தேவராகம் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6964
‘‘அவளுடைய மனம் இப்போது அந்த அளவுக்கு பக்குவப்பட்ட நிலையில் இல்லைன்றதை நீ மறந்துடக்கூடாது ஜாக்ஸ். அதிர்ஷ்டம் இல்லாததால் அவள் மற்ற சிறுமிகளைப்போல இல்லை. அவளுடைய மன வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், மிகவும் தாமதமாகவே அது இருக்குது. காதல் என்பதைக் கேட்டவுடன் சீக்கிரமே பரவசம் அடையக் கூடியவள் ஷரத்ருத். அதனால் அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அவளிடம் கூறவே கூடாது. உன் மனதிற்குள் எந்தவிதமான கெட்ட நோக்கமும் இல்லைன்னு நீ சொன்னேல்ல...! எது எப்படியிருந்தாலும் அவள் சிந்திக்கத் தெரிந்தவளா ஆகுற வரையில், நீ எல்லா விஷயங்களையும் யோசிச்சுத்தான் செயல்படணும். என் உள்மனதில் இருக்கும் விஷயங்கள் இவை !’’
ஜாக்ஸிடம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு குணம் இருந்தது. அவன் சிறு வயதுப் பையனாக இருக்கும்போது, ‘என் உள் மனதின் குரல் இது’ என்ற வார்த்தைகள் என் உதடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டால் போதும். அவை அவனுடைய வாழ்க்கைப் பாதையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். ஜாக்ஸை நோக்கப் பார்த்தபோது, நான் சிந்தித்தேன்.
ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைத்திருந்தால்... பெரிய விழிகளையும் அகலமான நெற்றியையும் கொண்டிருக்கும், உயர்ந்து மெலிந்து காணப்படும் இந்த இளைஞனை அவள் பாராட்டாமல் இருக்க மாட்டாள். சலன புத்தியைக் கொண்டவன் என்றாலும், இவன் சரளமான குணத்தைக் கொண்டவன். முகம் சிறுவனுடையதைப்போல இருந்தாலும், அதில் ஒரு கம்பீரம் கலந்திருக்கத்தான் செய்கிறது. தோள்மீது சுருண்டு கிடக்கும் அழகான தலைமுடி ! கறுத்து சுருண்ட முடி காதுகளின் பாதியை மூடியிருக்கின்றன.
‘‘உன்னிடம் நான் இன்னொரு விஷயத்தைக் கேட்கணும்’’ - நான் பெஞ்சிலிருந்து எழுந்து கொண்டே சொன்னேன்.
‘‘நீ நாளை மறுநாள் போக வேண்டும் என்றுதானே முடிவு செய்திருந்தே ! எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நீ இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடக்கூடாதுன்னு நான் சொல்றேன். குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது நீ வெளியே போய்த் தங்கவேண்டும் என்று நினைச்சிருந்தே... ஜாக்ஸ், அதே மாதிரிதான் நீ நடக்கணும். சரியா ?’’
‘‘சரி அப்பா... நான் அப்படியே செய்றேன்.’’
அப்போது அவனுடைய முகம் மிகவும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவனுடைய உதடுகள் கூட மிகவும் வெளிறிப்போய்க் காணப்பட்டன. இதைப்போன்ற தற்காலிகமாக அடங்கிப்போகும் செயலால் குறிப்பிட்டுக் கூறும்படி எந்தவொரு மகத்துவமும் இல்லை என்று எனக்குள் நானே கூறிக்கொண்டேன். என் மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது. சொன்னபடி கேட்கும் என் மகனின் குணம் எனக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தந்தது.
‘‘இதைப் போன்ற சொன்னபடி கேட்கும் பிள்ளைகளைத்தான் எனக்குப் பிடிக்கும்’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன். எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வண்ணம் அவனைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்ட நான், தொடர்ந்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டேன். ஆனால், அவன் சிறிதும் மாறுபட்ட மனம் கொண்டவனாக இல்லை.
6
மார்ச், 10.
எங்களுடைய வீடு மிகவும் சிறியது. ஒருவரோடொருவர் சண்டைபோடுவது என்பது தினமும் அங்கு நடக்கக்கூடிய ஒரு சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். பலவிதப்பட்ட வசதிக் குறைவுகள்... என் வேலை சம்பந்தமாக, குறிப்பாக வீட்டில் யாருடனாவது தனிப்பட்ட முறையில் பேச நேரும்போது, இந்த வசதிக் குறைவு என்ற விஷயம் மனதை மேலும் கவலைப்படச் செய்யும். எனக்கென்று நான் ஒரு சிறிய அறையை ஒதுக்கி வைத்திருந்தேன். பிள்ளைகள் அந்த அறைக்குள் நுழைய அனுமதி இல்லையென்றாலும், ‘அப்பாவின் தவ இடம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த அறையில் இருக்கும்போது எனக்கு அந்தக் கவலை இருக்கவே இருக்காது.
அன்று பொழுது விடியும் நேரத்தில் ஜாக்ஸ் ஷூக்கள் வாங்குவதற்காக நியூசாட்டலுக்குச் சென்றான். அழகான பருவ காலமாக இருந்ததால், பிள்ளைகள் உணவு சாப்பிட்டு முடித்து ஷரத்ருத்துடன் வெளியே கிளம்பினார்கள். அவர்கள் அவளைத் தங்களுடைய மேற்பார்வையில் கொண்டு போவார்கள். அதே நேரத்தில் ஷரத்ருத் அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களாகவும் இருப்பாள். ஷார்லட், ஷரத்ருத்தைத் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பார்த்துக் கொள்வாள் என்ற விஷயத்தில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி இருந்தது.
தேநீர் அருந்தும் நேரத்தில் நான் எமிலியுடன் இருந்தேன். அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். பல நாட்களாக இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன். ஏனென்றால் நான் அவளுடன் பேசுவதற்கு விஷயங்கள் இருந்தன. என் மனைவியுடன் பேசுவதற்கான இந்த மாதிரியான சந்தர்ப்பம் மிகவும் அரிதாகவே எனக்குக் கிடைக்கும். அதனால் நான் சற்று தயங்கினேன். கூறப்போகிற விஷயத்தின் முக்கியத்துவம் எனக்குச் சற்று தைரியத்தைத் தந்தது. அந்தக் கேள்வி என் மகனுடன் அல்ல, மாறாக - என்னுடன் தொடர்பு கொண்டது என்று நான் நினைத்தேன்.
நான் இப்படிக் கூற ஆரம்பித்தேன் : ‘‘ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டு ஒரே அலைவரிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு பேர் விஷயத்தில் பெரும்பாலும் ஒரு ஆள் இன்னொரு ஆளுக்கு ஒரு புதிராக இருப்பதுதான் உண்மை. அவர்களுக்கிடையில் ஒரு கற்சுவரைப்போல இருக்கும் மிகவும் வினோதமான புதிர் ! உண்மை நிலைமை அப்படி இருக்கும்போது, அவர்கள் ஏதாவது கேட்கவோ கூறவோ பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்களுக்கு நடுவில் இருக்கும் சுவர்மீது மோதி இறுதியில் கர்ண கொடூரமான ஓசையாகக் கேட்கும். கவனமாக இருக்கவில்லையென்றால், அந்தச் சுவர் இன்னொரு தொல்லையாக ஆகிவிடும் என்பதுதான் உண்மை. நேற்று இரவிலும் இன்று காலையிலும் ஜாக்ஸ் என்னிடம் சொன்னான் : ‘‘எமிலி தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, நான் கூற வேண்டியதைக் கூற முயற்சித்தேன்......
‘‘ஆமா... தான் ஷரத்ருத் மீது பிரியம் வச்சிருக்குறதா ஜாக்ஸ் சொன்னான்.’’ மொத்தத்தில் என் வார்த்தைகள் நடுங்கியபடியே இருந்தன.
மிகவும் இயல்பான இந்த விஷயம் தனக்குத் தெரியாததொன்றும் இல்லையே என்பது மாதிரி தேநீர் தயாரிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியவாறு என் பக்கம் சிறிதுகூட பார்க்காமல் எமிலி சொன்னாள் :
‘‘ஜாக்ஸ் சொன்னது உண்மைதான்.’’
அப்போது நான் சொன்னேன் :
‘‘தான் அவளைத் திருமணம் செய்ய விரும்புறதா அவன் என்னிடம் சொன்னான். அவன் தன் முடிவுல உறுதியா இருக்கான்.’’
‘‘பிறகு அது அப்படி ஆகாம இருக்குமா ? தோளைச் சற்று குலுக்கியவாறு எமிலி மெதுவான குரலில் சொன்னாள் :
‘‘அப்படின்னா இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நீ நினைச்சிருந்தியா ?’’ - நான் சற்று வெறுப்புடன் கேட்டேன்.