தேவராகம் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
அவள் எதைப் பற்றியோ சிந்திக்கிறாள் என்பதையும், வார்த்தைகள் அவளுடைய தொண்டைகளுக்குள்ளேயே என்ன காரணத்தாலோ தங்கிவிட்டது என்பதையும் நான் புரிந்து கொண்டேன். எங்கள் இருவரின் அதிர்ஷ்டமும் வெடித்து மலரும் வகையில் நல்ல வார்த்தைகள் என் வாய்க்குள்ளிருந்து வெளியே வந்தால்...
‘ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைக்க வாய்ப்பு இருக்கு’ என்ற மார்டினின் வார்த்தைகள் அப்போது என்னுடைய ஞாபக அறையிலிருந்து உயர்ந்து வந்தது. ஆழமான ஏதோ சிந்தனை ஒரு நிமிடம் என் உள்மனதைப் பிடித்து அழுத்தியது.
‘‘உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கணும்னு நினைச்சேன்’’ - இறுதியில் அவள் சொன்னாள் : ‘‘ஆனால், அதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு எனக்குத் தெரியல... கண்பார்வையற்ற பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பார்வை தெரியாதவர்களாகத்தான் இருப்பார்களா ?’’ - அவள் திடீரென்று கேட்டாள்.
‘‘இல்ல ஷரத்ருத்’’ - நான் சொன்னேன் : ‘‘அப்படி மிகவும் அரிதாகத்தான் நடக்கும். உண்மையாக சொல்லப்போனால், அப்படி நடப்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.’’
அப்போது அவளுக்கு எந்த அளவிற்கு நிம்மதி தோன்றியது தெரியுமா ? எதற்காக அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விருப்பப்படுகிறாள் என்று அவளிடம் கேட்க நான் நினைத்தேன். ஆனால், அதற்கான தைரியம் வரவில்லை. தொடர்ந்து நான் சொன்னேன் :
‘‘குழந்தைகள் பிறக்கணும்னா, திருமணமாகணும்.’’
‘‘என்னிடம் அப்படிச் சொல்லாதீங்க. அது உண்மை இல்லைன்னு எனக்குத் தெரியும்.’’
ஷரத்ருத் வார்த்தைகளைக் கேட்டு நான் உண்மையாகவே ஆச்சரியப்பட்டேன். எனினும், தர்க்கத்தை விடாமல் நான் சொன்னேன் :
‘‘நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லிட்டேன். ஆனால், மனிதர்களின் மற்றும் தெய்வத்தின் சட்டங்கள் கைவிடக் கூடிய சில விஷயங்களுக்கு இயற்கையின் சட்டங்கள் உதவியாக இருக்கின்றன என்பது உண்மைதான்.’’
‘‘கடவுளின் சட்டம் அன்பு நிறைந்தது என்று நீங்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கீங்களே !’’
‘‘ஆனால், இது அந்த அன்பு அல்ல... அதற்குப் பின்னால் இரக்கம் இருக்குது.’’
‘‘அப்படின்னா, நீங்க இரக்கத்தின் காரணமாகவா என்னை...?’’
‘‘இல்ல... அப்படி இல்லைன்னு ஷரத்ருத், உனக்குத் தெரியும்.’’
‘‘அப்படின்னா நம்ம காதல் கடவுளின் சட்டத்திலிருந்து மிகவும் தூத்தில் இருக்குன்றதை நீங்க ஒத்துக்குவீங்களா ?’’
‘‘ஷரத்ருத், நீ என்ன சொல்ற -?’’
‘‘ஓ ! நான் என்ன சொல்ல நினைக்கிறேன்னு உங்களுக்குத் தெரியலையா ?’’
எப்படியாவது விஷயத்தை மாற்றினால் போதும் என்று நான் நினைத்தேன். ஏதாவது சரியான வழி தெரிந்தால்... நான் நினைத்தேன். ஆனால், எல்லாமே வீணாகத்தான் முடிந்தது.
வேகமான இதயத் துடிப்பு என் சகல தர்க்கங்களையும் சின்னாபின்னமாக்கியது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் கேட்டேன்.
‘‘உன் காதல் தகுதியற்றது என்று நினைக்கிறியா ?’’
உடனே அவள் திருத்தினாள் :
‘‘உன் என்று சொல்லாதீங்க. ‘நம்மோட’ என்று சொல்லுங்க. நீங்க சொல்றது உண்மைதான் என்று என் மனம் சொல்லுது...’’
‘‘அப்படின்னா...?’’
என்னுடைய குரலை யாரோ தடுத்ததைப்போல் இருந்தது.
ஆனால், ஒரே மூச்சில் அவள் சொன்னாள் : ‘‘ஆனால், உங்களைக் காதலிக்காமல் என்னால் இருக்க முடியாது.’’
எது எப்படியோ, நாங்கள் சுற்றிக் கொண்டிருந்தது முடிவுக்கு வந்தது. இருவரையும் யாரோ பின்பற்றி வருகிறார்கள் என்பது மாதிரி அவ்வளவு வேகமாக நாங்கள் நடந்தோம். அவள் என்னுடைய கையை இறுகப் பற்றியிருந்தாள். என் உடலிலிருந்து உயிர் எங்கோ சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து போனதைப்போல... வழியில் இருக்கும் ஏதாவது கல்லில் பட்டு இரண்டு பேரும் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று நாங்கள் பயந்தோம்.
11
மே, 19.
டாக்டர் மார்ட்டின் இன்று காலையில் வந்திருந்தார். ஷரத்ருத்திற்கு ஆப்பரேஷன் நடக்கப்போகும் விஷயத்தை அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடியும் என்ற முழுமையான நம்பிக்கை டாக்டர் ரூக்ஸுக்கு இருந்தது. சில நாட்களுக்கு ஷரத்ருத் தன்னுடைய மேற்பார்வையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். நான் அதை மறுப்பதற்கில்லை. எனினும், என்னுடைய கோழைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அவருக்கு என்ன பதில் சொன்னேன் தெரியுமா ? ‘‘எனக்கு அதைப்பற்றி யோசிக்க கொஞ்ச நேரம் வேணும் !’’
ஷரத்ருத்தை அதற்குத் தயார் பண்ணுவதற்குத்தான் நான் நேரம் வேண்டுமென்று சொன்னேன். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், பார்வைசக்தி கிடைக்கப்போகும் விஷயத்திற்காக என் இதயம் சந்தோஷ நடனம் ஆடவேண்டும். ஆனால், இதயத்தில் குழப்பங்கள் நிறைந்த, வெளியே கூறமுடியாத சுமை அழுத்திக் கொண்டிருந்தது. ‘எனக்குப் பார்வைசக்தி கிடைக்கும்’ என்று எப்படி நான் ஷரத்ருத்திடம் கூறுவேன்...? நான் கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளானேன்.
மே, 19 (இரவு).
நான் ஷரத்ருத்தைப் பார்த்தாலும், அவளுடன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவள் மட்டும் தனியாகத்தான் இருந்தாள். நான் நேராக மாடியிலிருந்த அறைக்குச் சென்று ஷரத்ருத்தைக் கைக்குள் அடக்கி, சிறிது நேரம் அவளை என் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைத் தடுக்க முயற்சிக்கவில்லை. அவள் என்னை நோக்கி முகத்தை உயர்த்தியதும், இருவரின் உதடுகளும் இணைந்தன.
மே, 21.
அன்பே வடிவமான கடவுளே, இரவை இந்த அளவிற்குக் கருமை நிறம் கொண்டதாகவும், அழகானதாகவும் ஆக்கியது எங்களுக்காகவா ? எங்களுக்கு ஏற்ற காலநிலை. ஆகாயத்தின் ‘முடிவற்ற அமைதி’யை ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கிறேன் நான். திறந்து கிடக்கும் வானத்திலிருந்து நிலவு தன்னுடைய கிரணங்களை உலகிற்குள் சிதறவிட்டுக் கொண்டிருக்கிறது. ஓ ! எல்லோரின் பார்வையிலிருந்தும் விலகிச் செல்லும் பக்தி, அமைதியாக இருக்கும் என் இதயத்திற்குள் நுழைகிறது. எனக்கு... அய்யோ... என்னால் அமைதியாக பிரார்த்தனை செய்ய முடியவில்லையே ! காதலுக்கு ஏதாவது எல்லை என்ற ஒன்று இருந்தால்... அது கருணையே வடிவமான தெய்வமே, உன்னால் அல்ல. மனிதனால் தீர்மானிக்கப்பட்டது அது. மக்களின் பார்வையில் என்னுடைய காதல் எந்த அளவிற்கு மோசமானதாக இருந்தாலும் சரி, கடவுளே ! உன் பார்வையில் அது எப்படிப்பட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
நான் பாவத்தைப் பற்றியுள்ள சிந்தனையிலிருந்து உயர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பாவம் என்பது என்னால்சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எனினும் கர்த்தாவான ஏசுவே, நான் ஓடமாட்டேன். நிச்சயம் ஓடமாட்டேன். ஷரத்ருத்தைக் காதலிப்பதன் மூலம் நான் எப்படிப்பட்ட பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ளவில்லைதான்.