தேவராகம் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6993
உண்மையாகச் சொல்லப்போனால், என்னுடைய விடுமுறைக் காலத்தை இங்குதான் நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.’’
‘‘இங்கே வீட்டில் கட்டிப்போட்டு இருக்குற அளவுக்கு உனக்கு என்னவோ கிடைச்சிருக்குன்றதுதானே அதற்கு உண்மையான காரணம் ?’’ - உடனடியாக நான் கேட்டேன்.
என் ‘த்வனி’யைக் கேட்டு அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அடுத்த நிமிடம் அவன் எனக்கு நேராகத் திரும்பினான். ஆனால், நான் சொன்னதற்குப் பின்னால் மறைந்திருந்த நோக்கம் என்ன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் உற்சாகமே இல்லாத குரலில் ஜாக்ஸ் சொன்னான் :
‘‘அப்பா, மலைத் தொடர்களைவிட எனக்கு விருப்பம் பாடங்கள்தான்னு உங்களுக்குத் தெரியுமே !’’
‘‘அதை நீ சொல்லணுமா ?’’ - நான் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு சொன்னேன் : ‘‘ஆனால்... ஜாக்ஸ், ஹார்மோனியம் படிப்பதில்தானே உனக்கு விருப்பம் அதிகம் ?’’
‘‘அப்பா இந்த மாதிரி என்னைப் பார்த்துக் குற்றம் சுமத்தாதீர்கள். நான் எந்த விஷயத்தையும் உங்களிடமிருந்து மறைத்து வைக்க விரும்பல. நான் கூற வேண்டிய விஷயத்தை நீங்கதான் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறீர்களே !’’ - ஏதோ ஒரு புத்தகத்தை வாசிக்கிற மாதிரி மிகவும் மெதுவான குரலில் அவன் சொன்னான்.
அவனுடைய இந்த அசாதாரணமான தைரியம் என் மனதில் இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கியது. நான் எங்கே தடுத்து விடப் போகிறேனோ என்று நினைத்து அவன் தன் கையை உயர்த்திக் கொண்டு சொன்னான் :
‘‘அப்பா, நீங்க பிறகு சொல்லுங்க. முதல்ல என்னைப் பேசவிடுங்க.’’
உடனடியாக நான் அவனுடை கையைப் பார்த்தேன்.
‘‘ஓ...’’ - நான் கவலையுடன் சொன்னேன் : ‘‘அவளுடைய ஆன்மாவின் புனிதத் தன்மை கெட்டுப் போவதைவிட உன் முகத்தை நான் இனியொருமுறை பார்க்காமல இருப்பதே மேல். நான் எதையும் கேட்க விரும்பல. அந்த அப்பிராணிச் சிறுமியின் கண்பார்வையற்ற தன்மையையும், கள்ளங்கபடமற்ற நிலையையும் இப்படியா ஏமாத்துறது - எந்த அளவிற்கு இரக்கமே இல்லாத கொடூரமான விஷயம் இது ! இப்படி நீ செய்வேன்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கல... இங்கே பார்... ஷரத்ருத் என் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளுடன் பேசுவதும், அவளைத் தொடுவதும் இனியொருமுறை நீ அவளைப் பார்ப்பதும்கூட... எனக்குப் பிடிக்காதவை.’’
‘‘ஆனால், அப்பா..’’ - அவன் அமைதியான குரலில் சொன்னான் :
‘‘அப்பா, நீங்க பிரியமா இருக்குறது மாதிரிதான் நானும் ஷரத்ருத் மீது பிரியம் வச்சிருக்கேன். என் முடிவிலும் உள்மனதிலும்... ம்... நடத்தையிலும் என்று நான் சொல்லல... ஏதாவது கெட்ட நோக்கம் இருக்கும் என்று நீங்க நினைச்சா... அப்பா, அது மிகப்பெரிய தவறு. நான் ஷரத்ருத்தைக் காதலிக்கிறேன். ஆமா... இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அதே அளவிற்கு அவள்மீது பிரியம் வச்சிருக்கேன். அவளை ஆச்சரியப்பட வைக்கவோ, அந்தச் சிறு பெண்ணின் கள்ளங்கபடமில்லாத தன்மையை ஏமாற்றணும் என்ற எண்ணத்தையோ... அப்பா, உங்களைப் போலவே நானும் வெறுக்கிறேன்.’’
அதற்குப் பிறகு ஜாக்ஸ் என்னுடைய குற்றச்சாட்டை நிராகரித்து விட்டு சொன்னான் :
‘‘ஷரத்ருத்திற்கு உதவக்கூடியவனாகவும் நண்பனாகவும் கணவனாகவும் ஆகணும்னுதான் நான் ஆசைப்படுறேன். அவளை, நான் திருமணம் செய்வதைப்பற்றி உறுதியான ஒரு முடிவு எடுப்பதுவரை, உங்ககிட்ட நான் எதையும் வெளிப்டுத்தாமல் இருக்கணும்னு நினைச்சேன். பிறகு... அவளுக்கு என்னுடைய இந்த விருப்பங்கள் எதுவும் தெரியாது... அப்பா, உங்ககிட்ட நான் சொல்ல நினைச்சது இதுதான்...’’ - ஜாக்ஸ் தன்னுடைய வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சொன்னான் :
‘‘நம்புங்க அப்பா... என் மனதில் வேறு எதுவும் இல்லை.’’
ஜாக்ஸின் வார்த்தைகள் என்னுடைய மனதை இறுகச் செய்து விட்டது. அவன் சொன்னதைக் கேட்டு என் தோள் துடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், கோபப்பட்டு ஏதாவது கூறும் அளவிற்கு மிகவும் குறைவான சூழ்நிலையையே அவன் உண்டாக்கிவிட்டிருந்தான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு முடித்தபோது, நான¢ அவனிடம் கூறுவதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையை நான் அடைந்திருந்தேன்.
‘‘சரி... இனி நீ போய்த் தூங்கு’’ - சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு நான் சொன்னேன் :
‘‘இதைப் பற்றிய என் கருத்தை நாளைக்கு நான் சொல்றேன்.’’
‘‘அப்பா, உங்களுக்கு என் மீது கோபம் இல்லைன்ற விஷயத்தையாவது சொன்னால், நல்லா இருக்கும்’’ - மிகவும் தாழ்ந்த குரலில் ஜாக்ஸ் சொன்னான்.
‘‘அதைப்பற்றி நான் யோசிச்சு சொல்றேன். எது இருந்தாலும் பொழுது விடியட்டும்’’ - உடனடியாக நான் சொன்னேன்.
ஜாக்ஸை மறுநாள் பார்த்தபோது, அன்றுதான் அவனை முதல் தடவையாகப் பார்க்கிறேனோ என்று எனக்குத் தோன்றியது. என் மகன் இப்போது சிறு பையன் இல்லை. மாறாக, ஒரு இளைஞனாக மாறிவிட்டிருந்தான். இதுவரையில் நான் அவனைச் சிறுவனாகவே மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சிறிதும் எதிர்பாராமல் அவனுடைய ரகசியத்தை அறிய நேர்ந்தபோது எனக்குள் ஒருவித பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
நடப்பவை அனைத்தும் மிகவும் இயல்பானவை என்றும், சாதாரணமானவை என்றும் என்னை நானே இரவு முழுவதும் தேற்றிக் கொண்டிருந்தேன். எனினும், என்ன காரணத்தாலோ எனக்குள் இருந்த குழப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. என் மகனுக்கு என்னுடைய முடிவை அறிவித்தே ஆகவேண்டும். உள்குரல் என்பது மாதிரி என்னுடைய மனம் கூறியது.
‘இந்தத் திருமணத்தைத் தடுத்தே ஆகவேண்டும்.’
நான் ஜாக்ஸை பூந்தோட்டத்தின் ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்.
‘‘நீ ஷரத்ருத்திடம் ஏதாவது சொல்லியிருக்கியா ?’’ - நான் கேட்டேன்.
‘‘இல்லை...’’ - பதில் சொன்னான் :
‘‘நான் அவளைக் காதலிக்கிறேன்னு ஒருவேளை ஷரத்ருத் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நான் இதுவரை அவளிடம் இதைப்பற்றி எதுவும் பேசல...’’
‘‘அப்படின்னா இனிமேல் அவளிடம் எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணித் தா...’’
‘‘அப்பா, நீங்க சொல்கிறபடி நான் நடக்குறேன்’’ - அவன் சொன்னான் : ‘‘நான் ஏன் அப்படி சத்தியம் பண்ணணும்னு எனக்குப் புரியலையே !’’
காரணத்தைக் கூறுவதற்கு எனக்குத் தயக்கமா இருந்தது. மனதிற்குள்ளிருந்து உயர்ந்த வாதம் சிறிதும் அறிவுப்பூர்வமாக இல்லாததைப் போல தோன்றியது. காரண காரியங்களைவிட என்னுடைய உள்மனதுதான் இப்போது சரியான வழிகாட்டியாக இருந்தது.
‘‘ஷரத்ருத் இப்போது வயதில் மிகவும் இளையவள்’’ - நான் சொன்னேன் :