
அப்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து சில நிமிடங்களில் நடைபெற்ற ஒரு சம்பவம் அது.
கோடை விடுமுறைக்கு மூன்று வாரங்கள் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் அது. ஜாக்ஸ் அப்போது வீட்டிற்கு வந்திருந்தான். சமீபகாலமாக நான் தேவாலயத்தில் ஆர்மோனியத்தை எடுத்து ஷரத்ருத்துடன் வாசிக்க உட்காருவதுண்டு. சாதாரண வேறொரு பெண்தான் அதைப் பொதுவாக வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் ஷரத்ருத்திற்கு இசை கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கவில்லை. இசை பிளீயமான விஷயமாக இருந்தாலும் எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. அதனால் ஆர்மோனியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஷரத்ருத்துடன் உட்காரும்போது அவளுக்கு ஏதாவது கற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
முதல் பாடத்திற்குப் பிறகு ஷரத்ருத் சொன்னாள் :
‘‘என்கிட்ட இருந்து நீங்க கொஞ்சம் விலகி இருக்குறது நல்லது. நானே இதை வாசிக்க முயற்சிக்கிறேன்.’’
உடனடியாக நான் மிகுந்த சந்தோஷத்துடன் அவளை விட்டு விலகி நின்றேன். (அங்கு நின்றிருப்பது அந்த அளவிற்குச் சரியானது என்று நான் நினைக்கவில்லை. அந்த இடத்தின் புனிதத்தன்மை பற்றிய நினைப்பும், அவளைப் பற்றி ஏதாவது கூறிவிடுவேனோ என்ற பயமும்தான் காரணம்).
ஆனால், பாதிரியார் என்ற முறையில் நான் எங்காவது சில வேளைகளில் போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும் அல்லவா ? அப்போது நான் ஷரத்ருத்தை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வேன். பலமணி நேரங்கள் அவளை அங்கு நிறுத்திவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வரும்போது அவளையும் உடன் அழைத்துக் கொண்டு வருவேன்.
அந்த வகையில் சந்தோஷம் நிறைந்த அமைதியான மனநிலையுடன் த்வனிகளைப் பற்றிப் புரிந்துகொள்ள ஷரத்ருத் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டாள். மாலை நேரத்தில்கூட ஸ்வரங்களின் ஓசையைப்பற்றி நினைக்கும்போது, அவளுடைய மனமென்னும் மயில் நடனமாடுவதை நம்மால் உணர முடியும்.
இப்படியே ஆறு மாதங்கள் ஓடியிருக்கும். ஆகஸ்டு மாதத்தின் ஆரம்ப நாட்களில் ஒருநாள். நான் ஒரு ஏழை விதவையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஆனால், நிறைய ஆறுதல் தேவைப்படும் நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அங்கு என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் நான் ஓரத்ருத்தை அழைத்துக்கொண்டு வருவதற்காக தேவாலயத்திற்குச் சென்றேன். ஜாக்ஸ் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டானது. என்னுடைய மெல்லிய காலடிச் சத்தம் இசைக் கருவியின் ஓசையில் காணாமற் போய்விட்டதால் நான் உள்ளே நுழைந்ததை அந்த இருவருமே கவனிக்கவில்லை. ஒரு பூனையைப் போல மறைந்தவாறு எந்தவொரு ஓசையையும் உண்டாக்காமல் நான் படிகளில் ஏறி அந்த இடத்திற்குச் சென்றேன். எல்லாவற்றையும் நன்கு பார்க்கக்கூடிய விதத்தில் அந்த இடம் அமைந்திருந்தது. எனக்கு முன்னால் கூறக்கூடாத ஒரு வார்த்தைகூட அவர்களுடைய உதடுகளிலிருந்து வெளியே வரவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். ஜாக்ஸ் அவளுடன் நெருக்கமாக உரசிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஷரத்ருத்தின் கையைப் பிடித்து ஆர்மோனியம் வாசிக்கும்போது விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்ற விஷயத்தை அவன் பல தடவைகள் கூறிக் கொண்டிருந்தான். ‘நானே இதை வாசிக்க முயற்சிக்கிறேன்’ என்று முன்பு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவாறு ஷரத்ருத் என்னிடம் சொன்ன விஷயம் அப்போது என் ஞாபகப் பெட்டகத்திற்குள்ளிருந்து தலையை நீட்டியது. அவள்தான் இப்போது ஜாக்ஸிடம் ‘இசையை’க் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயமாக இல்லையா ? எனக்குத் தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பும் வருத்தமும் உண்டாயின. அவர்களுக்கு இடையில் தடை உண்டாக்க முயற்சித்தபோது, ஜாக்ஸ் கைக்கடிகாரத்தை எடுப்பதை நான் பார்த்தேன்.
‘‘நான் இனிமேல் இங்கே இருக்க முடியாது’’ - அவன் சொன்னான் : ‘‘சில நிமிடங்களில் அப்பா இங்கே வருவார்.’’
அதைச் சொல்லிவிட்டு சிறிதும் தயங்காமல் ஜாக்ஸ் அவளுடைய கையைப் பிடித்து உயர்த்தி தன் உதடுகள் வரை கொண்டு போனான். தொடர்ந்து அவன் அவளிடம் விடைபெற்றான். சில நிவீடங்களுக்குப் பிறகு நான் மைதியாக படிகளில் இறங்கிக் கீழே வந்தேன்.
‘‘இப்போதுதான் வந்தேன்’’ என்று ஷரத்ருத்திடம் கூறிக்கொண்டே நான் தேவாலயத்தின் கதவைத் திறந்தேன்.
‘‘வீட்டிற்குப் போகலாமா ஷரத்ருத்? உன் கற்றல் எந்த அளவுல இருக்கு?’’- நான் கேட்டேன்.
‘‘நல்லா நடக்குது’’- மிகவும் இயல்பான குரலில் அவள் பதில் சொன்னாள்.
‘‘சொல்லப்போனால் நான் இன்னைக்குக் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன்.’’
என் இதயம் கடுமையான கவலையால் நிறைந்தது. ஆனால், நாங்கள் யாரும், ‘அதைப்’பற்றி எதுவும் பேசவில்லை.
ஜாக்ஸுடன் பேசுவதற்கு என் மனம் விரும்பியது. இரவு உணவிற்குப் பிறகு, எமிலியும் பிள்ளைகளும் ஷரத்ருத்தும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். அதற்குப் பிகு ஜாக்ஸும் நானும் சிறிது நேரம் உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்போம். அந்த நிமிடத்திற்காக நான் காத்திருந்தேன். ஆனால், அவனிடம் எதையாவது கூறுவதற்கு முன்பு என் மனதில் பெரிய உணர்ச்சி அலைகள் எழுந்து ஓசையெழுப்பிக் கொண்டிருக்கின்றன என்றும்; இதயம் பிளந்து கொண்டிருக்கிறது என்றும் நான் உணர்ந்தேன். என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க முடியாத ஒரு நிலையில் நான் இருந்தேன். அதற்கான தைரியம் என்னிடம் சிறிதும் இல்லாமல் இருந்தது. திடீரென்று அமைதியைக் கிழித்துக் கொண்டு ஜாக்ஸ் சொன்னான் :
‘‘மீதி விடுமுறைக் காலத்தை இங்கேயே கழிக்க நான் தீர்மானித்திருக்கிறேன்.’’
தான் ஆல்ப்ஸைச் சுற்றிப் பார்க்கப் போவதாக அவன் என்னிடம் கூறி அப்படியொன்றும் நாட்கள் அதிகம் ஆகிவிடவில்லை. அவனுடைய ‘பயண’ விஷயத்தை நானும் எமிலியும் எந்தவிதத் தடையும் சொல்லாமல் ஒப்புக் கொள்ளவும் செய்திருந்தோம். சிறிதும் எதிர்பாராத இந்த மாற்றம் ஏன் உண்டானது என்பதை யூகிக்க நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. மனதிற்குள் முழுமையான கோபம் உண்டானாலும், என்ன காரணத்தாலோ அதை வெளிப்படுத்த எனக்கு பயமாக இருந்தது. தன் தந்தை மீது ஜாக்ஸ் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் கெடுதல் உண்டானாலோ, வேறு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்தாலோ...? எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு அடக்கி வைக்க முயற்சித்துக் கொண்டு, முடிந்தவரை இயல்பாக ஆக்கிக் கொண்டு நான் சொன்னேன் :
‘‘ஆனால். உன் நண்பன்...?’’
‘‘ஓ... அதனால் பரவாயில்லை...’’ - அவன் சொன்னான் :
‘‘அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னொரு நண்பனைக் கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமான காரியமா என்ன ? மலை உச்சிகளில் இருப்பதைப் போல, நான் இங்கேயும் ஓய்வு எடுக்க முடியும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook