ரதி நிர்வேதம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7526
இருபதாவது இரவன்று அவள் எனக்கு நெருப்பைப் போன்ற நரம்புகளைப் பற்றிச் சொல்லித் தந்தாள்.
ஏதாவதொரு புத்தகத்திலிருந்து படித்துத் தெரிந்து கொண்டதா என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ- அன்றும் அதற்குப் பிறகும் கூட அந்த அளவிற்கு நல்ல கவிதையை ஒருவருடைய வார்த்தைகளில் நான் கேட்டதேயில்லை.
அப்போது வயன மலர்கள் உதிர ஆரம்பித்திருந்தன. அவ்வப்போது விழுந்து கொண்டிருந்த சாரல் மழைகளை அதிகமான தடவை பார்க்க முடிந்தது.
கடந்து சென்ற இருபது இரவுகளிலும் எங்களைப் பிரிப்பதற்காக ஒவ்வொரு சாரல் மழையும் பெய்தது. அவை வரும் போது எனக்குப் பெரிய அளவில் ஒரு நிம்மதியும் உண்டானது. காரணம்- இருபது இரவுகள் கடந்து போன பிறகும், என்னுடைய கூச்சம் மாறவே இல்லை.
நான் ஒரு ஆணாக இல்லை.
வானம் பல நேரங்களில் மின்னல்களால் பிரகாசமாக இருந்தது. ஏழோ எட்டோ சிகரங்களைக் கொண்ட மின்னல்கள். வீங்கிய கரிக்கோணிகளைப் போல, மழை மேகங்கள் அவற்றுக்கு மத்தியில் ஒளிந்திருந்தன.
"நரம்புகளைப் பற்றி படிச்சிருக்கேல்ல?"- ரதி கேட்டாள்: "மனிதனின் உடலில் இருக்கும் நரம்புகள்...?"
"படிச்சிருக்கேன்."
"அவற்றின் படத்தைப் பார்த்திருக்கியா? அப்படின்னா அதுதான்..."
அவள் கிழக்குப் பக்க ஆகாயத்தை நோக்கி விரலை நீட்டினாள்.
சொல்லி வைத்ததைப் போல ஒரு மின்னல் தோன்றியது.
"நெருப்பின் நரம்புகள்..."
"அக்னியின் நரம்புகள்..."- நான் சொன்னேன்: "அக்னி நரம்பு என்று சொல்வதுதானே மிகவும் சரியாக இருக்கும்?"
"அக்னி நரம்பு..."
"ம்... அக்னி நரம்பு..."- நான் முணுமுணுத்தேன்.
இதயம் மிகுந்த கவலையில் இருந்தது. இதற்கு முன்பு இல்லாமலிருந்த ஒரு உணர்வு என்னிடம் சமீப காலமாக ரதியின் மீது உண்டாக ஆரம்பித்திருந்தது. அவளுடைய கவித்துவம் நிறைந்த பேச்சும் எப்போதும் இருக்கக்கூடிய சுறுசுறுப்பும் நினைத்துப் பார்க்க முடியாத தைரியமும் மனதிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கவலைகளும் சேர்ந்து எனக்குள் ஒருவித வழிபாட்டையே படைத்து விட்டிருந்தன. காதல் என்று சொல்லப்படுவது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
நாளைக்குக் காலையில் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற விஷயத்தைக் கூறுவதற்கு என்ன காரணத்தாலோ நான் தயங்கினேன். சொன்னால் அவள் ஒருவேளை அழுதாலும் அழலாம். நான் அதை விரும்பவில்லை. அதனால் போகிறேன் என்ற விஷயத்தைத் தற்போது கூற வேண்டாம் என்று முடிவெடுத்தேன். நேர்முகத்தேர்வு முடிந்து நாளை இரவோ அல்லது நாளை மறுநாள் காலையிலோ திரும்பி வரத்தானே போகிறேன்! அதற்குப் பிறகு மூன்றோ நான்கோ நாட்கள் இருக்கலாம். எப்படிப் போனாலும் இரண்டு நாட்களாவது இல்லாமல் போகாது. அதற்குப் பிறகு ரதியிடம் விடை பெற்றுக் கொண்டால் போதும்.
மழை மேகங்களுக்கு மத்தியில் எங்கேயோ ஒரு சந்திரன் மறைந்திருப்பான்- சில நட்சத்திரங்களும் காற்று வீசி ஆகாயம் தெளிவாகத் தெரியும் போது, அங்கு எல்லா இடங்களிலும் மின்மினிப் பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல ஒன்றிரண்டு நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது.
மழைக்கு முன்பு இருக்கும் காற்று வீசியது. காட்டிற்குள் இருக்கும் நாகராஜாவும் நாகமோகினியும் இப்போது பூமிக்கு அடியில் வெப்பம் நிறைந்த படுக்கையறைக்குள் நுழைந்திருப்பார்கள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
"என்ன... எதுவும் பேசாமல் இருக்கே?"- ரதி கேட்டாள்.
"எனக்கு எதுவும் பேச வரல..."
நான் சொன்னது உண்மைதான் குளிர் நிறைந்த இரவு வேளையில் குடை விரித்து கொண்டிருந்த பலா மரத்திற்குக் கீழே, சேனைக்கொடிகளும் கிழங்குக் கொடிகளும் சேர்ந்து உண்டாக்கியிருந்த கொடியாலான வீட்டிற்குள் இருந்த முழுமையான இருட்டில் எல்லாவற்றையும் மறந்து, வானத்தின் மூலையில் நடுங்கி நடுங்கி நின்று கொண்டிருக்கும் நட்சத்திரங்களையும் கண்களுக்குத் தெரியாத பாதங்களால் நகர்ந்து போகும் நீர் மேகங்களையும் பார்த்தவாறு, ஒரு அழகான இளம் பெண்ணின் கைகளுக்குள் சிக்கிப் படுத்திருந்த போது, வேறு எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கவோ பேசவோ நான் தயாராக இல்லை.
என்னவோ கூறுவதற்குத் தயாரான போது, ஒரு பெரிய நீர்த்துளி முகத்தில் வந்து விழுந்தது. மழை பெய்ய ஆரம்பித்திருந்தது-.
நான் வேகமாக எழுந்தேன்.
சுற்றிலும் பசுமையான இலைகளைக் கொண்ட கொடிகளாலான பந்தல்கள் கூவி அழைப்பதைப் போல இருந்தது. காடு அசையும் சத்தம் எங்கும் கேட்டது.
கடுமையான காற்றின் ஆரம்பம்.
இயற்கை என்ற அசைவற்ற ஓவியத்திற்கு திடீரென்று உயிர் வந்திருந்தது.
நாங்கள் இரண்டு பக்கங்களையும் தேடி ஓடினோம்.
இரவு முழுவதும் இருப்பிடத்தின் மேற்கூரையை நக்கியவாறு அக்னி நரம்புகள் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தன.
6
மறுநாள் இரவில் மழை பெய்த சாலையோரத்தில் இருந்த இடிந்து காணப்பட்ட கடையின் திண்ணையில் நானும் என் தந்தையும் விறைத்து நடுங்கிக் கொண்டு நின்றிருந்தோம். நகரத்திலிருந்து எங்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தின் பின்னாலிருந்த சிவப்புக் கண்கள் தூரத்தில் பார்வையை விட்டு மறைந்த போது, என், தந்தை கேட்டார்: "இப்போ மணி என்ன இருக்கும்?"
என் மனதில் இருந்ததைக் கூறுவதற்கு முன்னால் அருகில் எங்கோ தூக்கத்தில் மூழ்கியிருந்த ஒரு கடையின் கடிகாரம் கண்விழித்து ஒரு முறை ஒலித்தது. பன்னிரண்டரையோ ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அதைத்தாண்டி இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம்- காயங்குளத்தில் நான் ஒரு ஆளிடம் நேரம் என்னவென்று கேட்டபோது, பன்னிரண்டு பத்து என்று அவர் சொன்னார்.
எங்கள் இருவரிடமும் குடை இல்லை. மழை கொஞ்சம் நிற்காமல் அங்கிருந்து கிளம்புவது சற்று சிரமமான விஷயமே.
என்னுடைய தாடைப்பகுதி வேகமாக அடித்துக் கொண்டது. என் தந்தை தன்னுடைய மடியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தாளைப் பிரித்தெடுத்து, பீடியை எரிய வைத்து, மகிழ்ச்சியுடன் சத்தம் உண்டாகும்படி புகையை விட்டு கொண்டிருந்தார்.
ஹாஸ்டலில் நேர்முகத்தேர்வு முடிந்த போது மிகவும் தாமதமாகிவிட்டது. இல்லாவிட்டால் சற்று முன்கூட்டியே நாங்கள் வந்திருக்கலாம். இன்னும் மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் அங்கேதான் போக வேண்டும் என்பதை நினைத்தபோது, மனதிற்குக் கவலையாக இருந்தது. முதல் முறையாக வீட்டையும் ஊரையும் விட்டுத் தனியாக நான் வெளியே செல்கிறேன்.
"காலையில் இருந்து மழை நிற்கிற மாதிரியே இல்ல..."- என் தந்தை முணுமுணுத்தார்: "சாலை முழுவதும் முழங்கால் வரை தண்ணி...."
அவ்வப்போது லாரிகளும் ஒரு காரும் கண் தெரியாத வெறி பிடித்த நாய்களைப் போல பாய்ந்து போகும் போது தெறிக்கும் நீர், எங்களுடைய பாதங்களில் வந்து விழுந்து கொண்டிருந்தது. என் தந்தை மெல்ல இருமியவாறு பீடித் துண்டை ஓடிக் கொண்டிருக்கும் சிவப்பு நிற நீரில் எறிந்தார்.