அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
என் உயிரான அவன் இனிமேல் கண் விழிக்கப் போவதில்லை. எந்தச் சமயத்திலும் என்னை அழைக்கப் போவதில்லை. என்னிடம் கொஞ்சிக் குழையப் போவதில்லை. இந்தஉலகத்தில் எனக்கு இனிமேல் உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்...?”
அவர் கடிதத்தில் இருக்கும் விஷயம் தெரியாமல் ஆர்வத்தால் சூழப்பட்டார்.அவர் தான் புகைத்து முடித்த சிகரெட்டை ஆஸ்ட்ரே யில் போட்டார். மேலும் ஒருசிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, வாசிப்பைத் தொடர்ந்தார்.
“வாழ்க்கையை நசுக்கி மிதித்து மனித மனதைப் பந்தாடி மகிழ்ச்சியடைபவரும்,என்னை எந்தச் சமயத்திலும் அறிந்திராத வருமான மனிதர்தான் நீங்கள். எனினும், நான் எப்போதும் உங்களை, உங்களை மட்டும் காதலித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் என் மகன் இறந்து கிடக்கும் இந்த நிமிடத்தில் நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இதயத்தைப் பிளக்கக்கூடிய என்னுடைய இந்த தனிப்பட்ட துக்கத்தை என்னால் யாரிடமாவது கூறாமல் இருக்க முடியாது. அதற்கு எனக்கு இந்த உலகத்தில் என் அன்பிற்குரியவரே, உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
நான் யார் என்பதை உங்களுக்கு ஞாபகம் வருகிற அளவிற்குத் தெளிவாக உணர்த்துவதற்கு ஒரு வேளை, என்னால் முடியாமல் போகலாம். சில நேரங்களில் ஒரு சதவிகிதம் கூட நீங்கள் என்னைப் பற்றி ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை என்ற நிலையும் வரலாம். அதுதானே எப்போதும் என்னுடைய அனுபவமாக இருந்திருக்கிறது!
எனக்கு என்னுடைய உடல் பனியின் காரணமாக குளிர்ச்சியாக இருப்பதைப் போல தோன்றுகிறது. தலைக்குள் தாங்க முடியாத அளவிற்கு கனம் இருப்பதைப் போல தோன்றுகிறது. உடம்பு முழுவதும் வலி பரவுகிறது. எனக்கும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல் வந்திருக்க வேண்டும். இந்தப் பகுதியெங்கும் இந்த தொற்று நோய்பரவி விட்டிருக்கிறது. எனக்கு சிறிதுகூட பயம் தோன்றவில்லை. காரணம்- ஒருதற்கொலை இல்லாமல் அது என்னை என் மகனுடன் கொண்டு போய் சேர்க்குமென்றால்,எனக்கு அந்த விஷயத்தில் சந்தோஷம்தான்.
இப்போது எல்லா விஷயங்களையும் உங்களிடம் கூறுவதற்கு நான் ஆசைப்படுகிறேன்-முதலிலிருந்து இறுதி வரை நடைபெற்ற எல்லாவற்றையும் உங்களிடம் மட்டுமே கூறவேண்டும் என்று. அதற்குக் காரணம்- என்னுடைய வாழ்க்கை எப்போதும் உங்களுக்குச் சொந்தமானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இந்த வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எதுவுமே தெரிந்திருக்கவில்லையே! அதனால்தான் உங்களுக்காக இருக்கும் என்னுடைய இந்த வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.
எனினும், என்னுடைய மரணத்தைத் தவிர நீங்கள் எதையும் தெரிந்திருக்கப் போவதில்லை- இந்தக் காய்ச்சல் என்னுடைய இறுதி மூச்சை எடுத்த பிறகு மட்டுமே. இல்லாவிட்டால் விதியின் கொடுமையால் நான் இனிமேலும் வாழ நேர்ந்தால், இந்தக் கடிதத்தை நானே அழித்துவிடுவேன். அதற்குப் பிறகு இதுவரை நான் உங்களிடம் காட்டி வந்த மௌனத்தைத் தொடர்வேன். அதனால் இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்து விட்டால், நான் மரணமடைந்து விட்டேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தின் இறுதி நிமிடம் வரை உயிரின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்களை மட்டுமே காதலித்து, உங்களுக்குச் சொந்தமானவளாக மட்டுமே இருந்த ஒருத்தியின் துக்கங்கள் நிறைந்த கதை இது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். இந்தக் கடிதம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் உங்களை பயமுறுத்துவதற்காக இருப்பது அல்ல. காரணம்- இனிமேல் எனக்கு எதுவுமே தேவையில்லையே ! அன்போ இரக்கமோ ஆறுதலோ காதலோ எதுவும்... எனினும், நான் விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான். கேட்டுக் கொள்வதும் அதைத்தான். மிகுந்த கவலையுடன் நான் கூறும் ஒரு வார்ததைகூட பொய்யானது அல்ல என்பதையும், இவை முழுவதும் உண்மையானவை என்பதையும் நீங்கள் நம்பவேண்டும். எந்தவொரு தாயும் தன்னுடைய குழந்தையின் மரணத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு பொய்கூற மாட்டாள் அல்லவா? என்னை நம்புங்கள்...
என் வாழ்க்கை ஆரம்பமானதே உங்களைச் சந்திக்க நேர்ந்த பிறகுதான். அதுவரை இருந்து வந்ததை எப்படி வாழ்க்கை என்று கூற முடியும்? உங்களைச் சந்திப்பதற்கான பேரதிர்ஷ்டம் கிடைத்த அந்த புண்ணிய நாளுக்கு முன்பு இருந்த நாட்களைப் பற்றிய ஞாபகம் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் காட்சிகளைப் போல இருக்கிறது. அந்த அளவிற்கு அதுவரை இருந்த வாழ்க்கை எனக்கு வெறுப்பைத் தருவதாக இருந்தது.
என்னுடைய பதின்முன்றாவது வயதில்தான் அன்பிற்குரியவரே, நீங்கள் எனக்கு முன்னால் தோன்றுகிறீர்கள். இன்று என்னுடைய இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் ஃப்ளாட்டில்தான் அப்போது நான் வசித்தேன். நானும் நீங்களும் ஒரே மாடியில் வேறு வேறு இடங்களில் வசித்தோம். உங்களுடைய வீட்டுக் கதவிற்கு நேர் எதிரில் எங்களுடைய வீட்டின் கதவைத் திறந்து போட்டிருப்போம். எனினும், நீங்கள் எங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிற அளவிற்கு சிறப்பாகக் கூறுமளவிற்கு எந்தக் காரணமும் இல்லை.
கவலைகளால் சூழப்பட்ட ஒரு அக்கவுண்டன்டின் விதவையான மனைவியும் அவளுடைய வெளிறிப் போய்க் காணப்படும் வளர்ச்சி அதிகமில்லாத சிறுமியான மகளும். யாருடைய கவனத்தையும் ஈர்க்க முடியாத அளவிற்கு அமைதியான ஒரு வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆதரவற்ற குடும்பத்தை வறுமை எந்த அளவிற்கு ஒதுக்கி ஒரு வழி பண்ணியிருக்குமோ, அதைப் போலத்தான் இயல்பாக நாங்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு விருந்தாளிகள் என்று யாருமில்லை. இன்னும் சொல்லப் போனால், கதவில் வீட்டின் பெயரையோ குடும்பத்தின் பெயரையோ எழுதி வைத்திருக்கவும் இல்லை. அதனால் அந்த விஷயமும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த காலம் பதினைந்தோ பதினாறோ வருடங்களுக்கு முன்பு இருந்தது. இப்போது நீங்கள் அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிற அளவிற்கு எந்தவொரு கட்டாயமும் இல்லை. எனினும், நான் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொன்றும்...உங்களை முதன் முதலாகப் பார்த்த நாள், நேரம், நிமிடம் அனைத்தும்... எல்லா விஷயங்களும் இப்போதுதான் கடந்து சென்ற நிமிடத்தில் நடந்ததைப் போல என் கண்களுக்கு முன்னால் காட்சி அளிக்கின்றன. அப்படியே இல்லையென்றாலும், நான் அவை எல்லாவற்றையும் எப்படி மறக்க முடியும்? எனக்கு மட்டுமே என்று இருக்கக்கூடிய ஒரு கனவு உலகத்தை... முழுமையாக அந்த அழகும் வசீகரமும் உன்னதமும் கொண்ட நிமிடங்களை... அந்தக் காலத்தை நான் மறப்பதற்கு முயற்சித்தால் கூட, என்னால் அதைச் செய்வதற்கு முடியவில்லையே!