தேவராகம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
கையைத் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு அவள் கண்களைப் மூடிப் படுத்திருந்தாள்.
‘‘இந்த அளவுக்கு எனக்குத் தைரியம் இருக்குதான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!’’- மிகவும் மென்மையான குரலில் நான் சொன்னேன்.
‘‘எது எப்படி இருந்தாலும் இந்த அளவுக்கு இரவாகி சுற்றிலும் இருட்டு பரவியிருக்குற சூழ்நிலையில் என்னால் எதுவுமே செய்ய முடியாது. நான் தூங்காம விழிச்சிருக்கேன். அடுப்பில் நெருப்பு இருக்கணும். இவள் அடுப்புக்குப் பக்கத்துலேயே படுத்துக்கட்டும் நாளைக்குத் தலைமுடியை வெட்டி நாம இவளைச் சரி பண்ணிடுவோம்.’’
பிள்ளைகளிடம் எதுவும் கூறவேண்டாம் என்று நான் அவளைக் கேட்டுக் கொண்டேன்.
உணவு சாப்பிட வேண்டிய நேரம் வந்தது. மேஜைமீது வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையே ஷரத்ருத் தன் பார்வையற்ற விழிகளால் திரும்பத் திரும்ப பார்ப்பதுபோல் தோன்றியபோது, நான் அவளுக்கு ஒரு ப்ளேட் நிறைய சூப்பை எடுத்துக் கொடுத்தேன். ஆர்வத்துடன் உடனடியாக அவள் அதை முழுவதுமாகக் குடித்தாள். இந்த உலகத்தில் எதுவுமே கிடைக்காதவர்களின் நிலைமை எந்த அளவிற்கு வினோதமாக இருக்கிறது என்று உணவு சாப்பிடும்போது பிள்ளைகளிடம் கூறுவதற்கும், அவர்களைப் புரிந்து கொள்ள வைப்பதற்கும் நான் விரும்பினேன். கடவுள் நம்மிடம் அனுப்பி வைத்திருக்கும் விருந்தாளி மீது அவர்களின் உள்ளத்தில் கருணையும் இரக்கமும் உண்டானால் நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்று நினைத்த அதே நேரத்தில், எங்கே மீண்டும் எமிலி கோபப்பட ஆரம்பித்து விடுவாளோ என்று நான் அஞ்சவும் செய்தேன்.
எல்லோரும் உறங்கச் சென்ற பிறகு, எமிலியும் என்னிடமிருந்து எழுந்து சென்ற பிறகு, கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்த பிறகு, என்னுடைய இளைய மகள் ஷார்லட் அமைதியாக பாதி திறந்திருந்த கதவு வழியாக என்னிடம் வந்தாள். தொடர்ந்து அவள் தன்னுடைய பிஞ்சுக் கை விரல்களால் என் கழுத்தைப் பிடித்துக் குலுக்கியதும், நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.
‘‘அப்பா, ராத்திரி நான் உங்களுக்குச் சரியாக வணக்கம்கூட சொல்லல’’- அவள் மெதுவான குரலில் சொன்னாள்.
தொடர்ந்து அமைதியாகக் கண்களை மூடிப் படுத்திருந்த அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியை நோக்கித் (தூங்கப் போவதற்கு முன்பு அவளைப் பார்க்க என் இளைய மகளுக்கு அப்படி என்ன ஆர்வம் இருந்ததோ) தன்னுடைய சிறிய விரலை நீட்டியவாறு சொன்னாள்: ‘‘இன்னைக்கு நான் இவள்கிட்ட பிரியமா நடக்கல.’’
‘‘மகளே, நாளைக்குப் பிரியத்தைக் காட்டலாம். இப்போ இவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். இவள் நல்லா தூங்கட்டும்’’- ஷார்லட்டுடன் கதவுவரை போன நான் சொன்னேன்.
அதற்குப் பிறகு நான் திரும்பவும் வந்து உட்கார்ந்து பொழுது புலரும் வரை படிப்பதிலும், அடுத்த சொற்பொழிவிற்கான உரையைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன்.
2
பிப்ரவரி, 27.
நேற்று இரவு மீண்டும் கடுமையான பனி பெய்தது. இன்று காலையிலிருந்து முன்னாலிருக்கும் கதவு மூடப்பட்டே இருக்கிறது. குளியலறை வழியாகச் செல்லும் ஒரே ஒரு வழிமூலம்தான் வெளியே செல்லமுடியும். தின்பதற்கும் குடிப்பதற்கும் கிராமத்தில் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன என்ற விஷயத்தை நான் நேற்றுதான் புரிந்து கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் இனி வரப்போகும் சில நாட்களுக்குப் புற உலகத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இருக்கப்போவதில்லை. பனியால் மூடப்படுவது இது முதல் தடவை அல்ல என்றாலும், இந்த அளவிற்குக் கொடுமையாக பனி பெய்து இதற்கு முன்னால் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கதையைத் தொடரலாம்.
மிகவும் பரிதாபப்படும் நிலையில் இருந்த அந்தச் சிறுமியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது, எங்களின் வசிப்பிடத்தில் அவளுடைய நிலை எந்த மாதிரி இருக்கும் என்பதைப் பற்றி முன்கூட்டியே நான் சிந்தித்துக்கூட பார்த்ததில்லை என்ற விஷயத்தைத்தான் நான் இதற்கு முன்பே கூறிவிட்டேனே! என் மனைவியின் பொறுமையின் எல்லை எதுவென்று எனக்கு நன்றாகவே தெரியும். வீட்டின் இடவசதியைப் பற்றியும் பணத் தட்டுப்பாட்டைப் பற்றியும் நான் தெளிவாகவே உணர்ந்திருந்தேன். நிலைமை அப்படி இருக்க, எப்போதும்போல நான் செய்யக் கூடியதைத்தான் செய்தேன். நான் எனக்கென்று சில கொள்கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய செயல்களுக்கு எந்த அளவிற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஒருநிமிட அளவிற்குக்கூட நான் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அப்படி முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது என்பது பைபிளைப் படிப்பதற்கு எதிரானது என்பதாக நான் நினைத்தேன். அதே நேரத்தில் எனக்கென்று இருக்கும் சிந்தனைகளைக் கடவுளிடம் ஒப்படைப்பது என்பது ஒருவிதம் என்றால், அவற்றை யாருடைய தலையிலாவது கட்டிவிடுவது என்பது இன்னொரு விதம். எமிலியின் தோள்மீது கனமான சுமையை நான் ஏற்றி வைத்திருக்கிறேன் என்பதை உடனடியாக நான் உணர்ந்தேன்.
அந்தச் சிறுமியின் தலைமுடியை வெட்டும் விஷயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு என் மனைவிக்கு நான் உதவினேன். அவள் வெறுப்புடன்தான் அந்தச் செயலைச் செய்தாள். எனினும், கண் பார்வையற்ற அந்தச் சிறுமியைக் குளிக்கச் செய்து, வேறு ஆடைகள் அணியச் செய்ததை எமிலி மூலம்தான் நான் நிறைவேற்றினேன்.
வேறு எந்த விஷயத்திற்கும் எமிலி சிறிதுகூட எதிர்ப்பைக் காட்டவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றியும் இரவில் அவள் யோசித்துப் பார்த்திருப்பதைப் போல் தோன்றியது. என்னுடைய புதிய பொறுப்புகளை அவள் ஏற்றுக் கொண்டதைப்போல் எனக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் நான் செய்வது குறித்து அவள் முழுமையாக சந்தோஷப்படுவதைப்போல் நான் உணர்ந்தேன். ஷரத்ருத்தைக் குளிக்கச் செய்து, ஆடைகள் அணிவித்தபோது அவளுடைய உதடுகளில் புன்னகை மலர்வதை நான் பார்த்தேன். சாராவிற்குச் சொந்தமான நல்ல ஆடைகளில் சிலவற்றை அணிவித்துவிட்டு, எமிலி கண்பார்வையற்ற அந்தச் சிறுமியின் பழைய துணிகளை நெருப்புக்குள் வீசி எறிந்தாள்.
ஷரத்ருத்தின் உண்மையான பெயர் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அந்த யாருமற்ற அனாதைச் சிறுமிக்கு தன்னுடைய பெயர் என்னவென்றுகூடத் தெரியிவில்லை. அவளுடைய பெயர் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழியும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் ஹார்லட் அவளுக்கு ஷரத்ருத் என்று பெயர் வைத்தவுடன், நாங்கள் எல்லோரும் அந்தப் பெயரையே வைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டோம். சாராவிற்கும் அவளுக்குமிடையில் வயது விஷயத்தில் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் காரணமாக சாராவின் சென்ற வருட உடை ஷரத்ருத்திற்கு இப்போது சரியாகப் பொருந்தியது.
ஆரம்பத்தில் தாங்க முடியாத அளவிற்கு என்னிடம் ஒருவகை விரக்தி உணர்வு உண்டானது என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.