கையெழுத்து - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 7393
இதைப்போன்ற ஒரு வீழ்ச்சியடைந்த கம்பெனியில் ஒரு குரூப் சிறப்பாக எதையாவது அப்போது பார்த்திருக்க வேண்டும். அந்த வகையில் வியாபாரம் நடந்தது. கே.ஆர்.கே.விற்கு எல்லா விஷயங்களும் தெரியும். மாணிக்சந்த் குப்தாவின் குடும்பத்திற்கு தொழிலாளர்களின் ஆதரவைப் பற்றி வாக்குறுதி அளித்தது கே.ஆர்.கே.தானே? அத்துடன் சம்பளத்தை உறுதிப்படுத்துவதற்கும் செட்டில்மென்டை நீடிக்கச் செய்வதற்கும் சம்மதம் தந்தவர் அவர்தானே? இப்போது எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அது நடக்காமல் இருந்திருந்தால் எத்தனையோ குடும்பங்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கும். குப்தாஜி நினைத்திருந்தால் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு நபரை வேலையை விட்டுப் போகச் செய்திருக்கலாம். அன்றைய கணக்குப்படி நூற்றெண்பது பேர்களையாவது பணியை விட்டு வெளியேற்றியிருக்க முடியும். அதாவது நூற்று எண்பது குடும்பங்கள். அப்போதைய சூழ்நிலையில் அவர்கள் என்ன சொன்னாலும் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த அளவிற்கு கம்பெனியின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை இறுகப் பிடித்து மீண்டும் இரண்டு கால்களில் நிற்க வைக்க வேண்டுமென்றால், அவர்கள் கூறிய இடத்தில் கையெழுத்துப் போட்டே ஆகவேண்டும். எனினும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. காரணம்- கே.ஆர்.கே.யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். கம்பெனியின் முதல் குழுவில் கே.ஆர்.கே. ஆப்ரேட்டராக இருந்தவர். இங்குள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் எங்களைவிட கே.ஆர்.கே.விற்கு அதிகமாகத் தெரியும். இல்லாவிட்டாலும், கே.ஆர்.கே. எந்த சமயத்திலும் ஒரு முட்டாளாக இருந்தது இல்லையே.”
வி.பி. சற்று நேரம் தன்னுடைய பேச்சை நிறுத்தினார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து, என்னவோ நினைத்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
“நான் பழைய வரலாற்றை விளக்கிக் கூறி உன்னை சோர்வடையச் செய்துவிட்டேன்... அப்படித்தானே? ஆனால் கே.ஆர்.கே.விற்கு இந்த கம்பெனியுடன் இருக்கக்கூடிய ஆத்மார்த்தமான உறவைக் குறிப்பிடுவதற்காகத்தான் நான் அதை சொன்னேன். உங்களைப் போன்ற இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அது புரியாது. நம்முடைய ஊரில் இப்போது நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்கும் பெரிய தொழிற்சாலைகள் எத்தனை இருக்கின்றன? விரல்களை மடக்கி எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. இருப்பவைகூட எவ்வளவு காலம் ஒழுங்காக செயல்படும் என்று யாருக்குத் தெரியும்? எல்லோரும் சேர்ந்து ஒரு நிலையில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்களே! அதாவது- தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும், சங்கங்களின் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டு செயல்படுகிறார்கள். இனிமேல் வடக்கிலிருந்து புதிதாக யாரும் இங்கு வருவார்கள் என்று ஆசைப்பட வேண்டாம். இருப்பவர்களே போதும். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், அவர்கள் செல்வதற்கு வேறு அருமையான இடங்கள் மற்ற மாநிலங்களில் இருக்கின்றனவே! இப்போதே நம்முடைய தேசிய நெடுஞ்சாலை வழியாக வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் போது, புகை வெளியே வரும்... அல்லது சத்தம் உண்டாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனைத் தொழிற்சாலைக் கட்டிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது? எல்லாம் குளங்களாக ஆகிவிட்டனவே!”
வி.பி. சற்று நிறுத்திவிட்டு, சிகரெட் துண்டை ஆஸ்ட்ரேயில் போட்டார்.
“ஓ... ஐயாம் ஸாரி...”
அவர் இன்டர்காமின் பொத்தானை அழுத்தினார்.
“மாக்கீ, கொஞ்சம் தேநீர் ப்ளீஸ்... பிறகு சிறிது நேரத்திற்கு என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நாட் ஈவன் டெலிஃபோன் கால்ஸ்.”
“நீ இப்படி நின்றுகொண்டே இருப்பது மிகவும் கஷ்டமானது. அதேபோலத்தான் என்னுடைய இந்த நடையும்” - வி.பி. உரத்த குரலில் சிரித்தார். “அதனால்... இங்கு வந்து இந்த சோஃபாவில் உட்கார்.”
வி.பி. அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவில் போய் உட்கார்ந்தார்.
“இங்கே வந்து உட்கார். பயப்பட வேண்டாம். கே.ஆர்.கே. எத்தனையோ தடவை உட்கார்ந்திருந்த சோஃபா. கே.ஆர்.கே.யின் அந்த அரைக் கை காதி சட்டையின் மணம் இப்போதுகூட இதில் இருக்கும்.”
இந்த முறை வி.பி.யின் சிரிப்பு சற்று அதிக நேரம் நீண்டு ஒலித்தது.
சோஃபாவின் ஒரு முனையில் சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போது ராதிகாவிற்கு எதுவுமே புரியவில்லை. ‘எதற்காக இவர் இந்தப் பழைய வரலாற்றை என்னிடம் கூற வேண்டும்? எனக்கு இதில் என்ன ஆர்வம் இருக்கிறது?’ - அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
இதற்கிடையில் ட்ரேயில் தேநீர் வந்தது. வி.பி. தானே தேநீரைக் கோப்பையில் ஊற்றி, பாலை ஊற்ற ஆரம்பித்தபோது ராதிகா தயக்கத்துடன் முன்னால் வந்து கையை நீட்டினாள்.
“சார்... நான் செய்யிறேன்.”
“வேண்டாம். வேண்டாம். இட் ஈஸ் ஓகே. ஐ ஆம் தி ஹோஸ்ட். பிரச்சினை எதுவும் இல்லை. உனக்கு சர்க்கரை எத்தனைக் கட்டிகள் வேண்டும்? டூ ஆர் த்ரீ? அப்படியே இல்லாவிட்டாலும் எதற்கு கேட்க வேண்டும்? அப்படித்தானே? மூன்று கட்டிகள்... சரி... உன் பெயர் என்ன என்று சொன்னாய்?”
“பி.ஆர்.ராதிகா.”
“சரிதான். நான் அதை மறந்துட்டேன். அன்று வேலைக்கான பேப்பர்கள் வந்தபோது, கம்பாஷனேட் க்ரவுண்டில் நான் அதைப் பார்த்தேன். சரி... அது இருக்கட்டும். அதை இனி எதற்கு ஞாபகப்படுத்த வேண்டும்?”
தேநீர்க் கோப்பையை நகர்த்தி அருகில் வைத்துவிட்டு, அவர் மீண்டும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார்.
“எனக்குத் தெரியும். நான் இவற்றையெல்லாம் எதற்கு ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன் என்று நீ ஆச்சரியப்படலாம். சொல்கிறேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நீளமான முன்னுரை இல்லாமல் செய்யவும் முடியாது.
சரி... அது இருக்கட்டும். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? குப்தாஜி இந்தக் கம்பெனிக்குள் நுழைந்த விஷயம்... இப்போது எத்தனை வருடங்கள் கடந்து விட்டன! பதினைந்து வருடங்களுக்கும் அதிகமாக... இதற்கிடையில் பல உயர்வுகளையும் தாழ்வுகளையும் நாங்கள் பார்த்துவிட்டோம். கம்பெனி திரும்பவும் மோசமில்லாத லாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்தது. ஆறேழு வருடங்களுக்குள் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் இருந்த கடன்களுக்கான வட்டிகளை அடைத்தன. இரண்டு சம்பள பட்டுவாடாக்களும் முடிந்தன. பெரிய அளவில் மோசம் என்று சொல்ல முடியாத அளவில் சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது. இன்டன்ஸிவ் கேரில் இறுதி சுவாசத்தை விட்டுக்கொண்டு படுத்திருந்த ஒரு நிறுவனத்தை இப்போது ஒரு நூறு மீட்டர் தூரத்திற்காவது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்காமல் ஓடலாம் என்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்தது எப்படி? அதுவும் மிகப்பெரிய ஒரு வரலாறுதான்.