு புரியுதா?’’
அவன் அப்பு அண்ணனைப் பார்த்தான்.
‘‘உன் அப்பாவுக்கு சர்க்கார் கவுரிமேல ரொம்பவும் பிரியம்...’’
அதைக்கேட்டு மணிக்குட்டனுக்கு அழுகை வரும்போல் இருந்தது.
‘‘சர்க்கார் கவுரின்னா என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமாடா மணிக்குட்டா?’’
‘‘எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்.’’
‘‘சர்க்கார் சொத்துன்னா அது எல்லாருக்கே சொந்தம்னு அர்த்தம். அதைப்போலத்தான் கவுரியும். இப்போ கவுரியம்மாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிறது உன் அப்பா!’’
அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் நடந்தான் மணிக்குட்டன். அப்பு அண்ணனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற ஒரே எண்ணம்தான் அப்போது அவனுக்கு இருந்தது. அப்பு அண்ணனுடன் சேர்ந்து நடந்தால், அவன் மேலும் ஏதாவது கூறினாலும் கூறுவான். எதற்கு வீண் வம்பென்று அவனுக்குத் தெரியாமல் மணிக்குட்டன் தன் வீட்டை நோக்கி ஓடினான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தை அடைந்ததும், அவன் வாய்விட்டு அழுதான். நாடகத்தைப் பார்ப்பதற்காக தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கையில் தீப்பந்தத்துடன் சிலர் எதிரில் வந்தபோது, அவன் அழுகையை நிறுத்தினான். இருந்தாலும், தாங்க முடியாத அளவுக்கு மனதில் கவலை உண்டானது. தன் தந்தை ஏன் இப்படி நடந்து கொண்டார்? அப்பு அண்ணன் என்ன கூறினான் என்பதை அவனுடைய தந்தை அறிவாரா? அப்படியென்றால் பிறர் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி என்னவெல்லாம் கூறுவார்கள்?
அழுதுகொண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டும் அவன் வீட்டை அடைந்தபோது, தெற்குப் பக்கம் இருந்த முன்கதவு அடைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு சாவியுடன்தான் அவன் தாயும், பெரிய அக்காவும் நாடகம் பார்க்கப் போயிருப்பார்கள். வரும்போது சாவியை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும். உள்ளே செல்ல என்ன வழி என்ற சிந்தனையுடன் அவன் அங்கு நின்றிருந்தபோது கிழக்கு பக்கமிருந்த அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் அவன் காதில் விழுந்தது. யாராவது திருடனாக இருக்குமோ? இல்லாவிட்டால் பேய், பிசாசு என்று ஏதாவது இருக்குமோ? பயந்து நடுங்கியவாறு அவன் நின்று கொண்டிருந்தான். அப்போது அவனுடைய தந்தையும் கவுரியம்மாவும் தெற்கு வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அவனைக் கண்டு பயந்ததைப் போல் கவுரியம்மா கேட்டாள். ‘‘யார் அது?’’
அவன் தந்தை அவன் அங்கு நின்றிருப்பதைத் தெரிந்து கொண்டார்.
‘‘நீ என்னடா சனியனா ஆயிட்ட! எங்கே பார்த்தாலும் நட்சத்திரத்தைப் போல கண் முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கே!
கவுரியம்மாவுடன் சேர்ந்து அவன் தந்தை நடந்தார். கவுரியம்மா மெதுவான குரலில் கேட்டாள்:
‘‘பையன் எல்லாத்தையும் தெரிஞ்சிருப்பானா?’’
‘‘ம்... தெரிஞ்சிருப்பான்! நீ அந்தப் பலா மரத்தைத் தாண்டி வடக்குப் பக்கம் இறங்கி மரவள்ளிச் செடிகளைக் கடந்து நடந்து போ...’’
மணிக்குட்டன் அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் போய் படுத்தான். அய்யப்ப பணிக்கர் ஆசான் உரத்த குரலில் பாடிய பாட்டு அங்கு கேட்டது. மக்களின் ஆரவாரச் சத்தமும் கேட்டது. அவற்றைத் தாண்டி தன்னுடைய தொண்டை துடித்துக் கொண்டிருக்கும் ஓசை கூட அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.