ரதி நிர்வேதம் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7526
தொடர்ந்து அவர் தனக்குத்தானே கூறிக் கொண்டார்: "கொஞ்சமும் நிற்காத மழை! நட்ட தானியங்களையெல்லாம் நாசமாக்கியிருக்கும்!"
நான் கிழக்குக் காட்டில் இருந்த பயறு கொடிகளை நினைத்து பார்த்தேன். அவை அனைத்தும் போய்விட்டிருக்கும். என் அன்னைக்கு மிகவும் விருப்பமான பாகற்காயும் புடலங்காயும் நீரில் மூழ்கியிருக்கும். சாயங்காலம் மழை சற்று நிற்பதைப் பார்த்ததும் கொச்சும்மிணியை அழைத்துக் கொண்டு, ஓலையாலான குடையைப் பிடித்தவாறு அவற்றைத் தேடிச் சென்று என் தாய் கவலையில் மூழ்கியிருப்பாள்.
கால்கள் வழியாகக் குளிர் மேலே ஏறியது. நான் செருப்பைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தடிமனான செருப்புகள். கல்லூரிக்குப் போவதற்காக சேப்பாட்டில் இருக்கும் கடைக்காரனிடம் சொல்லி செய்யப்பட்டவை அவை. முன்பு எந்தச் சமயத்திலும் செருப்பு அணிந்த பழக்கம் இல்லாததால், காலில் புண் உண்டாகி எரிச்சல் வந்து கொண்டிருந்தது.
என்னையே அறியாமல் சிந்தனை ரதியை நோக்கிச் சென்றது. பாவம்... இன்று சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து பலா மரத்திற்குக் கீழே அவள் வந்து நின்றிருப்பாள். மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்ததால், பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்க மாட்டாள். அதனால் நான் நகரத்திற்குச் சென்ற விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று இரவு என்னால் கூறவும் முடியவில்லையே!
நாளை காலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு அதிக பட்சம் போனால், இரண்டு இரவுகள்... அவையும் முடிந்துவிட்டால்-
அதைச் சிந்திப்பதற்கே தயக்கமாக இருந்தது. நிற்காமல் பெய்து கொண்டிருந்த மழையையே பார்த்துக் கொண்டிருந்த போது, மிகவும் தூரத்தில் இருக்கும் எதிர்காலத்தில் ஒருவேளை மறந்து போகக் கூடிய மிகவும் அழகானதும் ஆழமானதுமான அந்த இதய உறவின் மகத்துவத்தைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
என் தந்தை சொன்னார்: "நின்று பிரயோஜனம் இல்ல.... நாம நடப்போம்."
மழை சற்று குறைந்ததைப் போல இருந்தது. நான் செருப்புகள் இரண்டையும் எடுத்து குடைகளின் கம்பிகளுக்கு நடுவில் சொருகி வைத்தேன். அந்தச் சமயத்தில் என் தந்தை சாலையில் இறங்கிவிட்டிருந்தார்.
வீட்டை அடைந்தபோது, மழை கனமாகப் பெய்து கொண்டிருந்தது- எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் குரல் கொடுத்த பிறகு, என் தாய் கண் விழித்தாள். அவ¬ள்த தொடர்ந்து அக்காவும் சித்தியும்.
கிழக்கு வாசலில் தானிய அறைக்கு மேலே இருந்த ஒரு கோணிக்கு அடியில் சுகமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கொச்சும்மிணி ஒருமுறை தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.
மேற்குப் பக்கம் இருந்த அறையில் ஈரமான ஆடைகளை மாற்றி காய்ந்த ஆடையை அணிந்த போது குளிர் குறைந்ததைப் போல இருந்தது-. இருட்டில் அவ்வப்போது தோன்றிய மின்னல்களின் வெளிச்சத்தில் ரதியின் வீடு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆதரவற்ற ஒரு இளம்பெண்ணின் கள்ளங்கபடமற்ற திறந்த மனதுடன் மழை தன் விருப்பப்படி பெய்யும் வகையில் அது கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்தது-.
கம்பிகள் வழியாக அதைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நான் நின்றிருந்தேன்.
நான் எதைப்பற்றி நினைக்கிறேன்? எனக்கே அதைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தது.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு மனைவியைப் பார்ப்பதற்காக ஓடி வந்த கணவனா நான்?
இல்லாவிட்டால்- பல வருட விரகத்திற்குப் பிறகு காதலியைத் தேடி வந்த காதலனா?
எனக்கு எதுவுமே தெரியவில்லை. எனக்கு என்ன நடந்திருக்கிறது என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். கதைப்புத்தகங்களில் வாசித்திருக்கும் காதல்? அதுவாக இருக்க முடியாது... இன்னொரு மனிதரின் மனைவியாக ஆகிவிட்ட அவளிடம் எனக்கு காதல் உண்டாக வழியில்லை. அப்படியென்றால் இது என்ன? இந்த நிம்மதியற்ற நிலையும் வேதனையும் கவலையும்...?
பலவற்றையும் சிந்தித்துக் கொண்டு நின்றிருந்த போது, சித்தி அறைக்குள் வந்தாள்.
இனி தொல்லையாக இருக்கும்.
நேர்முகத் தேர்விற்குச் சென்ற விஷயங்களைப் பற்றி முழுமையாக விளக்க வேண்டியதிருக்கும். பேச்சு அந்தப் பக்கமாகத் திரும்புவதற்கு முன்னால், நான் சொன்னேன்: "எனக்கு சாதம் வேணும்."
"தர்றேன்"- அதைக் கூறிவிட்டு, மேஜைமீது அவள் ஏறி உட்கார்ந்தாள். மிடுக்கு நிறைந்த குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்: "இந்த வீட்டில் இதற்கு முன்பும் ஆண் பிள்ளைகள் இருந்திருக்காங்க... காதுல விழுகுதாடா?"
எனக்கு விஷயம் எதுவும் புரியவில்லை. திகைப்புடன் நின்று கொண்டிருந்த போது, சித்தி மீண்டும் தொடர்ந்தாள்: "குடும்பத்திற்கு கெட்ட பெயர் உண்டாகுற அளவுக்கு நீ அப்படியொண்ணும் வளரலையே!"
இப்போது இப்படியொரு பேச்சு உண்டாவதற்குக் காரணம் என்ன என்று எனக்கே புரியவில்லை. நேர்முகத் தேர்வைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவள் கேட்கவில்லை.
பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, சித்தி சொன்னாள்: "அருகில் பல பெண் பிள்ளைகளும் இருப்பாங்க. ஆனால், இங்கேயும் ஒரு பெண் இருக்கிறாள்ன்றதை ஞாபகத்துல வச்சிருக்கணும். அதை உணர்ந்து நடக்கணும்."
எனக்கு கொஞ்சம் புரிந்தது. எனக்கும் ரதிக்கும் இடையில் இருக்கும் உறவை சித்தி தெரிந்து கொண்டிருக்கிறாள். சித்தி மட்டுமல்ல- என் தாயும் அக்காவும் தெரிந்திருக்கிறார்கள். அதனால்தான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் இந்த அளவிற்குக் கோபமும் வெறுப்பும் இருப்பதைப் பார்த்தேன்.
நான் ஊரில் இல்லாத நேரத்தில் என்னவோ நடந்திருக்கிறது. அது என்ன? அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால் எப்படிக் கேட்பது? மொத்தத்தில் ஒரு தர்மசங்கடமான நிலை.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, சித்தி கேட்டாள்: "உன் நேர்முகத்தேர்வு எப்படி இருந்தது?"
"பிரச்சினையொண்ணும் இல்லை"- நான் சொன்னேன்.
"எப்போ போகணும்?"
"இரண்டு நாட்கள் கழித்துப் போனால் போதும்."
"ம்..."- அவள் மிடுக்கைக் கைவிடாமல் மெதுவாக முனகினாள். பிறகு மேஜைமீதிருந்து குதித்து இறங்கி அந்தப் பக்கமாகச் சென்றாள்.
நான் மீண்டும் வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். மூளை சிறிது கூட செயல்படவில்லை. எனக்கும் ரதிக்கும் இடையில் இருந்த உறவைப் பற்றி எல்லோரும் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? அதுவும் நான் ஊரில் இல்லாத நேரத்தில்? கொச்சும்மிணியிடம் மட்டுமே விஷயத்தைக் கேட்க முடியும். ஆனால் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான்.
ஒரு பலமான காற்று அடித்தது. விளக்கு அணைந்தது. சுற்றிலும் இருள் மட்டுமே இருந்தது. பாம்புப் புற்றுக்குப் பின்னால் இருந்த அடர்த்தியான புதர் அசையும் சத்தம் இங்கு கேட்டது.