மனைவியின் மகன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7236
தான் பயன்படுத்த உரிமையில்லாத- பயன்படுத்தவே செய்யாத எத்தனையோ சொற்கள் இருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘அப்பா’, ‘தம்பி’ இப்படி எத்தனையோ சொற்கள்! தனக்கு இருக்க வேண்டிய யாரோ ஒருவர் தனக்கு இல்லாமல் போன குறைபாட்டை பிரபாவால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அந்த ஆள் மட்டும் இருந்திருந்தால் அவன் உரத்த குரலில் சிரிக்கலாம். அவனுக்கு உரிமைகள் இருந்திருக்கும். அவன் தன்னுடைய உரிமைகளை மனம் திறந்து கேட்கலாம். தன்னுடைய விருப்பங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தலாம். அந்தத் தந்தை எங்கு இருக்கிறான்? யார் அந்த மனிதன்?
பிரபா தன்னுடைய உடலைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அந்த உடலின் சேர்க்கை அவனுக்கே புரியாத ஒன்றாக இருந்தது. இது எப்படி நடந்தது?
சில நாட்கள் ஓடியபிறகு ‘வேண்டும்’, ‘வேண்டாம்’, ‘இருக்கு’ ‘இல்லை’ போன்ற வார்த்தைகள் கூட அவனுக்குத் தேவையில்லை. என்றாகிவிட்டன. வேண்டும் என்று அவன் எதையும் கேட்பதில்லை. வேண்டாம் என்று கூறுவதற்குத் தைரியமும் இல்லை. இருக்கிறது என்றும், இல்லை என்றும் கூறுவதற்கு அவன் பயந்தான்.
பிரபா சிரித்து யாரும் பார்த்ததில்லை. அவன் அழுததுமில்லை. தான் வளரும் வீடு தன்னுடையதல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அந்தச் சாலை வழியே நடந்து போகும் நாடோடிகளின் மொழி புரிவதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அவர்களில் பெண்கள் சிலரின் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த துணிக்குள் கிடந்த குழந்தைகள் ஏதோ இதற்கு முன்பு அறிமுகமானவனைப் போல அவனைப் பார்த்து சிரித்தார்கள். அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த பரந்து கிடக்கும் உலகம் தன்னை அழைத்துக் கொண்டிருப்பதைப் போல் அவனுக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. அந்த வாழ்க்கையில் ஏதோவொன்றை தான் மறந்துவிட்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். அந்தப் பெண்களில் ஒருத்தியிடம் தான் பிறந்திருக்க வேண்டியவன் என்று பிரபா பல நேரங்களில் நினைத்திருக்கிறான்.
ஜானகி அம்மா பிரபா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அந்த விஷயத்தில் அவனுக்குச் சிறிதளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனால், தன் தாய் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவன் தெரிந்தே இருந்தான். அவள் எப்போதும் ஒரு கவலையில் மூழ்கியிருப்பதை அவன் உணர்ந்தான். அவனுக்குக் கிடைத்த முத்தங்கள் கண்ணீரால் ஈரமாக்கப்பட்டிருந்தன. தன் தாயின் கவலைக்குக் காரணமே தான்தான் என்பதையும் பிரபா நன்கு அறிவான். அதனால்தானோ என்னவோ தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு அவன் தாயைச் சிரமப்படுத்தவேயில்லை. அங்குள்ள தன்னுடைய வாழ்க்கையால் அவன் யாருக்கும் எந்தவித கஷ்டத்தையும் தரவில்லை. பிரபா ஒரு நல்ல விவரமான பையனாக இருந்தான்.
தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அவனுக்கு மூச்சை அடைப்தைப் போல் இருந்தது. அந்த நாடோடிகளுடன் போனால் அங்கு எல்லாரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என்று முழுமையாக நம்பினான். அவன் தன்னை முழு மனதுடன் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடன் சுதந்திரமாக வாழலாம். அவர்கள் தான் தன்னுடைய ஆட்கள் - இப்படியெல்லாம் பிரபா நினைத்தான். இந்த வீட்டில் தான் ஒரு தேவையில்லாத உயிர் என்று அவன் மனம் நினைத்தது. இந்த வீட்டில் தான் வந்து சிக்கிக் கொண்டது எப்படி என்று அவன் சிந்திக்கத் தொடங்கினான்.
பிரபாவை உலகம் உற்று நோக்கியது. அவனைப் பற்றி யாரும் இரண்டு வார்த்தைகளாவது ஏதாவது சொன்னார்கள். எல்லாருக்கும் அவன் ஒரு காட்சிப் பொருளாக இருந்தான். மற்றவர்களிடம் இல்லாத ஏதாவது தன்னிடம் சிறப்பாக இருக்கிறதா என்று அவன் தன்னைத் தானே ஆராய்ந்து பார்த்தான். எல்லாருக்கும் இருப்பதைப் போல அவனுக்கும் கண்கள் இருந்தன. மூக்கு இருந்தது. முகம் இருந்தது. இப்படி அவர்கள் பார்ப்பதற்கும் சிரிப்பதற்கும் காரணம் என்னவாக இருக்கும்? அப்படி அவர்கள் நடக்க வேண்டிய அவசியமேயில்லை. அப்படி உற்று நோக்க வேண்டிய தேவையே இல்லை. அப்படி அவனைப் பார்த்து சிரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. புதிய மாதிரியாக அவனைப் பார்த்து அவர்கள் சிரித்ததும், அவனைப் பற்றி பேசியதும் உலகமே அவனைப் பார்த்து கிண்டல் செய்வதைப் போல இருந்தது. நான்கு நபர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அவன் போவதேயில்லை. அவன் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்வான். அதே நேரத்தில் அவனுக்கு ஒரே எரிச்சலாக இருக்கும். இந்த உலகத்தில் மனிதர்கள் இல்லாத இடமே இருக்காதா?
பிரபா தன்னைத்தானே ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டான். எந்தக் கேள்விக்கும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஒரு சிறுவனின் சாதாரண ஆசைகூட நிறைவேறாமல் இருந்தது. தான் அறிந்து கொள்ள நினைத்தது எதையும் யாரும் அவனுக்குச் சொல்லித் தரத் தயாராக இல்லை. எதையும் தானே கற்றுக்கொள்ளவும் அவனால் முடியவில்லை. அவனுடைய தாய்க்கு நேரமில்லை. தன் தாயைப் பார்த்து அவன் கேட்கவுமில்லை.
ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த அந்தச் சிறுவன் சுற்றிலுமுள்ள ஒவ்வொன்றையும் நன்றாகக் கவனித்துக் கொண்டிருப்பான். பார்க்கக் கூடாததையெல்லாம் தன் கண்களால் பார்ப்பான். அப்போது அவனுடைய கவனத்தை வேறுபக்கம் திருப்பும்படி சொல்ல யாருமில்லை. இந்த விதத்தில் பிரபா அவனாகவே சில விஷயங்களைக் கற்றுக் கொண்டான். கற்கக் கூடாத விஷயங்கள்; உண்மை வேட மணிந்த பொய்கள்! அவனுடைய நடத்தை ஆரோக்கியமான திசையை நோக்கிப் போவதாக இல்லை. எண்ணங்கள் நேரானதாக இல்லை. மனம் உண்டாக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. அவனுடைய சிந்தனைகள் முழுமை பெற்றதாக இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் வளர்ந்த அவன் வீடு என்றால் என்னவென்று கேட்டான். தந்தை என்றால் என்ன என்று கேட்டான். தாய்க்கும் அந்த வீட்டின் தலைவனான மனிதனுக்குமிடையே உள்ள உறவு என்ன என்று கேட்டான். இப்படி எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது எப்படி என்று கேட்டான். அவனை சமுதாயம் தன்னில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு, சமுதாயத்திற்கே சில கேள்விகளுக்குப் பதில்கள் தேவைப்பட்டன. ஒருமுறை ஒரு ஆள் இன்னொரு ஆளிடம் ஒரு கேள்வி கேட்பதை அவன் கேட்டான்.
‘‘அவனோட சிரிப்பைப் பார்த்தியா? அது எப்படி இருக்கு?’’
அந்த இன்னொரு ஆள் அதற்குப் பதில் சொன்னான்: ‘‘ஓரு பிசாசோட சிரிப்பைப் போல இருக்கு!’’
‘‘அதே மாதிரி சிரிக்கக்கூடிய ஒரு ஆளாகத்தானே அவனோட அப்பன் இருக்கணும்? அவன் யாரா இருக்கும்?’’
‘‘அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.’’