பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10058
இப்போது அவளாலேயே தாங்க முடியவில்லை. ஒருவேளை முன்பு இப்போது இருப்பதை விட அவளுடைய வயது குறைவாக இருந்தது காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் இந்த அளவிற்கு உடல் பலவீனமில்லாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ பாப்பி அம்மாவால் வலியைத் தாங்க முடியவில்லை. அதற்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது. வெறுமனே முனகல் என்று கூறுவதைவிட அவள் வாய்விட்டு அழுதாள் என்பதே உண்மை. அந்த அழுகையைக் கேட்டு கார்த்தியாயினி விழித்துவிட்டாள்.
அவள் கேட்டாள்.
“என்னம்மா?”
அந்தத் தாய் சொன்னாள்.
“அம்மா நான் சாகப் போறேன், மகளே.”
கார்த்தியாயினி எழுந்து தன் தாயைக் கையால் தேடினாள். விளக்கில் மண்ணெண்ணெய் இல்லை. அன்றிரவு திரி எரிந்து கருகி விளக்கு அணைந்துவிட்டிருந்தது.
கார்த்தியாயினி கையால் தடவிக்கொண்டே கதவைத் திறந்தாள். கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு பாப்பி அம்மா கேட்டாள்.
“நீ எங்கே போற மகளே?”
கார்த்தியாயினி அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
“என் மகளே, இந்த இருட்டு நேரத்துல எங்கேயும் நீ போக வேண்டாம். மழை பெய்துக்கிட்டு இருக்கு, மகளே.”
ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் பாரு அம்மாவின் வீட்டிற்கு சென்றாள். அங்கு எல்லாரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். கார்த்தியாயினி அங்கு போய் அவர்களை எழுப்பினாள்.
பாரு அம்மாவிற்கு என்ன விஷயம் என்பது புரிந்துவிட்டது. அவள் வெளியே வந்து நடந்தபோது, வீட்டில் விளக்கு இல்லை என்ற விஷயத்தை கார்த்தியாயினி சொன்னாள். பாரு அம்மா திரும்பவும் வீட்டிற்குள் செல்ல தயங்கினாள். அது ஒரு நல்ல சகுனம் அல்ல. அவள் பாப்பி அம்மாவைக் குறை சொன்னாள்.
“கண்டவனையெல்லாம்... நான் இப்போ ஒண்ணும் சொல்லல. இருந்தாலும் ஒரு விளக்கையாவது ஒழுங்கா வச்சிருக்கக்கூடாதா? பத்து மாசம் ஆச்சுன்னா பிள்ளை பிறக்கும்னு தெரியாதா? இதுக்கு முன்னாடி ரெண்டு புள்ளங்களை அவ பெத்தவதானே?”
பாரு அம்மா தன் மகள் பங்கஜாக்ஷியை எழுப்பி ஒரு விளக்கை எரிய வைத்துக்கொண்டு வரச் செய்தாள்.
அந்த விளக்கினால் தடத்தில் வீட்டில் வெளிச்சம் உண்டானது. பாப்பி அம்மா வலி பொறுக்க முடியாமல் கத்தினாள். அந்த அளவிற்குக் கஷ்டம் நிறைந்த ஒரு பிரசவத்தைப் பாரு அம்மா பார்த்ததில்லை. உண்மையில் சொல்லப்போனால் அவளுக்கே ஒருவித பயம் உண்டானது.
“என் பாப்பியே, கொஞ்சம் அமைதியா இரு. நாம இந்த மாதிரியான பிரசவ வலியைத்தான் அனுபவிச்சிருக்கோமே!”
அப்படி சொல்லித் தேற்ற மட்டுமே பாரு அம்மாவால் முடிந்தது.
“நீ கடவுளைக் கும்பிடு.. பிரசவம் நல்லா நடக்கணும்னு சொல்லி..”
கார்த்தியாயினியும் அழத் தொடங்கினாள்.
அப்போது குட்டி அம்மா அங்கு வந்தாள். அவள் வெளியே வந்தபோது தடத்தில் வீட்டிலிருந்து வந்த அழுகை சத்தம் காதில் விழுந்தது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அவள் அங்கு வந்துவிட்டாள். சிறிதும் தாமதமாகாமல் நாணியம்மாவும் காளியம்மாவும் கூட அங்கு வந்தவிட்டார்கள். அந்த நான்கு பக்கத்து வீட்டுப் பெண்களும் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். பிரசவம் சற்று கடினமானது தான் என்று அவர்கள் எல்லாருக்குமே தோன்றியது. கைதயில் மரியப்பெண் பிள்ளையை அழைக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் யார் போய் அவளை அழைப்பது?
குட்டி அம்மா கேசவன் நாயரை வாய்க்கு வந்தபடி திட்டினாள்.
“அந்த மகாபாவி இந்தப் பாவம் பிடிச்சவளை ஏமாத்திட்டுப் போயிட்டான். இப்படிப்பட்டவன் தலையில இடி விழணும்?”
நாணியம்மா பக்குவப்பட்ட குரலில் கூறினாள்:
“அதை சொல்றதுக்கு இதுவா நேரம்? நாம இப்போ மரியப் பெண் பிள்ளையை இங்கே வர வைக்கிறதுக்கு வழியைப் பார்க்கணும்.”
அதன்மூலம் ஒரு காட்சி வளராமல் முடிந்தது.
பாரு அம்மாவின் கணவர் ஊரில் இல்லை. அவளுடைய மகன் பரமேஸ்வரன் குட்டியும் இல்லை. குட்டன் பிள்ளை ஊரில் இருக்கிறார். ஆனால், குட்டன்பிள்ளையை அழைத்து விஷயத்தை சொல்ல யாருக்கும் தைரியமில்லை. பாப்பி அம்மா அவரை ஏமாற்றிவிட்டாள் என்று எல்லாரிடமும் கூறிக்கொண்டிருக்கிறார். தன்னை அவள் அவமானப்படுத்திவிட்டதாக அவர் கூறுகிறார். குட்டி அம்மாவின் மகன் வாசுதேவன் இருக்கிறான். ஆனால், அவனுக்கு பயம். நாணியம்மா நேராகத் தன் வீட்டிற்கு சென்றாள். சங்கரப்பணிக்கர் அங்கு இருந்தார். அவரை அவள் எழுப்பினாள்.
மனைவிக்கும் கணவனுக்குமிடையே ஒரு சிறு சண்டை - சண்டை என்று கூற முடியாது. சிறு விவாதம் நடந்தது. சங்கரப் பணிக்கர் கேட்பது என்னவோ சரிதான்.
“கண்டவனெல்லாம் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு ஆபத்து உண்டாக்குறதுக்கு இளைச்சவன் நான்தானா?”
எனினும், ஒரு பந்தத்தை எரிய வைத்துக்கொண்டு தன்னுடைய ஓலைக் குடையையும் கையில் எடுத்துக் கொண்டு சங்கரப் பணிக்கர் அங்கிருந்து கிளம்பினார்.
அதிக நேரம் ஆகவில்லை. மரியப்பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு சங்கரப் பணிக்கர் வந்தார். மரியப்பெண் பிள்ளை திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்தாள். அதுதான் முறை நேராக நடந்து வந்து பிரசவம் பார்க்கும் பெண் பிரசவ வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பது நடைமுறை வழக்கு.
வயிறைக் கையால் தடவிப் பார்த்துவிட்டு மரியப் பெண் பிள்ளை சொன்னாள்.
“இன்னும் பிரசவத்துக்கான நேரம் வரலையே.”
இனியும் எவ்வளவு நேரம் அந்த வலியைத் தாங்கிக் கொண்டிருப்பது? பக்கத்து வீட்டுப் பெண்களிடம் பாப்பி அம்மா சொன்னாள்.
“நான் செத்துப் போயிடுவேன்.”
பக்கத்து வீட்டுப் பெண்களிடமிருந்த தைரியமும் இப்போது இல்லாமற் போனது.
என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குட்டி அம்மா அந்த மவுனத்தைக் கலைத்தாள்.
“ஏதாவது பிரச்சினை இருக்குற மாதிரி இருந்ததுன்னா, நாம அம்பலப்புழை மருத்துவமனைக்குக் கொண்டு போயிடலாம்” மற்றவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் செயலற்று நின்றிருந்தார்கள். அவர்களை நடுங்கச் செய்கிற வார்த்தைகளாக இருந்தன அவை.
“நீ என்ன சொல்ற?”
பாரு அம்மா கேட்டாள். நாணியம்மா பதில் சொன்னாள்.
“பிறகு என்ன செய்றது? ஒரு பிள்ளைத்தாச்சியை இப்படியே விட்டுட முடியுமா?”
குட்டி அம்மா நல்ல தைரியசாலி. நாணியம்மா கேட்டாள்.
“இந்த நடு ராத்திரி வேளையில் படகுக்காரன் யாராவது இருப்பானா? சும்மா கையை வீசிக்கிட்டு ஆலப்புழைக்குப் போனா போதுமா? சக்கரம் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) வேண்டாமா? என்ன நினைச்சிக்கிட்டு நீ வாய்க்கு வந்ததைப் பேசிக்கிட்டு இருக்கே?”
குட்டி அம்மாவும் விடுவதாக இல்லை.
“என்ன வேணும்னு சொல்ற?”