அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
என் தந்தை இறந்ததிலிருந்து மிகவும் சிறிய அளவில் கிடைத்துக் கொண்டிருந்த பென்ஷன் பணத்தை வைத்துக் கொண்டு என் தாய் வாழ்க்கைச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருந்தாள். அந்தக் கஷ்டங்களுக்கு மத்தியில் என்னுடைய வளர்ச்சியைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ சிறிதும் கவனம் செலுத்துவதற்கு என் தாய்க்கு நேரமும் சூழ்நிலையும் அமையவில்லை. தோழிகளின் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு கூறக் கூடிய அளவிற்கு ஆழமான உறவு உண்டாகிற மாதிரி ஒரு தோழிகூட அன்று இல்லை. பிறகு.... உடன்படித்தவர்கள். அவர்களோ தங்களுடைய சூழ்நிலைக்கேற்றபடி பாதியளவு ஊதாரித்தனம் கொண்டவர்களாகவும், விஷயங்களை எந்த அளவிற்குத் தீவிர அக்கறையுடன் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு தீவிரமாகத் தெரிந்து கொள்ளக் கூடியவர்களாக இல்லாமலிருந்தார்கள்.
எனக்குள் அரும்பிய தூய்மையான அந்த இளம் உணர்வை சபலமாகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கணக்குப் போட்டார்கள். அந்த காரணத்தால் தனிப்பட்ட முறையில் நான் அவர்களை விரும்பவேயில்லை. எனக்குள்துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த உணர்வுகளும் கனவுகளும் சம வயதைக் கொண்டஇளம் பெண்களைப் போல, வயதிற்கென்றே இருக்கும் வேறு அர்த்தங்களைத் தேடி விலகிச் சென்று விடாமல், நீங்கள் என்ற மையப் புள்ளியில் மட்டும் அழுத்தமாகத் தங்கி நின்றன.
எப்படி, என்ன என்று நான் என்னுடைய மனதில் இருக்கும் அந்த உணர்வைப் பற்றிகூறுவேன்? எந்த உவமை அல்லது வடிவம் உங்களுக்கு அதைப் புரியவைக்கக் கூடிய வல்லமை கொண்டது? ஒன்று மட்டுமே எனக்குத் தெரிகிறது. என் வாழ்க்கை முழுவதும் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், என்னுடைய வாழ்க்கையே நீங்கள்தான். உங்களுடன் தொடர்பு கொள்ளாதஎதுவும் என்னைப் பொறுத்த வரையில் நிரந்தரமானவை அல்ல.
என்னுடைய வாழ்வை, என்னையே நீங்கள் புரட்டி மாற்றி விட்டீர்கள். படிப்புஎன்பது எனக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததாகவும், பொதுவாகவே அலட்சியத்தின் உடன் பிறப் பாகவும் இருந்த இடத்தில் நிலைமை முற்றிலும் வேறு மாதிரி ஆகிவிட்டது. நான் படிப்பில் முழுமையான அக்கறை செலுத்த ஆரம்பித்து, வகுப்பில் முதலிடத்தைப் பிடித்தேன். உங்களுக்கு புத்தகங்கள் மீது உள்ள பிரியம், என்னை நள்ளிரவு வரை படிக்கக் கூடியவளாக ஆக்கியது. உங்களுக்கு பியானோமீது இருந்த ஈடுபாடு என்னை அதைப் படிப்பதற்குத் தூண்டியது. உங்களுடைய பார்வையில் அழகாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக நான்என்னுடைய நிற்பது, நடப்பது, ஆடைகள் அணிவது எல்லாவற்றையும் அழகாகஆக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் தாயின் ஆடைகளைச் சிறியனவாக ஆக்கியவைதான் நான் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது அணியும் ஆடைகள். அதில் இருந்த கிழிசலைத் தைத்திருந்தது என்னை அமைதியற்றவளாக ஆக்கியது.அதைப் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு என்மீது வெறுப்பு தோன்றி விடுமோ என்ற பயம்தான் அதற்குக் காரணம். நான் அந்த தைக்கப் பட்டிருக்கும் கிழிசல்களை புத்தகப் பையால் மறைத்து வைத்திருப்பேன். குறிப்பாக போகும் போதும், வரும் போதும், ஃப்ளாட்டின் சூழ்நிலைகளில் இருக்கும்போதும்.
அன்று உங்களின் அந்த கண்களால் ஆன அணைப்பை ஏற்ற நிமிடத்திலிருந்து நான் ஒட்டு மொத்தமாக மாறி புரண்டு போய் விட்டாலும், அதற்குப் பின்னால் நீங்கள் என்னைச் சற்று பார்க்கக் கூட இல்லை.
உங்களுடைய ஒவ்வொரு செயல்களையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதும், உங்களை இரவும் பகலும் எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் என்னுடைய வேலையாகி விட்டது. உங்களின் வீட்டின் கதவைப் பார்க்கும் விதத்தில்எங்களுடைய கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதன் வழியாக நான் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். இதைக் கேட்கும்போது உங்களுக்கு சிரிப்புவரலாம். எனினும், என்னைக் கேலி செய்யக்கூடாது. எங்களுடைய உள்ளறையின்குளிர்ச்சியைப் பொருட்படுத்தாமல், நான் அந்த வாசலில் வந்து நின்றேன். என்தாய்க்கு எங்கே சந்தேகம் தோன்றிவிடப் போகிறதோ என்ற தாங்க முடியாத உள் பயம்இருந்தது. அதனால் நான் கையில் எப்போதும் ஒரு புத்தகத்தைத் திறந்துவைத்திருப்பேன். அந்த மறைந்து கொண்டே பார்க்கும் பழக்கம் ஒருநாள் மட்டும்இருக்கவில்லை. பல வருடங்களாக நான் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.எனினும், உங்களை எதிர் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த அந்த மணித்துளிகளை நினைத்துப் பார்க்கும்போது இப்போதுகூட எனக்கு வெட்கம் உண்டாகவில்லை.
உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும்போது படிகளில்அந்த பூட்ஸின் சத்தம் கேட்கும். அது என்னுடைய காதுகளுக்கு சங்கீதமாகஇருந்தது. உங்களைப் பொறுத்தவரையில் அந்த நிமிடங்கள் எதுவும் வாழ்க்கையில்முக்கியத்துவமான நேரமாகவோ, காலமாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால், உங்களின் வாழ்க்கையில், உங்களுக்கு சிறிதளவுகூட விலை மதிப்பற்ற அந்த நிமிடங்கள்என்னை எந்த அளவிற்கு சந்தோஷம் கொண்டவளாக ஆக்கி விட்டிருந்தன! உங்களுடையகைக் கடிகாரத்தின் ஸ்பிரிங்கின் துடிப்பை அறிந்திருந்த அளவிற்குகூடஎன்னுடைய மனதின் துடிப்பை நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை. எனினும்,உங்களுடைய ருசி வேறுபாடுகள் அனைத்தையும், உங்களுடன் தொடர்புள்ளஎல்லாவற்றையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். அணியக் கூடிய ஆடைகள்,அவற்றின் நிறங்கள்... எதற்கு...? ஷூ வரை... பிறகு... உங்களைப்பார்ப்பதற்காக இடையில் அவ்வப்போது வரக்கூடிய நண்பர்களைப் பற்றிகூட எனக்குஒரு மதிப்பீடு இருந்தது.
அந்தக் கால கட்டங்களில், அதாவது- என்னுடைய பதின் மூன்றாவது வயதிலிருந்துபதினாறு வயது வரைக்கும் உள்ள காலத்தில் நான் என்னவெல்லாம் செய்தேன்தெரியுமா? உங்களுடைய அழகான கைகளால் தொட்ட அந்தக் கதவின் கைப்பிடியைத்திரும்பத் திரும்ப முத்தமிடுவது... அந்த உதடுகளுக்கு நடுவில் இருந்துகொண்டு உங்களுடைய முத்தங்களைப் பெற்றவை ஆயிற்றே என்று நினைத்து நீங்கள்புகைத்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகளைச் சேகரித்து காணக் கிடைக்காதபொருட்களைப் போல பத்திரமாகப் பாதுகாத்து வைப்பது... இப்படி பைத்தியம்பிடித்துவிட்டதோ என்று பிறருக்குத் தோன்றுகிற மாதிரி பல விஷயங்கள்...சாயங் காலத்திற்குப் பிறகு எத்தனையோ முறை ஏதாவது காரணங்களை உண்டாக்கிக்கொண்டு நான் தெருவை நோக்கி வெறுமனே வெளியேறுவேன். எதற்குத் தெரியுமா? உங்களுடைய அறையின் வெளிச்சத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே.
அப்படி இருக்கும்போது சில வேளைகளில் ஜான் உங்களுடைய சூட்கேஸுடன் கீழேஇறங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அப்போது நீங்கள் ஏதோ தூர இடத்திற்குப் பயணம் புறப்படு கிறீர்கள் என்பதாக நான் நினைப்பேன். அதுஎன்னை எந்த அளவிற்கு கவலைப்படச் செய்தது தெரியுமா? அப்போது இதயம் ஓடாமல்நின்று விட்டதைப் போல எனக்குத் தோன்றும். நீங்கள் அங்கு இல்லாத நாட்களில்என்னுடைய வாழ்க்கையே அர்த்தமற்றதாகவும், தாங்கிக் கொள்ள முடியாததாகவும்,கனம் கொண்டதாகவும் எனக்குத் தோன்றும். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிஒரு வடிவமும் இல்லாமல் ஏமாற்றத்தின் ஆழமான அறைக்குள் கரைந்து விட்டமனதுடன், நான் அந்த நாட்களில் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். என்னுடைய சோர்வையும் எப்போதும் கண்ணீர் நிறைந்து காணப்படும் கண்களையும் என் தாய்பார்த்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருப்பதற்கு நான் படாதபாடு பட்டேன்.
என்னுடைய இந்த உணர்வுகள் சம்பந்தப்பட்ட விளக்கங்கள் உங்களுக்கு தரம் தாழ்ந்தவையாகப் படலாம். உங்களைப் பொறுத்த வரையில் அவை எதுவுமே நடந்திராதஒரு காலத்தின் மிகைப் படுத்தப்பட்ட விளக்கங்கள் மட்டுமே. உங்களுக்கு நான்யார் என்பதைப் பற்றிய ஒரு வடிவமே இல்லையென்றாலும், உங்களுடன் செலவழித்தமதிப்புமிக்க அந்த நாட்களும் அதன் ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு எந்தஅளவிற்கு மிகவும் விருப்பமானவை தெரியுமா? அந்தக் காலத்தைப் பற்றி எனக்குநினைத்துப் பார்ப்ப தற்கு என்னவெல்லாம் இருக்கின்றன தெரியுமா? அதற்குப் பிறகு நான் அந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு இருந்ததேயில்லை. அந்தஅளவிற்கு இனிமையான ஒரு காலத்தைப் பற்றி எதை வேண்டு மானாலும், எத்தனைமுறைகள் வேண்டுமானாலும் கூறினாலும் எனக்குப் போதும் என்றே தோன்றாது. எதைக்கூறினாலும், கூறி முடிக்கவே முடியாது.
உங்களுடைய அந்தக் கால வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போக்கையும் என்னால்கூற முடியும். எனினும், நான் அவற்றை யெல்லாம் கூறி சோர்வு உண்டாகும்படிச்செய்யவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் கூறிகிறேன். இதைக் கேட்கும்போது உங்களுக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். எனினும், என்னை கிண்டல்பண்ணக்கூடாது என்பது மட்டும்தான் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளும்வேண்டுகோள். காரணம்- என் வாழ்க்கையைப் பொறுத்தவரை விலை மதிப்பற்றதும்நிகரற்றதுமான ஒரு இன்ப உணர்வைப் பற்றி நான் கூறுகிறேன்.
நீங்கள் வீட்டில் இல்லாமலிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள் என்று நினைக்கிறேன். ஜான் உங்களுடைய போர்வையையும் கம்பளி களையும் வெளியே எடுத்துக் கொண்டு வந்து தூசிகளைத் தட்டி விட்ட பிறகு, உள்ளே கொண்டு செல்வதற்கு அவர் மிகவும் சிரமப்படுவதாகத் தோன்றியது. நான் அப்போது உதவுவதாகக் கூறி ஜானின் அருகில் சென்றேன். ஜான் எந்தச் சமயத்திலும் அதை எதிர்பார்க்க வில்லை யென்றாலும்கூட, மறுக்காமல் என்னுடைய உதவியை ஏற்றுக் கொண்டார். உங்களுடைய அந்த வீட்டிற்குள் நான் முதல் தடவையாக நுழைகிறேன். எனக்கு அது ஒரு அற்புத உலகமாக இருந்தது. உங்களுடைய எழுதும் மேஜை, மேஜையில்நீல நிறத்தில் இருந்த பூப்பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்ட பூக்கள்,சுவரில் தொங்க விடப்பட்டிருந்த மிகவும் அழகான ஓவியங் கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.... சிறிதும் எதிர்பாராமல் எனக்கு அந்தஅதிர்ஷ்ட தரிசனம் கிடைத்தது. அங்கு பார்த்த ஒவ்வொன்றின் மீதும் எனக்கு ஒருவகையான பக்தி கலந்த ஈடுபாடு உண்டானது. அந்த அரிய அனுபவத்தை உங்களிடம்விளக்கிக் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. ஜானிடம் கேட்டிருந்தால்,எல்லாவற்றையும் நல்ல முறையில் பார்ப்பதற்கு ஒருவேளை அவர் எனக்கு அனுமதிஅளித்திருப்பார். எனக்குள் ஏதோ ஒரு பயம் இருந்தது காரணமாக இருக்கலாம்...ஆனால், நான் கேட்கவில்லை. ஊணிலும் உறக்கத்திலும் இருந்த என்னுடைய முடிவற்றகனவுகளுக்கு மேலும் உரம் கிடைக்கப் பெற்றேன்.
நான் இந்த அளவிற்குக் கூறுவதற்குப் பின்னால் ஒன்றே ஒன்று இருக்கிறது.இன்று வரை என்னைப் புரிந்து கொண்டிராத நீங்கள் என்னுடைய வாழ்க்கையைஇப்போதாவது புரிந்து கொள்ளக் கூடாதா என்ற ஆசையே அது. காரணம்- என் வாழ்க்கைஎன்ற படரும் கொடிகள் உங்களின் வாழ்க்கை என்ற பெரிய மரத்துடன் இனிமேல் சிறிதும் பிரிக்க முடியாத அளவிற்கு இறுகப் பிணைந்து கிடப்பதுதான்.