தேவராகம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6965
‘‘இறுதியில் எப்படி அது போய் முடியும் என்று கடந்த பல நாட்களாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்படிப்பட்ட விஷயங்கள் எந்தச் சமயத்திலும் ஆணின் பார்வையில் படவே படாது.’’
எமிலியை வெறுப்பது என்பது அர்த்தமற்றது என்பதால் நான் சொன்னேன் :
‘‘எமிலி, அப்படின்னா நீ ஏன் அதை என்னிடம் சொல்லாம இருந்தே ?’’
மவுனத்தை மறைத்து வைப்பதற்காக சில நேரங்களில் செய்வது மாதிரி ஒருவகை ஈர்ப்புடன் அவள் புன்னகைத்தாள். தொடர்ந்து தலையை நன்றாக ஆட்டியவாறு அவள் சொன்னாள் :
‘‘உங்களால் பார்க்க முடியாத விஷயங்களையெல்லாம் நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், என்னுடைய வாழ்க்கையே துன்பமயமா ஆகிவிடும்.’’
எமிலி எதிர்ப்பு காட்டியதற்கான அர்த்தம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள நான் சிறிதுகூட முயற்சிக்கவும் இல்லை.
‘‘எது எப்படி இருந்தாலும்... எமிலி, உன் கருத்து என்னன்னு தெரிந்து கொண்டால் நல்லதுன்னு நினைக்கிறேன்.’’
என் வார்த்தைகளைக் கேட்டவுடன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவள் சொன்னாள்.
‘‘ஷரத்ருத் இங்கே இருக்குறது எனக்கு எந்தச் சமயத்திலும் பிடிக்காத ஒரு விஷயம். உங்களுக்கு இது தெரியாத விஷயம் ஒண்ணுமில்லையே !’’
அடக்கவோ ஒதுக்கவோ முடியாத கோபத்துடன் நான் சொன்னேன் :
‘‘அவள் இங்கே தங்குறதைப் பற்றி விவாதம் செய்றதுக்கா நாம இருக்கோம் ?’’
‘‘ஆனால்...’’ எமிலி சொன்னாள்.
‘‘இது அந்த அளவுக்கு நல்லதற்கான அறிகுறி இல்லைன்னு எனக்கு எப்பவும் தோணியிருக்கு.’’
எமிலியுடன் சேர்ந்து சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தின் காரணமாக அவள் கூறிய விஷயத்தைக் காதில் வாங்கிக் கொண்டு நான் கேட்டேன் :
‘‘அப்படின்னா ஷரத்ருத்தை ஜாக்ஸ் திருமணம் செய்றது நல்லது இல்லைன்னா நீ சொல்றே ? அதைத்தான் நான் உன்னிடமிருந்து கேட்க ஆசைப்பட்டேன். நாம இரண்டு பேரும் ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறோம் என்பது குறித்து எனக்கு சந்தோஷமே.’’
ஜாக்ஸ் என்னுடைய ‘வார்த்தை’களுககு முன்னால் தலையைக் குனிந்து கொண்டிருந்தான் என்றும்; மனக் குழப்பமடைய வேண்டிய தேவையே இல்லை என்றும் தொடர்ந்து நான் அவளிடம் சொன்னேன். மறுநாள் அவன் பயணத்தை ஆரம்பிக்கிறான் என்றும்; அது ஒருமாத காலம் இருக்கும் என்றும் சொன்னேன்.
‘‘திரும்பி வர்றப்போ ஜாக்ஸ் ஷரத்ருத்தைப் பார்க்கக்கூடாது என்று நீ நினைக்கிறியா ?’’ - நான் என்னுடைய வார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அவளைப் பார்த்துக் கேட்டேன். தொடர்ந்து நான் சொன்னேன் :
‘‘மேடத்தின் மேற்பார்வையில் ஷரத்ருத்தை வைத்திருப்பதும் தினமும் நான் அங்கே போய் அவளைப் பார்ப்பதும்தான் சரியாக இருக்கும். எந்த அளவிற்குக் கனமான பொறுப்புகள் எனக்கு அவள் மீது இருக்குன்னு உனக்குத்தான் தெரியுமே ! நான் மேடத்திடம் எல்லா விஷயங்களையும் விளக்கிச் சொல்லிட்டேன். அவங்க நமக்கு உதவி செய்யத் தயாரா இருக்காங்க. அவங்க இப்போ எந்த அளவிற்குச் சந்தோஷமா இருக்காங்க தெரியுமா ? ஷரத்திற்குக் கற்றுத்தர ஆரம்பித்ததிலிருந்தே அவங்க மிகவும் ஆர்வமா இருந்தாங்க.’’
ஆனால், மவுனத்தைக் கலைக்காமல் இருப்பதில் எமிலி மிகவும் பிடிவாதமாக இருப்பதைப்போல் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:
‘‘ஜாக்ஸ் அங்கே போய் ஷரத்ருத்தைப் பார்ப்பது நமக்கு விருப்பமில்லாத ஒரு செயலாக இருப்பதால், மேடத்திடம் எல்லா விஷயங்களையும் கூறிவிடுவதுதான் சரியானது. அதைப்பற்றி உன் கருத்தென்ன ?’’
இந்த முறை நான் அவளிடமிருந்து பதிலைக் கட்டாயம் எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு வார்த்தையைக்கூட உதிர்ப்பதில்லை என்று மனதிற்குள் சபதம் எடுத்திருப்பதைப்போல் அவள் உதடுகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
என் மனைவியின் மவுனம் பொறுமையைத் தாண்டி இருந்ததால், அதற்குப் பிறகும் நானே பேசினேன்.
‘‘ஜாக்ஸ் திரும்பி வந்தவுடன் காதல் என்ற உணர்வின் உள்துடிப்புகள் மீது அமர்ந்து வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவன் முயற்சி செய்தால்...? அவனுடைய வயதில் அவனுக்கு என்ன தேவை என்பதை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது.’’
‘‘பல நேரங்களில் அதற்குப் பிறகும் மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது’’ - சரமணிகள் தெறிப்பதைப்போல் இருந்தது அவளுடைய பதில்.
எமிலியின் ‘நெருப்பைப் போன்ற’ அந்த வார்த்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்குக் கோபம் கொள்ளச் செய்தன. (இயல்பாகவே நான் எதிலும் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறதே, அதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை). உடனடியாக அவளை நோக்கித் திரும்பி நான் கேட்டேன்.
‘‘நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ, அதைத் தெளிவாகச் சொன்னால் உதவியாக இருக்கும்.’’
‘‘இல்லை... குறிப்பாக சொல்றதுக்கு என்கிட்ட எதுவும் இல்ல...’’
முழுமையான கவலை கலந்திருந்த பதிலாக அது இருந்தது. அவள் சொன்னாள் : ‘‘ ஒரு நிமிடத்திற்கு முன்னாடிதானே நீங்க என்னிடம் சொன்னீங்க, என்னால் பார்க்க முடியாத விஷயங்களைப்பற்றி நான் தெரிஞ்சிருக்கணும்னு...’’
‘‘அப்படின்னா...’’
‘‘பல நேரங்களில் மனிதர்களை விஷயங்களைத் தெரிஞ்சிக்க வைக்கிறது அந்த அளவுக்கு எளிதான காரியம் இல்லைன்னு நான் நினைச்சுப் பார்த்தேன்.’’
‘‘ரகசியமான காரியங்கள் மீது எனக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் சைகைகள்மூலம் விளக்குறதையும் இரட்டை அர்த்தங்களில் பேசுவதையும் கொஞ்சம்கூட விரும்பமாட்டேன் என்பதையும் ஏற்கெனவே நான் சொல்லியாச்சு. எமிலி, நீ சொல்றதை நான் புரிஞ்சிருக்கணும்னு உனக்கு விருப்பமிருக்கா ? அப்படின்னா எல்லாவற்றையும் விளக்கமா சொன்னாத்தான் சரியாக இருக்கும்...’’
என்னுடைய பதில் சற்று கடுமையாக இருந்திருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவும் செய்தேன். சில நிமிடங்களுக்கு எமிலியின் உதடுகள் துடிப்பதை நான் பார்த்தேன். அவள் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வைத்துக்கொண்டாள். பிறகு எழுந்து மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அறைக்குள் இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தாள்.
‘‘ஆனால்... எமிலி, எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிற நிலையில் நீ கவலைப்படுறது ஏன் என்றுதான் என்னால புரிஞ்சிக்க முடியல.’’
என் கண்கள் அவளை ஆச்சரியப்படச் செய்வதாக நான் உணர்ந்தேன். அதனால் முழங்கைகளை மேஜைமீது ஊன்றிய நான், கைகளில் தலையை வைத்துக்கொண்டு சொன்னேன் :
‘‘நான் உன்னிடம் கடுமையான குரலில் பல விஷயங்களைக் கூறியிருக்கலாம். என்னை மன்னிச்சிடு எமிலி.’’
அடுத்த நிமிடம் அவள் எனக்குப் பின்னால் வந்து தன் விரல்களை மிகவும் மெதுவாக என் தலையில் வைத்துக் கொண்டு, மெல்லியதும் நடுங்கியதுமான குரலில் கண்கள் நீர் அரும்ப சொன்னாள் :