தேவராகம் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
மிகவும் தூரத்தில் தெரியும் அழகான, கண்களைக் கூசச் செய்யும் ஆல்ப்ஸ். அங்குதான் ஜாக்ஸ் போகிறான். ஒரு விஷயத்தை எனக்குச் சொல்லுங்க. உண்மையிலேயே நாளைக்கா அவன் புறப்படுகிறான் ?’’
‘‘ஆமாம்... நாளைக்கு ஜாக்ஸ் அங்கே போறான். பயணத்தைப் பற்றி அவன் உன்னிடம் ஏதாவது சொன்னானா ?’’
‘‘இல்ல. ஜாக்ஸ் என்னிடம் எதுவும் சொல்லல. ஆனால், நான் நினைத்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அவன் திரும்பி வருவானா ?’’
‘‘ஆமாம்... ஒரு மாதத்திற்குப் பிறகு... ஷரத்ருத், நான் உன்னிடம் சில விஷயங்களைக் கேட்கணும். நீங்க ரெண்டு பேரும் தேவாலயத்தில் சந்தித்த சம்பவத்தைப்பற்றி நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை ?’’
‘‘அவன் இரண்டு முறைகள் வந்திருந்தான். நான் அதை மறைத்து வைக்கணும்னு நினைக்கல. ஆனால், எங்கே உங்களுக்கு அந்த விஷயம் தெரிஞ்சா, நீங்க வருத்தப்படுவீங்களோன்ற பயம் எனக்கு இருந்தது.’’
‘‘ஷரத்ருத், நீ எதையும் சொல்லாமல் இருந்தால்தானே எனக்கு வருத்தம் உண்டாகும்.’’
அப்போது தன் கையை நீட்டிய அவள் என் கைகளைப் பிடித்தாள் தொடர்ந்து அவள் கேட்டாள் :
‘‘போறப்போ ஜாக்ஸ் சாதாரணமாக இருந்தானா ?’’
‘‘சொல்லு ஷரத்ருத்...’’ - நான் உடனடியா அவளைப் பார்த்து கேட்டேன் : ‘‘அவன் உன்னைக் காதலிக்கிறதா சொன்னானா ? எனக்குத் தெரியவேண்டியது அதுதான்.’’
‘‘இல்ல... ஜாக்ஸ் அப்படியெதுவும் சொல்லல. ஆனால், அப்படிச் சொல்லாமலே என்னால் அதை உணர முடியும். ஆனால், நீங்கள் என்மீது வைத்திருக்கிற காதல் அளவுக்கு அவனுக்கு என்மீது இருக்கிறதா தெரியல...’’
‘‘சரி... அது இருக்கட்டும். ஷரத்ருத், ஜாக்ஸ் போறான்றதை நினைச்சு நீ கவலைப்படுறியா ?’’
‘‘அவன் போறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். அவன் எதிர்பார்த்த மாதிரி நடக்க என்னால முடியாதே !’’
‘‘ஜாக்ஸ் போவதால் உனக்குக் கவலை இருக்கான்னு சொல்லு.’’
‘‘நான் காதலிக்கிறது உங்களைத்தான் அது உங்களுக்குத் தெரியாத விஷயம் இல்லையே ! ஓ... நீங்க ஏன் திடீரென்று கையை எடுத்தீங்க ? நீங்க திருமணமாகாத ஆளாக இருந்திருந்தால், நான் இதைச் சொல்லியிருக்கவே மாட்டேன். கண்பார்வை இல்லாத ஒரு சிறு பெண்ணை யார் திருமணம் செய்துகொள்வார்கள் ? அப்படி இருக்கும்போது, நாம ரெண்டு பேரும் ஒருவரையொருவர் ஏன் காதலிக்கக்கூடாது ? என்ன... அதுல ஏதாவது தப்பு இருக்கா ?’’
‘‘காதலிப்பதில் எந்தச் சமயத்திலும் எந்தவொறு தவறும் இல்லை.’’
‘‘நல்லதைத் தவிர என் மனதில் வேறு எதுவும் இல்லை என்பதை என்னால புரிஞ்சிக்க முடியாது. நான் ஜாக்ஸைக் கவலைக்கு உள்ளாக்க விரும்பல. நான் யாரையும் வேதனைப்படுத்த விரும்பல. மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பது மட்டும்தான்...’’
‘‘தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி உன்னைக் கேட்க ஜாக்ஸ் நினைச்சிருக்கான்.’’
‘‘ஜாக்ஸ் ஆல்ப்ஸுக்குப் போறதுக்கு முன்னாடி நான் அவனிடம் பேசினால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க அதற்கு என்னை அனுமதிப்பீர்களா ? தயவுசெய்து இந்தக் காதலை விட்டெறி என்று நான் அவனிடம் சொல்லி, அவனுக்குப் புரிய வைக்கிறேன். என்னால் யாரையும் திருமணம் செய்ய முடியாதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? எது எப்படியோ... ஜாக்ஸிடம் பேச நீங்க என்னை அனுமதிப்பீங்கள்ல ?’’
‘‘இன்னைக்கு சாயங்காலம்...’’
‘‘இல்ல... நாளைக்கு அவன் போறதுக்கு முன்னாடி...’’
சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நல்ல வெளிச்சம்... வெப்பம் உடலைச் சுட்டது. நாங்கள் எழுந்து பேசிக்கொண்டே ஆள் அரவமற்ற பாதை வழியாக வீட்டை நோக்கி நடந்தோம்.
8
சிறிது நேரத்திற்கு நான் இந்தப் புதினத்¬ எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன். இறுதியில் பனி உருகி, பாதைகள் நடக்கக் கூடியதாக ஆயின. வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் போனதால் தடைபட்டுப் போயிருந்த பல வேலைகளும் முன்னால் தெரிந்தன.
எழுதியது வரையில் நான் நேற்று வாசித்துப் பார்த்தேன். என் இதயத்திற்குள் இதுவரை ஒளிந்து கொண்டும் மறைந்துகொண்டும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த உண்மை என்னவென்பதை நான் இப்போது சரியாகப் புரிந்துகொண்டு விட்டேன். இதுவரை உண்மையிலேயே நான் தவறான சுழலில் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். எமிலியின் வார்த்தைகள் எனக்கு ரகசியமாகத் தோன்றின. ஷரத்ருத்தின் தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் எனக்கு அவள்மீது காதல் இருக்கிறது என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
எந்த அளவிற்கு மனதைப் புண்படுத்தாத, தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஷரத்ருத் பேசிளான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, எனக்குள் ஒரு நிம்மதி உண்டானது. ‘அவள் ஒரு சிறுபெண்’ - நான் நினைத்தேன். உண்மையான காதலாக இருந்தால் சந்தேகங்களும் குழப்பங்களும் முரண்பாடுகளும் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். உண்மையாக சொல்லப்போனால் கவலையில் இருக்கும் ஏதோ ஒரு சிறுவன்மீது தோன்றக்கூடிய அன்புதான் ஷரத்ருத் மீது எனக்கு இருந்தது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஏதாவதொரு நோயாளியைப் பார்ப்பதைப் போலத்தான் நான் அவளைப் பார்த்தேன். ஷரத்ருத்தின் மீது நான் கொண்டிருந்த ஈடுபாட்டை நான் என்னுடைய தார்மிகமான பொறுப்பாக எடுத்துக் கொண்டேன்.
ஜாக்ஸ் போய் விட்டான் (போவதற்கு முன்னால் அவனைச் சந்திக்க வேண்டும் என்ற அனுமதியை நான் ஷரத்ருத்திற்குக் கொடுத்திருந்தேன். விடுமுறை முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவன் திரும்பி வந்தான். ஷரத்ருத்திடமிருந்து தப்பித்ததைப் போலவோ, இனிமேல் அவளுடன் பேசுவதாக இருந்தால், நான் இருக்கும்போது மட்டுமே அப்படிச் செய்வான் என்று எனக்குக் கூறாமல் கூறுவது மாதிரியோ உள்ள முக வெளிப்பாட்டுடன் அப்போது அவன் இருந்தான்.)
ஜாக்ஸ் போன பிறகு எங்களுடைய வாழ்க்கை அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தது. முன்கூட்டியே ஏற்பாடு செய்ததற்கு ஏற்றபடி ஷரத்ருத் மேடம் லூயியின் இல்லத்தில் வசிக்கச் சென்றாள்.
தினமும் அங்கு போய் நான் அவளைப் பார்ப்பேன். இருவருமே சந்தோஷப்படுகிற மாதிரி ஷரத்ருத் எதையும் கூறமாட்டாள் என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிட்டேன். நான் அவளிடம் பாதிரியார் என்ற முறையில் மட்டுமே பேசினேன். அதேபோல அவளும் பெரும்பாலும் மேடம் லூயி இருக்கும்போது மட்டுமே என்னுடன் பேசுவாள். முக்கியமாக ஷரத்ருத்தை வேதபாடங்களைக் கற்றுக் கொள்ளச் செய்வதிலும், உயிர்த்தெழும் திருநாளன்று நடக்கும் புனித விருந்தில் பங்கு கொள்ளச் செய்வதிலும் நான் மூழ்கியிருந்தேன். ‘ஈஸ்டர் விருந்தி’ல் பங்கு கொள்ளவும் செய்தேன்.
பதினைந்து நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற விஷயம் இது. விடுமுறையை எங்களுடன் கழித்த ஜாக்ஸ் ஏசுநாதரின் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.