தேவராகம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
1890, பிப்ரவரி, 10.
மூன்று நாட்களாக இடைவெளி இல்லாமல் பனி பெய்து கொண்டேயிருந்தது. பாதைகள் முழுவதும் தடைப்பட்டதால் தேவாலயத்திற்குப் போவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சிரமமான காரியம்தான். கடந்து போன பதினைந்து வருடங்களாக மாதத்தில் இரண்டு தடவைகள் தவறாமல் நான் தேவாலயத்திற்குப் போவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
எப்படி இருந்தாலும் நான் இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வேன். கடந்துபோன நாட்கள்... ஷரத்ருத் என்ற கண்பார்வை தெரியாத சிறுமியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்த சூழ்நிலையைப் பற்றியும், அதைத் தொடர்ந்து அவளுடைய கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையில் உண்டான சம்பவங்களைப் பற்றியும் நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
சுமார் இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம் அது. ஒருநாள் மதிய நேரத்திற்கு பிறகு லா ஷா தஃபோன்ஸில் இருந்து திரும்பி வந்ததும் நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு சிறுமி வேகமாக எனக்கு அருகில் வந்து நின்றுகொண்டு என்னையே பார்த்தாள்.
‘‘ஃபாதர், ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்குற ஒரு இடத்துக்கு என்கூட நீங்க வரமுடியுமா?’’- கெஞ்சுகிற குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்.
‘‘உடனடியாக நான் அங்கே போகணும். அங்கே ஒரு வயதான பெண் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறாள்.’’
குதிரை வண்டியில் ஏறுமாறு கூறிய நான் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் அந்த வயதான பெண் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன். இருட்டு நேரத்தில் திரும்பி வருவது சிரமமான காரியம் என்று மனதில் பட்டதால், நான் முன்னெச்சரிக்கையாக ஒரு லாந்தர் விளக்கையும் எடுத்துக்கொண்டேன்.
தேவாலயத்திற்குப் பக்கத்திலிருக்கும் எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரிந்தவையே என்ற எண்ணத்தில் இருந்தேன் நான். ஆனால், நாங்கள் லா சவுண் ட்ரே ஃபாமைக் கடந்ததும், அவள் சொன்னாள்:
‘‘இந்தச் சாலை வழியா வண்டியை ஓட்டுங்க.’’
நான் அந்த நிமிடம் வரை அந்தச் சாலையில் கால் வைத்ததே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மைல்கள் தாண்டியதும், சிறு பையனாக இருந்தபோது அவ்வப்போது ஸ்கேட்டிங் விளையாடுவதற்காகப் போன மறைவான ஒரு இடத்தில் இருக்கும் ஒரு சிறு குளத்தை நான் பார்த்தேன். ஒரு பாதிரியார் என்ற நிலையில் அங்கு போகவேண்டிய தேவையே எனக்கு இல்லாததால், பதினைந்து வருடங்களாக நான் அந்தக் குளத்தைப் பார்க்கவேயில்லை. ரோஜா நிறத்தலிருந்த வானத்தின் பிரகாசத்தில் பார்த்தபோது முன்பு எப்போதோ அந்தக் குளத்தைக் கனவு கண்டதைப் போல எனக்கு இருந்தது.
குளத்திலிருந்து புறப்பட்ட நீர் காட்டின் எல்லை வரை போனபிறகு ஏதோ ஒரு இடத்தில் போய் விழுந்து கொண்டிருந்தது. சாலை நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது. நான் அந்த இடத்தை முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை.
சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் நாங்கள் முன்னோக்கி அமைதியாக போய்க்கொண்டிருந்தோம். திடீரென என்னுடன் இருந்த அந்தச் சிறுமி மலைமேல் இருந்த ஒரு கட்டிடத்தை நோக்கி விரலை நீட்டினாள். அதன் புகைக் குழாய் வழியாக புகை வந்து கொண்டிருந்தது. புகையின் நிறம் நீலமாக இருந்தாலும், பழுப்பு நிறத்தில் இருந்த வானத்தை அடைந்தபோது அது சிவப்பு நிறத்திற்கு மாறியது. குதிரையை அருகிலிருந்த ஆப்பிள் மரத்தில் கட்டிவிட்டு, நான் அந்தச் சிறுமியை பின்பற்றி இருட்டான ஒரு அறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களுக்கு முன்னால் ஒரு கிழவி தன்னுடைய இறுதி மூச்சை விட்டது அந்த அறையில்தான்.
அங்கு கண்ட காட்சி என் மனதை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. இளம்பெண் என்றுதோன்றக்கூடிய ஒரு பெண் கட்டிலுக்கு அருகில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள். இறந்துபோன பெண்ணின் மகளாக இருக்கும் என்று நான் கருதிய அந்தச் சிறுமி உண்மையில் அவளுடைய வேலைக்காரியாக இருந்தாள். கரிந்த திரியைச் சரிபண்ணி எரியவிட்ட அவள் கட்டிலுக்கு அருகில் ஒரு கல்லாலான சிலையைப் போல நின்றிருந்தாள். நீண்ட நேரம் முயற்சி செய்து அவளை இரண்டு வார்த்தைகளாவது பேச வைக்க வேண்டும் என்று நினைத்த என் எண்ணம் வீணானதே மிச்சம்.
முழங்காலிட்டு அமர்ந்திருந்த அந்தப் பெண் எழுந்தாள். நான் நினைத்ததைப்போல அவள் இறந்துபோன பெண்ணுக்குச் சொந்தக்காரி ஒன்றுமில்லை. எஜமானி இறுதி மூச்சை விடப் போகிறாள் என்ற விஷயம் தெரிந்தபோது, வேலைக்காரி அவளைப் பக்கத்து வீட்டிலிருந்து அழைத்து வந்திருக்கிறாள். இறந்துபோன உடலுக்கான பொறுப்புகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் சொன்னாள்:
‘‘பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லாமலே, இறுதியில் கிழவி போயாச்சு!’’
சவ அடக்கம் தொடர்புள்ள ஏற்பாடுகள் என்னென்ன என்பதைப் பிறகு தீர்மானிக்க வேண்டியதிருந்தது. அந்தப் பின்தங்கிய பகுதியில் பொதுவாகவே பெரும்பாலான விஷயங்களை நான்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த வீட்டைப் பற்றிய விஷயம் எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. ஆனால், பக்கத்து வீட்டுப் பெண்ணிடமும் சிறுமியின் தலையிலும் வீட்டின் பொறுப்பை ஒப்படைக்க எனக்குச் சற்று சங்கடமாக இருந்தது. எனினும், அப்படிச் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமலும் இருந்தது. இருந்தாலும், நான் கேட்டேன்:
‘‘இந்தக் கிழவிக்கு வாரிசுன்னு யாரும் இல்லையா?’’
என்னுடைய கேள்வியைக் கேட்டதும், அந்தப் பெண் விளக்கைக் கையில் எடுத்து உயர்த்தினாள். அடுப்பின் மூலைப் பகுதி சிவப்பு நிறத்தில் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் அடுப்பிற்கு அருகில் யாரோ பதுங்கி இருப்பது தெரிந்தது. அடர்த்தியான கூந்தலால் தன் முகத்தை மூடிக்கொண்டு அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் கண்பார்வை தெரியாதவள். கிழவியின் பேத்தி என்று வேலைக்காரி சொல்கிறாள். ‘‘இந்த வீட்டுல இப்போ இருக்குறது அவள் மட்டும்தான். எப்படியவாது அந்த அப்பிராணியை ஒரு அனாதை விடுதியில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான்.’’
கண்பார்வை தெரியாத சிறுமிக்கு முன்னால் இருந்துகொண்டு அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி இந்த மாதிரி பேசுவதைக் கேட்டபோது எனக்கே என்னவோ போல இருந்தது. அவளுடைய மனம் எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருக்கும் என்று நான் நினைத்தேன்.
கொஞ்சம் மெதுவான குரலில் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூற நினைப்பதைப்போல நான் தாழ்ந்த குரலில் சொன்னேன்:
‘‘அவளை எழுப்ப வேண்டாம்.’’
‘‘ஆனால். அவள் தூங்க மாட்டாள். அவளால் எதையாவது பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாது. காலையில் இருந்தே நான் இந்த அறையில்தான் இருக்கேன். ஆனால், அவள் கொஞ்சம்கூட அசைந்து நான் பார்க்கல.