தேவராகம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
ஷரத்ருத்தின் கல்வியைப் பற்றி நான் மனதில் நினைத்திருந்தது. செயல் வடிவத்திற்கு வராமல் வெறுமனே காலம் வீணாகிக் கொண்டிருந்தது தான் மிச்சம். அவளுடைய அலட்சியமான போக்கும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமலிருந்ததும் என்னுடைய உற்சாகத்தை முழுமையாக இல்லாமற் செய்தன. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் பகல் நேரம் முழுவதும் அவள் அடுப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள் என்பதாக நான் உணர்ந்தேன். எங்களுடைய சத்தத்தைக் கேட்ட அடுத்த நிமிடம், குறிப்பாக அவளை நாங்கள் நெருங்கிச் செல்கிற தருணம்- அவளுடைய முகம் கொடூரமாக மாறும். எந்தவித உணர்ச்சியும் இல்லாமலிருப்பதற்கு பதிலாக ஒருவகை விரோத உணர்ச்சி அந்த முகத்தில் பரவித் தெரியும். யாராவது அவளுடைய கவனத்தைத் திருப்ப முயற்சிக்கும்பட்சம், அடுத்த நிமிடமே ஒரு மிருகத்தைப்போல சத்தம் உண்டாக்க ஆரம்பித்துவிடுவாள் அவள். சாப்பிடும்நேரம் வந்தால்தான் அவளுடைய முகத்தில் படர்ந்த அந்த உணர்ச்சி இல்லாமல் போகும். நான் அவளுக்கு உதவுவேன். தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல உணவுப் பொருட்களை நோக்கி அவள் தாவிக் குதிக்க ஆரம்பித்துவிடுவாள். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். அன்பிலிருந்து அன்பு பிறப்பெடுப்பதைப் போல, ஷரத்ருத்தின் பிடிவாதத்திலிருந்து எனக்குள் இரக்கம் உண்டாக ஆரம்பிக்கும். முதல் பத்து நாட்கள் கடந்தபோது, நான் அவள்மீது பரிதாபம் கொள்ள ஆரம்பித்தேன். அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமிமீது நான் கொண்டிருந்த ஈடுபாடு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. ஆரம்பத்தில் காட்டிய உற்சாகத்தை நினைத்துப் பார்த்து நான் கவலைப்பட்டேன். அவளை இங்கு கொண்டு வந்திருக்கக் கூடாது என்று என்னுடைய மனம் கூறியது. மிகுந்த கருணையுடனும், பரிதாப உணர்ச்சியுடனும் இப்போது எமிலி அவளிடம் நடக்க ஆரம்பித்திருந்தாள். ஷரத்ருத் எனக்கு ஒரு சுமையாக இருக்கிறாள் என்பதையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் மத்தியில் அவள் இருப்பதை நினைத்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் என் மனைவி புரிந்து கொண்டாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்போது, என்னுடைய நண்பர் ஒருவர் சுற்றுலாவிற்குச் சென்று கொண்டிருந்த வழியில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் ஷரத்ருத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவுடன் அவருக்கு அவள்மீது காரணமே இல்லாமல் ஒருவித ஈடுபாடு உண்டானது. அவளுடைய நிலைமையைப் பார்த்து என் நண்பர் அவள்மீது பரிதாபப்பட ஆரம்பித்தார்.
ஷரத்ருத்திடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவளுடைய பார்வையற்றத் தன்மை மட்டுமே என்று என் நண்பர் நினைத்தார். ஆனால், ஓருமுறைகூட பேசியிராத அவளைக் காப்பாற்றிய அந்தக் கிழவியின் காது கேளாத தன்மை காரணமாக, அந்த அப்பிராணிச் சிறுமி ஏராளமான சிரமங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்று நான் சொன்னேன்.
‘‘நீங்க இரக்கப்பட்டுக் கொண்டும் பரிதாபப்பட்டுக் கொண்டும் இருக்காமல் உடனடியாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். எதுவும் செய்யாமல் வெறுமனே இருப்பதில் என்ன பிரயோஜனம்?’’ என்று நான் சொன்னதைக் கேட்டு அவர் சொன்னார்:
‘‘நீங்கள் அடித்தளத்தில் நம்பிக்கையே இல்லாமல் கட்டிடம் கட்ட முயற்சிக்கிறீங்க. இவளுடைய மூளை முழுமையாகச் செயல்படக்கூடிய விதத்தில் இல்லைன்றதுதான் உண்மை. ஆரம்ப நிலையில் இருக்கும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கூட வேண்டிய அளவிற்கு இல்லைன்றதுதான் உண்மையான விஷயம். இவளுக்கு முதல்ல வேண்டியது - தொடும் உணர்ச்சியும், சுவை உணர்ச்சியும்தான். அதை நாம இவளுக்கு கற்றுத் தரணும். அதற்குப் பிறகு ஒலியைப் பற்றி இவளைப் புரிய வைக்கணும். கொஞ்சம்கூட சோர்வே அடையாமல் இவற்றை நாம கற்றுத்தர வேண்டியிருக்கு. தொடர்ந்து நீங்க அழைச்ச பிறகு, இவளை அழைக்க வைக்கணும். இந்த விஷயத்துல அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டால், ஒரு விஷயம்கூட ஒழுங்கா நடக்காது. தேவையான அளவிற்கு நேரம் எடுத்து ஷரத்ருத்தைக் கொஞ்சம்கூட வற்புறுத்தாமல், இவளாகவே செய்ய வேண்டிய காரியங்கள் இவை... இந்த அணுகு முறையில் எந்தவொரு மேஜிக்கும் இல்லை...’’ - எனக்குத் தெளிவாக விளங்கும் வகையில் கூறிய என் நண்பர் தொடர்ந்து சொன்னார்.
‘‘இந்த விஷயங்கள் நான் கண்டுபிடித்தவை அல்ல. வேறு பலரும் இவற்றை செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். தத்துவ வகுப்பில் இருக்குறப்போ நம்மோட பேராசிரியர்கள் இந்த மாதிரியான ஒரு சம்பவத்தைச் சொன்னது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குதா?’’
இந்த விஷயங்களைச் சொன்ன என் நண்பர் சிறிது நேரம் தன் பேச்சை நிறுத்தினார். பிறகு தன்னைத்தானே திருத்திக் கொண்டது மாதிரி அவர் சொன்னார்:
‘‘இல்லை... இல்லை... இந்த விஷயம் சைக்கலாஜி சம்பந்தப்பட்ட ஓரு முடிவில் சொல்லப்பட்டது... அப்படித்தானே? ம்... பரவாயில்ல... எது எப்படி இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் அது. அந்த அப்பிராணி இளம்பெண்ணின் பெயர்கூட எனக்கு ஞாபகத்தில் இருக்கு. ஷரத்ருத்தின் நிலைமையை விட அவளோட நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அவளால் பேசக்கூட முடியல. அவளுக்கு முழுமையாகப் பார்வை சக்தி கிடையாது. கடந்த குளிர் காலத்தில் ஒரு டாக்டர் அவளை சிறிதும் எதிர்பாராமல் இங்கிலாந்தில் பார்த்தார். அவளுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்று அவர் தன் தலையைப் புண்ணாக்கிக் கொண்டதுதான் மிச்சம். லாரா ப்ரிஜ்மேன்- இதுதான் அவளின் பெயர்...’’
அவர் தொடர்ந்தார்:
‘‘லாராவின் வளர்ச்சியைப் பற்றிய விஷயங்களை டாக்டர் பத்திரமா எடுத்து வைத்தார். அதே மாதிரி ஷரத்ருத்தைப் பற்றிய தகவல்களை நீங்களும் பாதுகாத்து வைக்கணும். முதலில் பல வாரங்களாக இரண்டு விஷயங்களைப் பற்றத்தான் அவர் திரும்பத் திரும்ப அவளுக்கு உணர்த்திக்கிட்டே இருந்தார். பின்னைப் பற்றியும் பேனாவைப் பற்றியும்... ‘ப்ரெயில் சிஸ்டம்’ பாணியில் இருந்த புத்தகத்தில் பின், பேனா என்று இருந்த சொற்கள் மீது அவளின் விரல்களை அவர் வைக்கச் செய்தார். வாரங்கள் பல கடந்த பிறகும் எந்தவாரு முன்னேற்றமும் உண்டாகல. ஒரே இடத்திலேயே அவள் இருக்குற மாதிரி இருந்தது. எனினும் டாக்டர் தன் தைரியத்தைக் கொஞ்சமும் இழக்கல’’- என் நண்பர் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
‘‘இருளடைந்ததும் ஆழமானதுமான ஒரு கிணற்றின் விளிம்பில் குனிந்து நின்றுகொண்டு, யாராவது இதைப் பிடிக்க மாட்டாங்களா என்ற எதிர்பார்ப்புடன் யாரோ ஒரு கயிறை மிகவும் கவனமாக கிணற்றுக்குள் தொங்க விடுறதைப் போல எனக்குத் தோணுச்சுன்னு டாக்டர் எழுதியிருக்காரு. கிணற்றுக்குள் யாரோ இருக்கிறார்கள் என்பதிலும் இறுதியில் அந்த ஆள் கயிறின் நுனியைப் பிடிக்கப் போறது உறுதி என்பதிலும் டாக்டருக்கு கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை.