தேவராகம் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
அன்று அவள் என்னிடம் சொன்னாள் :
‘‘இதனால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகுது ? நாம எல்லோரும் கண் பார்வை தெரியாதவர்களாக ஆக முடியாது.’’
‘‘ஓ ! எந்த அளவிற்கு வேதனையை எமிலியின் வார்த்தைகள் என் மனதிற்குள் எறிந்திருக்கின்றன ! நிலை குலைந்து போய்விடாமல் இருப்பதற்காக நான் எந்த அளவிற்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வரவழைத்துக் கொண்டிருக்கிறேன் ! ஷரத்ருத்தின் பார்வையற்ற தன்மையைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் என்னை வாயால் கூற முடியாத அளவிற்கு வேதனை கொள்ளச் செய்திருக்கிறது. ஆனால், இந்த விஷயம் எமிலிக்கு ஏன் புரியவில்லை ? அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியின் அடக்கமான குணம்தான் உங்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று என் மனைவி என்னிடம் கூற நினைக்கிறாள்.
ஷரத்ருத் சாதாரணமாகக்கூட யாரிடமாவது சண்டை போட்டுப் பேசுவதை நான் இதுவரை பார்த்ததேயில்லை. அவளுக்கு மோசமென்று படக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் நான் அவளைக் கேட்க அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை.
சந்தோஷத்தில் இருக்கும் மனம் தன்னைச் சுற்றி இருக்கும் காதலின் வெளிச்சத்தில் உல்லாசத்தையும் உற்சாகத்தையும் பரவச் செய்கிறது. எமிலியைப் பொறுத்தவரை நான்கு பக்கங்களிலும் எப்போதும் அலட்சியமும் அதிர்ஷ்டமின்மையும்தான் நிறைந்திருக்கின்றன. நாள் முழுவதும் கஷ்டப்பட்டு நோயாளிகளையும், ஏழைகளையும், கவலையில் இருப்பவர்களையும் பார்த்துவிட்டுத் தளர்ந்துபோய் சோர்வுடன் வரும்போது, சிறிதும் ஓய்வும் அன்பும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு என்று என் உள்மனம் ஏங்கும். ஆனால், சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும் சண்டைகளும் என்னைச் சுற்றி வளைப்பதைத்தான் நான் பெரும்பாலும் காண்கிறேன். மொத்தத்தில் அந்த மாதிரியான நேரங்களில் நான் அதிர்ச்சியில் உறைந்து போவேன். காஸ்பேர்டும் ஷார்லட்டும் மிகவும் துடிப்பானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், எமிலி அவர்களை தண்டிப்பதைச் சற்று குறைத்தால், அது எந்த அளவிற்குப் பயனுள்ள விஷயமாக இருக்கும் ! அவர்களை அவ்வப்போது தடுப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூறுவதும், அவர்கள்மீது குற்றச்சாட்டுக்கள் கூறுவதும் நடக்கும்போது, அலைகள் அடித்து அடித்துப் பாறைகளின் கூர்மையான முனைகள் தேய்ந்து போவதைப்போல, கூறும் விஷயங்களின் அடர்த்திக்கு குறிப்பிட்ட அளவு தேய்மானம் உண்டாகிவிடும்.
‘க்ளாடிற்கு பல் முளைக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ (அவன் அழும்போது அவனுடைய தாயின் உதட்டிலிருந்து இந்த வார்த்தைகள்தான் வரும்). ஆனால், இந்த வார்த்தைகள் அவனை மேலும் அழ வைப்பதற்கு தூண்டுகோலாக இருக்கின்றன என்பதுதானே உண்மை. ‘க்ளாடின் அழுகைச் சத்தம் கேட்டவுடன் உடனடியாக ஓடி அவனைத் தூக்கி அவனுடைய முதுகைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்றுதானே எமிலியும் சாராவும் நினைக்கிறார்கள் ? நான் இல்லாமல் இருக்கும்போது ஒன்றிரண்டு முறை போதும் என்று தோன்றும்வரை க்ளாடினை அழ வைத்தால், திரும்பத் திரும்ப அவன் அழவே மாட்டான் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
புறச்சிந்தனைகள் எமிலியை என்னதான் ஆக்கவில்லை ! ஆனால், அவள் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்ட சிந்தனைகள் மூலம் ஒருகாலத்தில் என் இதயக்கனவுகளை வளர்த்த புன்னகை தேவதையின் அழகான உருவத்தை இப்போது அவளிடம் காண முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னுடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏமாற்றத்திற்கும் பங்காளியாக இருந்தவள் அவள். சொர்க்கத்திற்குச் செல்லும் பாதைக்கு என்னுடைய வழிகாட்டியும் அவள்தான். வானவில்லின் வண்ணங்களைக் கொண்ட எப்படிப்பட்ட இனிய கற்பனைகள் அவை ! பொன்னென ஒளிரும் எத்தனையெத்தனை கனவுகள் ! ஒருவேளை அந்த நாட்களில் காதல் என்னைக் குருடனாக ஆக்கிவிட்டிருக்குமோ ? தன் தாயைப்போல சாராவும் இப்போது வீட்டு விஷயங்களில் மட்டும் தன்னைக் குறுக்கிக் கொண்டுவிட்டாள். எந்த வகைப்பட்ட உள் ஒளியும் இப்போது அவளுடைய முகத்தில் தெரிவதில்லை. முற்றிலும் ஈவு, இரக்கமற்ற கொடுமையான குணத்திற்குச் சொந்தக்காரியாக அவள் இருக்கிறாள். கவிதைகளிலோ, வேறு எதையாவது படிப்பதிலோ எதிலும் அவளுக்குச் சிறிதும் ஆர்வம் இல்லை. தாயும் மகளும் உரையாடுவதைக் கேட்டு, அவர்களுடன் நானும் பங்கெடுத்துக் கொண்டால் என்ன என்று சில நேரங்களில் தோன்றும். ஆனால் அப்படிப்பட்ட உரையாடலைக் கேட்பதற்கான வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையென்றால்...?
குளிர்காலத்தில் மேடத்தின் வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்துவது என்னுடைய பழக்கமாக இருந்தது. வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் அங்கு போவேன்.
ம்... நான் ஒரு விஷயத்தைக் கூறாமல் விட்டுவிட்டேன். மார்ட்டின் மேடத்திடம் ஒப்படைத்த அந்த மூன்று சிறுமிகளும் சென்ற நவம்பர் முதல் அவர்களுடன்தான் வசிக்கிறார்கள்.
மேடத்தின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் சாந்தம் நிறைந்ததாகவும் சந்தோஷமானதாகவும் நட்புணர்வு உள்ளதாகவும் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அங்கு இரண்டு மூன்று நாட்கள் போகாமல் இருந்தால், அதற்குப் பிறகு சிந்தனை முழுவதும் அவர்களையே சுற்றிக் கொண்டிருக்கும். ஷரத்ருத் மற்றும் மூன்று சிறுமிகளுக்கு ஆகக்கூடிய செலவுகளைப் பார்த்துக் கொள்வது என்பது அவர்களுக்குக் கஷ்டமான ஒரு விஷயமல்ல. மூன்று வேலைக்காரிகள் நல்ல முறையில் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். அதைவிட சந்தோஷத்தையும் அமைதியையம் யாரால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் ? மேடத்திற்கு ஏழைகள் மீதும் ஆதரவற்றவர்கள் மீதும் எப்போதும் ஈடுபாடு உண்டு. தர்மச் செயல்களில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த மதிக்கக்தக்க பெண்மணி இந்த உலகில்தான் இருக்கிறாள் என்பதை நம்புவதே நமக்குக் கஷ்டமாக இருக்கும். பரந்து கிடக்கும் இந்தப் பெரிய உலகில் அன்பிற்காக மட்டும்தான் அவள் வாழ்கிறாளோ என்று எண்ணத் தோன்றும். சிறு குழந்தைகளின் சிரிப்பைப்போல அவள் சிரிப்பாள். அவளுடைய நடவடிக்கை ஒவ்வொன்றும் ரசிக்கிறமாதிரி இருக்கும். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரியான அவள் நடந்து கொள்ளும் முறைகளையும் பழக்க வழக்கங்களையும் ஷரத்ருத் நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தாள். மேடம் பேசுவதைப்போலவே ஷரத்ருத் பேசுவாள். மேடத்தின் குரலை அப்படியே மனதிற்குள் வாங்கி எதிரொலிக்கவும் ஷரத்ருத் தெரிந்து வைத்திருந்தாள். சேட்டைகள் செய்கிறார்களே என்று தினமும் நான் அவர்கள்மீது கோபிப்பேன். ஆனால், அவர்களில் யாரும் சேட்டைகள் செய்வதை ஒத்துக் கொள்வதேயில்லை.
மேடமும் ஷரத்ருத்தும் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதில் நான் மிகவும் விருப்பம் கொண்டவனாக இருப்பேன். அவள் மேடத்தின் தலைமீது குனிந்து கொண்டு உட்கார்ந்திருப்பாள். அதாவது - மேடத்தின் கையை அவள் பிடித்திருப்பாள். அப்போது மேடத்தின் உள்மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கவிதையின் அழகைக் காண்பது என்பது எந்த அளவிற்குக் சந்தோஷமான ஒரு விஷயம் ! சிறு பெண்களின் இளம் மனங்களில் மேடம் முழுமையாக இடம்பிடித்து விடுவாள்.