தேவராகம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
ஷரத்ருத்தைக் கற்கச் செய்வதற்காக நானே ப்ரெயில் எழுத்துக்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. என்னைவிட படுவேகமாக அவள் படிக்க ஆரம்பித்தாள்.
ஷரத்ருத்தைப் படிக்க செய்யும் விஷயத்தில் எனக்கு உதவி செய்ய வேறு சிலரும் இருந்தார்கள். என்னுடைய அதிகார விளிம்பிற்குள் இருந்த இடத்தில் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்திற்காக, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான் மனதில் சந்தோஷத்துடனே இருந்தேன். வீடுகள் ஒவ்வொன்றும் மிகவும் தூரத்தில் இருந்தன. அதனால் ஏழைகளையும் நோயாளிகளையும் பார்ப்பதற்காக நான் நீண்ட தூரம் போகவேண்டியிருந்தது. ஈஸ்டர் பண்டிகைக்கு ஜாக்ஸ் வீட்டிற்கு வந்திருந்தாள். படிக்கும் நாட்களில் லாஸான் என்ற இடத்திற்கு அவன் போக வேண்டியிருந்தது. இப்போது தியாலஜி படிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்தில்தான் அவன் தன்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றான். இந்த விதிமுறையில் ஸ்கேட்டிங் போகும்போது அவனுடைய கையில் பிரச்சினை உண்டாகிவிட்டது. காயம் அப்படியொன்றும் பெரிதல்ல. நான் உடனடியாக மார்ட்டின்ஸை அழைத்தேன். சர்ஜனின் உதவி எதுவும் இல்லாமலே அவர் ஜாக்ஸின் கையைச் சரிபண்ணி விட்டார். இப்போது ஜாக்ஸ் ஷரத்ருத்திடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். இதுவரை அவன் அவளிடம் குறிப்பிட்டுக் கூறும்படியாக ஈடுபாடு எதையும் காட்டியதில்லை. அப்படியிருந்த
அவன் அவளைப் படிக்கச் செய்யும் விஷயத்தில் இப்போது எனக்கு உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறான். மூன்று வாரங்கள் மட்டுமே அவனுடைய உதவி எனக்கு இருந்தது என்றாலும், இத்தனை நாட்களில் அவள் குறிப்பிட்டுச் சொல்கிற அளவிற்கு முன்னேறியிருந்தாள். அசாதாரணமான ஒரு உற்சாகம் அவளிடம் தெரிந்தது. சிறிதளவில்கூட முன்னோக்கிச் செல்வது என்பது ஆபத்தான ஒரு விஷயம் என்று தோன்றக்கூடிய வகையில் எந்தவித பயனும் இல்லாமல் இருந்த அவளுடைய அறிவு, இப்போது படு வேகமாக ஓட்டப் பந்தயத்திற்கே தயாராகிவிட்டது. தன்னுடைய சொந்த சிந்தனைகளுக்கு வடிவம் தர அவளுக்கு சர்வ சாதாரணமாக முடிகிறது என்ற விஷயம் எனக்குத் தெரியவந்தபோது என் கண்களில் ஆச்சரியம் வெளிப்பட்டது. மனம் முழுமையாக செயல்படும் வண்ணம், மிகுந்த தைரியத்துடன் நடந்து கொண்டாள் ஷரத்ருத். ஒலிகளை வைத்து அவள் தன்னுடைய சிந்தனைகளை உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தாள். முழுமையான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒலி ஓவியங்களை தான் தொட்டு அறியக்கூடிய, உணர்ந்து தெரிந்துகொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே அவள் அப்போது பயன்படுத்துவாள். அதே பொருட்களைக் கொண்டு அவள் தனக்குத் தெரிந்திராத விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.
3
ஷரத்ருத்தின் கல்விக்கான ஆரம்ப ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா கண்பார்வை தெரியாதவர்களின் ஆரம்பப் பாடமும் இப்படித்தான் இருக்கும். என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்தால், அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் ஷரத்ருத்தை வண்ணங்களின் பெயர்களைக் கூறும்படி கற்றுத் தந்தது வானவில்லின் நிறங்களைக் கொண்டுதான். ஆனால், அவளுடைய மனதில் வண்ணங்களுக்குள் வெளிச்சத்திற்கும் இடையில் ஒரு பிரச்சினை உண்டானது. வண்ணங்களுக்கிடையில் இருந்த வித்தியாசம் அவளுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு வண்ணமும் பல வண்ணங்களின் கலவையாக இருக்கும் என்பதையும், வண்ணங்களுக்கு இடையில் எத்தனை வண்ணங்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கலக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்ள அவள் மிகவும் சிரமம்பட்டாள். இந்த விஷயம் அவளை மிகவும் துன்பத்திற்குள்ளாக்கியது. திரும்பத் திரும்ப அவள் இதே விஷயத்தைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் இசை நிகழ்ச்சி ஒன்றைக் கேட்பதற்காக நான் அவளை நியூ சாட்டலுக்கு அழைத்துச் செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது. குழு பாடலுகக்குத் தேவையான பலதரப்பட்ட இசைக் கருவிகளிலிருந்து என்னுடைய கவனம் வண்ணங்களைப் பற்றிய பிரச்சினையை நோக்கித் திரும்பியது. கம்பிகளாலும் மரத்துண்டுகளாலும் உண்டாக்கப்பட்ட இசைக் கருவிகள் எழுப்பிய வெவ்வேறு ஸ்வரங்களை மிகுந்த கவனத்துடன் கேட்கும்படி நான் அவளிடம் சொன்னேன். அங்கிருந்த ஒவ்வொரு இசைக் கருவியும் தனக்கென்று ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வெவ்வேறு வகையில் ஸ்வரங்களை வெளிப்படுத்தும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன என்பெதன்னவோ உண்மை. அதேபோல இயற்கையிலிருக்கும் அனைத்து வண்ணங்களைப் பற்றியும் கற்பனை பண்ணிப் பார்க்கும்படி நான் அவளிடம் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவளுடைய சந்தேகங்களெல்லாம் எல்லை கடந்துபோய் விட்டன. ஷரத்ருத்தின் மனம் சந்தோஷத்தால் நடனமாட ஆரம்பித்தது.
‘‘இவை எந்த அளவிற்கு அழகாக இருக்கும் !’’ - அவள் சொன்னாள் : ‘‘ஆனால், வெள்ளை... ஆமாம்... என்ன செய்தும், வௌ நிறத்தைப் பற்றி எனக்கு ஒரு பிடிமானமும் கிடைக்க மாட்டேங்குதே !’’
‘நிறங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒரு ஒட்டுமொத்த முடிவு இருக்கும் அல்லவா ? அதுதான் வெள்ளை என்று கூறி புரிய வைக்க நான் முயற்சித்தேன். ஆனால், அப்படி நான் கூறும்பட்சம், அது எனக்காட்டும் ஷரத்ருத்திற்காகட்டும் எந்தவொரு சந்தோஷத்தையும் தராது என்பதுதான் உண்மை.
திடீரென்று அவள் சொன்னாள்.
‘‘மரத்துண்டுகளாலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட இசைக் கருவிகள், வயலின் ஆகியவற்றுக்கு வெவ்வேறு வகைப்பட்ட ஸ்வரங்கள் இருக்கின்றன அல்லவா ?’’ - அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் என்னுடைய மனம் ஏதோ ஒரு முடிச்சுக்குள் மாட்டிக் கொண்டதைப் போல் நான் உணர்ந்தேன். அவளிடம் சர்வ சாதாரணமாக பாதிப்பு உண்டாக்குகிற மாதிரியான ஒரு வழியைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இருந்தேன் நான்.
இறுதியில் நான் சொன்னேன் :
‘‘வண்ணத்தின் எந்தவொரு அடிக்கடையும் இல்லாத, வண்ணம் என்பதே இல்லாத, வெறும் பிரகாசத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஏதோ ஒரு பொருள் ‘வெள்ளை’ என்று கற்பனை பண்ணிக் கொள். அதே நேரத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில், கறுப்பு நிறத்தில்... முற்றிலும் கறுப்பு நிறம் இருக்கும் வகையில் பல வண்ணங்களும் இருக்கும்.’’
நான் சந்திக்க நேரும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே இந்த அரைகுறை உரையாடல்.
ஷரத்ருத்திற்கென்று ஒரு நல்ல குணம் இருந்தது. பலரும் செய்வதைப் போல (பொய், பித்தலாட்டம் நிறைந்த விஷயங்களைத் தங்களின் மூளையில் சேர்த்துக் கொண்டு, இறுதியில் குழப்பங்களைக் கொண்ட விவாதங்கள் செய்து சூழ்நிலையையே அலங்கோலமாக்கும் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் பஞ்சமா என்ன ?) தன்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்டதாகக் கூறி அவள் எந்தச் சமயத்திலும் பொய்யாக நடித்ததில்லை. விஷயம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் தெளிவான வரைபடம் தனக்குக் கிடைக்கின்ற வரையில், அது அவளின் மூளையைப் படாதபாடு படுத்திக் கொண்டேயிருக்கும்.