அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
உங்களிடம் அந்த இனிய நிமிடங்களைப் பற்றியும், தொடர்ந்து தாமதிக்காமல் வந்தபயத்தைத் தந்த மணிகளைப் பற்றியும் கூறுவதற்கு நான் விரும்பினேன்.
உங்களிடம் ஈடுபாடு கொண்டு, உங்களை மட்டுமே கனவு கண்டு நான் மீதிஎல்லாவற்றையும் மறந்து விட்டேன். என்னுடைய வீடோ என் அன்னையோ நானோ என்னுடைய சிந்தனையின் பகுதியாக இல்லை.
அந்தக் காலத்தில் என் தாயின் ஒரு தூரத்து உறவினரான ஃபெர்டினன்ட் என்றமனிதர் இடையில் அவ்வப்போது எங்களு டைய வீட்டிற்கு வருவார். நடுத்தர வயதைச்சேர்ந்தவரும் மிடுக்கான தோற்றத்தைக் கொண்டவருமான ஒரு மனிதர். இன்ஸ்ப்ரக்கில் அவர் வியாபாரியாக இருந்தார். வீட்டிற்கு வந்தால் எங்களுடன்நீண்ட நேரத்தை அவர் செலவிடுவார். சில நேரங்களில் என் தாயை நாடகங்களைப்பார்ப்பதற்காக அழைத்துச் செல்வார். அப்படிப் பட்ட நேரங்களில் நான் அதிகமானசுதந்திரத்துடன் இருப்பேன் என்பதால், அந்த விஷயத்தில் எனக்கு மிகுந்தசந்தோஷம் இருந்தது. நான் அந்த வகையில் சுதந்திரம் நிறைந்த நிமிடங்களில் உங்களைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பேன். அப்போது வேறு எதுவும் என்னைஅலட்டியதே இல்லை.
ஒருநாள் என் தாய் முக்கியமான ஒரு விஷயம் என்ற முன்னறிவிப்பு டன் என்னிடம்பேசினாள். முதலில் என்னுடைய உயிரின் தங்கச் சுரங்கமான உங்களைப் பற்றிய என்ரகசியத்தை என் தாய் கண்டு பிடித்து விட்டாளோ என்று நான் பதைபதைத்துப் போய்விட்டேன். ஆனால், என் தாய் கூற நினைத்தது அது எதுவுமில்லை. சற்றுதயக்கத்துடன் என் தாய் தன்னுடைய அந்த உறவினரைப் பற்றி என்னை இறுகஅணைத்துக் கொண்டு பாசத்துடன் முத்தமிட்டவாறு கூறினாள்.
“அவருடைய மனைவி மரணமடைந்து விட்டாள். இப்போது என்னிடம் திருமண விஷயமாகப்பேசியிருக்கிறார். நான் அதை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்து விட்டேன்.என்னைவிட உன்னை மனதில் நினைத்துத்தான் நான் இந்த தீர்மானத்தையேஎடுத்தேன்.”
என் தாய் அதைக் கூறியவுடன் என்னுடைய மனம் முழுவதும் அமைதியற்றதாக ஆகிவிட்டது. ஆனால், என் தாய் அந்த மனிதரைத் திருமணம் செய்யத் தீர்மானித்ததால் அது உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உங்களுடன் தொடர்பு கொண்ட சிந்தனையின் விளைவாக உண்டானதுதான் என்னுடைய அப்போதைய அமைதியற்ற நிலை!
“நாம் எப்போதும் இங்கேதானே இருப்போம்?”
நான் பதைபதைப்புடனும் திக்கித் திக்கியும் அதைக் கேட்டேன். என் தாய் கூறியபதில் என்னுடைய கேள்வியையே இல்லாமற் செய்து கண்களில் இருட்டைக் கொண்டுவந்து நிறைக்கவும் செய்தது. காரணம்- திருமணத்திற்குப் பிறகு நாங்கள்ஒன்றாக ஃபெர்டினன்டின் இன்ஸ்ப்ரக்கில் உள்ள வீட்டில் போய் வசிக்கப்போகிறோமாம். நான் சுய உணர்வை இழந்து கீழே விழுந்து விட்டேன். அந்தநினைவுகள் இப்போதும் எனக்குள் ஒரு வகையான நடுக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.
அங்கிருந்து மாறி வசிப்பதைப் பற்றி என்னால் முடிந்த வரைக்கும் நான்எதிர்ப்பைக் காட்டினேன். ஆனால், என்ன காரணத்திற்காக எதிர்க்கிறேன் என்றஎன் தாயின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதைக்கூற என்னால் முடியாதே! அதனால் என்னுடைய எதிர்ப்பு வெறும் ஒருசிறுபிள்ளையின் பிடிவாதம் என்று நினைத்துப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
மறுநாளில் இருந்தே வேக வேகமாக வீட்டை மாற்றுவதற்கான ஏற்பாடுகள்ஆரம்பமாயின. ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் பள்ளிக் கூடத்தை விட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு பொருளும் வீட்டைவிட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். அவற்றில் சிலவற்றை ஃபெர்டினன்டின் இன்ஸ்ப்ரக்கில் இருக்கும் வீட்டிற்குக் கொண்டு போயிருப்பார்கள். சிலவற்றை விற்றிருப்பார்கள். நான் நாளாக நாளாக அதிகமான கவலையில் மூழ்கினேன்.
இறுதியில் ஒருநாள் நான் பள்ளிக் கூடத்தை விட்டு வந்தபோது, வீடு காலியாகக் கிடந்தது. முக்கியமான பொருட்கள் நிறைந்த ஒரு இரும்புப் பெட்டியையும்நானும் என் தாயும் தூங்குவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் தவிர மீதிஅனைத்துப் பொருட் களும் வீட்டிலிருந்து கொண்டு போகப்பட்டிருந்தன. அந்த இரவு எங்களுக்கு அங்கு இறுதி இரவாக இருந்தது. பொழுது புலர்ந்தவுடன்புறப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில், நான் வாழ்க்கையே நொறுங்கிப் போனவளைப் போலஆகிவிட்டேன். உங்களின் அண்மை இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதுதான் என்னுடைய நிலையாக இருந்தது. காரணம்- என்னுடைய உலகம் என்பதே நீங்கள்தான்.என் மனதில் அப்போது என்ன இருந்தது என்பதை, அந்த உணர்வை உங்களுக்குக் கூறிப் புரிய வைப்பதற்கு என்னால் முடியவில்லை. அதுவல்ல- என் மனதிற்குள் என்ன இருந்தது என்பது எனக்கே தெரியாது என்று கூறுவதுதான் சரியானதாக இருக்கும். ஏமாற்றத் தின் ஆழங்களுக்குள் மூழ்கிப் போன என் மனம் எதையாவது சிந்திப்பதற்குக் கூட முடியாத அளவிற்கு வெறுமையாகி விட்டதைப் போல, அதைப் பற்றி நினைக்கும்போது இப்போது எனக்குத் தோன்றுகிறது- எங்களுடைய அந்த வீட்டைப்போல.
அந்த சாயங்கால நேரத்தில், எதற்காகவோ என் தாய் வெளியே போயிருந்த தருணத்தில் நான் என்னுடைய பள்ளிக்கூட ஆடையி லேயே உங்களுடைய ஃப்ளாட்டின் வாசல் கதவைநோக்கி நடந் தேன். அது ஒரு நடையாக இல்லை. ஒரு வகையில் கூறப்போனால், ஓட்டம்என்றே அதைச் சொல்லலாம். என்னுடைய கைகளும் கால்களும் சோர்வடையப் போவதைப் போலவும் நடுங்குவதாகவும் எனக்கு தோன்றின. இதயம் அசாதாரணமான முறையில்துடித்தது. அந்தக் கால்களில் விழுந்து, வெறும் ஒரு தாசியாகவாவது என்னைஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள என் மனம் துடித்தது. நான் அப்படிச் செய்யும்போதுகூட, அதை பதினைந்து வயதுகளே ஆன ஒரு சிறுமியின் பைத்தியக்காரத்தனமான செயல் என்று நீங்கள் கிண்டல் பண்ணுவீர்கள் என்றுமனதிற்குள் பயமாக இருந்தது. ஆனால், என் மனதின் அப்போதைய துடிப்பையும் வேதனையையும் சிறிதளவிலாவது உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், எந்தச் சமயத்திலும் நீங்கள் கேலி பண்ண மாட்டீர்கள் என்பதையும் நினைத்தேன்.
பாதி சுய உணர்விலும் பாதி சுய உணர்வற்ற நிலையிலும் இருந்த அந்த சூழ்நிலையில் நான் கதவின் பெல்லை விரல்களால் அழுத்தினேன். உள்ளே பெல் அடிப்பதால் உண்டான அந்த சத்தம் இப்போதும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பேரமைதியில் சுவாசத்தை அடக்கிப் பிடித்துக் கொண்டு கதவிற்கு அப்பால் உங்களுடைய காலடிச் சத்தம் கேட்கிறதா என்று நான் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். என் ரத்தம் நரம்புகளில் உறைந்து விட்டதைப்போல உணர்ந்தேன். மொத்தத்தில் நான் செயலற்றவளாகஆகிவிட்டேன். நிறைய நிமிடங்கள் கடந்து சென்றன. ஆனால், யாரும் கதவைத் திறக்கவில்லை. நீங்கள் வெளியில் எங்காவது போய் விட்டிருக்கலாம். ஜானும்அங்கு இல்லாமல் இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டானது. உங்களு டைய ஃப்ளாட்டிலிருந்து எங்களுடைய ஃப்ளாட்டிற்கு இருக்கும் சிறிய தூரத்தைஅப்போது என்னால் நடந்து கடக்க முடியாததைப் போல தோன்றியது. நான் அந்த அளவிற்கு மிகவும் களைத்துப் போய் விட்டிருந்தேன். திரும்பி வந்து அறையின் ஒரு மூலையில் நான் விழுந்து கிடந்தேன். அப்போதும் என்னுடைய மனதில் பலமான ஒரு தீர்மானம் இருந்தது. என்னை இன்ஸ்ப்ரக்கிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு உங்களை வந்து பார்த்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றஉறுதியான முடிவு...
நான் ஒரு விஷயத்தை இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன். அப்போது எனக்கு காமஇச்சை கொண்ட உணர்ச்சிகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியைப் பற்றி எனக்கு அன்று எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. என் மனதிலும் கனவுகளிலும் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். அதைத் தாண்டி எதுவுமே இல்லை.
அன்று இரவு என்னைப் பொறுத்த வரையில் மிகவும் மோசமான இரவாக இருந்தது. என்தாய் தூங்கியாகி விட்டது என்பதை உறுதிப்படுத்திய பிறகு நான் எங்களுடைய வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு, கதவின் இடைவெளி வழியாக நீங்கள்வருகிறீர்களா என்று பார்த்துப் பார்த்துக் காத்திருந்தேன். ஜனவரிமாதத்தின் கடும் குளிரின் கீற்றுகள் கதவுக்கு மத்தியில் இருந்த இடைவெளிகள் வழியாக உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தன. நடுங்கி நடுங்கி நான் முழுமையாகத் தளர்ந்து போய் வெறும் தரையில் விழுந்து விட்டேன். காரணம்-குளிரில் இருந்து தப்பிப்பதற்கு இருந்த ஒரே விஷயம் அணிந்திருந்த ஆடை மட்டுமே. எனினும், உள்ளே போய் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டும் என்றுஎனக்குத் தோன்ற வில்லை. நான் உறங்கி விட்டால், நீங்கள் வருவதைப் பார்க்கவோதெரிந்து கொள்ளவோ முடியாமல் போய் விடுமோ என்பதுதான் என்னுடைய பிரச்சினையாகஇருந்தது. அந்த தனிமைச் சூழலில் ஒரு உள் பயம் ஆட்டிப் படைத்தது என்றாலும்,நான் இடையில் அவ்வப்போது எழுந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையின் முடிவுக்கான ஒரு காத்திருப்பு...
அந்தக் காத்திருத்தல் எவ்வளவு நேரம் நீண்டு போய்க் கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. எனினும், நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது என்பது மட்டும்உறுதியாகத் தெரிந்தது. இரவின் அந்த இறுதி ஜாமத்தில் எப்போதோ உங்களுடையகாலடிச் சத்தம் கேட்டது. அப்போது என்னுடைய உடலின் குளிர்ச்சி திடீரென்று இல்லாமல் ஆகி விட்டதைப் போல தோன்றியது. உடலில் வெப்பம் உண்டாவதைப் போல...மனம் என்னுடைய கட்டுப்பாட்டை விட்டு விலகி ஓடுகிறது- அந்தக் கால்களில்விழுந்து என்னைக் கைவிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுவதற்காக. நான் அப்போதுஎன்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி எனக்கே கூறத் தெரியவில்லை. நான்மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன்- நீங்கள்தான் ஏறி வருகிறீர்கள் என்பது உறுதியாகத் தெரிந்தாலும்.
மேலே ஏறி வந்தது நீங்கள்தான் என்றாலும், நான் முழுமையாக நொறுங்கிப் போய்விட்டேன். காரணம்- உற்சாகம் நிறைந்த ஒரு இனிமையான கவர்ச்சிக்குரலையும், சிரிப்பையும், அதற்கு உங்களின் மெல்லிய வசீகரமான சத்தத்தில்இருந்த பதில்களையும், அணிந்திருந்த ஆடைகள் ஒன்றோடொன்று உரசியதால் உண்டான ஓசையையும் நான் கேட்டேன்.
என் அன்பிற்குரியவரே, உங்களுடன் ஒரு பெண்ணும் இருந்தாள்.