பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10058
“திருவிழா முடிஞ்சு யானையும் போயிடுச்சு. பத்மநாபன் போயி மூணு நாலு நாட்களாச்சு. இப்போ கேசவன் நாயர் வீடு கட்டுற வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காரு.”
அது ஒரு முக்கியமான விஷயமல்ல என்பது மாதிரி பாச்சு பிள்ளை சொன்னார்.
“சரி... போகட்டும்.”
குமாரக் குறுப்பு ஆரம்பித்து வைத்த எதிர்பார்ப்புகள் பல மடங்கு பெருகி இப்போது ஒரு வெறியாகவே மாறி விட்டிருந்தது. தடத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலென்ன என்று அவர் நினைத்தார். உள்ளே நுழைவதற்கு தான் ஏன் வெட்கப்பட வேண்டும்? மாலை நேரத்தில் காத்து நின்று அவள் இரண்டு சக்கரம் தன்னிடம் வாங்கவில்லையா? பத்து நாட்களாவது தான் அவளுக்கு செலவுக்குப் பணம் தரவில்லையா? தான் சாப்பிட்டு முடித்த பாத்திரத்தில் மீதமிருந்ததை அவள் சாப்பிடவில்லையா? தனக்காக இருப்பதை வைத்துக் கொண்டு அவள் காத்திருக்கவில்லையா? இப்படிப் பல விஷயங்களையும் அவர் நினைத்துப் பார்த்தார்.
தடத்தில் வீட்டு வேலை படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருநாள் எல்லா பலத்தையும் திரட்டிக் கொண்டு பாச்சு பிள்ளை அந்த வீட்டை நோக்கி நடந்தார். வாசலை அடைந்ததும் உள்ளே போக கால் வரவில்லை. யாரோ பின்னாலிருந்து இழுப்பதைப் போல் அவருக்கு இருந்தது. எனினும், எப்படி என்று தெரியவில்லை, பாச்சு பிள்ளை வெளி வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டார்.
மூன்று நான்கு ஆசாரிமார்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். கல் வேலை செய்பவர்கள் சுவரை உயர்த்தி கட்டிக் கொண்டிருந்தார்கள். மண்ணெடுப்பதும், சாயம் கலப்பதும் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. யாரையும் வெளியே காணவில்லை.
சிறிது நேரம் அங்கு நின்றிருந்த பாச்சு பிள்ளை வேலை நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்தார். சிறிது நேரம் நடந்து பார்த்து விட்டு யாரிடம் என்றில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“ரெண்டு அறைகளும் ரெண்டு பரண்களும் ஒரு திண்ணையும் மட்டும்தான் இருக்கா?”
யாரும் பதில் கூறவில்லை. எங்கிருந்து என்று தெரியவில்லை. கார்த்தியாயினி முன்னால் வந்து நின்றாள். ஒரு நிமிடம் பாச்சு பிள்ளை அதிர்ச்சியடைந்து நின்று விட்டார்.
கார்த்தியாயினி திரும்பி நடந்தாள். பாச்சு பிள்ளை சிறிது அதிகாரம் தொனிக்கும் குரலில் சொன்னார்.
“பெண்ணே, தின்றதுக்கு ஏதாவது கொண்டு வா.”
கார்த்தியாயினி அதைக் கேட்டாளோ இல்லையோ! எனினும் அவள் கேட்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
வேலைக்காரர்களுடன் சேர்ந்து கேசவன் நாயரும் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பாச்சு பிள்ளையைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டார். அந்த ஒரு நிமிட நேரத்தில் அவரிடமிருந்து இப்படியொரு வாக்கியம் வெளியே வந்தது.
“நீ எதுக்கு வந்தே?”
அதற்கு பாச்சு பிள்ளையிடமிருந்து உடனடியாக பதில் வந்தது.
“சும்மாதான்.”
கேசவன் நாயர் அதற்கு பதில் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்தார்.
பாரு அம்மாவிடமிருந்து வாங்கிய இடத்தில் தற்காலிகமாக ஒரு சிறிய ஆறுகால் குடில் அமைத்து அதில்தான் தடத்தில் வீட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். முன்பு வீடு இருந்த இடத்தில்தான் இப்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடிசை வாசலில் அமர்ந்து பாப்பி அம்மா அரிசி களைந்து கொண்டிருந்தாள். அவள் எழுந்தபோது பாச்சு பிள்ளைப் பார்த்து விட்டாள். கொதிக்கத் தொடங்கிய நீரில் அரிசியைப் போட்டு விட்டு பாப்பி அம்மா வெற்றிலைப் பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு வெற்றிலையையும், நான்கைந்து பாக்குத் துண்டுகளையும் நான்கு விரல் நீளத்தில் புகையிலையையும் எடுத்தாள். பக்கத்தில் கிடந்த கட்டிலில் கோபப்பட்டதைப் போல முகத்தை ‘உம்’ மென்று வைத்துக்கொண்டு கார்த்தியாயினி உட்கார்ந்திருந்தாள். வெற்றிலையைக் கையில் வைத்திருந்த பாப்பி அம்மா தன் மகளிடம் சொன்னாள்.
“மகளே, உன் அப்பா வந்திருக்காரு. இந்த வெற்றிலையை அவர்கிட்ட கொண்டு போய்க் கொடு.”
உடனே அவளிடமிருந்து பதில் வந்தது.
“என்னால இப்போ முடியாது.”
ஒரு நிமிடம் கழிந்தது. பாப்பி அம்மாவிற்கு கோபம் வரவில்லை. அவள் சொன்னாள்.
“அப்பான்னு சொல்றது பெரிய விஷயம், மகளே!”
“எனக்குத் தெரியாது.”
தொடர்ந்து அவள் தெளிவில்லாமல் என்னவோ முணுமுணுத்தாள்.
“நான் சொல்றேன். இதைக் கொண்டு போய்க் கொடு.”
கார்த்தியாயினி அந்தப் பழைய வரலாற்றை நினைத்துப் பார்த்தாள். “அப்பா இல்லைன்னு சொல்லி என்னை அடிச்சாரு. எனக்கு அப்பாவும் இல்ல... யாருமில்ல...”
பாப்பி அம்மா அமைதியான குரலில் சொன்னாள்:
“அப்பான்னு ஒரு ஆளு இருக்காருன்னும் அது அதோ அங்கே நிக்கிற மனிதர்தான்னும் நான் சொல்றேன்ல.”
அதற்குப் பிறகும் தலையை இப்படியும் அப்படியுமாக ‘முடியாது’ என்பது மாதிரி ஆட்டிய கார்த்தியாயினி என்னவோ மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “இப்போ திடீர்னு அப்பா வந்துட்டாராக்கும்.”
அவள் அந்த வார்த்தைகளைத்தான் கூறியிருக்க வேண்டும். பாப்பி அம்மா வெற்றிலையை அவள் கையில் தந்தாள்.
“கொண்டு போயி கொடு, மகளே! தந்தையோட சாபத்தை தேவையில்லாம சம்பாரிச்சுக்காதே. நம்மோட கர்ம பலன்தான் நம்ம கஷ்டங்களுக்கெல்லாம் காரணமா இருக்கணும். இருந்தாலும் அம்மா நான் சொல்றேன் மகளே, அவர்தான் உன் அப்பா போ.”
பாப்பி அம்மா கார்த்தியாயினியைக் கையால் தூக்கி எழுந்து நிற்க வைத்து, தள்ளிவிட்டாள்.
வெற்றிலைக்குள் பாக்குத் துண்டுகளையும் புகையிலைத் துண்டுகளையும் வைத்து சுருட்டி தன் தாய் கையில் கொடுத்ததை அப்படியே கொண்டு போய் கார்த்தியாயினி பாச்சு பிள்ளையின் கையில் தந்தாள். மகள் முதல் தடவையாக தன் தந்தையின் கையில் எதையோ கொடுக்கிறாள் என்றால் அதுதான். அதைக் கொடுத்த போது கார்த்தியாயினி பாச்சு பிள்ளையின் முகத்தை உற்றுப் பார்த்தாள். பாச்சு பிள்ளை தன்னுடைய தேய்ந்து போன் பற்கள் முழுவதையும் வெளியே காட்டி தலையைக் குலுக்கியவாறு ‘ஙங்ங’ என்று சத்தம் வரும் வண்ணம் சிரித்தார். வாழ்க்கையில் பாச்சு பிள்ளையின் முதல் பாச வெளிப்பாடே அதுதான். அதேபோல கார்த்தியாயினி வாழ்க்கையிலேயே முதல் தடவையாகத் தந்தையின் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கேசவன் நாயர் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அதை அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் நேராக பாப்பி அம்மா இருக்குமிடத்திற்கு சென்றார். பாப்பி அம்மா அடுப்பிற்கு அருகில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.
கேசவன் நாயர் பாப்பி அம்மாவைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.
“அந்த ஆள் இங்கே எதுக்கு வரணும்?”
தலையை உயர்த்தாமலே பாப்பி அம்மா பதில் சொன்னாள்.
“எனக்குத் தெரியாது.”