அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
நான் அவை ஒவ்வொன்றையும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கூறுகிறேன். அதை வாசிப்பதற்கு நீங்கள் எந்தச் சமயத்திலும் பொறுமை இல்லாதவராக ஆகிவிடமாட்டீர்களே ! இந்த வாழும் காலம் முழுவதும் இடைவெளிகளே இல்லாமல் உங்களைக் காதலித்து, இந்த நிமிடம் வரை சோர்வே அடையாதவளாக நான் இருக்கிறேன்.
எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில் நீங்கள் வந்து வசிப்பதற்கு முன்னால், அங்கு இருந்தவர்கள் தொந்தரவுகள் தரக்கூடியவர்களாக இருந்தார்கள். முழுமையான குடிகாரனான ஒரு மனிதரும் அவருடைய குடும்பமும். அவர்கள் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக இருந்தார்கள். எனினும், எங்களுடைய பலவீனமான விஷயங்களை கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மது அருந்திவிட்டு வந்து மனைவியை உதைத்துக் கொடுமைப்படுத்துவது என்பதும் வீட்டில் இருக்கும் சாமான்களை எறிந்து உடைப்பது என்பதும் அவருடைய நிரந்தர செயல்களாக இருந்தன. ஃப்ளாட்டின் பேரமைதியையும் சாந்தமான சூழ்நிலையையும் பாழடையச் செய்துகொண்டு அடிகளும் அட்டகாசங்களும் அங்கு உரத்துக் கேட்டுக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் அக்கிரமங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவருடைய மனைவி ரத்தம் வழிய, அவிழ்த்து விடப்பட்ட கூந்தலுடன் படிகளில் ஓடி ஏறினாள். கெட்டவார்த்தைகள் நிறைந்த திட்டுதல்களை உரத்த குரலில் கூறியவாறு அவர் பின்னால் ஓடி வந்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த எல்லாரும் கூட்டமாகக் கூடிநின்றிருந்தார்கள். தொடர்ந்து போலீஸ்காரர்களை அழைக்கப்போகிறோம் என்று பயமுறுத்திய பிறகுதான் அவர் சற்று அடங்கினார்.
அவர்களுடன் எந்தவிதமான பழக்கத்தையும் என் தாய் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்ல- அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் நட்புடன் பழகுவதற்கும் போகக்கூடாது என்று என்னை தடுத்து நிறுத்தி வைக்கவும்செய்தார். இந்த விலகி நிற்பதன் மீது கொண்ட எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டும்- அந்தக் குழந்தைகள் சந்தர்ப்பம்கிடைக்கும் போதெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி திட்டுவதும் தாக்குவதுமாக இருந்தார்கள். ஒருநாள் பனிக்கட்டியால் எறிந்ததில் என்னுடைய நெற்றியில் ஒருகாயம் உண்டாகி விட்டது.
அந்த ஃப்ளாட்டில் இருந்த எல்லாரும் அவர்களை வெறுத்தார்கள். ஒரு நாள் ஒருதிருட்டுக் குற்றத்திற்காக அந்த இல்லத்தின் தலைவர் கைது செய்ப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியது. ஃப்ளாட்டில் இருந்த எல்லாருக்கும் அது ஒரு நிம்மதியை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அதற்குப் பிறகு அந்த வீட்டின் வாசலில் “வாடகைக்குக் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு அதிக நாட்கள் அங்கு தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அந்த வீட்டை புகழ் பெற்ற ஒருஎழுத்தாளர் வாடகைக்கு எடுத்திருக்கிறார் என்ற தகவலை அங்கு பாதுகாப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மூலம் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. எது எப்படியோ... புதிதாக வரப்போகும் மனிதர் ஒரு தொந்தரவுதரக்கூடியவராக இருக்க மாட்டார் என்ற விஷயம் அதைத் தொடர்ந்து உறுதியானது.
நான் வாழ்க்கையில் முதல் தடவையாக அன்றுதான் உங்களின் பெயரையே கேள்விப்படுகிறேன்.
அடுத்து வந்த நாட்களில் புதிதாக வரப்போகும் மனிதருக்காக வீட்டைச் சுத்தம்பண்ணும் வேலைகள் நடப்பதைப் பார்த்தேன். சிறு சிறு பணிகளைச் செய்வோர், வர்ணம் பூசுபவர்கள் ஆகியோரின் ஆரவாரங்கள் நிறைந்தனவாக அந்த நாட்கள்இருந்தன. எல்லா ஆரவாரங்களின் இறுதிதான் அந்தக் கொண்டாட்டங்கள் என்று என்தாய் சொன்னாள்.
வீடு வசிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரானது. அங்கு வரவேண்டிய பொருட்கள் கொண்டு வரப்பட்டபோது அவற்றுடன் நீங்கள் வரவில்லை. எல்லா விஷயங்களையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு, சற்று நரை விழ ஆரம்பித்திருந்த, மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்றக் கூடிய குணத்துடனும் செயலுடனும் இருந்த மிடுக்கான ஒரு மனிதர் இருந்தார். அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நாகரீகமான குடும்பங்களில் பணி செய்த பழக்கத்தைக் கொண்டவர் என்பதைப் போலதோன்றியது. அவருடைய பெயர் ஜான் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஒழுங்குடனும் திட்டமிடலுடனும் செயல்களைச் செய்து கொண்டிருந்த ஜானின் மிடுக்கும் நடந்து கொண்ட முறையும் அங்கு இருப்பவர்களிடம் ஒரு தனிப்பட்ட மதிப்பை உண்டாக்கின. காரணம்- நகரத்தின் எல்லையில் வசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, அந்த அளவிற்கு நேர்த்தியாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு பணியாளர் புதுமையான ஒரு மனிதராகத் தெரிந்தார்.
ஃப்ளாட்டில் இருந்த பிற பணியாட்களுடன் ஜான் நட்பு காட்டிக்கொண்டிருக்கவில்லை. எனினும், யாரிடமும் வெறுப்பைக் காட்டுவதும் இல்லை. ஜான் என் தாய்க்கு தனிப்பட்ட முறையில், ஒரு இல்லத்தரசியிடம் காட்ட வேண்டிய பணிவையும் மரியாதையையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதை நான் கவனித்தேன். உங்களைப் பற்றிக் கூற நேரும்போது, அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே ஜான் காட்டிய பணிவில் இருந்து, உங்கள் மீது அவருக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் தெரிந்தன. இன்னும் சொல்லப்போனால் ஜான் உங்களின் வெறும் ஒரு பணியாளாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை அவர் ஏதாவது தூரத்து உறவினராக இருக்கலாம் என்றும் கூட தோன்றியது. எனக்கு ஜான் மீது ஈடுபாடு உண்டானதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும். எப்போதும் உங்களைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பணி செய்வதற்கும் அதிர்ஷ்டம் உண்டான ஆளாயிற்றே என்பதால் ஜான் மீது எனக்குப்பொறாமை தோன்றியது.
முக்கியமே இல்லாத, மிகவும் சாதாரணமான இந்த விஷயங்களையெல்லாம் நான் எதற்காகக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். கூறுகிறேன். பொதுவாகவே கூச்சப்படும் குணம் கொண்டவளாகவும் காரணமே இல்லாமல் எல்லாவற்றையும் பயத்துடன் அணுகக் கூடியவளாகவும் அந்தக் காலத்தில் நான் இருந்தேன். சிறுமித்தன்மை அப்போதுகூட விடை பெறாமல் இருந்த எனக்குள் நீங்கள் உண்டாக்கிய, என்னால் வார்த்தைகளால் கூற முடியாத பாதிப்பு எந்த அளவிற்குப் பெரியது என்பதை ஒரு குறிப்பாகவாவது என்னுடைய விளக்கம் உணர்த்தாதா என்று நினைத்துத்தான் நான் இவை அனைத்தையும் உங்களிடம் கூறுகிறேன்.
எது எப்படி இருந்தாலும், முதன் முதலாகப் பார்ப்பதற்கு முன்பே உங்கள் மீது பயபக்தி, மரியாதைகள், அன்பு ஆகியவை கலந்த ஒரு தோற்றத்தை என் மனதில் நான் உருவாக்கி வைத்திருந்தேன். அதைப் பற்றி நான் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். படிப்பின் மீதும், நிறைய படித்திருப்பவர்கள் மீதும் நகரத்தின் எல்லையில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாருக்கும் பொதுவாகவே ஒரு வகையான வழிபாடு இருந்தது. அந்தக் காரணத்தால் உங்களின் வரவிற்காக அங்கு உள்ள எல்லாரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
ஒரு மாலை நேரத்தில் நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது, வீட்டுச்சாமான்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு வண்டி ஃப்ளாட்டையொட்டி இருந்த சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் உண்டான என்னுடைய ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் இப்போது விளக்கிக் கூறுவதற்கு என்னால் முடியாது. வண்டியில் கொண்டு வரப்பட்டிருந்த முக்கியமான சாமான்கள் அனைத்தும் அந்த நேரத்தில் மாடியை அடைந்து விட்டிருந்தன. அவை என்னென்ன? எப்படிப்பட்டவை? எல்லாவற்றையும் சற்று காண வேண்டும் என்று மனம் அதிகமாகத்துடித்தது. அதற்காக நான் அந்த வாசலிலேயே நின்றிருந்தேன்.
அந்த வீட்டுச் சாமான்கள் பெரும்பாலும் நான் இதுவரை பார்த்திருந்தவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருந்தன. அந்தப்பொருட்களின் கூட்டத்தில் இத்தாலிய சிற்பங்களும் அழகான வண்ண ஓவியங்களும் இந்திய விக்கிரகங்களும் இருந்தன. வாசலில் புத்தகங்களின் ஒரு குவியல்இருந்தது.
புத்தகங்களை அக்கறையுடன் தூசு தட்டி, துடைத்து ஜான் எடுத்து வைப்பதை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். நான் அப்படி அங்கு நின்று கொண்டிருப்பதில் அவருக்கு தனிப்பட்ட முறையில் எதிர்ப்போ உடன்பாடோ- அப்படி ஏதாவது இருப்பது மாதிரியும் தெரியவில்லை. அந்தப் புத்தகங்களை எடுத்து சற்று தொட வேண்டும், தடவிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டானது என்றாலும், ஏதோ ஒரு உள்பயம் காரணமாக நான் அவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் நின்றிருந்தேன். என் கண்கள் அந்தப் புத்தகங்கள் மீது பரவிச் சென்றன. பற்பல அளவுகளிலும், பற்பல மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் அந்தக் குவியலில் இருந்தன. ஃப்ரெஞ்ச் மொழியிலும் ஆங்கிலத்திலும்... பிறகு...எனக்குத் தெரியாத வேறு பல மொழிகளில் இருந்த புத்கங்களும் இருந்தன. நான் அவற்றையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் போதும் என்று தோன்றாத நிலையில் அங்கு நின்றுகொண்டிருந்த போது, என் தாய் அழைத்தாள். மனமில்லா மனதுடன் நான் அப்போது அங்கிருந்து நகர்ந்தேன். இன்னும் பார்த்திராத உங்களைப் பற்றி மட்டுமே நான் அன்று முழுவதும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பயன்படுத்திக் கிழிந்த வெளி அட்டைகளைக் கொண்ட சில புத்தகங்கள் மட்டுமே எனக்கென்று சொந்தமாக இருந்தன. வேறு எதை விடவும் அந்தப் புத்தகங்கள் மீது நான் அதிக பிரியம் வைத்திருந்தேன். அவை ஒவ்வொன்றையும் நான் எவ்வளவோ தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். உங்களைப் பற்றி நினைத்த போது ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டேன்.
எப்படிப்பட்ட புத்தகங்கள்? நீங்கள் அந்தச் சமயத்தில் எவ்வளவு புத்கங்களைப் படித்திருப்பீர்கள்! அதுவும் பல்வேறு மொழிகளில். முழுமையான பண்டிதத் தன்மை கொண்ட மனிதர்! அப்படியெல்லாம் எனக்குள் உண்டான எல்லையைக் கடந்த வழிபாட்டுணர்வால் எந்தச் சமயத்திலும் பார்த்திராத உங்களை நான் மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தேன். எங்களுடைய பூகோளவியல் ஆசிரியரைப் போல நரைத்த தாடியும் கண்ணாடியும் உள்ள, கருணை மனமும் அமைதியான குணமும் கொண்ட ஒருவயதான மனிதரை நான் மனதில் கற்பனை பண்ணினேன். எனினும், அழகான முகத்தைக்கொண்ட மனிதராக இருப்பீர்கள் என்றுதான் நான் நினைத்தேன். என்னால் அப்படி எப்படி நினைக்க முடிந்தது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அன்று இரவு நான் அப்படி உங்களைப் பற்றி ஒவ்வொன்றையும் நினைத்தவாறே தூங்கிவிட்டேன். அந்தத் தூக்கத்தில் நான் உங்களைக் கனவு காணவும் செய்தேன்.
மறுநாளில் இருந்து நீங்கள் அங்கு தங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றாலும், அன்று பார்ப்பதற்கான அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்க வில்லை. அன்றுமட்டுமல்ல- அதற்கடுத்த நாளும் பார்ப்பதற்கு முடியவில்லை. பார்க்க ஆசைப்பட்டும் நிறைவேற முடியாமற் போன ஏமாற்றம் எனக்குள் இருந்த ஆர்வத்தின் ஆழத்தை அதிகமாக்கியது. இறுதியில் மூன்றாவது நாள்தான் உங்களைச் சற்று என்னால் பார்க்க முடிந்தது. அந்தக் காட்சி என்னை எந்த அளவிற்கு ஆச்சரியம் கொள்ளச் செய்தது தெரியுமா? காரணம்- நான் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த அனைத்தையும் தகர்த்துக் கொண்டு எனக்கு முன்னால் தோன்றிய உங்களின் உருவம் ஒரு வயதான மனிதரின் உருவமாக இல்லை. பிரகாசமான முகத்தையும் அழகான தோற்றத்தையும் கொண்ட ஒரு மனிதரின் உருவமாக இருந்தது.