அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
இப்போது என்னுடைய ஒரே ஆறுதலாக இருந்த நம்முடைய மகனும் என்னை விட்டுப்பிரிந்து விட்டிருக்கிறான். இனி என்மீது அன்பு செலுத்த எனக்கு யாருமேஇல்லை. இந்த பிரபஞ்சத்தில் நான் தனிமைப்பட்டு நிற்கிறேன்.
ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் நான் காத்திருந்தும், நீங்கள் என்னைஎந்தச் சமயத்திலும் புரிந்து கொள்ளவோ யார் என்று தெரிந்து கொள்ளவோ இல்லை. உங்களுடைய தெளிவற்ற நினைவு களில்கூட நான் இல்லை. கால்களுக்கும் கீழே இருக்கும் புற்களை அழுத்தி மிதித்து நடந்து விலகிச் செல்வதைப்போல நீங்கள் என்னிடமிருந்து விலகி விலகிச் சென்றுவிட்டீர்கள். இந்தக் கண்ணீர் குளத்தில் நான் மட்டும் தனியாக எஞ்சி இருக்கிறேன்.
நம்முடைய குழந்தை பிறந்தபோது, அவன் மூலமாக நான் உங்களை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டேனே என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது அவனும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டான். அவன் உங்களுடைய மகனாயிற்றே! இந்த தனிமையை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
இப்போது நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு நினைக்கிறேன்.இறப்பதற்கு உள்ளுக்குள் விருப்பப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? யாருக்காக நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேனோ, அந்த நீங்கள் எந்தச் சமயத்திலும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த நினைவில்ஒரு இடத்திலும் நான் இல்லை. உங்களுடையது என்று கூறிக் கொள்ளும் வகையில்ஒரு வரி குறிப்புகூட எனக்கு கிடைக்கவில்லை. யாராவது சந்தர்ப்பசூழ்நிலையில் என்னுடைய பெயரைக் கூறினாலும் உங்களுக்கு அது கேள்வியேபட்டிராத யாருடைய பெயர் மட்டுமாகவே இருக்கும். உங்களுக்குச் சொந்தமான நம்முடைய பொன்னான மகன்... அவனும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு விட்டான். நீங்களோ என்றோ என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டீர்கள். பிறகு நான் யாருக்காக வாழ வேண்டும்?
நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை. என்னால் எந்தச் சமயத்திலும் அதைச்செய்ய முடியாது. சந்தோஷம் நிறைந்த உங்களுடைய வாழ்க்கையில் என்னுடைய கவலைகளின் கருநிழல் படச் செய்வதில்லை. இந்த விஷயங்களையெல்லாம் கூறி நான்இனிமேலும் உங்களுக்கு மன அமைதியைக் கெடுக்கக் கூடியவளாக இருக்க மாட்டேன்.இப்போது, என்னுடைய மகனும் என்னிடமிருந்து பிரிந்து சென்றிருக்கும் வேதனை நிறைந்த இந்தச் சூழ்நிலையில், நான் என்னுடைய கவலைகளை வெளிப்படுத்தியதற்காக எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நீங்கள் என்மீது கோபப்படக்கூடாது. என்னைவெறுக்கக்கூடாது. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை நான் பின்பற்றிய என்னுடைய மவுனத்தை நோக்கி நான் செல்கிறேன். இனி எந்தவொருநேரத்திலும், இந்த உயிரின் இறுதி வரைக்கும் என்னுடைய வருத்தங்களை நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
வாழ்க்கை முழுவதும், வேறு யாருக்கும் முடியாத அளவிற்கு, உங்களை மட்டுமே காதலித்துக் கொண்டு, உங்களுடைய ஒரு அழைப்பைக் கேட்பதற்கு காத்து...காத்துக் கொண்டு இருந்தவள் நான். இங்கு இருப்பவளின் இறுதிக் குறிப்பு இது.இந்தக் குறிப்பு கையில் கிடைக்கும்போது, ஒருவேளை நீங்கள் என்னைஅழைக்கலாம். ஆனால், அப்போது மட்டும் என் வாழ்க்கையில் முதல் தடவையாக நான் நீங்கள் கூறியபடி நடக்க மாட்டேன். காரணம்- என்னுடைய மரணத்திற்குப் பிறகுதான் இந்தக் குறிப்பு உங்களை வந்து அடையும். மரணத்தின் குளிர்ந்தநீர் நிலைக்குள் வாழ்க்கையின் சத்தங்களும் கனவுகளும் எந்தச் சமயத்திலும்இறங்கிச் செல்ல முடியாதே! உங்களுடைய அழைப்பை என்னால் கேட்க முடியாதே!
என்னை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக நான் எதையும் தரவில்லை. நீங்களும்எனக்கு எதையும் தரவில்லையே- உங்களுக்கே தெரியாமல் பரிசாகத் தந்த நம்முடையமகனைத் தவிர! இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதனால், இனிகுறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் இல்லையே! இதுவரை நீங்கள் என்னை யார்என்று தெரிந்து கொண்டதில்லை. இனி என் மரணத்திற்குப் பிறகும் அது அப்படியேஇருக்கட்டும். இப்போது... இந்த இறுதி நிமிடத்தில் ஒரு ஆறுதல் மொழியைக் கேட்பதற்காகக் கூட உங்களை அழைக்கவில்லை. என் உண்மையான பெயரையும் ஊரையும்அனைத்தையும் கூறாமலேயே நான் விடைபெறுகிறேன்.
துயர விதிகளின்படி மட்டுமே வாழ்ந்து முடித்த எனக்கு இப்போது இறப்பதில் சிறிதும் சிரமம் தோன்றவில்லை. ஆனால், என்னுடைய இந்த முடிவு உங்களை வேதனைப்படச் செய்யும் பட்சம், எனக்கு இந்த பூமியையும் உங்களையும் விட்டுப்போவதற்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கும். ஆனால், இப்போது என்னுடைய வேதனைகள் உங்களுக்குத் தெரியாதே!
என் தலை கனக்கிறது. கை கால்கள் குழைவதைப் போல இருக்கின்றன. உடலெங்கும் வெப்பம் தகிக்கிறது. இனியும் தொடர்ந்து எழுத முடியவில்லை. இப்போதாவது விதி என்னிடம் கருணை காட்டும் பட்சம், எல்லாம் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும். அப்படியென்றால், நான் தரையிலும் தலையிலும் வைக்காமல் செல்லம்கொடுத்து வளர்த்த நம்முடைய தங்க மகனை யாரோ அலட்சியமாக, புதைப்பதற்காகக்கொண்டு போவதைப் பார்க்காமல் இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தமாதிரி இருக்கும்.
என்றும் என்னுடைய அன்பிற்குரியவரே, இந்த இறுதி நிமிடத்தில் கூட எனக்குள்உங்கள்மீது உள்ள காதல் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் இப்போதாவது உங்களிடம் கூறமுடிந்ததில் எனக்கு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகின்றன.
இப்போதாவது, முழுமையான ஆழத்துடன் இல்லையென்றாலும், எனக்கு உங்கள்மீது உள்ள காதலின் அளவற்ற தன்மையை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பீர்களா? எனினும் எதுவுமே... என்னுடைய மரணம்கூட உங்களுடைய வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாக்காது என்ற விஷயம் எனக்கு மிகவும் சந்தோஷத்தைஅளிக்கவும் நிம்மதியைத் தரவும் செய்கிறது.
காதலின் அனைத்து நறுமணங்களையும் கொண்ட வெள்ளை நிற ரோஜா மலர்களைப் பிறந்தநாள் பரிசாக இனி யார் உங்களுக்கு அனுப்புவார்கள்?
வாழ்க்கையில் முதலாவதாகவும் இறுதியாகவும், என்னுடைய இந்த இறுதிநிமிடத்தில் நான் ஒன்றைக் கேட்டுக் கொள்ளட்டுமா? நீங்கள் அதை அலட்சியம்செய்ய மாட்டீர்கள் என்று கருதுகிறேன். நான் முத்தங்களால் ஒவ்வொரு இதழிலும்காதலின் முத்திரையைப் பதித்த அந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைக் கொண்டு, உங்களுடைய வீட்டின் உட்புறங்களை நறுமணம் இருக்கும்படி செய்த அந்தபூப்பாத்திரம் உங்களுடைய பிறந்த நாளன்று எந்தச் சமயத்திலும் வெறுமனே இருக்கக்கூடாது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காகச் செய்யப்படும் புண்ணிய செயலைப் போல நீங்கள் அதில் அந்த நாளன்று பூக்களைக் கொண்டு நிறைக்கவேண்டும். அப்படிச் செய்வீர்கள் அல்லவா? செய்ய வேண்டும். உங்களை மட்டுமே நான் நம்புகிறேன். காதலிக்கிறேன். உங்கள் மூலம் வாழ்வதற்கே எனக்கு விருப்பம். நீங்கள் வெள்ளை நிற ரோஜா மலர்களை நிறைக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நன்றி...அன்பிற்குரியவரே... நன்றி... என்னைவிட, வேறு எதையும்விட நான் உங்களைக் காதலிக்கிறேன்... நான் காதலிக்கிறேன்... நான் காதலிக்கிறேன்... நான் காதலி...
விடை தாருங்கள்... அன்பிற்குரியவரே... என்றென்றைக்குமாக விடை...”
அவருடைய பலவீனமான கைகளில் இருந்து அந்த கடிதம் கீழே விழுந்தது. அவர் நீண்ட, ஆழமான சிந்தனையில் மூழ்கினார். தெளிவற்ற சில நினைவுகள் மனதில்இருந்தன- பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சிறுமியின், ஹாலில் நடனமாடும் ஒருபெண்ணின், தெளிவற்ற நினைவுகள். ஆனால், எங்கோ இருந்து, பாய்ந்து கொண்டிருக்கும் அருவியின் அடித்தட்டில், அசைந்து கொண்டும் வடிவமற்றும் இருக்கும் கல்லின் தோற்றத்தைப் போல அந்த நினைவுகள் அனைத்தும் மங்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தன. நிழல்கள் ஒவ்வொன்றாக அவருடைய மனதின் குறுக்கேகடந்து சென்றன.
அவை எதுவும் ஒரு ஓவியமாக வடிவம் பெறவில்லை. உணர்ச்சிகள் நிறைந்த உலகத்தில் நினைவுகளின் அலையசைவு இருந்தது. எனினும், எதையும் தெளிவாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. தான் அந்த வடிவங்களைப் பற்றி கனவில் பார்த்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. தெளிவாக மேலும் மேலும் கனவுகளைக் கண்டிருக்கலாம். எனினும், அவை அனைத்தும் கனவுகளின் ஆவிகள் என்றுதான் அவருக்குத் தோன்றியது. அவருடைய கண்கள் எழுத்து மேஜையின் மீதுஇருந்த நீல நிறப் பூப்பாத்திரத்தில் போய் நின்றது. அது காலியாக இருந்தது.பல வருடங்களாகத் தன்னுடைய பிறந்த நாளன்று அது இப்படி காலியாக இருந்ததேயில்லை. அவருக்கு ஒரு உள் நடுக்கம் உண்டானது. அந்த அறையின் பாதுகாப்பிற்கு இன்னொரு உலகத்திலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கதவு தனக்கு முன்னால் திடீரென்று திறக்கப்பட்டதைப்போல அவர் உணர்ந்தார். மரணத்தின் அறிவிப்பு, மரணமில்லாத காதலின் அறிவிப்பு அவரைத் தேடி வந்தது. மனதிற்குள் என்னவெல்லாமோ நிறைந்து மூடின. இறந்துவிட்ட பெண் ணைப் பற்றிய நினைவுகள் இரைச்சலிட்டன. எங்கோ தூரத்திலிருந்து கேட்கும் இசையைப் போல... உடலற்ற... ஆனால், பலம் கொண்டஉணர்ச்சிகளுடன்...