பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10058
அவன் அங்கு இருந்தால், வாசுதேவன் இருக்கிறான் என்று யாரையாவது வைத்து ஆங்கிலத்தில் எழுதி தந்தி அடிக்க வேண்டும். நான் இங்குள்ள தந்தி அலுவலகத்தில் கூறி இருந்திருக்கிறேன். நான் குட்டன் மாமாவுக்கும் கடிதம் எழுதுகிறேன்.”
குட்டி அம்மா அதிர்ச்சியில் உறைந்துபோய் கல்லைப்போல உட்கார்ந்து விட்டாள். மற்ற பெண்கள் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. பாப்பி அம்மா, வெற்றிலை, பாக்கு போட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் சொன்னாள்: “படிடி...”
“ம்... என்னால முடியாது...”
பாப்பி அம்மா திட்டினாள்.
“படிக்கச் சொல்றேன்ல...”
அவள் கடிதத்தைத் தொடர்ந்து படித்தாள்.
“நாணிப் பெரியம்மா அனுப்பிய கடிதம் கிடைத்தது. நானும் பரமேஸ்வரன் குட்டியும் அந்த விஷயத்தைப் பற்றிபு பேசினோம். நமக்கு மூன்று வேளைகளிலும் கஞ்சி நீர் குடிக்கும் வசதி உண்டான பிறகு நான் திருமணம் செய்து கொண்டால் போதும். நாராயணன் குஞ்சைப் படிக்க வைக்க வேண்டும் அல்லவா? கார்த்தியாயினிக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். நமக்கு ஒரு நல்ல நிலை உண்டான பிறகுதானே திருமணம் செய்ய முடியும்? இங்கு அருகில் மதுக்கரை என்றொரு இடமிருக்கிறது. அங்கு இப்போது இரண்டு பெரிய சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அங்கு நல்ல ஹோட்டல் ஒன்று கூட இல்லை. பரமேஸ்வரன் குட்டியை வைத்து அங்கு ஒரு ஹோட்டல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். பணம் நான் தயார் பண்ணித் தர வேண்டும் அல்லவா? சிறிது சிறிதாகத் திருப்பித்ததந்தால் போதும். நான் மேற்பார்வை பார்த்துக் கொள்வேன். இங்கு அருகில் ஒரு மில்லில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி இளைஞனுக்கு பங்காக்ஷியைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். அவனுடைய சொந்த ஊர் மாவேலிக்கரை. இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறான். நல்ல குணத்தைக் கொண்டவன். பரமேஸ்வரன் குட்டியின் ஹோட்டல் விஷயம் முடிந்து விட்டால் வேண்டுமென்றால் கார்த்தியாயினியை நாம் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். இதுதான் நல்லதென்று எங்களுக்குப் படுகிறது. பிறகு உங்களின் விருப்பம் போல.
தந்தி அடிக்க மறக்க வேண்டாம்.
இப்படிக்கு,
மகன் பத்மநாபன்.
10
ஒரு நாள் கழிந்தது. இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்று நாட்கள் ஆனது. எப்போதும் மதிய நேரச் சாப்பாட்டுக்கு வரும் பாச்சு பிள்ளை வரவில்லை. மூன்றாவது நாள் முடிந்தபோது கார்த்தியாயினி தன் தாயிடம் சொன்னாள்:
“அம்மா, அப்பா மூணு நாட்களா வரல.”
பாப்பி அம்மாவும் அதை நினைத்தாள். அவள் சொன்னாள்:
“ஏதாவது உடம்புக்கு ஆகியிருக்குமோ?”
“என்னவோ? எப்படி தெரிஞ்சிக்கிறது?”
எது எப்படியோ பாச்சு பிள்ளையைப் பற்றி நினைக்கக் கூடிய இரண்டு உயிர்கள் உலகத்தில் இருக்கவே செய்கின்றன. கார்த்தியாயினியும் பார்ப்பி அம்மாவும். அந்த ஏழை மனிதனின் வாழ்க்கையில். அது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய விஷயம் தானே?
ஏழரைக் கடையில் போய் விசாரிக்கும்படி கார்த்தியாயினி நாராயணனிடம் சொன்னாள். போவதாக அவன் சொன்னான். ஆனால், அவன் போகவில்லை.
அடுத்த நாளும் கார்த்தியாயினி காத்திருந்தாள். ஆனால், பாச்சு பிள்ளை வரவில்லை. அன்றும் அவள் தாயிடம் கேட்டாள்:
“அம்மா, அப்பாவுக்கு உடம்புக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?”
எப்படி தெரிஞ்சிக்கிறது மகளே?”
“நான் நாராயணன்கிட்ட சொன்னேன். அவன் போகல!”
அதற்குப் பிறகு பாப்பி அம்மா எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் கழிந்த பிறகு வாசலில் ‘மகளே’ என்றொரு குரல் கேட்டது. பாச்சு பிள்ளை ஒரு பழைய பாயைச் சுருட்டி கையில் வைத்துக் கொண்டு, ஒரு சிறிய பொதியுடன் நடக்க முடியாமல் கால்கள் தடுமாற வந்து கொண்டிருந்தார். கார்த்தியாயினி ஓடி வாசலுக்குச் சென்று அந்தப் பொதியையும் பாயையும் கையில் வாங்கினான். அந்த மனிதனுக்கு வாழ்க்கையில் இருந்த மொத்த சொத்தே அவைதான்.
திண்ணையில் கேசவன் நாயரும் நாராயணனும் நின்றிருந்தார்கள். பாச்சு பிள்ளையை அழைத்துக் கொண்டு வருவதை அவர்கள் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். கேசவன் நாயர் அப்போது என்னவோ முணுமுணுத்தார். “சாகுற நேரத்துல வீட்டுக்குள்ள வர்றான்” என்று அவர் கூறியிருக்கலாம்.
பாப்பி அம்மாவும் அந்தச் சமயத்தில் அங்கு வந்தாள். கார்த்தியாயினி சொன்னாள்:
“அம்மா, தெற்குப் பக்கம் இருக்கிற திண்ணையில பாயை விரிங்க.”
கேசவன் நாயர் தன்னை அறியாமல் சொன்னார்:
“அங்கே படுத்தா, யாராவது ஆளுங்க வர்றப்போ என்ன செய்யிறது?”
அதை கார்த்தியாயினி காதிலேயே வாங்கவில்லை. கேசவன் நாயர் தான் கேட்ட கேள்வியைக் கேட்கும்படி நாராயணனைக் கையால் சுரண்டினார். அவன் விஷயம் புரியாமல் தன் தந்தையின் முகத்தையே பார்த்தான்.
பாப்பி அம்மா தெற்குப் பக்கம் இருந்த திண்ணையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பாயை விரித்தாள். பாச்சு பிள்ளையின் பாய் கிழிந்து போய் நாற்றமெடுத்தது. தாயும் மகளும் சேர்ந்து அவரைக் கையால் தாங்கியவாறு படுக்க வைத்தார்கள். கட்டிலில் அமர்ந்து கொண்டு கார்த்தியாயினி கேட்டாள்:
“அப்பா, உங்க உடம்புக்கு என்ன?”
“காய்ச்சல் அடிச்சது, மகளே. பிறகு வயிற்றோட்டமா ஆயிடுச்சு!”
கால் பகுதியில் பாப்பி அம்மா நின்றிருந்தாள். பாச்சு பிள்ளை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கார்த்தியாயினி தன் தாயிடம் கேட்டாள்:
“சக்கரக் கணியாரை அழைச்சுக் காட்டினா என்னம்மா?”
“காட்டலாம்!”
அப்போது ஒரு பெரிய பிரச்சினை அவளுக்கு முன்னால் வந்து நின்றது. யாரிடம் கூறி அனுப்புவாள்?
நாராயணன் அப்போது அங்கு வந்தான். அவன் ஒரு கேள்வி கேட்டான்:
“இங்கே படுக்க போட்டா யாராவது வந்தா என்ன செய்யிறது?”
கார்த்தியாயினி அவனை எரித்து விடுவதைப் போல் ஒரு பார்வை பார்த்தாள். பிறகு அவள் சொன்னாள்:
“உன் அப்பாவும் ஒருநாள் இப்படி படுப்பார்ன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ. உன் அப்பா எனக்கு யாருமில்ல!”
வாசலில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்த கேசவன் நாயர் திடீரென்று மறைந்துவிட்டார். அவர் எங்கு போனார் என்று யாருக்குமே தெரியவில்லை.
நாராயணன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. அவன் கேட்ட கேள்விக்கான அர்த்தமோ, கார்த்தியாயினி சொன்ன பதிலுக்கான அர்த்தமோ அவனுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே.
அப்போது நாணியம்மாவும் பாரு அம்மாவும் அய்யப்பன் நாயரும் சங்கரப்பணிக்கரும் அங்கு வந்தார்கள். அய்யப்பன் நாயர் சங்கரக் கணியாரை அழைப்பதற்காகச் சென்றார்.