தேவராகம் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
‘‘இல்ல... நான் இந்த விஷயத்தை இல்ல உங்களிடம் சொல்ல விரும்பியது... உங்களிடம் கூற நான் ஆசைப்பட்டது இந்த விஷயம் இல்ல...’’ - அவள் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தாள். ஷரத்ருத்தின் நெற்றியில் வியர்வைத் துளிகள் தெரிந்தன. தொடர்ந்து தன்னுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கோ அல்லது கண்பார்வை தெரியாமல் இருந்தபோது தான் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தோம் என்பதைப் பற்றி மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்ப்பதற்காக சில நிமிடங்களுக்கு அவள் தன் கண்களை மூடினாள். பிறகு மிகுந்த கவலை கொண்ட மனதுடன் அவள் பேசினாலும், மீண்டும் கண்களைத் திறந்தவுடன் அவளுடைய வார்த்தைகளுக்கு வேகம் கூடின.
‘‘நீங்கள் எனக்குப் பிரகாசத்தைத் திரும்பத் தந்தபோது...’’ ஷரத்ருத் சொன்னாள்:
‘‘இந்த அளவிற்கு அழகாக இருக்கும் என்று கனவில்கூட நினைத்திராத ஒளிமயமான உலகத்தை என் கண்கள் பார்த்தன. ஆமாம்.... உண்மையாகச் சொல்லப்போனால் பகல் வெளிச்சத்திற்கு இந்த அளவிற்கு ஒளி இருக்கும் என்றும், சூழல் இந்த அளவிற்கு அழகானதாக இருக்கும் என்றும் நான் கொஞ்சம்கூட நினைக்கல. ஆகாயம் இந்த அளவிற்குப் பரந்து கிடக்கும் என்ற விஷயமும் என் கற்பனையைத் தாண்டி இருந்தது. மனித முகங்கள் இந்த அளவிற்கு ஒளி பொருந்தியதாக இருக்கும் என்பதையும் நான் கொஞ்சம்கூட நினைத்திருக்கவில்லை. உங்களுடைய வீட்டிற்கு வந்தபோது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது எது தெரியுமா? ஓ! எடுத்தவுடன் எனக்குத் தெரிந்தது கெட்ட விஷயம்தான்.... நம்முடைய பாவம்... அப்படியில்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. உங்களுக்கு ஏசுநாதரின் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்குதுல்ல...? ‘அறிவு இல்லாமலிருந்தால், நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள். ஆமாம்... கண்பார்வை இல்லாமலிருந்தால், நீங்கள் பாவம் செய்திருக்க மாட்டீர்கள்.’ அப்படின்னா... இப்போ என்னால் பார்க்க முடியும். வாங்க... எழுந்து இங்கே என் பக்கத்துல வந்து உட்காருங்க. பிறகு நான் சொல்றதை கவனமா கேளுங்க. நான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் பைபிளில் இருந்து எனக்கு தெரியாத சில பகுதிகளை வாசிக்க, நான் கேட்டேன். அவற்றில் சிலவற்றை நீங்கள் ஒருமுறைகூட எனக்கு வாசிச்சுக் காட்டல. நான் முழுவதும் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த புனிதர் பாலின் அறிவுரை எனக்கு ஞாபகத்துல இருக்கு... ‘நான் ஒரு காலத்தில் சட்டமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், சட்டம் என்ற ஒன்று வந்தவுடன் பாவங்களை அதிகமாகச் செய்து நான் இறந்துவிட்டேன்’ - இவைதான் அவருடைய வார்த்தைகள்.’’
ஷரத்ருத் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். இறுதியாகச் சொன்ன வார்த்தைகளை மிகவும் உரத்த குரலில் அவள் சொன்னாள். கிட்டத்தட்ட கூப்பாடு போடுவது மாதிரி.
அறைக்கு வெளியே இருக்கும் யாராவது அதைக் கேட்டிருப்பார்களோ என்று நினைத்து நான் பதைபதைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து அவள் கண்களை மூடிக்கொண்டு தனக்குள் கூறிக்கொள்வது மாதிரி மெதுவான குரலில் தான் சொன்னதையே திரும்பச் சொன்னாள்:
‘‘பாவங்களை அதிகமாகச் செய்து நான் இறந்துவிட்டேன்.’’
நான் தலையிலிருந்து கால்வரை நடுங்கிவிட்டேன். ஏதோ பயத்தால் என் இதயம் உணர்ச்சியற்றதாகிவிட்டது. நான் அவளுடைய கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன்.
‘‘யார் உனக்கு அந்தப் பாடத்தை வாசித்துக் காட்டியது?’’
‘‘ஜாக்ஸ் மதம் மாறின விஷயம் உங்களுக்குத் தெரியுமா?’’
ஷரத்ருத்தின் வார்த்தைகளை என்னால் சகிக்க முடியவில்லை.
‘கொஞ்சம் பேசாமல் இருக்கியா? என்று கூறுவதற்காக நான் வாயைத் திறந்தேன். அதற்குள் அவள் சொன்னாள்:
‘‘என் காப்பாளரே, நான் உங்களை மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் நம் இருவருக்கும் இடையில் உண்மையற்றதற்கு இடம் இருக்கக்கூடாது. நான் ஜாக்ஸைப் பார்த்தப்போ உங்களை அல்ல... மாறாக, அவனைத்தான் காதலிக்கிறேன்னு உடனடியா எனக்குத் தோணுச்சு. அவனுடைய முகம், அப்படியே நான் மனதில் கற்பனை பண்ணி வச்சிருந்த உங்களுடைய முகம் மாதிரியே இருந்தது. நீங்க எதற்கு என்னை ஜாக்ஸுக்கு எதிராகப் பேச வச்சீங்க? ஜாக்ஸுடன் எனக்குத் திருமணம் நடந்திருந்தால்...’’
‘‘ஆனால், இப்போதுகூட நீ அவனைத் திருமணம் செய்து கொள்ளலாமே!’’- நான் காயம்பட்ட இதயத்துடன் சொன்னேன்.
‘‘ஜாக்ஸ் பாதிரியாரா ஆகப் போறான்.’’
அழுத்தமான குரலில் சொன்னாள் ஷரத்ருத். தொடர்ந்து தேம்பித் தேம்பி அழுதவாறு அவள் சொன்னாள்:
‘‘நான் ஜாக்ஸிடம் இதயத்தை சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.’’
உணர்ச்சிவசப்பட்ட குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்:
‘‘நீங்களே சொல்லுங்க. இறப்பதைத் தவிர எனக்கு வேற என்ன வழி இருக்கு? எனக்கு தாகமா இருக்கு. யாரையாவது கூப்பிடுங்க. அய்யோ... என்னால மூச்சுவிட முடியலையே! நீங்கள் இனிமேல் என்னைவிட்டுப் போகலாம். இப்போது எனக்குத் தேவை தனிமைதான். உங்களுடன் பேசிக்கொண்டிருந்தால் அதிக மனஅமைதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். இனி நீங்க... இல்ல... இனி நாம விடைபெற்றுக் கொள்வோம். ஆமாம்... விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. இனி அதிக நேரம் நான் உங்களுடன் இருக்க முடியாது.’’
நான் ஷரத்ருத்தின் அருகிலிருந்து விலகிப்போய் மேடத்திடம் அவளுக்கு அருகில் இருக்கும்படி சொன்னேன். அவளுடைய உணர்ச்சிவசப்படல் மூலம் ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிடக் கூடாதே என்று நான் பயந்தேன். ஆனால், நான் இருப்பதால் அவளுக்கு ஏதாவது கெடுதல் நடந்தால், அதைப் பார்த்து கொண்டிருக்க என்னால் முடியாது.
‘‘ஷரத்ருத்தின் நிலைமை மோசமானால், என்னை யாரையாவது அனுப்பிக் கூப்பிடுங்க.’’- நான் மேடத்திடம் சொன்னேன்.
13
ஜுன், 11.
ஷரத்ருத்தை உயிருடன் அதிக காலம் பார்க்கக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமற் போய்விட்டது. இரவு முழுவதும் அவள் என்னென்னவோ பிதற்றிக் கொண்டிருந்திருக்கிறாள். மொத்தத்தில் - அந்த அப்பிராணிப் பெண்ணின் உடல் மிகவும் தளர்ந்து போய்விட்டது. இன்று பொழுது விடியும் நேரத்தில் அவள் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டாள். இறுதி மூச்சை விடும்போது, ஜாக்ஸுக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். மேடம் தந்தி அடித்தாள். அவள் இறந்து சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஜாக்ஸ் வந்து சேர்ந்தான். நேரம் ஆகியும் பாதிரியாரை ஏன் அழைக்கவில்லை என்று என்னிடம் கடுமையாக அவன் கேட்டான். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. லாஸானில் தங்கியிருக்கும்போது, ஜாக்ஸ் கூறியபடி அவள் ப்ராட்டஸ்டன்ட் மதத்தை நிராகரித்த விஷயம் எனக்கு எப்படித் தெரியும்? ஒரே மூச்சில், இருவரின் மத மாற்றத்தைப் பற்றியும் ஜாக்ஸ் என்னிடம் சொன்னான். அந்த வகையில் அவர்கள் இருவருமே ஒன்று சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்.