தேவராகம் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
‘‘அன்புள்ள...’’
அடுத்த நிமிடம் அவள் அறையை விட்டு வெளியேறினாள். முழு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைத்த எமிலியின் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று தெளிவாக எனக்குத் தெரிந்துவிட்டது. இனிமேல் ஷரத்ருத்தை இங்கு இருக்க வைப்பது சரியான விஷயமாக இருக்காது என்பதை நான் அன்று தெரிந்து கொண்டேன்.
7
எமிலியின் உரையாடல் நடந்தது மூன்றாவது நாள். சற்று ஓய்வு நேரம் கிடைத்தபோது மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு காட்டுப்பகுதியின் வழியாக ஷரத்ருத்தை நான் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றேன். மிகவும் சுகமான காலநிலை நிலவிக் கொண்டிருந்தது. அங்கிருந்து மரக்கிளைகள் வழியாகப் பார்த்தால், கீழே பரந்து விரிந்து கிடக்கும் மைதானம் தெரியும். அதற்கப்பால் காற்று வீசும்போது பறந்து உயரும் தூசிப் படலத்திற்கு மத்தியில் பனி மூடியிருக்கும் ஆல்ப்ஸ் மலை தன்னுடய முகத்தைக் காட்டும். இடது பக்கம் சூரியன் மறையப் போகிறது. மிகவும் அருகில் அடர்த்தியாக வளர்ந்திருந்த புற்கள் வெட்டப்பட்ட மேய்ச்சல் இடம். சற்று தூரத்தில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. மலைச் சரிவில் நின்றிருக்கும் ஒவ்வொரு பசுவின் கழுத்திலும் ஒரு மணி கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
‘‘இங்கே இருக்கும் காட்சிகள் எப்படி ?’’ - மணிச்சத்தத்தைக் கேட்ட ஷரத்ருத் கேட்டாள்.
நாங்கள் சுற்றிப் பார்த்தவாறு போய்க் கொண்டிருக்கும்போதே, எங்காவது சற்று நேரம் நின்றால் ஷரத்ருத் கேட்பாள் :
‘‘இந்த இடம் எப்படியிருக்கு ?’’
எப்போதும்போல இந்த முறையும் கேட்டபோது நான் சொன்னேன் : ‘‘இந்த இடம் ஏற்கெனவே உனக்குத் தெரிந்ததுதான். காட்டின் இன்னொரு பக்கத்தில் நாம நின்று கொண்டிருக்கிறோம். இங்கேயிருந்து ஆல்ப்ஸ் மலையை நல்லா பார்க்கலாம்.’’
‘‘இன்னைக்கும் நல்லா பார்க்க முடியுமா ?’’
‘‘ஏன் முடியாது ?’’
‘‘இந்த மலைத்தொடர்களின் அழகு ஒவ்வொரு நாளும் வேறு வேறு மாதிரி இருக்கும் என்று நீங்கள் ஒருமுறை சொன்னீங்களே !’’
‘‘அது உண்மைதான்.
‘‘சரி... அது இருக்கட்டும். முன்னால் இருக்கு இந்தப் பெரிய புல்வெளியில் லில்லி மலர்கள் இருக்கின்றனவா ?’’
‘‘இல்ல ஷரத்ருத். இவ்வளவு உயரத்தில் லில்லி மலர்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், விசேஷ வகையைச் சேர்ந்த ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும்.’’
‘‘வயலில் லில்லி மலர்கள் இருக்குமா ?’’
‘‘வயலில் லில்லி மலர்கள் இருக்காது.’’
‘‘நியூ சாட்டலுக்குப் பக்கத்திலுள்ள வயல்களிலும் இருக்காதா ?’’
‘‘இருக்காது. லில்லி மலர்கள் வயல்களில் இருக்கவே இருக்காது.’’
‘‘அப்படின்னா, வயலில் இருக்கும் அந்த லில்லி மலர்களைப் பார் என்று கடவுள் சொல்லியிருக்கிறாரே !’’
‘‘அப்படிச் சொல்றதுக்கு ஏற்றபடி கடவுளின் யுகத்தில் மலர்கள் இருந்திருக்கலாம். ஆனால், மனிதர்களும் கலப்பைகளும் வருவதற்கு முன்னால் அவை இல்லாமற் போய்விட்டன.’’
‘‘இந்த உலகத்தில் மிகவும் அதிகமாக தேவைப்படுவது தன்னம்பிக்கையும், அன்பும்தான் என்று பல நேரங்களில் நீங்கள் சொல்லியிருக்கிறீங்க. நான் அதை நினைச்சுப் பார்க்கிறேன். மனிதன் தனக்குள் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வதாக இருந்தால், அவன் மீண்டும் ஒருமுறை லில்லி மலர்களைப் பார்க்க முடியாதா ? உங்கள் கருத்து என்ன ? கடவுளின் வார்த்தைகளைக் கேக்குறப்போ லில்லி மலர்கள் கண்களுக்கு முன்னால் இருப்பது மாதிரி எனக்குத் தோணுது. அதேபோல என்னால் அந்த மலர்களை வர்ணிக்க முடியும். நெருப்பு ஜுவாலை நிற மலர்கள் அவை ! நீல நிறத்திலுள்ள பெரிய மலர்கள் ! காதலின் நறுமணம் கொண்ட அழகான மலர்கள்! மாலை நேரத்தில் காற்று வீசும்போது, அவை இப்படியும் அப்படியுமாக ஆடும். அவை நமக்கு முன்னால் இல்லை என்று எப்படிச் சொல்றீங்க ? நான் அவை இருப்பதை உணர்கிறேன். உண்மையாகச் சொல்லப்போனால், புல்வெளி லில்லி மலர்களால் நிறைந்திருக்கிறது.’’
‘‘நீ பார்ப்பதைவிட அழகு அந்த மலர்களுக்கு இல்லை ஷரத்ருத்.’’
‘‘மனக்கண்ணால் பார்ப்பதைவிட அவற்றுக்குக் குறைந்த அழகுதான் என்று சொல்றீங்களா ?’’
‘‘ஷரத்ருத், நீ பார்க்கு அழகுதான் அவற்றிற்கு இருக்கு.’’
‘‘சாலமன் கூட தன்னுடைய மிகவும் புகழ்நிறைந்த காலத்தில் இந்தப் பெரிய லில்லி மலர்களைப்போல அலங்கரிக்கப்பட்டதில்லை’’ - ஏசுவின் இந்த வார்த்தைகள் ஷரத்ருத்தின் உதடுகளிலிருந்து உதிர்ந்தபோது அவற்றை இப்போதுதான் முதல்தடவையாக கேட்கிறோமோ என்று நான் நினைத்தேன்.
‘தன்னுடைய மிகவும் புகழ் நிறைந்த காலத்தில்’ - இந்த வார்த்தைகளை கம்பீரமாக ஷரத்ருத் திரும்பத் திரும்ப சொன்னாள். தொடர்ந்து சிறிது நேரம் அவள் எதுவும்பேசாமல் மவுனமாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன் :
‘‘கண்கள் இருப்பவர்களால் பார்க்க முடிவதில்லை என்று நான் உன்னிடம் சொன்னேன்’’ - அப்போது என் உள்மனதில் பிரார்த்தனையை வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகள் எழுந்தன.
‘‘சொர்க்கத்தின், பூமியின் நாயகனான பிதாவே, நான் உனக்கு நன்றி கூறுகிறேன். நீ இந்த விஷயங்களை ஞானிகளிடமிருந்தும் அறிவாளிகளிடமிருந்தும் மறைத்து வைத்துக் குழந்தைகளிடம் காட்டினீர் அல்லவா ? ஆமாம்... பிதாவே, உன் திருவுள்ளம் அந்த மாதிரி இருந்தது.’’
‘‘உங்களுக்குத் தெரிந்திருந்தால்...!’’ சந்தோஷத்துடன் அவள் சொன்னாள்.
‘‘எந்த அளவுக்கு சிரமமே இல்லாமல் நான் இந்த விஷயங்களை கற்பனை பண்ணுகிறேன் ! என் மனக்கண்களில் தெரிவதை நான் கூறட்டுமா ?’’ - தொடர்ந்து அவள் சொன்னாள் :
‘‘நமக்குப் பின்னாலும் மேலேயும் சுற்றிலும் மிகவும் உயரமான தேவதாரு மரங்கள் ! பொன் நிறத்தில் இருக்கு அந்த மரங்களில் தடிகளில் இருந்து அரக்கின் நறுமணம் வெளிப்படுகிறது. அவற்றுக்கு கருப்பு நிறத்தில் பல கிளைகள் இருக்கின்றன. காற்று வீசுறப்போ, அவை முனகுகின்றன. நாம நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் டெஸ்க்கின்மீது திறந்துவைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் போல - அழகான புல்வெளி ! நிழல் இருக்கும்போது அதன் நிறம் நீலம் என்றால், வெயிலில் அது பொன் நிறத்தில் மாறிவிடும். பலவகைப்பட்ட மலர்கள் என்ற சொற்களால் அது உரையாடல் நடத்துகிறது. பசுக்கள் மெதுவாக நடந்து வர, அவற்றின்மீது ‘மந்திரவித்தை’யை அது பயன்படுத்துகிறது. ‘மனிதக் கண்கள் மூடியிருக்கும்’ என்று நீங்கள் கூறுவீர்கள் அல்லவா ? அதனால் தேவர்கள் வந்து அவற்றைப் படிக்கிறார்கள். புத்தகத்திற்குக் கீழே புகையாலும் தூசிப் படலத்தாலும் போர்த்தப்பட்ட ஒரு குருதி ஆற்றைப் பார்க்கலாம். மிகவும் பெரிய ஒரு நதி... ரகசியத்தின் குவியல்கள் மறைந்து கிடக்கும் அதன் ஒரேயொரு கரை தூரத்தில்...