கையெழுத்து - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 7393
முதலில் சிறிதுகூட சரஸ்வதியால் இணைந்து போக முடியவில்லை. எதையும் திரும்பக் கூறும் தைரியம் இல்லாததால், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் அவ்வப்போது அழுவாள். படிப்படியாக வேறு ஒரு வழியும் இல்லாமல், பூமாதேவியின் பொறுமையுடன் அவள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள்.
ஆனால் எட்டு மாத கர்ப்பமாக அவள் இருந்தபோது, ஒருநாள் எப்போதும்போல அவர் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது, அவள் முதல் தடவையாக வெடித்தாள். அப்போது முதல்முறையாக அவளுடைய நாக்கிலிருந்து வெளியே வந்திராத வார்த்தைகள் தொடர்ந்து வெளியே வந்தன. அவள் சொன்னாள்: “இந்த கழுத்தில் கிடக்கும் தாலியை அறுத்தெறிய உங்களுக்கு சிரமமாக இருக்காது என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்களுடைய அந்த அலுவலக அறையில் கட்டப்பட்டிருக்கும் தாலியை...?”
தாங்க முடியாமல் அவளை அதைக் கூறிவிட்டாள் என்றாலும், அது என்னவோ உண்மைதான். அந்தக் கட்டிடத்தின் அறையுடன் கொண்டிருந்த தாலி உறவு அந்த அளவுக்கு பலமுள்ளதாக இருந்தது.
“என்ன அப்பா, அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க?”
ராதிகாவின் குரல் கேட்டதும், அவர் நினைவுகளிலிருந்து விடுபட்டு சுய உணர்விற்கு வந்தார்.
அவள் வாசலில் குத்து விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அவர் மெதுவாக உள்ளே சென்றார்.
தன் மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவான குரலில் சொன்னார்:
“எது எப்படியோ, நீ ஒரு காரியம் செய் மகளே. ராகவனிடம் கொஞ்சம் இங்கே வருமாறு கூறு. முடிந்தால் நாளைக்கே. தாமதிக்க வேண்டாம். அவனை நான் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆச்சே!”
ராதிகா தலையை ஆட்டினாள்.
மின்விசிறியின் வேகத்தை அதிகரித்துவிட்டு, அவர் சாய்வு நாற்காலியில் வந்து படுத்தார். சிறிது நேரம் கண்களை மூடிக் கிடக்க வேண்டும்போல் அவருக்கு இருந்தது.
3
ராகவன் வந்தபோது இரவு எட்டு மணியை தாண்டிவிட்டிருந்தது. பேகம் அக்தரின் ஒரு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டே கே.ஆர்.கே. சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவாறு படுத்திருந்தார். வெளியே பைக்கின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டவுடன், ராதிகா சாளரத்தின் வழியாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: “ராகவன் அண்ணன்தான் வருகிறார் என்று நினைக்கிறேன்.”
அவர் டேப் ரிக்கார்டரை ஆஃப் செய்துவிட்டு தலையை சாய்த்துக்கொண்டு பார்த்தார்.
ராகவன் சற்று தடித்துவிட்டிருந்தான். முகம் சற்று சிவந்திருந்தது. கண்களுக்குக் கீழே சதை மடிப்புகள் விழுந்திருந்தன. பெரிய கட்டங்கள் போட்டு மின்னிக் கொண்டிருந்த ஒரு சிவப்பு நிற டெர்லின் சட்டையையும் சாம்பல் நிறத்தைக் கொண்ட ஒரு கால் சட்டையையும் அவன் அணிந்திருந்தான். அவன் டேப் ரிக்கார்டரையே ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னான்: “இப்போது இசையின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”
ராகவன் நாற்காலியை இழுத்துப் போட்டு மிகவும் அருகில் உட்கார்ந்தான்.
“உன்னைப் பார்த்து எவ்வளவோ நாட்களாயிடுச்சேடா! என்ன, இந்தப் பக்கம் வர்ற தூரம் அந்த அளவுக்கு அதிகமாயிடுச்சா?” - கே.ஆர்.கே.யின் முகத்தில் பாசம் இருந்தது.
“ஹோ... எதுவும் சொல்ல வேண்டாம். நின்று திரும்புவதற்கே நேரம் கிடைக்கவில்லை. நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்துல கோழிக்கோட்டில் ஒரு மாநாடு. போகாமல் இருக்க முடியவில்லை. சொற்பொழிவாளர்களில் நம்பியார் சார் இருந்தார். இன்றைக்குக் காலையில்தான் திரும்பி வந்தேன்.”
ராகவன் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். சட்டையின் காலரைப் பின்னோக்கித் தள்ளிவிட்டு, கழுத்தைத் துடைத்தான்.
“ஓ... என்ன ஒரு வெப்பம்!” - அவன் தன் கையிலிருந்த பத்திரிகையை மடித்து வீச ஆரம்பித்தான்.
“அது இந்த சட்டையால்தான். நம்முடைய தட்பவெப்ப நிலைக்கு இப்படிப்பட்ட துணிகள் சரியாக இருக்காது. இவற்றைக் கழற்றி வைக்கப் பார்” - கே.ஆர்.கே. மெதுவான குரலில் சொன்னார்.
ராகவன் எதுவும் சொல்லாமல் மேலே பார்த்தான்.
“சீக்கிரம் நான் திருவனந்தபுரம் போக வேண்டியது இருக்கு. கே.ஆர்.கே., நீங்க அழைச்சதால் இப்போ... இந்த நேரத்தில் இங்கு வந்தேன்.”
‘கே.ஆர்.கே.’-
தனக்குள் எழுந்த குறும்புத்தனமான சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டார் கே.ஆர்.கே.
நேற்றுவரை நான் இவனுக்கு கே.ஆர்.கே. அண்ணனாக இருந்தேன். இப்போது அது வெறும் கே.ஆர்.கே. காலத்திற்கேற்றபடி வளர்ந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன்பு ஹமீதியா ஹோட்டலில் சுற்றிக் கொண்டிருந்த எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் பையன்... யூனியன் அலுவலகத்தின் மேற்குப் பக்க சாளரத்திற்கு அருகில் நின்றுகொண்டு கைகளைத் தட்டி விரல்களை நீட்டி எண்ணிக்கையைக் காட்டினால், இரும்பாலான வளையங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் தேநீர்க் குவளைகளுடன் ஓடிவரும் பையன்... இரவு வேளைகளிலும் சில நேரங்களில் சாப்பிட எதையாவது வாங்கிக்கொண்டு வருவான். சில நேரங்களில் அங்கேயே படுத்துவிடுவான். தனியாக இருக்கும்போது, அவனுக்குக் கூறுவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது. ‘அண்ணா, ஏதாவதொரு வேலை... இந்தக் கம்பெனியில் இல்லாவிட்டால்... அண்ணா, நீங்க சொன்னால் கேட்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில்... அண்ணா, நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நானூற்றைம்பது மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறேன். சர்ட்டிஃபிகேட் புத்தகத்தில் கணக்கு மார்க் போட்டதில் தவறு உண்டாகிவிட்டது அண்ணா. இல்லாவிட்டால் நானூற்று அறுபது மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.’
இறுதியில் முதல் முறையாக கோவிந்தன் குட்டியிடம் பல விஷயங்களையும் சொல்லி கேண்டீன் பையனாகச் சேர்த்துவிட்டது எந்த வருடம்? அது முடிந்து ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அவனை ப்ளான்ட்டிற்கு மாற்றி சீருடையை அணிய வைத்தார். ராகவன் திறமைசாலியாக இருந்தான். பிரைவேட்டாக பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றான். இப்போது வட இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.க்கு படித்துக் கொண்டிருக்கிறான்.
“அப்படியென்றால்... கே.ஆர்.கே., என்ன விஷயமாக...”
“ராகவன், உனக்கு மிகவும் அவசரம்... அப்படித்தானே?”
ராகவன் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
“ஓ... அப்படியொண்ணும் இல்லை. என்னதான் வேலைகள் இருந்தாலும் இங்கே வராமல் இருக்க முடியுமா? இது எங்களுடைய குருகுலம் ஆச்சே!”
“மகளே... தேநீர்...” -கே.ஆர்.கே. உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னார்.
“சர்க்கரை வேண்டாம் ராதிகா” - ராகவன் சொன்னான்.