பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10086
பத்திரப்பதிவு நடந்து முடிந்தவுடன் பாரு அம்மா வேகமாக ஓடினாள். வீட்டை அடைந்தவுடன், பாரு அம்மா குட்டி அம்மாவைப் பார்த்து சவால் விட்டாள். ஆனால், வாசுதேவன் குட்டி தன் தாயின் வாயைப் பொத்திக் கொண்டான்.
அன்றிரவு குட்டன் பிள்ளைக்கும் குட்டி அம்மாவுக்குமிடையில் பெரிய சண்டை நடந்தது. குட்டன் பிள்ளை குட்டி அம்மாவை அடித்துவிட்டார். இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் குட்டி அம்மாதான் என்று குட்டன் பிள்ளையும், குட்டன்பிள்ளைதான் என்று குட்டி அம்மாவும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டார்கள்.
குட்டி அம்மா அவரைப் பார்த்து கேட்டாள்.
“நாளைக்கு நான் எப்படி என் பக்கத்து வீட்டுக்காரங்களோட முகத்தைப் பார்ப்பேன்?”
குட்டன் பிள்ளையும் அதே மாதிரி கூற நினைத்தார்.
“இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் நீதானே. என்னை ஏத்திவிட்டது நீதானே?”
அதைத் தொடர்ந்து முன்பு நடந்த எல்லா விஷயங்களையும் கணவனும் மனைவியும் தங்களின் சண்டைக்கு மத்தியில் கூறினார்கள். அவர்கள் கூறிய எல்லாவற்றையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டார்கள். ஆனால், அன்று இரவு ஒரு சம்பவம் அங்கு நடந்தது. பத்திரம் எழுதிய பிள்ளை பத்திரம் எழுதியதற்கு மேல் ஏதாவது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கூறினான் என்று உறுதியாகக் கூறுவதற்கு இல்லை- கேசவன் நாயரைப் பார்த்து புத்திசாலித்தனமான ஒரு விஷயத்தைச் சொன்னான்.
“உடனே வாங்கின நிலத்திற்கு வேலி போடணும். எப்படிப்பட்ட வழக்கு வந்தாலும், தைரியமா அதை சந்திக்கணும்.”
அந்த அறிவுரையை சொன்னதற்காக, பிள்ளைக்கு ‘தண்ணி’ அடிக்க ஒரு ரூபாய் கிடைத்தது.
அன்றிரவு கேசவன் நாயர் ஏழரை சென்ட் நிலத்தின் மூன்று பக்கங்களிலும் வேலி கட்டிவிட்டு, ஒரு பக்கத்தைத் தடத்தில் வீட்டோடு சேர்ந்து இருக்கும்படி செய்தார். பொழுது விடிந்தபோது பலா கிளைகளால் ஆன பலமான வேலி போடப்பட்டிருந்தது. அய்யப்பன் நாயருக்கு அது பிடிக்கவில்லை. இரவோடு இரவாக வேலி கட்ட வேண்டும்? அது மட்டுமல்ல- ஒரு மாமரத்தையும் ஒரு வேலிக்குள் இருக்கும்படி செய்து விட்டிருந்தார்கள். பத்திரத்தில் எழுதிக் கொடுத்த ஆள் உடன் இருந்தல்லவா வேலி இட வேண்டும்?
அந்த சண்டையின்போது அய்யப்பன் நாயர் மிரட்டினார்.
“நான் அந்த வேலியைப் பிரிப்பேன்.”
கேசவன் நாயரும் விடுவதாக இல்லை.
“அதைச் செய்ய நான் விட மாட்டேன்.”
அய்யப்பன் நாயர் பதிலுக்கு சொன்னார்.
“ப்பூ... பிச்சைக்காரப் பயலே... எங்கேயோ இருந்து இங்கே வந்து ஆட்சிப் பண்ணலாமான்னு பார்க்குறியா? உனக்கு இங்கே என்னடா அதிகாரம் இருக்கு? பிரசவத்துக்குச் செலவழிக்காத பய.”
தொடர்ந்து நாராயணனை பாப்பி அம்மா பெற்றெடுத்த, அந்த மழை பெய்து கொண்டிருந்த இரவு நேரத்தில் தன்னுடைய மனைவி கஷ்டப்பட்டதையும், அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் அவர் விளக்கிக் கூற ஆரம்பித்தார். நாராயணன் அவர் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். அங்கு கூறப்பட்ட எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடிய வயதை அவன் அடைந்து விட்டிருந்தான்.
அய்யப்பன் நாயர் கேட்டார்.
“உனக்கு இங்கு என்ன வேலை? நீ பாப்பியைக் கல்யாணம் பண்ணினியா என்ன?”
7
கடையில் பாச்சிபிள்ளை உட்கார்ந்திருந்தார். அவருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. கடைக்காரர் குமாரக்குறுப்பிற்கு கொண்டு வந்த சாதத்தில் ஒரு பகுதி மதிய நேரத்தில் அவருக்குக் கிடைக்கும். மாலை நேரத்தில் மரவள்ளிக்கிழங்கு இருக்கும் காலமாக இருந்தால், குறுப்பு இரண்டு மரவள்ளிக் கிழங்குகளைத் தருவார். வேக வைத்த மரவள்ளிக் கிழங்காகவோ, சுடப்பட்டதாகவோ அல்லது பச்சையாகவோ அது இருக்கும். சாயங்கால நேரங்களில் பட்டினியாகவும் இருப்பதுண்டு. கடையின் ஒரு மூலையில்தான் அவர் எப்போதும் படுத்துத் தூங்குவார். மிகவும் குறைந்த செலவில் குமாரக்குறுப்பிற்கு ஒரு வேலைக்காரர் கிடைத்தார். கடையைப் பார்த்துக் கொள்ள ஒரு நபரும், பாச்சுபிள்ளைக்கு மதிய நேரத்தில் போதுமான சாப்பாடு கிடைக்கும். மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கும். வெற்றிலை-பாக்கு போடுவது, எண்ணெய் தேய்ப்பது எல்லாமே கடை இருக்கும் இடத்தில்தான். கடையில் ஏதாவது வேலை செய்து ஆடைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். படுத்து உறங்குவதற்கும் இடம் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. அந்த விதத்தில் பாச்சு பிள்ளைக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன.
பத்மநாபன் வந்திருக்கும் விஷயத்தைக் குமாரக்குறுப்பு பாச்சு பிள்ளையிடம் கூறினார்.
“பாச்சு பிள்ளை அண்ணே... நீங்க மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, இப்போ உங்க நிலைமை என்ன தெரியுமா?”
பாச்சு பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை. குமாரக் குறுப்பு விளக்கிச் சொன்னார்.
“கேசவன் நாயர் இப்போ எப்படி வாழ்றார்னு தெரியுமா? அவர் கையில் இப்போ நூறு ரூபா நோட்டு பறக்குது.”
குமாரக்குறுப்பு உள் அர்த்தத்துடன் கேட்டார்.
“அந்தப் பொண்ணு பொறந்தப்போ ஒழுங்கா அங்கே இருந்திருந்தா, இப்போ நீங்க யாரு? இப்போ கேசவன் நாயரோட இடத்துல பாச்சு பிள்ளை அண்ணே, நீங்கதானே இருப்பீங்க?”
அவர் சொன்னது சரிதான் என்பதை பாச்சு பிள்ளையும் ஒத்துக் கொண்டார். குமாரக்குறுப்பு கேட்டார்.
“நீங்க ஏன் அங்கே போகாம இருந்தீங்கண்ணே?”
“அது ஒரு பெரிய கதை” பாச்சுபிள்ளை சொன்னார்.
“என் குறுப்பே, அதைச் சொல்றதுக்கு ஒருநாள் போதாது. அப்போ நான் வேலை செய்துக்கிட்டு இருந்தேன். தடத்தில் வீட்டுக்கு வடக்குப் பக்கம் இருந்த நிலத்துல எனக்கு வேலை கோன்னோத்துக்காரங்களுக்கு சொந்தமா இருந்துச்சு அந்த இடம். ஒருநாள் வேலை முடிஞ்சு வர்றப்போ, நேரம் சாயங்காலம் ஆயிடுச்சு. அந்தப் பெண் இருக்காளே, பாப்பி... அவ வாசல்ல நின்னுக்கிட்டிருந்தா, அந்தப் பையனும் இருக்கான். அவங்களுக்கு ரெண்டு சக்கரம் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) வேணும். வீட்டுல கஞ்சி வச்சி நாலு நாட்கள் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. நான் மடியில இருந்து வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்து ரெண்டு சக்கரத்தைக் கொடுத்தேன். அதுக்குப் பிறகு நான் அங்கேயிருந்து போயிட்டேன்.”
குமாரக்குறுப்பு அதை நம்பாதது மாதிரி கேட்டார்.
“ச்சே... நீங்க வெறுமனே அங்கேயிருந்து போயிட்டீங்களா என்ன?”
பாச்சுபிள்ளை சத்தியம் செய்து பதில் கூறினார்.
“என் அப்பா மேல சத்தியமா, அம்மா மேல சத்தியமா... அங்கேயிருந்து நான் போயிட்டேன்.”
பாச்சு பிள்ளை குரலைத் தாழ்த்தி தன்னைப் பற்றிய ஒரு உண்மையைச் சொன்னார்.
“அது என்னோட இயற்கை குணம் குறுப்பே. பொம்பளை, பொட்டைக் கோழின்ற நினைப்பெல்லாம் எனக்கு எப்பவும் கிடையாது. அதை நான் எப்பவும் தேடினதும் இல்ல...”
குமாரக் குறுப்பு விடுவதாக இல்லை.