
அவனை முழுமையான வியப்புடன் அவர் பார்த்துக் கொண்டேயிருப்பார். அவன் கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு தன்னைப் பார்ப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக இருந்தது. அவனுடைய பிரகாசமான சிறு கண்களில் ஆயிரமாயிரம் மோகனக் கனவுகள் தெரிவதை அவர் பார்த்தார். அந்தச் சிறு உதடுகளில் அரும்பிய அழகான புன்னகையைப் பார்த்த நாள் அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக இருந்தது. அவன் சிரித்துக் கொண்டே ‘ங்க...’ என்று சொன்னபோது சந்தோஷத்தால் குதிக்க வேண்டும் போல் இருந்தது பத்மநாபப் பிள்ளைக்கு. அவன் குப்புறக் கவிழ்ந்து படுத்தபோது, அவர் பதைத்துப் போய் விட்டார்.
அவனுக்கு அவர் கோபகுமாரன் என்று பெயரிட்டார். கோபன் சிறிது கூட அழக்கூடாது. அவன் உடம்புக்கு சிறு வலிகூட உண்டாகக் கூடாது. அவனைத் தரையில் விழக்கூடாது... இப்படி பல விஷயங்களைச் சொன்னார் அந்தத் தந்தை. அந்த வீட்டில் தாய் குழந்தைகளை வளர்க்கக் கூடிய ஒரு இயந்திரமாக மாறிவிட்டிருந்தாள்.
பத்மநாபப் பிள்ளை நினைக்க விரும்பாத விஷயங்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க அந்தக் குழந்தை மிகவும் உதவியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் குழந்தை பிறந்ததன் மூலம் இன்னொரு காரியமும் நடந்தது. ஜானகி அம்மா இப்போது பிறந்திருக்கும் குழந்தையையும் வளர்த்தாக வேண்டிய நிலையில் இருந்தாள். அதனால் அவள் முன்பு இருந்த அறையிலேயே எப்போதும் இருக்க முடியாது. அவள் அந்த அறைக்கு எப்போதாவது ஒருமுறைதான் செல்ல முடியும். அந்த விஷயம் பத்மநாபப்பிள்ளைக்கு ஒருவகையில் நிம்மதியைத் தந்தது. புதிது புதிதாக பல கட்டளைகளைப் போட்டு அவர் ஜானகி அம்மாவை கோபகுமாரனிடமிருந்து சிறிதுகூட அகலாமல் பார்த்துக் கொண்டார்.
ஒருநாள் பத்மநாபப் பிள்ளை வீட்டிற்கு வந்தபோது தன் மகன் கோபனின் வெளுத்த உடலில் ஒரு சிறு கீறல் இருப்பதைப் பார்த்தார். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிரபாவின் அதாவது ஜானகி அம்மாவின் மூத்த மகனின் விரல் அறியாமல் உண்டாக்கிய கீறலே அது. கோபன் தாயின் மடியில் உட்கார்ந்திருந்தான். நான்கு கால்களில் தவழ்ந்து கொண்டிருந்த பிரபா தன் தாயின் மடியில் ஏறினான். அந்த இரண்டு குழந்தைகளும் உற்சாகமடைந்து ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது எப்படியோ பிரபாவின் விரல் நகம் கோபனின் உடலில் ஒரு கீறல் போட்டு விட்டது.
ஜானகி அம்மா நடந்த இந்த விஷயத்தை பத்மநாபப் பிள்ளையிடம் விவரித்துச் சொன்னாள். அதைக் கேட்டு அவரின் கோபத்தால் சிவந்து விட்டது. சிறிது நேரம் கழித்து இல்லத் தலைவனின் அதிகாரத்துடன் அவர் கேட்டார்: ‘‘இங்க பாரு! அந்தப் பையனை அந்த அறையில வச்சு வளர்க்கணும்னு நான் ஏன் சொன்னேன்றதுக்கான காரணம் இப்போ தெரியுதா?’’
அந்த அளவிற்கு மிடுக்குடன் பத்மநபாப் பிள்டைள பேசி அவன் கேட்டதேயில்லை. அவர் குரலில் கடுமை அதிகமாகத் தெரிந்தது. அவருக்கு அப்படிக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. ஜானகி அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பத்மநாபப் பிள்ளை அதே அதிகார மிடுக்குடன் தொடர்ந்து சொன்னார்:
‘‘அந்தக் குழந்தைகளை ஒண்ணா சேர்ந்து விளையாட விட வேண்டாம். அது ஒரு பிசாசு. என் குழந்தையை அது கொன்னுடும். அவன் அங்கேயே வளரட்டும். இங்கே அவன் வரக்கூடாது. என் குழந்தையை அங்கே நீ கொண்டுபோகக் கூடாது. புரியுதா?’’
ஜானகி அம்மா அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. ‘‘புரியுதா?’’ என்று பத்மநாபப் பிள்ளை மீண்டும் கேட்டார். அப்போது அவளுடைய கண்கள் கலங்கி விட்டன. உயிர்ப்பே இல்லாத குரலில் ஜானகி அம்மா ‘‘ம்...’’ என்றாள்.
‘‘சரி... எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சுக்கோ.’’
ஜானகி அம்மா நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தாள்.
அந்தக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து வளர்ந்தால் என்ன? அவர்கள் ஒரே இடத்திலிருந்து வந்தவர்கள்தானே? பிறகு ஏன் தெய்வம் அவர்களை ஒன்றாக வளரக்கூடாது என்று தடுக்கிறது?
கண்ணீர் அருவியென வழிய அந்தத் தாய் தன்னுடைய மூத்த மகனை முத்தமிட்டாள். கோபனை மிகவும் அக்கறையெடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மட்டுமே பத்மநாபப் பளி¬ளைக்கு சந்தோஷம் தரக்கூடியது. அதைத்தான் செய்யவேண்டும் என்று ஜானகி அம்மா கட்டாயப்படுத்தப்படுவதற்கான காரணமும் அதுவே. அவரின் விருப்பப்படி நடப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. பிரபா-பாவம் செய்த குழந்தை! அவள் அந்த அறையின் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் மூடி அதற்குள் அவனை அடைத்து வைப்பாள். அவன் அதற்குள் எப்படியோ இருந்து கொள்வான்!
பிரபா அழவில்லை. அழக்கூடாது. எந்தவித சத்தமும் போடவில்லை. சத்தம் போடக்கூடாது. இப்படித்தான் அவன் வளர்ந்தான். இப்படி ஒரு குழந்தை அங்கு இருக்கிறான் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. பிரதான கட்டிடத்தைத் தாண்டி சற்று தூரத்தில் பத்மநாபப் பிள்ளை அந்தச் சிறிய கட்டடத்தைக் கட்டியிருந்தார். ஒரு நிரந்தர நோயாளியைப் போல பிரபாவை அங்கு இருக்க வைத்திருந்தார் அவர். தான் சொன்னபடி அவன் இந்தப் பக்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது என்று கடுமையான குரலில் ஜானகி அம்மாவிடம் சட்டம் போட்டிருந்தார் பத்மநாபப் பிள்ளை.
கேட்கக்கூடாத, பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளை பத்மநாபப் பிள்ளை கேட்க நினைத்தார். பிரபா யாருடைய மகன்? அவன் எப்படி உண்டானான்? அவனுடைய தாய் யாரையாவது காதலித்தாளா? ஒரு தந்தையால் தன்னுடைய மகனைப் பார்க்காமல், அவன் மீது அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஒருத்தியால்தான் முடியும். ஆனால், அவள் பதில் சொல்லமாட்டாள். அதனால் கேட்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
பிரபா யாருடைய சாயலில் இருக்கிறான் என்று பத்மநாபப் பிள்ளை பல நேரங்களில் யோசித்துப் பார்ப்பார். கறுத்து தடிமனாக இருக்கும் உடல், உருண்டையான கண்கள், அகலம் குறைவாக இருக்கும் நெற்றி, அடங்காமல் எழுந்து நிற்கும் தலைமுடி- அப்படிப்பட்ட ஒரு ஆளை அவர் தேடிக் கொண்டிருந்தார். கோவிலில் இருக்கும் ஆலமரத்திற்குக் கீழே பக்தனான ஒரு நாடோடி மனிதன் பிரபாவை முதுகில் ஏற்றி விளையாடிக் கொண்டிருப்பதை அவர் ஒரு முறை பார்த்தார். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த வீட்டிற்கு முன்பக்கம் எங்கிருந்தோ வந்து எங்கோ போகக்கூடிய ஒரு பெரிய சாலை இருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook