தேவராகம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
அவளுக்குக் காது கேட்காது போலன்னு நான் நினைச்சேன். ஆனால் அவள் செவிடு இல்லைன்னு வேலைக்காரி சொன்னாள். உண்மையாகச் சொல்லப் போனால், அந்தக் கிழவிதான் காது கேட்காதவள். கிழவி இன்று வரை அவள்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசியது இல்லையாம். ஏதாவது சாப்பிடவோ குடிக்கவோ செய்றப்ப மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானதே தவிர, நீண்ட காலமா அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமி வாயைக்கூடத் திறக்காமத்தான் இருக்கிறாள்.’’
‘‘பாவம்... அவளுக்கு சுமாரா என்ன வயது இருக்கும்?’’
‘‘கிட்டத்தட்ட... ம்... பதினாலு, பதினஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.’’
அனாதையாக்கப்பட்ட ஒரு சிறுமியைக் காப்பாற்றுவது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. அப்படியொரு சுமையான காரியத்தை அப்போது நான் மனதில் நினைத்திருக்கக்கூட இல்லை. ஆனால், பிரார்த்தனையின் முடிவில் - அந்தப் பெண்ணுக்கும் வேலைக்காரிக்கும் இடையில் குனிந்து பிரார்த்த¬னை செய்து கொண்டிருந்தபோது... அப்படிக் கூறுவதுதான் சரியாக இருக்கும்... கருணை வடிவமான கடவுள் என்மீது இப்படிப்பட்ட ஒரு பொறுப்பைச் சுமத்தியிருக்கிறார் என்பதையும், நான் அதிலிருந்து தப்பிக்க நினைப்பது கோழைத்தனமான ஒரு செயலாக இருக்கும் என்பதையும் உடனடியாக உணர்ந்தேன்.
பிரார்த்தனை முடிந்து எழுந்திருக்கும்போது, அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியை அன்று சாயங்காலமே என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு அவளை என்ன செய்வது என்பதையோ, யாருடைய பாதுகாப்பில் அவளைக் கொண்டுபோய் வைப்பது என்பதைப் பற்றியோ நான் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. மேலும் சில நிமிடங்கள் அங்கு நின்றிருந்த நான், வேடன் வரிந்து கட்டிய பையைப் போல இருந்த கிழவியின் வாடிய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து அந்தப் பார்வையற்ற சிறுமி இந்தப் பக்கம் திரும்பி என் மனதில் நான் நினைத்திருந்த விஷயத்தைச் சொன்னபோது, அவர்கள் உடனே சொன்னார்கள்:
‘‘ஆட்கள் நாளைக்கு இறந்த உடலை எடுப்பதற்கு வருவதற்கு முன்னால், நீங்க இங்கேயிருந்து கிளம்பிப் போயிடுறது நல்லது.’’
பக்கத்து வீட்டுப் பெண் அப்போது அமைதியாக இருந்தாள்.
உயிரில்லாத ஒரு மாமிசப் பிண்டத்தைப்போல இருந்த அந்த கண்பார்வையற்ற சிறுமி தன்னை. என்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல என்னை அனுமதித்தாள். அவளுடைய முகத்தைப் பார்க்கும் போது எந்தவொரு பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த அழகான முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமலிருந்தது.
அறையிலிருந்து மேலே ஏறி, படிக்குக் கீழே மூலையில் கிடந்த விரிப்பிலிருந்து நான் கம்பளியை எடுத்தேன். அதில்தான் தினமும் அவள் படுத்திருக்க வேண்டும்.
பக்கத்து வீட்டுப் பெண் நல்லவளாக இருந்தாள். அந்தப் பெண் மிகுந்த ஆர்வத்துடன் அந்தச் சிறுமியைக் கம்பளியால் போர்த்த உதவினாள்.
மிகுந்த குளிர் இருந்த இரவு, குதிரை வண்டியின் விளக்கை எரியவிட்டு நான் அந்தச் சிறுமியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். உயிருள்ள பிணத்தைப்போல அவள் எனக்கருகில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் உடம்பில் சூடு இருக்கிறது என்பதை நீக்கிவிட்டு பார்த்தால், உயிர் இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அவளிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாதை முழுவதும் நான் சிந்தித்துக் கொண்டே வந்தேன். ‘இவள் உறங்குகிறாளா? இவள் தூங்கும் போதும் கண்விழித்து இருக்கும்போதும் இருப்பதற்கிடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கடவுளே, கட்டுகளால் இறுகக் கட்டப்பட்டிருக்கும் ஆன்மா உங்களின் கருணைக்காகக் காத்திருக்கிறது. இவளை அன்புக் கரங்களால் தொடவேண்டும் கடவுளே! உங்களின் கருணை இருக்கும்பட்சம் என்னுடைய அன்பு இந்த அப்பிராணிச் சிறுமியின் கொடுமையான இருளை முழுமையாக நீக்கிவிடும்.’’
உண்மைக்கு எந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். வீட்டை அடைந்தபோது, சிறிதும் விருப்பமே இல்லாத ஒரு வரவேற்பு கிடைத்தது என்ற விஷயத்தை நான் மறைத்து வைக்க விரும்பவில்லை. என் மனைவி நல்ல குணத்தைக் கொண்டவள். அவளுடைய மனதிற்குள் கருணை இல்லை என்று கஷ்டங்கள் நிறைந்த நிமிடங்களில் ஒருமுறை கூட நான் கவலைப் பட்டதில்லை. மிகவும் திட்டமிட்டு வாழக்கூடிய அவள், ஓரு அடி முன்னோக்கியோ பின்னோக்கியோ போகாமல், மிகவும் சரியாக எந்த செயலையும் செய்யக்கூடியவள். ஆனால், அன்பு என்பது எல்லையற்றது அல்ல என்பதைக் காட்டும் வண்ணம் மிகவும் அளந்து அதைக் காட்டக்கூடிய பழக்கத்தைக் கொண்டவள் அவள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது.
அந்த மாலை நேரத்தில் அந்தச் சிறுமியை வீட்டிற்குக் கொண்டு வந்ததைப் பார்த்து, என் மனைவி சொன்னாள்:
‘‘இப்படி எதற்குத் தேவையில்லாத சுமையை நீங்க தலைமேல எடுத்து வச்சிக்கணும்?’’
தினமும் நடப்பதைப்போல எங்களைச் சுற்றி வாயைப் பிளந்துகொண்டு ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்து நான் சொன்னேன்:
‘‘அறையை விட்டு வெளியே போங்க.’’
நான் நினைத்ததற்கு மாறாகவும், எந்த அளவிற்கு மாறுபட்ட ஒன்றாகவும் இருந்தது அந்த வரவேற்பு! என்னுடைய இளைய மகள் ஷார்லட் மட்டும்தான் அந்த ‘ஆச்சரியமான பிறவி’ வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்து நடனமாடியதோடு நிற்காமல் கைகளால் தட்டவும் செய்துகொண்டிருந்தாள். ஆனால், தங்களுடைய தாயிடமிருந்து எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகள், தங்களின் தங்கையின் ஆனந்தத்தைக் கெடுக்கிற மாதிரி அவளைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.
ஒரு நிமிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை. கண்பார்வை முழுமையாகத் தெரியாத ஒரு சிறுமியை நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்ற உண்மை என்னுடைய மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாமல் இருந்தது. அதனால், ஆச்சரியப்படத்தக்க என்னுடைய அக்கறையைப் பற்றி அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பயணம் முழுக்க நான் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்திருந்தேன். நான் கையை விட்டதும், அவள் வினோதமான விதத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். அதைக் கேட்டவுடன் என்னுடைய மனதிற்குள் கவலை உண்டாகிவிட்டது. அவளுடைய குரல் மனதிற்கள் கவலை உண்டாகிவிட்டது. அவளுடைய குரல் மனிதர்களின் குரலை விட நாய்க்குட்டின் குரலையொட்டி இருந்தது. தனக்கென்று ஒரு சிறு உலகத்தை அமைத்துக் கொண்டு, அதில் குடியிருந்தவள் ஆயிற்றே அவள்! எப்போதும் கட்டப்பட்டது மாதிரி ஒரே இடத்தில் இருப்பதைவிட பிறருடன் உறவு கொண்டிருப்பது வேறுபட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொண்ட அடுத்த நிமிடமே அவளுடைய பிஞ்சுக் கால்கள் குழைய ஆரம்பித்தன. அவள் மிகவும் தளர்ந்துபோய்க் காணப்பட்டாள். உடனடியாக நான் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் போட்டேன்.