தேவராகம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
ஆனால், அதில் உட்காரும் அளவிற்குத் தன்னிடம் பலமில்லை என்பது மாதிரி அவள் தரையில் சாய்ந்து விட்டாள்.சிறிதும் தாமதிக்காமல் கிழவியின் அடுப்பிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததைப் போல அந்த அப்பிராணிச் சிறுமி உட்கார ஆரம்பித்து விட்டாள். அப்படி உட்கார்ந்திருப்பதில்தான் அவளுக்கு ஒரு சந்தோஷம் கிடைத்ததைப் போல இருந்தது. குதிரை வண்டியில் பயணம் செய்தபோது கூட அவள் இருக்கையிலிருந்து கீழே விழத்தான் செய்தாள். பிறகு பயணம் முடிவுக்கு வருவது வரையில் அவள் எனக்கு அருகில் ஒட்டிக் கொண்டே இருந்தாள்.
என் மனைவி எப்போதும் உயர்ந்த எண்ணங்களுக்குச் சொந்தக் காரியாக இருந்தாள். அவள் உதவிக்கு வந்தாள். இதயத்தின் உள்ளறைகளிலும் எண்ணங்களிலும் எப்போதும் ஒரு கடுமைத்தனம் இருந்து கொண்டே இருந்தாலும், கருணை கொண்ட இதயத்தை தன்னிடம் கொண்டிருப்பவள் அவள் என்ற உண்மையை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். சந்தோஷத்துடன் அந்தச் சிறுமியை ஒரு இடத்தில் உட்கார வைத்தபோது, என் மனைவி கேட்டாள்:
‘‘இவளை இனி என்ன செய்யப் போறீங்க?’’
‘இவளை’ என்ற சொல்லுக்கு அவள் கொடுத்த அழுத்தம் சிறிதும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. எனக்குள் ஒரு எரிச்சல் உண்டானது. எனினும் உள்ளுக்குள் தோன்றிய அமைதியான எண்ணத்தின் மூலம் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன். என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தவாறு நின்றிருந்த நான், அந்தக் கண்பார்வையற்ற சிறுமியின் தலையில் என் கையை வைத்தேன். தொடர்ந்து குரலில் கம்பீரத்தை வரழைத்துக் கொண்டு நான் சொன்னேன்.
‘‘காணாமல் போன ஆட்டை நான் திரும்பக் கொண்டு வந்திருக்கிறேன்.’’
உண்மையானதோ அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்படியோ எடுத்துக் கூறக்கூடிய அளவிற்கு பைபிளில் இப்படி ஏதாவது இருக்கும் என்ற விஷயத்தில் எமிலி எதிர் கருத்தைக் கொண்டிருந்தாள். என் கருத்தை எதிர்ப்பதுதான் அவளுடைய நோக்கம் என்பது தெரிந்ததும் உடனடியாக நான் ஜாக்ஸையும் சாராவையும் வெளியே போகும்படி சைகை செய்தேன். அந்த நிமிடமே அவர்கள் இருவரும் சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே போய்விட்டார்கள். எங்களுக்கிடையே இருக்கக்கூடிய சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த மாதிரியான சண்டைகளிலும் சாதாரண கருத்து மோதல்களிலும் பொதுவாகவே அவர்களுக்கு சிறிதும் ஈடுபாடு கிடையாது.
என் மனைவி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்ததும், புதிதாக வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிதான் அதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்து நான் சொன்னேன்.
‘‘இவளை வைத்துக் கொண்டு நீ எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். தயங்க வேண்டிய அவசியமே இல்லை. இவளால் ஒரு வார்த்தையைக்கூட புரிந்துகொள்ள முடியாது.’’
‘‘இல்லை... நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...’’- அவளுடைய நீண்ட பேச்சுக்கு எப்போதும்போல இருக்கக்கூடிய முன்னுரையாக இருந்தது அது. நடைமுறையில் காணமுடியாத என்னுடைய கிறுக்குத்தனமான செயல்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர, அவளுக்கு வேறு வழியே இல்லை. அந்தச் சிறுமியை இனிமேல் என்ன செய்வது என்பதைப் பற்றி சிறிதுகூட யோசிக்கவேயில்லை என்பதைத்தான் ஆரம்பத்திலேயே நான் கூறிவிட்டேனே! அவளை நிரந்தரமாக என்னுடைய வீட்டில் தங்கவைக்கும் விஷயத்தைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. எமிலிதான் என்னுடைய மூலையில் முதல் முறையாக இந்த விஷயத்தையே ஏற்றி விட்டிருக்கிறாள்.
என் மனைவியின் கோபம் அதிகரித்துக் கொண்டிருக்க, என் இதயத்திலிருந்து இயேசுபிரானின் சில வார்த்தைகள் உயர்ந்து உதடுகள் வரை வந்துவிட்டன. ஆனால், ந;£ன் அவற்றை வெளியே வர அனுமதிக்கவில்லை. நான் கூற நினைப்பதைப் பிறரை ஒப்புக்கொள்ளச் செய்ய டைபிளை நம்பாமல் இருப்பதே சரியானது என்று நான் நினைப்பதே அதற்குக் காரணம். ஆனால் அவள் சோர்வைப் பற்றி பேசியபோது என் மனதில் எரிச்சல் உண்டானது. ஆர்வமும் யோசனையும் கொண்ட என்னுடைய உற்சாகத்தைப் பற்றிப் பேசியதன் மூலம் என் மனைவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கவலைப்பட வேண்டிய நிலை உண்டானது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவள் எப்போதும்போல பேசுவது ஒரு பக்கம் இருந்தாலும் நான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியும் சிந்தித்தேன். அதனால் எமிலியிடம் மிகவும் பணிவான குரலில் சொன்னேன்:
‘‘எமிலி, கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. என் இடத்துல நீ இருந்தால், நான் செய்ததைத்தானே நீயும் செய்திருப்பே... அப்படிச் செய்யாமல் துணைக்கு யாருமே இல்லாமல் இருக்குற இந்தச் சிறுமியை வெறுமனே அங்கேயே விட்டுட்டு வந்திடுவியா? இந்தப் புதிய விருந்தாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்றெடுத்ததன் மூலமாக அதிக சுமையைச் சுமக்க வேண்டியது வருமென்றும், வீட்டைப் பற்றிய கவலைகள் அதிகமாக ஆகுமென்றும் நான் நினைக்கல.’’
இப்படிப்பட்ட சிந்தனைகளில் நான் அவளுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதைத் கூறி வருத்தப்பட்டேன். அந்த வகையில் முடிந்த வரையில் நான் அவளைச் சமாதானப்படுத்தினேன். கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுமியிடம் கோபப்பட்டுப் பேச வேண்டாம் என்று தொடர்ந்து அவளிடம் கேட்டுக் கொண்டேன்.
‘‘உன் வேலைகளில் உதவுகிற அளவுக்கு சாரா வளர்ந்துட்டாளே!’’ - நான் சொன்னேன்: ‘‘ஜாக்ஸ் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அந்த அளவுக்கு அவனைக் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமற் போய்விட்டது’’ - சுருக்கமாக விஷயத்தைப் புரிய வைக்கிற வகையில், கடவுள் என்னை சரியான வார்த்தைகளில் பேசவைத்தார்.
பந்தயத்தில் பெரும்பாலும் வெற்றி பெற்றாகிவிட்டது என்பதையும், மனதைச் சரளமாக ஆக்கிக் கொண்டு எமிலி இப்போது ஷரத்ருத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறாள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்தச் சிறுமியை மிகவும் நெருக்கத்தில் இருந்துகொண்டு பார்ப்பதற்காக விளக்கை எரியவிட்டபோது, ஷரத்ருத்தின் உடல் முழுக்க அழுக்காக இருப்பதைப் பார்த்து அவள் உரத்த குரலில் கத்த ஆரம்பித்து விட்டாள்.
‘‘கொடுமை! கொடுமை! இவள் இப்படியா அழுக்காக இருக்குறது! நீங்க போயி உடனடியாக அழுக்கைக் கழுவிட்டு வாங்க. இங்கே பண்ண வேண்டாம். வெளியே போங்க. ஆடைகளை நல்லா உதறுங்க. அய்யய்யோ! பிள்ளைகள்மேல் இந்தப் பேன்கள் ஏறினால்...’’
எமிலி சொன்னது உண்மைதான். அவளுடைய தலைமுடியில் பேன்கள் நிறைய ஓடிக்கொண்டு இருந்தன. பயணம் செய்தபோது அவள் எந்த அளவிற்கு என்னுடன் மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருந்தாள் என்பதை நினைத்தபோது, என் உடம்பில் வாயால் கூற முடியாத அளவிற்கு நடுக்கம் உண்டானதென்னவோ உண்மை.
அழுக்கு முழுவதையும் கழுவிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு அழகாக ஆடை அணிந்து வந்தபோது எமிலி சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பதைப் பார்த்தேன்.