கையெழுத்து - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 7393
கல்லூரியில் கால் வைக்காத அவர் எங்களுடைய பெரிய சட்டம் படித்தவர்களைக்கூட தலைக்குனிய வைக்கச் செய்வதைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. உண்மையாக சொல்லப் போனால், அவரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆரவாரமில்லை, கொண்டாட்டமில்லை, விரட்டல் இல்லை, மோதல் இல்லை. ஆனால், எப்போதும் தான் நினைத்திருந்த விஷயங்களைத்தான் கே.ஆர்.கே. செய்து முடிப்பார். ஒரு சதுரங்கம் விளையாடுபவனின் திறமைக்கு நிகரான காய் நகர்த்தல்கள். ஆங்காங்கே வேறொரு நபரை வைத்துக் காரியங்களை செய்பவர் அல்ல நம்முடைய சீனியர் குப்தாஜி. அவருடைய பல கம்பெனிகளிலும் எத்தனையோ பெரிய பெரிய ஆட்களையும் அவர் கடந்து வந்தவர்தானே! ஆனால் கே.ஆர்.கே.யை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது என்று அவரே கூறுவார். தனக்குத் தேவையானதை அவர் தந்திரமாக எப்போதும் பெற்று விடுவார்.”
வி.பி. எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அறைக்குள் மீண்டும் சுற்றி நடக்க ஆரம்பித்தார். அவர் தனக்குள் என்னவோ தீவிரமாக கணக்குப் போடுவதைப்போல தோன்றியது. திரும்பி வந்து சோஃபாவிற்குப் பின்னால் கையை ஊன்றிக் கொண்டு உரத்த குரலில் சொன்னார்:
“அதனால்... அதனால்... நான் பல கோணங்களிலும் சிந்தித்தேன். விவாதங்கள் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பையன்கள் போராடுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் என்னாலேயே புரிந்து கொள்ள முடியாத சில காய் நகர்த்தல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் இப்போதைய மோசமான நிலைமையில் இருந்து கம்பெனியைக் கரையேற்ற எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது. கே.ஆர்.கே.யின் கையெழுத்து... விலை கண்டுபிடிக்க முடியாத ஒரு கையெழுத்து... அதுதான் இறுதி முடிவு எடுக்கக்கூடிய கை. ஒப்புக் கொண்டால் ஒப்புக் கொள்ளும். இல்லாவிட்டால்... பிறகு... அரசியல்வாதிகள் பொதுவாக கூறுவதைப்போல குருக்ஷேத்திரத்தில் சந்திக்க வேண்டியதுதான்...”
ராதிகாவின் முகம் ஒரு மாதிரி ஆகியது.
“சார்... எனக்கு இது எதுவும் புரியவில்லை. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது.”
“நான் மிகவும் சுருக்கமாகக் கூறுகிறேன். முன்பு யூனியன் என்று சொன்னால், அது கே.ஆர்.கே.தான். ஒரு ஆளிடம் மட்டும் பேசினால் போதும். இப்போது இங்கு வாளெடுத்தவர்கள் எல்லோரும் போர்வீரர்கள்தான். அவர்களுடன் எங்களால் முடிந்த அளவிற்குப் பேசிப் பார்த்தோம். சிறிதுகூட அவர்கள் நெருங்கி வரவில்லை. அவர்களுடைய கணக்கு கூட்டல் என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணிகளை எடுத்துக் கொண்டால் விஷயங்களைப் பற்றிய உண்மையான நிலைமை சிறிதுகூட தெரியவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். சொல்லப்போனால் கே.ஆர்.கே. இல்லாமல் நடக்கும் முதல் செட்டில்மென்ட் இதுதான். குட்டித் தலைவர்கள் தங்களுடைய மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக முயற்சிக்கலாம். ஆனால், இந்தப் பிடிவாதம் தொடர்ந்து கொண்டிருந்தால், குப்தாஜி என்ன முடிவு எடுப்பார் என்ற விஷயத்தில் எனக்கு பயம் இருக்கத்தான் செய்கிறது. விஷயங்களை நாமே அந்த நிலைமையில் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமா என்பதுதான் பிரச்சினையே. என்னுடைய விஷயம் இருக்கட்டும். இன்னும் ஐந்தோ ஆறோ வருடங்கள் இருக்கப் போகிறேன். அப்படியே இல்லையென்றாலும் தேவைப்பட்டால் வேறு எங்காவது வேலை கிடைப்பதிலும் பிரச்சினை இருக்காது. ஆனால் ஆயிரத்து நூறு தொழிலாளர்களின் பிரச்சினை- உன்னையும் சேர்த்து... அதைக் கொஞ்சம் நினைத்துப் பார்...”
“சார், இந்த விஷயத்தைப் பற்றி அப்பாவிடம் நீங்கள் பேசலையா?”
“இரண்டு வாரங்களுக்கு முன்பு பேசினேன். மிகவும் சுருக்கமாக... தொலைபேசியில். ஆனால், என்ன காரணத்தாலோ கே.ஆர்.கே. நான் பேசிய எதையும் கேட்கக்கூடிய மனநிலையில் இல்லை என்பது மாதிரி தோன்றியது. ஒரு ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. நான் இப்போது யூனியனில் இல்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டு, தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டார். அப்படியே இல்லையென்றாலும், இவை அனைத்தும் நேரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள். ஆனால் நான் அங்கு வந்தால் அது தெரிந்து விடும். அது மேலும் பிரச்சினையை உண்டாக்கிவிடும். கே.ஆர்.கே.விற்கு அது பாதகமாகவும் ஆகிவிடும்.”
“அப்படியென்றால்... சார், நீங்க சொன்ன கையெழுத்து விஷயம்...”
“ஆமாம்... மிகவும் தெளிவாக சிந்திக்கும் திறனைக் கொண்ட, எதிர்காலத்தைக் கூர்ந்து பார்க்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்... ஆரம்பத்திலிருந்தே இந்த கம்பெனியுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு மனிதர் என்ற நிலையில் கே.ஆர்.கே.யின் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்... இந்த போக்கு சரிதானா? இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை அடைத்து மூடுவது என்பது மிகவும் சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். இப்படிப்பட்ட ஒன்றை உண்டாக்க நாம் எந்த அளவிற்குப் பாடுபட்டிருக்கிறோம்! நெருப்புப் பொறி பறக்கப் பேசும் இளைஞர்கள் பரப்பிவிட்டிருக்கும் தகவல்களுக்கு அப்பால், உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை சாதாரண தொழிலாளர்களுக்கு இல்லையா? அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியில், விவேகத்துடன் விஷயங்களைக் கூறிப் புரிய வைப்பதற்கு ஒரு மனிதரால் மட்டுமே முடியும். கே.ஆர்.கே.யால் மட்டுமே...”
வி.பி. சற்று நிறுத்திவிட்டு மேஜைமீது மூடி வைக்கப்பட்டிருந்த குவளையிலிருந்து இரண்டு மடக்கு நீரைக் குடித்தார்.
“அப்படிப்பட்ட ஒரு திறந்த கடிதத்திற்கான ட்ராஃப்ட் நான் தயார் பண்ணி வைத்திருக்கிறேன். அது வெறுமனே ஒரு ட்ராஃப்ட் அவ்வளவுதான். கே.ஆர்.கே.விற்கு மொழியைக் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லையே! சில முக்கியமான குறிப்புகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு ட்ராஃப்ட் கே.ஆர்.கே. தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு கையெழுத்து... அது வேண்டும். அந்தக் குரலுக்கு மட்டுமே இங்குள்ள தொழிலாளர்களின் மனதிற்குள் இறங்கிச் செல்ல முடியும்.”
தொலைபேசி ஒலித்தது.
வி.பி. கேட்டார்:
“என்ன மாக்கீ, முக்கியமான விஷயமா? யார் கூப்பிடுறாங்க? பத்து நிமிடங்கள் கழித்து நான் பேசுறேன் என்று சொல்லு. பரோடாவில் அவர்களின் தொலைபேசி எண்ணைச் சோதித்துப் பார்.”
வி.பி. மீண்டும் சோஃபாவிற்கு வந்தார். அவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.
“இனி சற்று ரகசியமான விஷயம். அதுவும் எனக்கும் கே.ஆர்.கே.விற்கும் இடையில் மட்டுமே இருப்பது... வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது. இங்கு எவ்வளவோ வதந்திகள் காற்றில் பரவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இது. குப்தா குரூப் குஜராத்தில் தங்களுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தப் பார்க்கிறது. கர்நாடகத்திலும் அவர்களுக்கு சிறிய அளவில் ஒரு கண் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் அவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு உண்டாகி பிரிந்த ஒரு தூரத்து உறவினருக்கு இந்த கம்பெனி மீது ஈடுபாடு இருக்கிறதாம்.