அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
அன்றும் நீங்கள் இப்போது இருப்பதைப் போலவேதான் பார்ப்பதற்கு இருந்தீர்கள். கடந்து சென்ற காலத்திற்கு உங்களுடைய அந்த அழகிற்கு ஒரு சிறிய அளவில் கூட குறைபாடு உண்டாக்க முடியவில்லை. நான் பார்க்கும்போது தவிட்டு நிறத்தைக் கொண்ட சூட் அணிந்து மிகவும் வேகமாக, அலட்சியமாகப் படிகளில் சற்று இடைவெளிவிட்டு மிதித்து நீங்கள் ஃப்ளாட்டை நோக்கி ஏறிச் சென்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் தொப்பியைக் கழற்றி கையில் பிடித்திருந்ததால் என்னால் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உங்களுடைய பிரகாசமான அந்த முகமும் அதற்கேற்ற உங்களின் உருவமும் என்ன காரணத்தாலோ என்னிடம் வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படக் கூடியநிலையை உண்டாக்கின.
வசீகரிக்கக் கூடிய அந்த உருவ அமைப்பும் உற்சாக குணமும் இரண்டு தன்மைகளின் அழகான சங்கமம் என்று என் மனதிற்குள் தோன்றியது. காரணம்- ஒரே நேரத்தில் சாகசச் செயல்களிலும் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருக்கும் உற்சாகமான ஒரு ஆள் இலக்கியக் கலையின் தனிமையும் இனிமையும் உள்ள உலகத்தில் படைப்புத்தன்மை கொண்ட மனிதராகவும் இருந்ததுதான். பொதுவாக, நீண்ட காலம் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது மட்டுமே புரிந்து கொள்ள முடியக் கூடியது என்றாலும், உங்களுடைய குணத்தின் இந்த இரண்டறக் கலந்த ஒருமைத் தன்மையையும் தனிமை வாழ்க்கையையும் அதன் உண்மையான ஆழத்துடனும் முழுமையுடனும் புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது என்றாலும், எனக்கு ஏதோ புரிந்ததைப் போலதோன்றியது.
உங்களுடைய தனித்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே வெளியே காட்டினீர்கள். இன்னொரு பகுதி அப்போதுகூட யாருக்கும் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அது உங்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய சொந்தமான பொருளாக இருந்தது. எனினும், அந்த வசீகரிக்கக் கூடிய வெளி அழகிற்குள் இருந்த அழகற்ற விஷயங்களை அன்று ஒரு சிறுமியாக மட்டுமே இருந்த என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதுதான் என்னுடைய ஆச்சரியமான கண்டு பிடிக்கக்கூடிய ஆற்றல். அந்த நிலையை இப்போது உங்களால், ஒரு நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறதா? அது எனக்கு எந்த அளவிற்கு ஆச்சரியத்தை அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது தெரியுமா? அனைவராலும் விரும்பப்பட்ட, மதிக்கப்பட்ட புகழ் கொண்டவரும் பேரழகு படைத்தவரும் மொத்தத்தில் இளைஞருமான ஒரு எழுத்தாளர் எனக்கு சுயத்துடன் தெரிகிறார் என்ற விஷயம்!
எதுவாக இருந்தாலும் என்னுடைய மிகவும் சிறிய உலகத்தின் தலைவராக நீங்கள் மட்டுமே இருந்தீர்கள் என்பதை நான் தனியாக எடுத்துக் கூற வேண்டியதில்லையே! எனக்குப் பின்னால் நான் விரும்பக் கூடிய ஒரே ஒரு விஷயம், நீங்கள் மட்டுமே என்றாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை இப்படி உங்களைச் சுற்றி வட்ட மிட்டுக்கொண்டிருந்தபோது, உங்களை, உங்களுடைய செயல்களை, உங்களுடன் தொடர்பு கொண்டவை என்று தோன்றிய எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதுதான் அதற்குப் பிறகு என்னுடைய வேலை என்றாகிவிட்டது. அவை அனைத்தும் உங்கள் மீது நான் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தன.
உங்களைப் பார்ப்பதற்கு பல வகைப்பட்ட மனிதர்களும் வந்தார்கள். வருபவர்களின் கூட்டத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் மாணவர்கள் என்று தோன்றக் கூடியவர்களும் முக்கிய நபர்களும் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு ஆப்பரா இசையமைப்பாளரும் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். துடிதுடித்துக் கொண்டிருக்கும் இளமை நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் அழகான கமர்ஷியல் பள்ளி மாணவிகளும் உங்களைப் பார்ப்பதற்காக வந்தனர். நாணம் கொண்டவர்களைப் போல முகத்தைக் குனிந்து கொண்டு அவர்கள் ஃப்ளாட்டை நோக்கி ஏறிச் செல்வதைக்காண முடிந்தது. பார்க்க வருபவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள் என்ற விஷயம் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அந்த விஷயங்கள் எதுவும் என்னை ஆச்சரியம் கொள்ளச் செய்யவில்லை. எது எப்படியிருந்தாலும் வந்திருந்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஏற்றபடி நீங்கள் நடந்து கொண்டீர்கள்.
ஒருநாள் நான் பள்ளிக் கூடத்திற்குப் புறப்படும்போது, குடும்பப் பெண் என்று தோன்றக்கூடிய ஒரு பெண் முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு உங்களுடையஃப்ளாட்டிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அப்போதுகூட எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தோன்றவில்லை. என்னுடைய வயதும் அதுதானே?
நான் இப்படி எப்போதும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு உந்துசக்தியாக எனக்குள் இருந்த மோகம், என் மனதில் அரும்பி விட்டிருந்த முதல் காதலின் துடிப்பு என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
அந்த நிமிடத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். சுய உணர்வுடன் நான் என்னுடைய இதயத்தை உங்களிடம் சமர்ப்பித்த நிமிடம். என்னுடைய ஒரு தோழியுடன் சாயங்கால நேரத்தில் வெறுமனே நடந்து விட்டு வரலாம் என்று வெளியே சென்றேன். நடை முடிந்து திரும்பி வந்து எங்களுடைய வீட்டின் வாசலில் நின்றுபேசிக் கொண்டிருந்தபோது, நீங்கள் ஒரு காரில் வந்து இறங்கினீர்கள். உற்சாகத்துடன் நீங்கள் ஃப்ளாட்டிற்குச் செல்லும் படிகளில் ஏறினீர்கள்.ஃப்ளாட்டின் கதவைத் திறந்து, உங்களுக்கு வணக்கம் கூறவேண்டும் என்று எனக்குதோன்றியது. அதற்காக உங்களுக்கு முன்னால் வேகமாக ஓடியபோது, நம்முடையஉடல்கள் ஒன்றோடொன்று உரசின. அன்பு நிறைந்த ஒரு அழகான பார்வையால் நீங்கள் என்னை பாதத்திலிருந்து தலைவரை சற்று கூர்ந்து பார்த்தீர்கள். ஆனால், அது ஒரு வெறும் பார்வையாக இருக்கவில்லை. மிகமிக மென்மையாக கைகளுக்குள் என்னை வைத்திருப்பதைப் போன்ற இன்ப உணர்வை நான் அனுபவித்தேன்.
கதவைத் திறந்து விட்ட என்னை காதல் உணர்வுடன்... அப்படி கூறுவதுதான் சரியாக இருக்கும்- பார்த்தவாறு மிகவும் விருப்பமான ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல இனிமையுடனும் மென்மையுடனும் நீங்கள் கூறினீர்கள்: “நன்றி... மிகவும் நன்றி!”
அந்த இனிய வார்த்தைகளில் நான் முழுமையாக குளிர்ந்து போய் விட்டேன்.
என்னுடைய தோழி நீங்கள் யாரென்று கேட்டாள். ஆனால், அதற்கு நான் என்ன பதில் கூறுவேன்? என்னுடைய ஆழமான புனித மந்திரமாக ஆகிவிட்ட அந்தப் பெயரைக் கூறுவதற்குக் கூட அப்போது நான் இயலாதவளாக இருந்தேன். “அந்த வீட்டில் வசிப்பவர்” என்று அவளிடமிருந்து தப்பிப்பதற்காகக் கூறினாலும், நீங்கள் என்னைப் பார்த்தபோது என் கன்னங்கள் என்ன காரணத்திற்காக இந்த அளவிற்கு சிவந்தன என்பது அவளுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. அந்த வார்த்தைகளில் இருந்தது சாதாரண ஒரு சிறுமியின் ஆர்வம் மட்டுமல்ல- அவள் என்னுடைய வாழ்க்கையின் ரகசியங்களுக்குள் நுழைந்து செல்கிறாள் என்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால், அப்போதும் உங்களைப் பற்றி நினைத்து, எனக்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பார்வையையும் காதல் உணர்வுடன் கூறிய அந்த வார்த்தைகளையும் நினைத்து என் முகம் வண்ணமயமாக ஆனது.
அவள் அப்போது குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒருகிண்டல் கலந்திருப்பதைப்போல தோன்றியது. அவளை அப்போது கொல்ல வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால், கோபத்தை வெளிப்படுத்த முடியாத அந்தச் சூழ்நிலையில் என்னுடைய தவிப்பு கண்களை பனிக்கச் செய்தன. அவளை அங்கேயே விட்டுவிட்டு, நான் வேகமாக உள்ளே சென்றேன்.
காதல் உணர்வுடன் நீங்கள் என்னை கண்களால் தழுவிய அந்த நிமிடத்திலிருந்துநான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக ஆகி விட்டேன். மிகவும் சிறிய காலஅளவு மட்டுமே நீடித்திருந்தது என்றாலும், மனதை மயங்கச் செய்த உங்களின் அந்த அருள் பார்வை துடிப்பும் உற்சாகமும் மென்மைத்தனமும் கொண்டதாக இருந்தது. இறுக அணைத்துக் கொண்டு, உடல் கூசக்கூடிய அளவிற்கு ஆடைகள் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக அவிழ்ப்பதைப்போல, அந்தப் பார்வைகூர்மையானதாக இருந்தது. கன்னித்தன்மை கொண்ட ஒரு இளம் பெண்ணின் கற்பைக்கவர்வதைப்போல... எனினும், கடையில் உங்களுக்கு பொருட்களைத் தரும் இளம்பெண்களுக்கும், கதவைத் திறந்து விடும் பணியாட்களுக்கும், அதேபோல உங்களுடன் தொடர்பு கொண்ட எல்லா பெண்களுக்கும் நீங்கள் அணைப்பைப் போல சுகத்தை அளிக்கும் அந்தப் பார்வையைப் பரிசாகத் தருவதுண்டு என்பதை தாமதிக்காமல் நான் புரிந்து கொண்டேன். அதற்காக அவர்கள் எல்லாரின் உடல்களுடன் சம்பந்தப்பட்ட காம தாகத்தைத் தீர்ப்பதற்கு நீங்கள் விரும்பினீர்கள் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. அளவற்ற ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய பெண்மைத் தனம் உங்களுடைய கண்களை, பார்க்கக் கூடிய நிமிடங்களிலெல்லாம் இனியவையாகவும் உணர்ச்சி வசப்பட்டவையாகவும் மாற்றிவிட்டன என்பதுதான் உண்மை.
பால பருவம் அப்போதும் விடை பெற்று விட்டிராத அந்த பதின்மூன்றாவது வயதில், இப்போது கூறுவதைப் போன்ற இனிய உணர்வுகள் எதுவும் எனக்குத் தெரியாமல் இருந்தன. அதற்கு நேர் மாறாக உங்களுடைய அந்தப் பார்வை நெருப்பால் சுடுவதைப்போல இருந்தது என்றாலும், இனிமையான ஒரு அனுபவத்தை என்னிடம் அது உண்டாக்கியது. அந்த சுகமான கருணை எனக்கு மட்டும்தான் என்று உண்மையாகவே நான் நினைத்தேன்.
முக்கியமான அந்த நிமிடத்தில்தான் என்றென்றைக்கும் உங்களுக்கு மட்டுமே சொந்தமான எனக்குள், சிறுபிள்ளை பிராயத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும் வளர்ச்சித் தன்மை கொண்டதுமான பெண்மையின் இன்னொரு நிலைக்கு இதழ் விரித்துக் கொண்டிருந்தது.
அழகான எத்னையோ இளம்பெண்கள் உங்களிடம் காதலை வெளியிட்டிருப்பார்கள். அதைக்கேட்டு உங்களுடைய காதுகள் மரத்துப்போய் விட்டிருக்கும். நானும் உங்களைக் காதலித்தேன். ஆனால், இன்று வரைக்கும் யாரும் உங்களைக் காதலிக்காத அளவிற்கு. தன்னுடைய எஜமான்மீது ஒரு நாய் எந்த அளவிற்கு ஆழமான அன்பை வைத்திருக்கிறதோ... அந்த அளவிற்கு! அடிமையாக இருக்கும் ஒரு மனிதனுக்கு தன்னை உரிமை கொண்டாடும் மனிதரிடம் தோன்றுவதைப் போல குருட்டுத்தனமாக...அதைவிட எவ்வளவோ அதிகமாக.... உங்களை இப்படி இந்த அளவிற்கு வேறு யாரும் காதலித்திருக்க மாட்டார்கள் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
முற்றிலும் ஒரு சிறுமியின் ஏற்றுக் கொள்ளப்பட்டிராததும் எதிர்பார்த்திராததுமான காதல்... அதில் நிறைய வழிபாட்டுத் தன்மை இருந்தது. அந்தக் காதல் பலம் மிக்க உணர்ச்சிகள் நிறைந்ததாக இருந்தது. பக்குவம் வாய்ந்த ஒரு பெண்ணின், பலவற்றையும் திரும்ப எதிர்பார்க்கும் தன்மை நிறைந்த காதலைவிட புனிதமும் ஆழமும் கொண்ட காதல்.
தனிமையில் இருக்கும் ஒரு இளம் பெண்ணால்தான் அப்படிக் காதலிக்க முடியுமே தவிர, வேறு யாராலும் அப்படிக் காதலிக்க முடியாது. காரணம்- மற்ற இளம்பெண்கள் தங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் பழகுவதன் மூலம் வெளியே தள்ளிவிடுவார்கள். அவர்களுடைய தனிமைச் சிந்தனைகள் அனைத்தும் அப்படிப்பட்ட ரகசியசிந்தனைகளையும் உணர்வுகளையும் கூறிக் கூறி வெளியேற்றப்படுகின்றன. காதலைப்பற்றி வாசித்தும், கேள்விப்பட்டும், கூறியும், எழுதியும் உண்டான அறிமுகம்அவர்களுக்கு இருக்கும். இயல்பாகவே அவர்களுக்கு அப்போது புனிதமான காதல்என்பது, யாருக்கும் எப்போதும் கிடைக்கக் கூடிய ஒரு விளையாட்டு பொம்மை என்பதைத் தாண்டி எதுவும் இல்லை. அதனால்தான் முதன்முதலாக புகைக்கக் கூடிய சிகரெட்டை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறுவனைப்போல அந்த காதல் வயப்பட்டவர்கள் ஆடிக் குதிக்கிறார்கள்.
என்னுடைய விஷயம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. காதலைப்பற்றி நான் அதுவரை எதுவும் படித்ததில்லை. அதைக் கூறி என் தாய் என்னைத் திட்டிய சூழ்நிலையும் உண்டாகவில்லை. எனக்கோ ரகசியங்களைப் பங்கு போட்டு வைத்துக் கொள்வதற்காக மட்டும் என்று கூறக் கூடிய அளவிற்கு மிகவும் நெருக்கமான சினேகிதிகளும் இல்லை. என் தலையில் எழுதப் பட்டிருக்கும் எழுத்துகளை வரவேற்றுக் கொள்வதைப்போல நான் துள்ளிக் குதித்தேன். எனக்குள் சலனங்கள் உண்டாக்கிய அனைத்தும், எனக்குள் நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் உங்களிடம் மையம் கொண்டதாகவும், உங்களுடன் தொடர்பு கொண்டவையாகவும் இருந்தன.