பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 10057
“அப்படின்னா வழக்குப் போட வேண்டாம். நாம ஏன் அதுக்காகப் பணத்தை செலவழிக்கணும்?”
“அதுதான் சரி” குட்டி அம்மாவைத் தவிர, மற்ற எல்லாப் பெண்களும் கூறினார்கள். குட்டன் பிள்ளையைப் பொறுத்தவரையில் அந்த வழக்கு மூலம் அவருக்குச் சிறிது லாபம் இருந்தது. அது மட்டுமல்ல, மீதமிருக்கும் மூன்று ரூபாயை அவர் உடனடியாகத் தயார் பண்ணியாக வேண்டும். குட்டன்பிள்ளை சொன்னார்.
“அதுக்காக இந்த வழக்கை இப்படியே விட்டுட முடியுமா? நான் ஆப்புல மாட்டிக்கிட்டு தவிக்கிறேன். என் வக்கீலுக்கு கெட்டப் பெயர் உண்டாக நான் சம்மதிக்க மாட்டேன்.”
அவர் சொல்வது சரிதான் என்பதை பப்பு நாயரும் ஒப்புக் கொண்டார். உண்டான தவறுக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்தே ஆகவேண்டும்.
காளியம்மா கோபத்துடன் கேட்டாள்.
“அதுக்கு நாங்க இனியும் எவ்வளவு பணம் தரணும்?”
குட்டி அம்மா சிலுப்பிக் கொண்டு சொன்னாள்.
“நாங்க மட்டுமா இந்த விஷயத்தைத் தலையில் தூக்கி வச்சோம்?”
“நாங்களா தூக்கி வச்சோம்?”
அந்தப் பெண்களுக்கிடையே ஒரு சண்டை உண்டாகும் நிலையில் இருந்தது. பப்பு நாயர் இடையில் புகுந்து சொன்னார்.
“நீங்க சண்டை போட வேண்டாம். இந்தத் தவறு யாரோட தப்பாலும் நடக்கலை. எப்படியோ அது நடந்திடுச்சு. நாம அதையும் இதையும் சொல்லி சண்டை போடுறதுனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. நாம நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.”
எது எப்படியோ வழக்கு நடத்துவது என்பது இல்லை என்றாகிவிட்டது. ஒருவிதத்தில் நல்லதுதான் என்று எல்லாருமே நினைத்தார்கள். இல்லாவிட்டால் நீண்ட நாட்களுக்குத் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க வேண்டியது வரும். “உண்டான பிரச்சினையிலிருந்து தலையை வெளியே எடுக்க இனியும் ஆறு ரூபாய் வேண்டும்” என்றார் குட்டன்பிள்ளை. அதை அவர்கள் எல்லாரும் சேர்ந்துதான் போட்டாக வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் ஒன்றரை ரூபாய் போட வேண்டும். எல்லாம் முடிந்ததும் பாரு அம்மாவும் காளியம்மாவும் நாணியம்மாவும் தங்களைத் தாங்களே திட்டிக் கொண்டார்கள். தேவையில்லாமல் ஒரு சுமையைத் தங்கள் தலை மீது தாங்களே தூக்கி வைத்துக் கொண்டதாக அவர்கள் நினைத்தார்கள். சாப்பிடாமல், தின்னாமல் கையிலிருந்த பணம் கொஞ்சம் செலவாகிவிட்டது. அவர்களுடைய கணவன்மார்கள் அவர்கள் மீது கோபத்தைக் காட்டினார்கள்.
எனினும், விஷயத்தை அத்துடன் விட்டுவிடுவதில் யாருக்கும் சிறிதும் மனமில்லை. பாப்பி அம்மா வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று கேசவன் நாயர் தைரியமாக சொல்லித் திரிந்த விஷயத்தை எல்லாரும் தெரிந்து கொள்ள நினைத்தார்கள். குட்டன் பிள்ளையும் குட்டி அம்மாவும் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். பாப்பி அம்மாவைப் பார்த்துக் கேட்டு விட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.
மனதில் உறுதியாக முடிவெடுத்துக்கொண்டு அந்த விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு பேர்களும் தடத்தில் வீட்டுக்கு சென்றார்கள். அவர்களுடைய முக வெளிப்பாடுகளைப் பார்க்கும்போதே அவர்கள் எதையோ கேட்பதற்குத்தான் அங்கு செல்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால், பாப்பி அம்மாவுக்குத்தான் எதுவுமே தெரியவில்லை. அவள் அப்போது தேங்காயை உரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டிலுள்ள நான்கு பெண்களும் தன்னைத் தேடி வீட்டிற்கு வந்திருக்கும் போது, ‘எதற்காக வந்திருக்கீங்க?’ என்று கேட்பது அவ்வளவு நல்லதாக இருக்காதே. அந்தப் பெண்கள் அனைவரும் முகத்தை ஒரு மாதிரி விறைப்பாக வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். பாப்பி அம்மா அவர்களைப் பார்த்து சொன்னாள். “மேற்கு வீட்டுல இருந்து வாங்கின தேங்காய் ரொம்பவும் முற்றிப் போய் இருக்கு. அடிச்சாக்கூட உரிய மாட்டேங்குது. நெஞ்சே வெடிச்சுடும்போல இருக்கு.”
ஏதோ பேச வேண்டும் என்பதற்காக அவள் பேசியதைப் போல் இருந்தது. அந்தத் தேங்காய் முற்றிப் போய் இருப்பதைப் பற்றி அவர்கள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அப்போதும் அந்தப் பெண்கள் முகத்தை ‘உர்’ரென்று வைத்துக் கொண்டுதான் நின்றிருந்தார்கள். கேட்க வேண்டிய விஷயம் என்னவென்று அவர்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும். ஆனால், அந்தக் கேள்வியை எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. என்ன கேட்க வேண்டும். யார் கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. யாராவது ஒரு கேள்வியை ஆரம்பித்தால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு. அதற்குப்பிறகு கேள்விகள் அடுத்தடுத்து புறப்பட்டு வந்துவிடும். இப்படியே நேரம் சிறிது போய்க் கொண்டிருக்க, பாப்பி அம்மாவே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.
“சாப்பிட்டாச்சா?”
“ம்...”
ஒரு ‘உம்’ கொட்டல். யார் ‘உம்’ கொட்டியது என்பது தெரியவில்லை. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.
கயிறு பிரிப்பதற்கிடையில் பாப்பி அம்மா கேட்டாள்.
“என்ன, யாரும் எதுவும் பேசாம நின்னுக்கிட்டே இருக்கீங்க?”
என்னவோ விஷயம் இருக்கிறது என்பது மட்டும் பாப்பி அம்மாவிற்குப் புரிந்தது. எதைப் பற்றியதாக அவர்கள் வந்த விஷயம் இருக்கும் என்பதைக்கூட அவளால் கணிக்க முடிந்தது. குட்டி அம்மா தான் பூனைக்கு மணியைக் கட்டினாள்.
“நாங்க ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கிறதுக்காக வந்திருக்கோம்” என்று அவள் சொன்னாள். அது என்ன என்று கேட்பது மாதிரி பாப்பி அம்மா தன் தலையை உயர்த்திப் பார்த்தாள். இனி கேட்கப் போவது ஒரு நீளமான கேள்வி. அதைக் கேட்பதற்கு சிறிது நேரத்திற்கு யாராலும் முடியவில்லை. பாப்பி அம்மா கேட்டாள்.
“என்ன?”
குட்டி அம்மா விஷயத்தை ஆரம்பித்தாள். கேசவன் நாயர் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு வீட்டை விட்டுப் போனதையும் அதற்குப் பிறகு அவளுடைய கஷ்டங்களை மனதில் நினைத்து கேசவன் நாயருக்கு ஒரு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும் என்று வழக்குத் தொடுக்க எல்லாரும் முடிவெடுத்து பணம் சேர்த்ததையும் அவள் சொன்னாள்.
நாணியம்மா அதை முடிவுக்குக் கொண்டு வந்தாள்.
“நாங்க அப்படியொண்ணும் பணக்காரங்க இல்ல. உன்னைப் போல உள்ளவங்கத்தான் நாங்களும். ஆனா, எங்க வீட்டு ஆம்பளைங்க விஷயத்தைத் தெரிஞ்சு பணம் தந்தாங்க. உன் கஷ்டங்களை எங்களால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல.”
வந்த விஷயம் முடிந்துவிட்டது. எனினும், ஏதோவொன்று பாக்கி இருந்தது. ஒரே ஒரு கேள்விதான் அவர்கள் அவளைப் பார்த்துக் கேட்க நினைத்தது. அதற்கான பதில்தான் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் கேள்வியைத்தான் எப்படிக் கேட்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பாப்பி அம்மா சொன்னாள்.
“எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இருக்குறது என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீங்கதான். உங்களைத் தவிர எங்களுக்கு வேற யாருமே இல்ல.”