Lekha Books

A+ A A-

அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 9

Ariyatha Pennin Anjal

நள்ளிரவைக் கடந்த அந்த இரவின் மீதமிருந்த நேரத்தை நான் எப்படிச்செலவிட்டேன் என்பதை இப்போது என்னால் விளக்கிக் கூற முடியாது. அந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாததாகவும் வேதனை நிறைந்ததாகவும் வெறுப்பைஅளிக்கக் கூடியதாகவும் அந்த இரவு எனக்கு இருந்தது.

காலையிலேயே நாங்கள் இன்ஸ்ப்ரக்கிற்குப் புறப்பட்டோம். என்னைக் கொண்டு போனார்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். எதிர்த்து நிற்பதற்கு என்னால் முடியாது அல்லவா?

நான் என் தாயுடனும் சித்தப்பாவுடனும் நீண்ட இரண்டு வருடங்கள் இன்ஸ்ப்ரக்கில் வசித்தேன். அங்கு எனக்கு நானே ஒரு சிறைக் கைதியைப் போலத்தான் வாழ்ந்தேன். தெரியாமல் செய்துவிட்ட ஏதோ தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வதைப் போல என் தாய் என்னுடைய எந்த வகையான விருப்பங்களையும் நிறைவேற்றித் தருவதற்குத் தயாராக இருந்தாள். என்னை தனிகவனம் செலுத்திப் பார்த்துக் கொள்பவளாகவும் அங்கு என்னுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எப்போதும் அக்கறை உள்ளவளாகவும் அவள் இருந்தாள். பொதுவாகவே அமைதியான குணத்தைக் கொண்டவராகவும் மிகவும் குறைவாகவே பேசக்கூடியவராகவும் இருந்த சித்தப்பா என்னிடம் அன்புடனும் பாசத்துடனும் நடந்துகொண்டார்.

இன்ஸ்ப்ரக்கில் பலரும் என்னிடம் நட்புடன் இருப்பதில் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களிடம் நான் காரணமே இல்லாமல் கோபத்துடன் நடந்துகொண்டேன். அவர்களை நான் வேண்டுமென்றே அவமரியாதையுடன் நடத்தினேன். வேறொன்றுமில்லை. அவர்கள் என்னிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. காரணம்- உங்களை விட்டு விலகி இருந்தபோது நான் எந்தச் சமயத்திலும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை. அதற்கு பதிலாக என்னை நானே துன்பப்படுத்திக் கொண்டும் தனிமையில் இருந்து கொண்டும் வாழ்க்கையை ஓட்டினேன்.

என் தாயும் சித்தப்பாவும் எனக்காக வாங்கிய விலை மதிப்பு கொண்ட ஆடைகள் எதையும் நான் அணியவேயில்லை. அவர்கள் தொடர்ந்து அழைத்தும், இசை நிகழ்ச்சிகளுக்கோ நாடகங்களைப் பார்ப்பதற்கோ உல்லாசப் பயணங்களுக்கோ நான் எந்தச் சமயத்திலும் போனதே இல்லை. மிகவும் அரிதாகவே நான் வீட்டை விட்டுவெளியே செல்வேன். எதற்கு... ? நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்த இன்ஸ்ப்ரக்கில் விரல்களால் எண்ணக் கூடிய அளவிற்கே தெருக்களை நான் பார்த்திருக்கிறேன்.

உங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற கடுமையான கவலையில் எல்லாவிதமான சந்தோஷங்களையும் தியாகம் செய்து, பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டும் மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டும் இருப்பதுதான் என்னுடைய பொழுது போக்கு என்றாகி விட்டது. அப்படி நடந்து கொள்வதில் மட்டும் தான் நான் அப்போது சந்தோஷத்தைக் கண்டேன். உங்களுக்காகவே வாழ்வது என்பதுதான் என்னுடைய வாழ்வின் விருப்பமாக இருந்தது. அதிலிருந்து எந்த சக்தியாலும் என்னைப் பிரிப்பதற்கு முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால்- நான் அதற்கு அனுமதிக்கவில்லை. நானே உண்டாக்கிக் கொண்ட என்னுடைய தனிமைச் சூழலில் இருந்து கொண்டு உங்களைப் பற்றிய நினைவு களில், அது அர்த்தமே இல்லாதது என்பதைத் தெரிந்திருந்த போதும், அந்த நினைவுகளில் உங்களைப் பார்த்துக்கொண்டே வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மனதில் திரும்பத் திரும்பஉயிர்ப்புடன் கொண்டு வந்தேன். அவை அனைத்தும் நேற்று நடந்தவை போல இருந்தன.

இன்ஸ்ப்ரக்கில் உங்களுடைய புத்தகங்கள் அனைத்தையும் நான் வாங்கிவாசித்தேன். ஒரு முறை அல்ல. பல முறைகள். அப்படி திரும்பத் திரும்ப வாசித்தகாரணத்தால், எப்படிப்பட்ட உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும்,உங்களுடைய எந்தப் புத்தகத்திலிருந்தும் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் என்னால் கூற முடிகிற அளவிற்கு அனைத்து விஷயங்களும் எனக்கு மனப்பாடங்களாகஆயின. உங்களுடைய வார்த்தைகள் எனக்கு பைபிளின் வசனங் களாக இருந்தன. இந்தநீண்ட பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகும் அது அப்படியேதான் இருக்கிறது.அன்று உங்களின் பெயர் ஏதாவது பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதைப் பார்க்கநேர்ந்தால், நான் சந்தோஷத்தில் மதி மறந்து விடுவேன்.

இப்போது நீங்கள் அந்தப் படிகளில் வேகமாகவும் உற்சாகத்து டனும் மிதித்துஏறிக் கொண்டிருப்பீர்கள். இப்போது அந்த வாசல் கதவின் கைப் பிடியைப்பிடித்துத் திருப்பிக் கொண்டிருப்பீர்கள். இப்போது உள்ளே இருக்கும் ஹாலில் போடப்பட்டிருக்கும் அழகான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பீர்கள். இப்படிநானே படைத்துக் கொண்ட என்னுடைய தனிமைச் சூழலில் உட்கார்ந்து கொண்டு,வியன்னாவில் இருக்கும் உங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் பற்றி கற்பனைபண்ணிக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய எல்லையற்ற காதலையும் மரியாதையும் அன்பையும் அடையாளம் கண்டுபிடிக்காத- என்னுடைய கவலை, ஏக்கம் ஆகிய வற்றில் ஆழத்தை ஒரு கனவில்கூட எந்தச் சமயத்திலும் அறிந்திராத உங்களிடம் நான் எதற்காக இவற்றையெல்லாம் கூறுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

இன்ஸ்ப்ரக்கில் யுகங்களைக் கடந்ததைப் போன்ற இரண்டு வருடங்கள் கடந்து சென்றபிறகு, நான் அந்த பழைய சிறுமியாக இருக்கவில்லை. நான் அப்போது இனிய பதினேழுவயதைத் தாண்டி, பதினெட்டை அடைந்து விட்டிருந்தேன். வழியில் இளைஞர்கள்என்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டி ருப்பார்கள். ஆனால், அந்த விஷயம் என்னிடம் எந்தச் சமயத்திலும் சந்தோஷத்தை அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல-அமைதியற்ற தன்மையை உண்டாக்கவும் செய்தது. மற்ற இளம் பெண்களைப் போல என்னால் எப்படி அதையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி இருப்பதைத்தவிர, யாரையாவது காதலிக்கவோ மனதில் நினைத்துக் கொண்டிருக்கவோ என்னால் எப்படி முடியும்? என்னுடைய உயிரையும் ஆன்மாவையும் உங்களிடம் அர்ப்பணித்து விட்டவள் அல்லவா நான்? அதனால் யாராவது என்னிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தினால், அவை என்னைப் பொறுத்த வரையில், பொறுத்துக் கொள்ள முடியாத விஷயங்களாகத் தோன்றின. எந்தச் சமயத்திலும் மன்னிப்பு அளிக்கமுடியாத குற்றத்தை அவர்கள் என்னிடம் செய்வதாக நான் உணர்ந்தேன்.

உங்கள் மீது நான் கொண்டிருந்த காதலுக்கு உயர்வோ தாழ்வோ எதுவும் உண்டாகவில்லை. முதலிலேயே அது உச்ச நிலையை அடைந்து விட்டது அல்லவா? அப்போதுஎன்னுடைய உடல் வளர்ச்சி, அதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்த உணர்ச்சிகளை என்னிடம் கிளர்ந்தெழச் செய்யத் தொடங்கியது. அப்போது புத்தம் புது இளமை பக்குவமடைந்து தளிர் விட்டு வளரச் செய்த, உடல் சம்பந்தப்பட்ட காமத்தின் வெளிப்பாடுகளை நான் அறிந்தேன். அது இளம் பெண்ணும் புத்துணர்ச்சி கொண்டவளுமாக இருந்த ஒருத்தியின் காமம் கலந்த உள் தாகத்தை என்னிடமும்உண்டாக்கியது.

முன்பு அந்தச் சிறுமிக்கு, உங்களைப் பார்ப்பதற்காக கண்களை விழித்துக்கொண்டும், உங்களுடைய வீட்டு வாசல் கதவில் மணிச் சத்தம் எழுப்பமுயற்சித்துக் கொண்டும், ஏமாற்றமடைந்து கொண்டும் இருந்த ஒரு இளம்பெண்ணுக்கு புரிந்து கொள்ள முடியாமலிருந்த காம இச்சைகள், அப்போது என்னுடையசந்தோஷம் தரும் மிகப் பெரிய மோகங்களாக ஆயின. நான் என்னுடைய அழகான உடலைநீங்கள் பார்க்க வேண்டும் என்று ஏங்கினேன். என்னுடைய தோழிகளைப் பொறுத்தவரையில், வெறும் ஒரு கூச்ச குணம் கொண்ட பெண்ணாக இருந்த என்னை, என்னுடைய மனதிற்குள் உண்டாக் கிய உறுதியான முடிவு, உங்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற என்னுடைய அந்த லட்சியத்திற்குள் குதிக்கச் செய்தது.

லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நான் வியன்னாவிற்கு திரும்பவும் வந்தாகவேண்டும். ஆனால், அந்தத் திரும்ப வருதல் அந்த அளவிற்கு எளிதாக இல்லை.காரணம்- என் தாய், சித்தப்பா ஆகியோரின் பார்வையில் நான் திரும்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என்றிருந்தது. என் மனதிற்குள் இருக்கும் விஷயங்கள்அவர்களுக்குத் தெரியாதே! அதனால் நான் அறிவே இல்லாமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் என்னுடைய நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. எனக்கென்று ஒரு தொழில் செய்து வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமென்றும், என்னுடைய அந்த முடிவில்நான் உறுதியாக நின்று கொண்டிருக்கிறேன் என்றும் நான் அவர்களிடம் கூறினேன்.அதற்காக நான் வியன்னாவிற்கு திரும்பச் செல்ல வேண்டுமென்று அவர்களிடம் கூறினேன். தேவைக்கு பணக்காரரான சித்தப்பா இருக்கும்போது ஒரு தொழில் செய்துநான் வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது.இறுதியில் என்னுடைய கடுமையான பிடிவாதத்திற்கு அவர்கள் தலையாட்டவேண்டியதிருந்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய ஒரு உறவினருக்குச் சொந்தமாக வியன்னாவில் இருந்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் எனக்குசித்தப்பா ஒரு வேலையை ஏற்பாடு செய்து தந்தார்.

ஒரு குளிர்காலத்தில் வியன்னாவிற்கு நான் திரும்பவும் வந்தேன். இரண்டுவருடங்கள் நீடித்திருந்த கடுமையான விரகதாபத்திற்கும், துயரத்திற்கும்,ஏக்கங்களுக்கும் இறுதியாக மூடுபனி திரைச்சீலை அணிவித்த ஒரு மாலை வேளையில்நான் வியன்னாவில் கால்களை வைத்தேன். அங்கு முதலில் நான் எங்கு வந்தேன்என்று உங்களால் நினைக்க முடிகிறதா? புகை வண்டி நிலையத்திலிருந்து நான் வேகமாகப் புறப்பட்டேன். அங்கு நான் பயணம் செய்தபோது, ட்ராம் எந்த அளவிற்குமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அந்தஅளவிற்கு நான் அவசரத்தில் இருந்தேன். உடலுக்கு முன்பே மனம் அங்கு அடைந்துவிட்டிருந்தது. நம்முடைய அந்த ஃப்ளாட்கள் இருந்த தெருவை நான் நெருங்கிக்கொண்டிருந்தேன். தூரத்தில் நின்று கொண்டே உங்களுடைய அறையில் பார்த்தவெளிச்சம் என்னுடைய மனதில் சந்தோஷம், ஆனந்தம் நிறைந்த ஆயிரம் திரிகள்கொண்ட விளக்கை ஏற்றி வைத்தது.

அதுவரை நான் வாழ்ந்த, எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத நகரமும் சந்தோஷமற்றவாழ்க்கையும் அந்தக் கணமே மறைந்து போய் விட்டன. அங்கு வாழ்ந்த வருடங்களில்நான் இழந்த அன்பும் சந்தோஷமும் திரும்பவும் வந்து விட்டதைப்போல நான்உணர்ந் தேன். என்னிடம் அதுவரை இல்லாமலிருந்த உயிரின் துடிப்புகள் எழுவதைப்போல எனக்குத் தோன்றியது.

நீங்கள் உடல் ரீதியாக மிகவும் அருகில் இருக்கிறீர்கள் என்ற உண்மை அளித்தசந்தோஷத்தை நான் மீண்டும் உணர்ந்தேன். அது என்னைத் திரும்பவும் பிறக்கச்செய்தது. என்னுடைய விழிகளுக்கும் உங்களுக்குமிடையே வெறும் ஒரு கண்ணாடித்துண்டின் தூரம் மட்டுமே இருக்கிறது என்ற சூழ்நிலை வந்தபோது, அதுவரை நான்உங்களிடமிருந்து எந்த அளவிற்கு விலகி இருந்திருக்கிறேன் என்பதைத் தாங்கமுடியாத பயம் கலந்த எண்ணங்களுடன் நான் நினைத்துப் பார்த்தேன். அதேநேரத்தில், அந்தத் தூரங்களைப் பற்றி நான் உடனடியாக மறக்கவும் செய்தேன்.காரணம்- இப்போது நான் உங்களுக்கும், நீங்கள் எனக்கும் நெருக்கமாகஇருப்பதுதான்.

அதோ தெரிவது உங்களுடைய வீடு. அங்கு என்னுடைய அன்பிற்குரிய நீங்கள்இருக்கிறீர்கள். நானோ இமைகளை மூடாமல் அந்த இடத்தில் பார்த்துக் கொண்டுநின்றிருப்பதே புண்ணியமான ஒரு விஷயம் என்ற ஒரு ஆனந்த நினைப்புடன்இருந்தேன். என்னைப் பொறுத்த வரையில் அதைத் தாண்டி வேறு என்ன வேண்டும்?

வெளியே மூடுபனியின் குளிர் நிறைந்த போர்வையும் மேலே வானத்தின் கரும்போர்வையும் இருந்த அந்த இரவு வேளையில் உங்களின் அறையில் விளக்கு அணைவதுவரை அங்கேயே அமைதியாக நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அதற்குப்பிறகுதான் நான் தங்கக் கூடிய இடத்தைத் தேடியே புறப்பட்டேன்.

ஆடைகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் என்னுடைய வேலை நேரம்சாயங்காலம் ஆறு மணி வரை என்றிருந் தது. அங்கு நிலவிக் கொண்டிருந்த சத்தங்கள் நிறைந்த சூழ்நிலை என்னுடைய மன ஓட்டங்களுக்கு திரை பிடிப்பதற்குஉதவியாக இருந்தது. அந்த காரணத்தால் நான் அந்த வேலை செய்யும் இடத்தைவிரும்பினேன். வேலை நேரம் முடிந்தவுடன் நான் நீங்கள் இருக்கும் இடத்தைநோக்கி ஓடி வந்தேன். வேறு எதற்காகவும் இல்லை என்றா லும், உங்களைச் சற்றுபார்க்க முடியாதா என்ற தவிப்புடன். அவ்வளவுதான். உங்களுடையஃப்ளாட்டிலிருந்து அப்படியொன்றும் தூரமில்லாத இடத்தில் நின்று கொண்டு நான்அப்படியே பார்த்துக் கொண்டு இருப்பேன். அந்த மாதிரி நிற்பது என்ற விஷயம்எல்லா சாயங்கால வேளைகளிலும் என்னுடைய வழக்கமான செயலாக ஆனது- ஒரு தவத்தைப்போல.

நிலைமை அப்படி இருக்கும்போது, ஒரு வாரம் கடந்த பிறகுதான், சிறிதுகூட எதிர்பாராமல் நான் உங்களைப் பார்த்தேன். நான் என்னுடைய வழக்கமான செயலாக இருந்த “பார்த்துக் கொண்டு நிற்பதில்” உங்களுடைய சாளரத்தை நோக்கிக் கண்களைச் செலுத்தியவாறு நின்று கொண்டிருந்தேன். அப்போது சாலையில் சற்றுதூரத்தில் தெருவைக் கடந்து நீங்கள் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.உங்களைப் பார்த்த நிமிடத்தில், பலவகைப்பட்ட உணர்ச்சிகளின் உந்துதலில் என்னசெய்வது என்று தெரியாத நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டு விட்டேன். ஒரு நிமிடத்தில் நான் அந்த பதின்மூன்று வயது சிறுமியாக மாறிவிட்டதைப் போல எனக்குத் தோன்றியது. என் கன்னங்கள் சிவந்து விட்டன. உடம் பெங்கும் மெல்லியஒரு நடுக்கம் பரவுவதைப்போல நான் உணர்ந்தேன்.

அந்தக் கண்களைச் சற்று பார்க்க வேண்டும் என்று நான் விரும்பி னாலும்,என்னால் முடியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டி ருந்தேன். அப்போதுஉங்களைக் கடந்து நான் மிகவும் வேகமாக நடந்தேன். ஆனால், அப்படி நடந்துகொண்டதை நினைத்து பிறகு எனக்கு கவலையும் வெட்கமும் உண்டாயின. எனக்கு என்னவேண்டும் என்பது மனதிற்குள் இருந்த தாகத்திற்கும் மோகத்திற்கும்தெரியுமென்றாலும், அதற்குப் பொருத்தமற்ற விதத்தில் நடந்து கொண்டதற்காகநான் என்னையே திட்டிக் கொண்டேன்.

எது எப்படி இருந்தாலும், ஒரு விஷயத்தில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். நீண்ட இந்தப் பிரிவிற்குப் பிறகும் என்னை நீங்கள் அடையாளம் கண்டு, தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து காதலிக்க வேண்டும். அது என்னுடைய ஆன்மாவின் மோகமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றிலும், உடலைத் துளைத்துக் கொண்டு எலும்புகளில் குத்திக் கொண்டிருக்கும் குளிர்ந்த காற்றில்கூட நான் அதே இடத்தில் நின்றிருந்தாலும், நீங்கள் என்னைப் பார்த்ததேயில்லை. அந்த மாதிரி காத்துக்கொண்டும் பார்த்துக் கொண்டும் நின்றிருந்தாலும் பல நேரங்களில் நான்நின்றிருந்தது வீண் என்றாகிப் போனது. காரணம்- நீங்கள் நண்பர்களுடன்இறங்கிச் செல்வதைத்தான் பெரும்பாலும் பார்பபேன். ஒன்றிரண்டு முறைகள்உங்களுடன் ஒரு இளம்பெண்ணும் இருந்தாள். அவள் உங்களுடைய கைகளைத் தன்னுடையகையில் சேர்த்து வைத்துக் கொண்டு, சற்று மிடுக்குடன் உங்களுடன் சேர்ந்துநடந்த அந்தக் காட்சி என்னை அமைதியற்றவளாக ஆக்கியது. சாதாரணமாக எனக்குஅப்படித் தோன்ற வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அதைப் போன்ற எத்தனையோபெண்கள் உங்களைப் பார்ப்பதற்காகவும் வருவதையும் போவதையும் நானேபார்த்திருக்கிறேன். ஆனால், அன்று பார்த்த அந்தக் காட்சியை என்னால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாங்க முடியாத ஒரு வேதனையும் அந்தப்பெண்ணிடம் இனம் புரியாத ஒரு பகையுணர்வும் எனக்கு உண்டானது. அவளுடையநடவடிக்கைகள், உங்களுடன் அவளுக்கு இருக்கும் உடல் ரீதியான தொடர்பால்உண்டான சுதந்திரத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றின.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel