பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10058
பத்மநாபன் வளர்ந்ததையும், கடும் பட்டினிக்கு மத்தியில் கார்த்தியாயினி வளர்வதையும், ஒரு நேரமாவது அரிசி போட்ட நீரைக் குடிப்பதையும் அவள் நன்றியுடன் நினைத்துப் பார்த்தாள். அந்தப் பெண்களுக்குத் தெரிய வேண்டியது அது அல்லவே.
காளியம்மாவின் நாக்கில் அந்தக் கேள்வி பிறந்தது.
“வழக்குத் தொடுக்க உனக்கு விருப்பமிருக்கான்னு தெரிஞ்சுக்கிறதுக்குத்தான் நாங்க வந்தோம். அதுக்கு நீ பதில் சொல்லணும்.”
இதைக் கூறிவிட்டு காளியம்மா மற்றவர்களைப் பார்த்து கண்களை சிமிட்டினாள். பாப்பி அம்மா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.
காளியம்மா கேட்டாள்:
“என்ன எதுவும் பேசாம அமைதியா இருக்கே?”
தேங்காயை ஒரு கொம்பால் அடித்துக் கொண்டிருந்த பாப்பி அம்மா சொன்னாள்:
“வழக்குப் போடுறதுக்கான வசதி எனக்கு இல்ல. என் வழக்கெல்லாம் கடவுள் கூடத்தான். கோர்ட்டுக்குப் போக எல்லாம் என்னால் முடியாது.”
“அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நாங்க அதுக்குத் தேவையான பண விஷயத்தைப் பார்த்துக்குறோம். வழக்கு நடத்துறதுக்கும் ஆள் இருக்கு. நீதான் வழக்குத் தொடுத்ததுன்னு வெளியே தெரிஞ்சா போதும். நின்ன நிலையில் இருந்து கொஞ்சமும் மாறக்கூடாது.”
பாப்பி அம்மாவிற்கு வழக்கைப் பற்றி சிறிது தெரியும்போல் இருக்கிறது. அவள் சொன்னாள்:
“வழக்குத் தொடுக்கிறதா இருந்தா கோர்ட்டுக்குப் போகணும். சமீபத்துல மாராம் மடத்துக்காரரு வாக்குமூலம் கொடுக்குறதுக்காக கோர்ட்டுக்குப் போனாரு. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.”
அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டியது அதுவல்ல. அவர்களுக்கு ஒரு பதில் கிடைத்தாக வேண்டும். ஒரே வார்த்தையில் அதை சொன்னால்கூட போதும். வழக்குத் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேண்டாம் என்பதே அது.
பாப்பி அம்மா வேறொரு கேள்வி கேட்டாள்:
“இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீங்கதான் சிந்திச்சுப் பார்க்கணும்.”
சிறிது பதைபதைப்புடன் நாணியம்மா சொன்னாள்.
“அவள் என்ன சொல்றான்னு ஒங்களுக்குப் புரியுதா பெண்களே? நீங்களே சிந்திச்சுப் பாருங்கன்னு சொல்றான்னா அவளால முடியலைன்னு அர்த்தம்.”
அதற்கு எந்த விளக்கமும் பதிலும் பாப்பி அம்மா தரவில்லை. அந்த மவுனத்தை பதிலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். குட்டி அம்மா கேட்டாள்.
“அப்படின்னா உனக்கு கேசவன் நாயர் இருந்தா போதும். நாங்க தேவையில்லையா?”
பாப்பி அம்மா அடிக்கப்பட்ட தேங்காயை வெயிலில் பரப்பியவாறு சொன்னாள்.
“எனக்கு எல்லாரும் வேணும்.”
“கேசவன் நாயரும்?”
அதற்கு பதில் இல்லை.
“கேக்குறதுக்கு பதில் சொல்லு, பெண்ணே.”
“என் குழந்தைக்குத் தகப்பன் வேணும். என் மகளுக்கு அப்பா இல்ல. அப்பான்னு கூப்பிட்டதுக்கு அந்தப் பாவி அவளை அடிச்சிட்டான். இந்தக் குழந்தைக்கு அப்படியொரு நிலைமை வரக்கூடாது. எதுவுமே தரலைன்னாக்கூட பரவாயில்ல. தகப்பன்னு ஒரு ஆள் இருக்காருல்ல.”
நாணியம்மா சொன்னாள்:
“அப்படி தகப்பனா இருக்கணும்றதுக்காகத்தான் வழக்கே போடுறது. வழக்குப் போடலைன்னா அந்த ஆளும் பாச்சு பிள்ளையைப் போல அப்பன் இல்லைன்னு சொன்னாலும் சொல்லலாம்.”
பாரு அம்மா சொன்னாள்: “நீங்க ஏன் அவளைக் கட்டாயப்படுத்துறீங்க? அவளுக்கு மனசில்ல...”
பாப்பி அம்மா ஒரு விளக்கம் கூற நினைத்தாள்: “நான் வழக்குத் தொடுத்தா அந்த மனிதர் கோர்ட்டுல போய் சொல்வாரு, தான் இந்த குழந்தைக்குத் தகப்பன் இல்லைன்னு. நான் என்ன செய்யிறது? உண்மை எதுன்னு கோர்ட்டுக்கு எப்படித் தெரியும்? பாச்சு பிள்ளை விஷயத்தை இவரே சொல்வாரு. அப்போ இவர் குழந்தையோட அப்பன் இல்லைன்ற முடிவுக்குக் கோர்ட்டு வந்துட்டா என்ன செய்யிறது? அந்த பயம்தான் எனக்கு?”
அதைக்கேட்டு அந்தப் பெண்களுக்கு வார்த்தையே வரவில்லை. எப்படி உண்மையை நிரூபிக்க முடியும்? வழக்கைப் பற்றி தெளிவாகப் பேசுகிறாள். அவள். ஆனால், வழக்கைப் பற்றிய விஷயங்களை நன்கு அறிந்த குட்டன்பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குட்டி அம்மா வேகமாக முன்னால் வந்து சொன்னாள்: “அடியே, அடியே... நீ வழக்கைப் பற்றி படிக்கலையாடி? இவ சொல்றது வாசுவோட அப்பா சொல்ற மாதிரியே இருக்கு. அப்படியாவது பொய் வெளியே வரட்டும். இது எல்லாமே அந்த ஆளு சொல்லித் தந்தது. அந்தக் கேசவன் நாயர்....”
தொடர்ந்து குட்டி அம்மா மற்றவர்களிடம் சொன்னாள்: “நாம அவளுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு வழக்கு நடத்த பெரிய பாத்திரத்துல நீர் நிறைக்கிறப்போ, இவ அந்த ஆளுகூட பிரியமா இருந்திருக்கா.”
அதற்கு இல்லை என்றோ, ஆமாம் என்றோ எதுவும் பாப்பி அம்மா கூறவில்லை. குட்டி அம்மா கோபம் உண்டாக சொன்னாள்: “இவ நாம நினைச்ச மாதிரி இல்ல. திருடி... சரியான திருடி! யார் பார்த்தாலும் இவளை பாவம்னு நினைப்பாங்க. இவளோட உண்மையான மனசை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு வெளைஞ்சவ இவ... சும்மாவாடி இப்படி ஆனே?”
நாணியம்மா இடையில் புகுந்து சொன்னாள்: “ச்சே.. தேவையில்லாம நாம ஏன் கண்டதையெல்லாம் பேசணும்? இவ தன்னோட வாழ்க்கையைப் பார்த்துக்கட்டும். நாம நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம்.”
அதுதான் சரி என்று குட்டி அம்மாவைத் தவிர, மற்ற எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். குட்டி அம்மாவிற்கு மட்டும் ஆத்திரம் சிறிதும் குறையவில்லை. அவள் சொன்னாள். “பாரு, இனிமேல் உனக்குப் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு யாருமே இல்ல. இப்போ குழந்தையைப் பெத்தெடுப்பே இல்ல... அப்போ ஒருத்தர்கூட திரும்பி உன்னைப் பார்க்க மாட்டாங்க. உன் ஆம்பளை உனக்கு உதவட்டும்...”
“எனக்கு எல்லாரும் வேணும். நீங்களும் வேணும், என் குழந்தைக்குத் தகப்பனும் வேணும். குட்டி அக்கா என் மேல எதுக்காகக் கோபப்படுறீங்க?”
இதுதான் பாப்பி அம்மாவின் நிலை. அதற்குப் பிறகும் ஆத்திரத்துடன் வாய்க்கு வந்தபடி குட்டி அம்மா என்னென்னவோ சொன்னாள். ஒரு பயங்கரமான சதி வேலை அது என்று அவர்கள் எல்லாருமே கூறினார்கள். உண்மையிலேயே பாப்பி அம்மா என்ன செய்வாள்? பக்கத்து வீட்டுக்காரர்கள் அவளிடம் பிணக்கம் கொண்டார்கள்.
“வாங்க, பெண்களே” என்று அழைத்துக்கொண்டு குட்டி அம்மா நடந்தாள். அவளுக்குப் பின்னால் எல்லாரும் சென்றார்கள்.
5
நல்ல இருட்டும் சாரல் மழையும் உள்ள ஒரு இரவு நேரம். நள்ளிரவு நேரம் இருக்கும். பாப்பி அம்மாவுக்குப் பிரசவ வலி ஆரம்பமானது. பதினைந்து நாட்களுக்கு முன்னால் கேசவன் நாயரிடம் பாப்பி அம்மா கிட்டத்தட்ட பிரசவம் என்று நடக்கும் என்று கூறியிருந்தாள். அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.
முன்பு உண்டான இரண்டு பிரசவங்களின் போதும் இந்த அளவிற்கு வலியை பாப்பி அம்மா அனுபவித்ததில்லை.