கையெழுத்து - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 7393
முதலாவது- குப்தா குரூப்பின் வியாபார பாரம்பரியமும், பலமான பின்னணியும். குரூப் நிறுவனங்களின் பொதுவான வியாபார ஈடுபாடுகளுடன் இதை ஒன்று சேர்த்துக்கொண்டு போகக்கூடிய சாமர்த்தியம்... பிறகு எல்லாவற்றுக்கும் மேலாக கே.ஆர்.கே.யின் தலைமை கொடுத்த ஒத்துழைப்பின் செயல் அணுகுமுறை. அதாவது கே.ஆர்.கே.யின் நடைமுறை அறிவு எங்களுக்குள் வேறுபாடுகள் பல தடவை உண்டாகியிருக்கின்றன. ஒன்றும் இரண்டும் கூறிக்கொண்டு இந்த விஷயத்தில் கே.ஆர்.கே.யை குறை சொல்லி பிரயோஜனமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். எங்களுடன் நின்றிருக்கும் இளைஞர்கள் ரத்தம் கொதித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆகாயம்தான் எல்லை. எந்த விஷயமாக இருந்தாலும், பலன் உடனடியாகக் கிடைக்க வேண்டும். அதற்காக காத்திருக்கக்கூடிய பொறுமை கிடையாது. பிறகு... நம் மலையாளிகளுக்கென்றே இருக்கக்கூடிய பொதுவான குணமான சினிஸிஸம். என்னைக் கடந்த பிறகுதான் யாரும் இருக்கிறார்கள் என்ற பொதுவான எண்ணம். சீனியர் குப்தாஜி கூறக்கூடிய ஒரு தமாஷ் உண்டு. ஒரு கம்பெனியில் எம்.டி.க்காக ஒரு மெர்ஸிடஸ் பென்ஸ் கார் வாங்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள். நம்முடைய தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்- ‘ஓ... என்னுடைய ரத்தமும் வியர்வையும் அதோ போய்க் கொண்டிருக்கிறது’ என்று. அதனால் முதலில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்திலேயே அந்த காரைக் கல்லை விட்டு எறிந்து உடைத்தால் மட்டுமே அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். அதற்கு நேர்மாறாக, தமிழ்நாடாக இருந்தால், அங்குள்ள தொழிலாளர்களுக்கு அது பெரிய பெருமை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் கம்பெனியைச் சேர்ந்த நண்பர்களிடம் அவன் கர்வத்துடன் கூறுவான்- ‘எங்களுடைய முதலாளி லேட்டஸ்ட் பென்ஸ் வாங்கியிருக்கிறார்!’ என்று. ஒரு வகையில் பார்க்கப் போனால் முதலாளித்துவம் உண்டாக்கும் மன ரீதியான அடிமைத்தனம்... அப்படித்தானே?”
“சார்...” - ராதிகா மன வேதனையுடன் தாடையைச் சொறிந்தாள்- “நான்... எனக்கு... எனக்கு இங்கு...”
“டோன்ட் டெல் மீ தட்” - வி.பி.குலுங்கிச் சிரித்தார். சாந்தமான முகமும் இரட்டை நாடியும் சிவந்தன.
“அது இருக்கட்டும். என் முன்னுரை மிகவும் அதிகமாக நீண்டுவிட்டது. அப்படித்தானே? அது அவசியத் தேவை. உங்களைப் போன்றவர்களுக்கு அது கட்டாயம் தெரிந்தே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இப்படிப்பட்ட வரலாறு அதன் இடுப்பு எலும்புகள் என்று சொல்லலாம். நம் யாருடைய கையிலும் மந்திரக் கோல்கள் எதுவும் இல்லையே! உயர்வும் தாழ்வும் ஒரு வர்த்தகத்தில் சாதாரணமாக இருக்கக் கூடியவை. இடையில் ஒரு நிமிட நேரமாவது உட்கார்ந்து திரும்பிப் பார்த்து கணக்குப் போட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. சரி... அது இருக்கட்டும். நான் நீட்டி இழுக்கவில்லை. உனக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. நம்முடைய கம்பெனியின் இப்போதைய நிலைமை கொஞ்சம் மோசம்தான். வர்த்தக உலகில் பொதுவாகவே இருக்கக்கூடிய ரிசஷன் மட்டுமல்ல காரணம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து வைத்த விரிவாக்கத்திற்காக சற்று அதிகமான கடனும் வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மார்க்கெட் கொஞ்சம் ‘டல்’ ஆகியிருக்கிறது. போதாதற்கு வடக்கில் இருக்கும் நம்முடைய ஒன்றிரண்டு முக்கியமான வாடிக்கையாளர்கள் ஏதோ பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்து இருபது வருடங்களாக நம்முடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் இப்போது ஆர்டர்கள் தருவதில்லை. அது மட்டுமல்ல; நிறைய பணம் வரவேண்டியதிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இந்த தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதுகூட சந்தேகத்திற்கு இடமாகி இருக்கிறது. இவ்வளவு பணத்தையும் உள்ளே போட்டு துணிச்சலாகக் கால் வைத்துவிட்டு, திரும்பி செல்வது என்பது முடியாத விஷயமாயிற்றே! வட்டி அதிகமாகி, அதிகமாகி, கடன் தொகைகள் மிகவும் கூடியிருக்கின்றன. இந்த தடவை வந்திருக்கும் பேலன்ஸ் ஷீட் நஷ்டத்தில் முடிவதற்கான சாத்தியம் இருக்கிறது. விஷயங்கள் இப்படிப் போய்க் கொண்டிருக்க, அடுத்த சம்பள பட்டுவாடாவைப் பற்றிய விஷயம் மிகப்பெரிய சிக்கலுக்குரிய ஒன்றாக ஆகிக் கொண்டிருக்கிறது.”
வி.பி. தன்னுடைய பேச்சை சற்று நிறுத்திவிட்டு, எழுந்து சென்று மேஜை இழுப்பைத் திறந்து ஒரு சிவப்பு நிற ஃபைலை எடுத்துக் கொண்டு வந்தார்.
“என்னைப் பொறுத்தவரையில் இது கம்பெனி தொடர்ந்து இருப்பது பற்றிய பிரச்சினை. இழப்புகள் வழியாக மட்டுமே நாம் இந்த இக்கட்டான நிலையைக் கடந்து செல்ல முடியும். நான் சொல்லாமலே கே.ஆர்.கே.விற்கு விஷயங்களின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகச் சொன்னால், இப்போதைய நிலைமையில் இந்தக் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது என்பது, முக்கியமாக தொழிலாளர்களின் தேவையாக மட்டுமே இருக்கிறது. ஒரு மார்வாடி தொழிலதிபரைப் பொறுத்தவரையில் தன்னுடைய முதலீட்டை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்பி எடுக்க வேண்டியது எப்படி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் அதை தேவையான அளவிற்கு செய்தும் விட்டிருக்கிறார். இப்போது இந்தக் கம்பெனி யாருக்கு வேண்டும்? அப்படித்தானே? கடன் தந்த நிதி நிறுனங்களுக்கும், வேறு வழியில்லாத தொழிலாளர்களுக்கும், பிறகு... முகம் இல்லாத சில முதலீட்டாளர்களுக்கும் மட்டுமே அது வேண்டும். இதை சிறிது காலத்திற்குப் பூட்டினால் இன்றைய நிலைமையில் குப்தாவின் குடும்பத்திற்கு ஒரு கேடும் வரப்போவதில்லை என்பதுதான் உண்மை. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதுதான் விஷயமே.”
“சார்... எனக்கு அதில்... என்னிடம் எதற்கு அதையெல்லாம்...”
ராதிகா அப்போதும் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“ஆமாம்... ஆமாம்... நான் விஷயத்திற்குள் வருகிறேன் பெண்ணே” - வி.பி.யின் முகத்தில் பழைய சிரிப்பு இல்லை. முகம் மேலும் வீங்கிப் போய் சிவந்து காணப்பட்டது.
“இந்த விஷயங்கள் அனைத்தும் கே.ஆர்.கே.யின் சங்கத்திற்குத் தெரியாதவை அல்ல. ஐந்து யூனியன்களில் அவர்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது என்ற உண்மை உனக்குத் தெரியும் அல்லவா? ஆனால், என்னத்தைச் சொல்றது? தலையில் தேவையான அளவிற்கு பக்குவமோ அறிவுக் கூர்மையோ இல்லாத சில இளைஞர்கள்... அவர்களுக்குக் கேட்பதற்கு சந்தோஷத்தைத் தரக்கூடிய சில கோஷங்களில் அதிக ஆர்வம் இருக்கும். கே.ஆர்.கே.யின் அந்த நடைமுறை அறிவில் நூற்றில் ஒரு பகுதிகூட அவர்களிடம் இல்லை. வருவது, வராதது எதைப் பற்றிய அறிவும் இல்லை. விஷயம் முடிந்ததா? முன்பிருந்த எல்லா செட்டில்மென்டுகளையும் அதைப்போன்ற மற்ற விஷயங்களையும் மிகவும் திறமையாக, புத்திசாலித்தனமாக கே.ஆர்.கே. கையாள்வதை நான் ஆச்சரியப்பட்டுப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.