தேவராகம் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
முழுமையான கவலையுடன் கூறுகிறேன் - எமிலியும் அதில் கலந்து கொள்ளவில்லை. எங்களுடைய திருமணத்திற்குப் பிறகு இதைப்போன்ற ஒரு வாய்ப்பு முதல் தடவையாக இப்போதுதான் வருகிறது. என்னுடைய மன அமைதியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இருவரும் இந்தச் சடங்கில் கலந்து கொள்வதில்லை என்று முன்கூட்டியே தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். எது எப்படியோ, ஷரத்ருத்திற்கு இந்த விஷயம் தெரியாதே என்று நினைத்து நான் சந்தோஷப்பட்டுக் கொண்டேன். கவலையால் உண்டான கசப்பு நீரை நான் மட்டும் தனியே பருகினேன். எமிலியை எனக்கு நன்கு புரிந்துகொள்ள முடியும். அவள் எந்தச் சமயத்திலும் வெளியே எல்லோருக்கும் தெரியும்படி என்னை அவமானப்படுத்தியதில்லை. ஒருவகைப்பட்ட தனிமை என்னும் துயரச் சூழலில் என்னை விட்டெறிந்துவிட்டு அவள் தன்னுடைய கோபத்தைக் காட்டுகிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவளுடைய அந்தச் செயலை நினைத்துப் பார்த்து நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால், ஜாக்ஸ் விருந்தில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் வேறொன்றாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு என் மகனுடன் உரையாடிய போதுதான் என்னால் அதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. விஷயம் வேறொன்றுமில்லை. ஏசுவிடம் எந்தவொரு உயர்ந்த விஷயத்தையும் அவன் உணரவில்லையாம் !
டாக்டர் மார்ட்டின் நேற்று வந்திருந்தார். அவர் நீண்ட நேரம் ஷரத்ருத்தின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்தார். லொஸானில் இருக்கும் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராக்ஸிடம் தான் ஷரத்ருத்தைப் பற்றிக் கூறியிருப்பதாகவும், தன்னுடைய பரிசோதனை ரிப்போர்ட்டை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று மார்ட்டின் என்னிடம் சொன்னார். ஆப்ரேஷன் மூலமாக ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைக்கும் என்ற எண்ணம் அவர்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால், அப்போது அதைப்பற்றி அவளிடம் எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது. மலையிலிருந்து கீழே விழுவதைப் போல் ஏதோ ஆபத்து உண்டாகப் போகிறது என்ற சூழ்நிலையில் அந்த அப்பிராணிப் பெண்ணின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைத் தட்டியெழுப்புவதன் மூலம் என்ன பயன் உண்டாகப்போகிறது ?
ஈஸ்டர் திருநாளன்று ஜாக்ஸ் ஷரத்ருத்தைப் பார்த்தான். ஆனால், நான் இருக்கும்போது அவள் அவனுக்கு அருகில் நின்றிருந்தாள். இருவரும் மிகவும் சாதாரண முறையிலேயே உரையாடினார்கள். நான் பயந்ததைப் போல ஜாக்ஸ் அப்படியொன்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இல்லை. ஷரத்ருத் மீது அவன் கொண்டிருந்த காதல் பலம் கொண்டதாக இருந்திருந்தால், அந்த அளவிற்கு எளிதாக அவனால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியாது என்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன். சென்ற வருடம் அவன் போவதற்கு முன்னால் இந்தக் காதல் அர்த்தமே இல்லாதது என்று அவள் ஜாக்ஸிடம் கூறியிருந்தாள். ஜாக்ஸ் இப்போது அவளை ‘நீ’ என்று அழைக்காமல், அதற்குப் பதிலாக ‘நீங்கள்’ என்று அழைக்கிறான் என்பதை நான் தெரிந்து கொண்டேன். எது எப்படியோ, அப்படி அழைப்பதுதான் சரியானதும்கூட நான் அவனிடம் அவளை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை.
ஜாக்ஸின் இந்தத் தியாகத்திற்குப் பின்னால் மிகப்பெரிய மனப்போராட்டம் இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஜாக்ஸைப் பொறுத்தவரையில் கர்த்தாவான ஏசுவைவிட புனிதர் பால் கூறிய வார்த்தைகள்தான் அர்த்தம் நிறைந்ததாக இருந்தன. அவனை அவனுடைய ஆயுதத்தைப் பயன்படுத்தியே தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் ஒருநாள் நான் அவனுடைய அறையில் ஒரு சிறிய குறிப்பை எழுதி வைத்தேன்.
‘வசதி படைத்தவன் ஏழையை வெறுக்கக்கூடாது. காரணம் - ஏசு தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்தெடுத்து ஏழைகளைத்தான் என்று புனிதர் பாலின் கட்டுரையில் இருக்கிறது. ‘தேவைப்பட்டால் அதற்கடுத்த வார்த்தைகளையும் என்னால் எழுதியிருக்க முடியும்.
‘அது அசுத்தமான ஒரு செயல் அல்ல. ஆனால் அதை அசுத்தம் என்று நினைப்பவனுக்கு வேண்டுமானால் அது அசுதமாக இருக்கும்.’
ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் - ஜாக்ஸ் எங்கே ஷரத்ருத்தின் பெயரைச் சொல்லி தப்பான சில விளக்கங்களுடன் என்மீது சந்தேகப்பட்டு விடுவானோ என்ற பயம் எனக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சந்தேகம் ஒரு நிமிடம்கூட அவனுடைய மனதில் உண்டாவதை நான் விரும்பவில்லை. புனிதர் பால் மேலும் கூறுகிறார் :
‘‘ஆனால், உன்னுடைய உணவுப் பொருள் விஷயத்தில், உன்னுடைய சகோதரனுக்கு வருத்தம் உண்டாகிறது என்றால், நீ அன்பின் பாதையில் பயணிக்கவில்லை என்றே அர்த்தம். அன்பு தோல்வி அடையும் இடத்தில்தான் தம்முடைய ஆயுதம் ‘கட் கட்’ என்ற ஓசையை உண்டாக்குகிறது. தீமை நம்மீது ஆட்சி செய்வதும் வேறொரு இடத்தில் அல்ல. கடவுளே, அன்புடன் தொடர்பு இல்லாத எல்லாவற்றையும் எங்களுடைய இதயத்திலிருந்து அழித்துவிடுவீராக !’’
பொழுது விடிந்தபோது, ஜாக்ஸிற்காக எழுதி வைத்திருந்த அதே ‘குறிப்பு’ மேஜைமீது கிடப்பதைப் பார்த்தேன். அந்தக் குறிப்பில் பின் பக்கத்தில் புனிதர் பாலின் அதே அத்தியாயத்திலிருந்த பகுதியை ஜாக்ஸ் இப்படி எழுதியிருந்தான்.
‘ஏசு யாருக்காக இறந்தாரோ, அவனுடைய அழிவிற்கு உன்னுடைய உணவு காரணமாகாமல் இருக்கட்டும்.’
நான் எல்லா அத்தியாயங்களையும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.
ஷரத்ருத்தை இந்தப் பிரச்சினைகளால் கவலைக்குள்ளாக்கியது சரியான செயல்தானா ? இந்தக் கார்மேகங்களைக் கொண்டு அந்தக் கண்பார்வையற்ற பெண்ணின் ஆகாயத்தின் வெளிச்சத்திற்கு பங்கம் உண்டாக்கியது சரியா ? என்னுடைய மனதிற்குள் சிந்தனை என்னும் சிவப்பு எறும்புகள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை நான் அவளுக்கு அறிவு புகட்டுகிறேன். பாவம் என்பது என்னவென்றால் மற்றவர்களின் சந்தோஷத்திற்குக் கேடு உண்டாக்குவதுதான் என்பதை அவளுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். அப்படிச் செய்யும்போது உண்மையிலேயே நான் ஏசுவிற்கு அருகில் நின்று கொண்டு, ஷரத்ருத்தைக் கருணையே வடிவமானவரும், அன்பின் பிறப்பிடமானவருமான கடவுளுக்கு அருகில் நிற்கவல்லவா செய்திருக்க வேண்டும் ?
9
சந்தோஷமும் திருப்தியும் இல்லாத சில மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சந்தோஷத்தின் மூலம் பலனடைவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாது. அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இல்லை. நான் எமிலியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கூட விடாமல் மிகவும் தீவிரமாக அவளிடம் நான் கூறுவேன்.
‘‘சந்தோஷமா இருக்கணும் எமிலி.’’
எல்லோரையும் உயர்த்திக் கடவுளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால், எமிலிக்கு அதில் விருப்பமில்லை. வெயிலில் இருக்கும் மலர்களைப் போல அவள் வாடிப் போகிறாள். தான் காணும் ஒவ்வொரு பொருளிலும் அவள் நிம்மதியற்ற தன்மையையும் துயரத்தையும் உணர்கிறாள்.