தேவராகம் - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
சிறிதும் எதிர்பாராமல் அந்த அப்பிராணிப் பெண் கால் தவறி கீழே விழுந்திருக்கா.’’
இவற்றையெல்லாம் என்னால் நம்ப முடிந்திருந்தால்! நடைபெற்ற அனைத்தும் ஒரு சாதாரண ‘ஆக்ஸிடெண்ட்’ என்று என்னை நானே தேற்றிக் கொள்ள முடிந்திருந்தால்! கனமான மனதைவிட்டு அப்போது எந்த அளவிற்குக் கனமான சுமை கீழே இறங்கியிருக்கும்!
உணவு ருசியாக இருந்தாலும், ஷரத்ருத்தின் முகத்தில் தெரிந்த வினோதமான புன்னகை நிரந்தரமாக என்னுடைய மனதைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட அந்தப் புன்னகையை ஷரத்ருத்தின் முகத்தில் முன்பு எப்போதும் நான் கண்டதில்லை. எனினும், அவள் புதிதாக வரவழைத்த பிரகாசமான புன்னகை அது என்பதைப் புரிந்துகொள்ள நான் முடிந்தவரையில் முயற்சித்தேன். ஷரத்ருத்தின் விழிகளின் ஓரத்திலிருந்து தெரிந்த வினோதமான புன்னகை! அவள் எங்களுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு முன்னால் வெளிப்படுத்திய ஏதோ ஒரு ரகசியத்தை அவள் கண்டுபிடித்திருப்பதாக நான் உணர்ந்தேன். அவள் மௌனமாக இருந்தால். ஆனால், மற்றவர்களின் முன்னால் பல நேரங்களில் அப்படித்தான் அவள் நடந்துகொள்வாள் என்பதால் ஷரத்ருத்தின் மௌனம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.
கடவுளே, அவளுடைய உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிந்தால் நன்றாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளாமல் என்னால் எப்படி வாழ முடியும்?
அவள் இப்போது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறாள் என்றால், காரணம் வேறொன்றுமில்லை. எல்லாவற்றையும் அவள் அறிந்திருக்கிறாள். ஆனால், ஷரத்ருத் தெரிந்துகொண்ட அந்த பயங்கரமான விஷயம் என்ன? அது என்ன, கடவுளே! நான் அவளிடமிருந்து எதையும் மறைத்து வைக்கவில்லையே! எது எப்படி இருந்தாலும் அவள் உயிரைப் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தது அச்சத்தைத் தரக்கூடிய ஒன்றே. அப்படிச் செய்யக்கூடிய அளவிற்கு திடீரென்று அவள் எதைப் பார்த்துவிட்டாள்? தெய்வமே, ஷரத்ருத்திற்கு...
இரண்டு மணிநேரமாக நான் அவளுடைய தலையணைக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறேன். என்னுடைய கண்கள், அளவுக்கு மீறிய கவலை காரணமாக மூடியிருக்கும் கண் இமைகள், ஈரத்துடன் கடல் புற்களைப் போல அவளைச் சுற்றித் தலையணையில் பரவிக் கிடக்கும் கூந்தல் ஆகியவற்றை விட்டு சிஜீதுகூட விலகவில்லை... எந்த அளவிற்கு மிகவும் சிரமப்பட்டு அவள் மூச்சு விடுகிறாள் தெரியுமா?
12
ஜுன், 10.
மேடம் இன்று காலையில் என்னை அழைத்திருந்தாள். இல்லாவிட்டாலும்கூட நான் அங்கு போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன். அமைதியாக இரவைக் கழித்த பிறகு, இறுதியில் ஷரத்ருத்தின் சுய நினைவற்ற தன்மை மாறியது. நான் அவளுடைய அறைக்குச் சென்றபோது அவள் புன்னகைத்தவாறு என்னைத் தன் அருகில் வந்து அமரும்படி சைகை செய்தாள். நான் அவளிடம் எதையும் கேட்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அவளை எடுத்துக் கொண்டால், நான் எங்கே எதையாவது கேட்டு விடப்போகிறேனோ என்ற பயத்தில் இருந்தது மாதிரி இருந்தாள். அந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக அவள் திடீரென்று கேட்டாள்.
‘‘ஆற்றின் கரையில் நான் பறிக்க விரும்பிய அழகான பூக்கள் இருக்கே. அந்தப் பூக்களின் பெயர் என்ன? எனக்கு ஒரு பூங்கொத்து கொண்டுவந்து தரமுடியுமா? நான் அதை என் படுக்கையில் வைத்திருக்க ஆசைப்படுறேன்.’’
ஷரத்ருத்தின் குரலில் மறைந்திருந்த ரகசியம் என்னை அச்சம் கொள்ளச் செய்தது. இந்த விஷயம் அவளுக்கு நிச்சயம் தெரிந்ததுதான். எனினும், அவள் சற்று மிடுக்கான குரலில் சொன்னாள்:
‘‘என்னால் இப்போது உங்களுடன் பேசமுடியல. நான் மிகவும் சோர்வடைந்து போயிருக்கேன். ஆற்றின் கரைக்குப் போய் ஒரு பூங்கொத்தைப் பறிச்சு எனக்குக் கொண்டு வந்து தாங்க.’’
ஒருமணி நேரத்திற்குப் பிறகு நான் அவளுக்காகப் பூங்கொத்துடன் வந்தபோது மேடம் சொன்னாள்:
‘‘ஷரத்ருத் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். சாயங்காலம் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.’’
நான் அவளை மாலை நேரத்தில் பார்த்தேன். அவள் படுத்திருந்தாள். அப்படிக் கூறுவதைவிட படுக்கையில் தலையணையின் உதவியுடன் உட்கார்ந்திருந்தாள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்போது அவள் தன்னுடைய தலைமுடியைப் பின்னி வாரிக் கட்டியிருந்தாள். அவளுக்காகக் கொண்டு வந்திருந்த பூங்கொத்திலிருந்து ஒரு பூவை எடுத்து நான் அவளுடைய தொங்கிக் கொண்டிருந்த முடியில் வைத்தேன்.
ஷரத்ருத்திற்கு பலமாக காய்ச்சல் அடித்தது. மிகவும் சிரமப்பட்டு அவள் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். நான் கையை அவளுக்கு நேராக நீட்டினேன். தொடர்ந்து சற்று அவளை நெருங்கி நின்றேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் சொன்னாள்:
‘‘நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். நான் இன்னைக்கு சாயங்காலம் மரணத்தைத் தழுவிட்டா...? இன்னைக்குக் காலையில நான் உங்களிடம் பொய் சொன்னேன். பூக்களை பறிக்க நான் விரும்பவே இல்ல... உண்மையிலேயே நான் விரும்பியது தற்கொலை பண்ணிக்கத்தான் என்று சொன்னால் நீங்க... நீங்க என்னை மன்னிச்சிடுவீங்கள்ல?’’
ஷரத்ருத்தின் மெத்தைகளுக்கருகில் நான் முழங்காலிட்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய மெலிந்துபோன கை இப்போதும் என் கையில்தான் இருந்தது. திடீரென்று அவள் தன் கையை விடுவித்து அன்புடன் என் தலையை மெதுவாகத் தடவியபோது, கண்களில் அரும்பிய கண்ணீரை மறைக்கவும், ஒரு ஓரத்தில் ஒதுக்கவும் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
‘‘நான் அப்படிச் செய்தது சரியில்லைன்னு நீங்கள் நினைக்கிறீங்களா?’’
மௌனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.
அப்போது அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
‘‘உங்களுடைய இதயத்திலும் வாழ்க்கையிலும் எனக்கு இருந்தது மிகப்பெரிய இடமாச்சே! நான் உங்களிடம் திரும்பி வந்தபோது, சொந்தமென்று நினைச்ச இடம் அப்படி இல்லைன்னு தெரிஞ்சதும், எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. ஆன்ட்டிக்குத்தான் எந்த அளவிற்குக் கவலை! இந்த விஷயத்தை உடனடியா என்னால புரிஞ்சிக்க முடியல. அதாவது - எல்லா விஷயங்களும் தெரிந்த பிறகும் என்மீது அன்பு செலுத்த உங்களை அனுமதிச்சாங்க என்று நினைச்சதுதான் என்னோட மிகப்பெரிய தப்பு. ஆனால், ஆன்ட்டியின் முகம் என் கண்களுக்கு முன்னால் தெரிந்தபோது, அந்த முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்தபோது என்னால அதைப் பொறுத்துக்க முடியல. ஆன்ட்டிக்கு இந்த அளவுக்கு மனக்கவலை வந்ததற்குக் காரணம் நான்தானோ! நீங்க கொஞ்சம்கூட தப்பா நினைக்கக்கூடாது.... ம்... ஒரே ஒரு உதவி மட்டும் செய்தால் போதும். தயவு செய்து என்னைப் போகவிடுங்க. அதற்குப் பிறகு ஆன்ட்டிக்கு அவங்களோட சந்தோஷத்தைத் திருப்பிக் கொடுங்க.’’
மெதுவாக தடவிக்கொண்டிருந்ததைத் திடீரென்று நிறுத்தியதும், நான் அவளுடைய உள்ளங்கையைத் தடவினேன். அத்துடன் கண்ணீர் மழையும். பதைபதைத்துப் போய் தன் கையை இழுத்துக் கொண்ட அவள் ஏதோ சிந்தனையில் சிக்குண்டதைப் போல் மெத்தையில் இங்குமங்குமாக அடிக்க ஆரம்பித்தாள்.