
அப்பு அண்ணனின் தந்தைக்கும் அந்த நோயைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றும் செரியன் மாப்பிள்ளையிடம் விசாரித்தார். சிறிய அளவில் தனியாக செரியன் மாப்பிள்ளை சிகிச்சை செய்யும் வேலையில் ஈடுபடுவதும் உண்டு. விஷயத்தைக் கேள்விப்பட்ட செரியன் மாப்பிள்ளை மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தவாறு தலையை ஆட்டினான்.
‘‘ஒரு நாளைக்கு முன்னாடியே ஆப்பரேஷன் செய்திடுங்க...’’
ஆப்பரேஷன் விஷயத்தை மணிக்குட்டனின் தந்தை அறிந்த போது, அவர் எந்தவித பதைபதைப்பையும் காட்டிக்கொள்ளவில்லை. தேவைப்பட்டால் செய்து கொள்ள வேண்டியது தான் என்று மட்டும் சொன்னார். ஆப்பரேஷன் செய்வதற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. மணிக்குட்டனின் தாய் ஆப்பரேஷன் செய்ய சம்மதித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.
ஆப்பரேஷன் செய்வதற்காக தியேட்டருக்கள் கொண்டு செல்வதற்கு முன்பு மணிக்குட்டனின் தந்தை அவனையும் பெரிய அக்காவையும் பார்க்க வேண்டுமென்று சொன்னார். அவர்கள் அருகில் சென்றதும் அழுதுகொண்டிருந்த அவன் தாயைப் பார்த்து அவர் சொன்னார்: ‘‘நீ எதைப்பற்றியும் தேவையில்லாம நினைச்சு கவலைப்பட வேண்டாம். உன் மகன் நல்ல புத்திசாலி. என்னைவிட அவன் குடும்பத்தை நல்லா பாத்துக்குவான்...’’
தொடர்ந்து அவன் மணிக்குட்டனை பாசம் மேலோங்கப் பார்த்து அவனுடைய கையைப் பிடித்து வருடினார்.
ஆப்பரேஷன் நடக்கும் நாளன்று மணிக்குட்டனின் தாய், பெரிய அக்கா தவிர அப்பு அண்ணன், அப்பு அண்ணனின் தந்தை, சுமதி அக்கா, செரியன் மாப்பிள்ளை ஆகியோருடன் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடியிருந்தார்கள். அப்பு அண்ணன் மணிக்குட்டனை விட்டு சதா நேரமும் பிரியாமல் இருந்தான். அரை சக்கரத்திற்கு அப்பு அண்ணன் நிலக்கடலை வாங்கிக்கொண்டு வர, அதை அவர்கள் இருவரும் மாமரத்திற்குக் கீழே அமர்ந்து தின்றார்கள். தன்னுடைய எதிரியான ஜார்ஜை முந்தையநாள் மாலையில் அடித்த கதையை அப்போது அப்பு அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான். ஜார்ஜ் கீழே உள்ள கோவிலுக்கு முன்னால் உள்ள ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டிருந்திருக்கிறான். சைக்கிள் கோவில் சுவரில் மோதி அவன் கீழே விழுந்துவிட்டான். ‘‘என்ன, கோவில் மேல ஏறிட்டியா?’’ என்று உரத்த குரலில் அப்பு அண்ணன் அதைப் பார்த்து கூறியிருக்கிறான். தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை உண்டாகியிருக்கிறது. ஜார்ஜின் வயிற்றில் ஒரு உதை கொடுத்திருக்கிறான் அப்பு அண்ணன். ‘அய்யோ... அம்மா...’ என்று அலறியவாறு ஜார்ஜ் உரத்த குரலில் அழுதிருக்கிறான்!
‘‘அவனோட நண்பர்களையும் நான் மனசுல வச்சிருக்கேன். அவங்களுக்கும் ஏதாவது கொடுத்தாத்தான் சரியா வரும்...’’
ஒருமணி நேரம் ஆகும் என்று சொன்ன ஆப்பரேஷன் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. டாக்டர்களும் நர்ஸ்களும் வெளியே வந்தார்கள். அவர்கள் மணிக்குட்டனின் தாயின் முகத்தைப் பார்க்கவேயில்லை. சிறிது தூரத்தில் நின்று பெரிய டாக்டரும் சின்ன டாக்டரும் தங்களுக்குள் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மணிக்குட்டனின் தாயை அருகில் அழைத்துக் கேட்டார்கள்: ‘‘வயசான ஆண்பிள்ளை யாராவது இருக்காங்களா?’’
மணிக்குட்டனின் தாய் சொன்னாள்: ‘‘சின்னப்பையன்தான் இருக்கான். பத்து வயசு நடக்குது.’’
ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்த டாக்டர் சொன்னார்:
‘‘கூப்பிடுங்க.’’
அப்பு அண்ணன் மணிக்குட்டனை அங்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்கு பின்னால் செரியன் மாப்பிள்ளை வந்தான்.
டாக்டர் சொன்னார்: ‘‘வயிறை ஓப்பன் பண்ணி பாக்குறப்போ புற்றுநோய் சம்பந்தப்பட்ட புண்கள் நிறைய இருக்குறது தெரிஞ்சது. கத்தியை வைக்கவே முடியல. அதுனால ஆப்பரேஷன் எதுவும் செய்யாமலே வயிறைத் தையல் போட்டு மூடியிருக்கு., காயம் ஆறினவுடனே, நோயாளியை வீட்டுக்குக் கொண்டு போகலாம்.’’
புரிந்துக்கொள்ளாததைப் போல் மணிக்குட்டனின் தாயும் மணிக்குட்டனும் டாக்டரின் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள். டாக்டர் செரியன் மாப்பிள்ளையைப் பார்த்தார். அவன் பெரிய டாக்டரிடம் வேலை பார்த்திருக்கிறான்.
‘‘நான் சொன்னதை நீ கேட்டேல்ல செரியன்?’’
‘‘கேட்டேன்...’’
‘‘அதை இவங்களுக்கு விளக்கிச் சொல்லு...’’
டாக்டர்கள் புறப்பட்டார்கள்.
மணிக்குட்டனின் தாயையும் மணிக்குட்டனையும் அழைத்துக் கொண்டு செரியன் மாப்பிள்ளை அப்பு அண்ணனும் மற்றவர்களும் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தான். எல்லாரையும் பார்த்து செரியன் மாப்பிள்ளை சொன்னான்: ‘‘நோய் முற்றிடுச்சு. இனிமேல் ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு...’’
அதைக்கேட்டு மணிக்குட்டனின் தாய் நிலை குலைந்து கீழே விழுந்துவிட்டாள். பெரிய அக்கா உரத்த குரலில் கூப்பாடுபோடத் தொடங்கிவிட்டாள். அவர்களைப் பார்த்து மணிக்குட்டனும் அழ ஆரம்பித்தான்.
வயிற்றைக்கிழித்த புண் ஆறுவதற்கு முன்பே மணிக்குட்டனின் தந்தை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
9
சவ அடக்கம் முடிந்து எல்லாரும் அந்த இடத்தைவிட்டுப் போனபிறகு மணிக்குட்டனும் அவனுடைய தாயும் பெரிய அக்காவும் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்று நின்றிருந்தார்கள்.
கரை காணாத கடலில் சிக்கிய மூன்று உயிர்கள்! சுமதி அக்கா மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு இருந்தாள்.
மூன்றாம் நாள் செங்கோட்டையிலிருந்து பணம் வட்டிக்குத் தரும் மாத்தன் மாப்பிள்ளை மணிக்குட்டனின் வீட்டிற்கு வந்தார். அவருடன் குறுப்பு மாமாவும் இருந்தார். அவர்தான் அந்த ஆளுக்கு வீட்டிற்கு வழி காட்டியிருக்கிறார்.
சீட்டு பிடித்த வகையில் மணிக்குட்டனின் தந்தை அவருக்கு நான்காயிரம் ரூபாய் தரவேண்டுமாம். அதற்குப் பணயமாக தெற்குப் பக்கம் இருக்கும் நிலம் வைக்கப்பட்டிருக்கிறது.
மாத்தன் மாப்பிள்ளை இந்த விஷயத்தைச் சொன்னபோது, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் மணிக்குட்டனின் தாய் குறுப்பு மாமாவை பார்த்தாள்.
‘‘கையில இருக்குற சொத்தை விற்றாவது கடனை உடனடியா தீர்க்குறதுதான் நல்லது. அதை விட்டுட்டு வழக்கு அது இதுன்னு போனா தேவையில்லாம கோர்ட்டுக்குத்தான் செலவழிக்கணும்...’’
அதைக்கேட்டு மணிக்குட்டனின் தாய் சொன்னாள்: ‘‘என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதை நீங்களே செய்திடுங்க குறுப்பு அண்ணே.’’
அருகில் நின்றிருந்த சுமதி அக்கா மணிக்குட்டனின் தாயின் கையை மெதுவாக கிள்ளினாள். தொடர்ந்து அவள் சொன்னாள்.
‘‘இதைப்பற்றி யோசனை பண்ணி செய்யிறதுக்கு இங்கே வேற ஆளுகளும் இருக்காங்க...’’
குறுப்பு மாமா மாத்தன் மாப்பிள்ளைக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஆள் என்பதைத் தெரிந்தகொள்ள அவர்களுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை.
வேறு பல கடன்காரர்களும் இருந்தாலும். சாலிசேரி ஈப்பன் முதலாளி, தெற்குப்புரை கொச்சு நீலகண்ட பணிக்கர், அறைக்கல் கொச்சுண்ணித்தான்... எல்லாருக்கும் மணிக்குட்டனின் தந்தை பணம் தர வேண்டியிருந்தது. ப்ராமிஸரி நோட் எழுதிக்கொடுத்து அவர் பல இடங்களில் கடன் வாங்கயிருந்தார்.
ஒருநாள் மணிக்குட்டனின் தாய் சமையலறையில் அமர்ந்து தன்னுடைய, தன் பிள்ளைகளுடைய நிலைமையைச் சொல்லி அழுதபோது, சுமதி அக்கா சொன்னதை அவன் நினைத்துப் பார்த்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook