அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
ஆனால், என் மனதைப் பற்றி உங்களுக்குத் தெரியாதே? நான் எண்ணற்றநாட்களாகவும், வருடக் கணக்காகவும் மனதில் வைத்து காப்பாற்றியஎதிர்ப்பார்ப்புகளும் கனவுகளும் நிறைவேறுவதற்கு திடீரென்று ஒரு நேரம்வந்து முன்னால் நிற்கும்போது, மனதிற்குள் அடக்கி வைத்திருந்த சந்தோஷத்தின் அளவற்ற பிரவாகம்தான் என்னுடைய அந்த எதிர்ப்பின்மையும் உடனடியாக வருவதற்குஒப்புக் கொண்டதற்குக் காரணமும் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதே!நீங்களோ என்னுடைய அந்த சம்மதத்திற்கான காரணம் தெரியாமல் ஆச்சரியத்தில்மூழ்கி விட்டிருந்தீர்கள். வீட்டிற்கு நாம் நடந்து போய்க்கொண்டிருப்பதற்கு மத்தியில் என்னுடைய மனதிற்குள் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் முயற்சிப்ப தாக எனக்குத் தோன்றியது. நம்முடையஎதிர்பாராத சந்திப்புகளுக்கும் என்னுடைய அலட்சியமான சம்மதத்திற்கும்பின்னால் ஏதோ ஆழமாக இருக்கிறது என்று நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்.உங்களுடைய சில கேள்விகள் அந்த ரகசியத்தை வெளிக் கொண்டு வரகேட்கப்பட்டவைபோல தோன்றின. ஆனால், என்னுடைய அந்த ரகசியங்கள் அப்போதுவெளியே தெரிவதைவிட, நான் ஒரு முட்டாள் என்றோ பக்குவமில்லாதவள் என்றோ நினைப்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் என்னுடைய பதில்கள்பிடி கொடுக்காத வண்ணம் சுய உணர்வுடன் கூறியவையாகவும் மிகவும் யோசித்துச்சொல்லப்பட்டவையாகவும் இருந்தன.
உங்களை நான் முதன் முதலாகப் பார்த்த அதே படிகளில் நான் உங்களுடன் சேர்ந்து ஏறும்போது, என் மனமும் உடலும் உணர்ச்சி வசப்பட்டன. அந்த நிலையை உங்களால்புரிந்து கொள்ள முடியாது என்று நான் நினைப்பதைப் பற்றி அன்பிற்குரியவரே,என்மீது நீங்கள் கோபப்படாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு அப்போது பைத்தியம் பிடிக்கப் போவதைப் போன்ற நிலையில் நான் இருந்தேன். என்னிடம் கண்ணீர்சிறிதும் வற்றியிராத இன்றும் அந்த நினைவுகள் என்னை ஆனந்தக் கண்ணீர் வழியச்செய்கிறது.
அந்த வீடும் அதன் ஒவ்வொரு பொருட்களும் எனக்கு எப்போதும் பிரியமானவையாகஇருந்தன. என்னுடைய இளமைக் கால எதிர் பார்ப்புகளின் சின்னங்கள். உங்களைச்சற்று பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த வாசல் கதவைப் பார்த்துக் கொண்டேநான் எவ்வளவு நாட்கள் காத்திருந்திருக்கிறேன்! காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு உங்களின் பாதத்தின் சத்தங்களை மணியோசை யென எழச் செய்த படிகள்...நீங்கள் வருவதையும் போவதையும் நான் ஒரு திருடியைப் போல பதுங்கியிருந்துபார்த்த அந்த இடம்... உங்களுடைய வருகையை அறிவிப்பதைப் போல மெல்லியசத்தத்தில் திரும்பக் கூடிய சாவித் துவாரம்... இப்படி ஒரு காலத்தில்என்னுடைய வாழ்க்கை கடந்து வந்த மையப் புள்ளிகள்... எனக்குள் அந்த நினைவுகள் அனைத்தும் அப்போது வந்து மோதின. இப்போது என்னுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறப் போகின்றனவே என்பதை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன்.அந்த சந்தோஷத்துடன் நான் நம்முடைய- என்னை மன்னிக்க வேண்டும்- நான் அப்படிசற்று கூறுகிறேனே... வீட்டிற்குள் வலது காலை வைத்து நுழைந்தேன்.
அவற்றையெல்லாம் எப்படி விளக்கிக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை.இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வார்த்தைகளால் கூறமுடியாத வகையில்அவை இருந்தன. அந்த வாசற்படியுடன் என்னைப் பொறுத்த வரையில் உண்மையான உலகம் முடிவடைந்து விட்டது. அங்கிருந்து எனக்கு இன்னொரு உலகம் ஆரம்பமாகிறது.இன்னொரு வாழ்க்கையும். எனக்கு அந்த நிமிடங்கள் எந்த அளவிற்குஇனிமையானதாகவும் அரிதானதாகவும் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாகவும் இருந்ததுஎன்பதை நீங்கள் மட்டுமல்ல- வேறு யாராலும் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியாது.
அன்று நாம் ஒரு மெத்தையில் ஒன்றாகச் சேர்ந்து உறங்கினோம். அதுவரை எந்தவொருஆணும் பார்த்தோ தொட்டோ இராத என்னுடைய உடலையும் அனைத்தையும் நான்உங்களுக்கு அளித்த போது, ஆணின் ஸ்பரிசத்தின் சுகம் என்றால் என்னவென்றே தெரியாதவள் நான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாது. காரணம்- எந்த ஒருவிஷயத்திற்கும் நான் சிறிதுகூட மறுப்பு கூறவில்லை என்பது மட்டுமல்ல-உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, என்னுடைய காதல் ரகசியம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்ற விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.உடலும் ஆன்மாவும் ஒன்றாகி நாம் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டுகிடந்தபோது, பேரின்பத்தின் உச்சநிலையில் நான் மூழ்கிவிட்டிருந்தேன்.எனினும், நான் என்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். அதனால் ஒரு ஆணின்வெப்பத்தையும் உணர்ச்சி யையும் முதலில் ஏற்றுக் கொண்ட போது, எந்தவொரு பெண்ணுக்கும் இயல்பாகவே உண்டாகக் கூடிய வெட்கத்தையும் கூச்சத்தையும் உணர்ச்சிவசப்படுதலையும் நான் கடித்து அழுத்திக் கொண்டேன். என்னுடையரகசியங்கள் உங்களை ஏதாவது விதத்தில் கவலைப் படவோ அமைதியற்றவராகவோஆக்கிவிடுமோ என்று நினைத்து என்னுடைய உடலின் அனைத்து வெளிப்பாடுகளையும்நான் அடங்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். சிறிதும் சிரமப் படாமல்கிடைக்கக் கூடிய இன்பங்களில்தான் உங்களுக்கு விருப்பம் இருந்தது என்பதைநான் அன்றே புரிந்து கொண்டேன். மனம் கவலைப்படக் கூடிய விஷயங்களிலும் யாராவது உங்களுக்காக தியாகம் செய்வதிலும் நீங்கள் யாருக்காகவாவது தியாகம் செய்வதிலும் உங்களுக்குச் சிறிதுகூட விருப்பம் கிடையாது.
அந்த வகையில் அன்று ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலைமதிப்பு உள்ளதாக நினைக்கும் எல்லாவற்றையும் நான் உங்களுக்குஅர்ப்பணித்தேன். இதைக் கூறும்போது.... அன்பிற்குரியவரே, என்னைத் தவறாகநினைக்கக் கூடாது. நான் குற்றம் சாட்ட வில்லையே! அதற்கு நீங்கள் என்னை ஏமாற்றவோ பலத்தைப் பயன்படுத்தவோ இல்லையே! நானே விருப்பப்பட்டு அந்தகரங்களுக்குள் என்னை சமர்ப்பணம் செய்து கொண்டேன்.
மங்கலான வெளிச்சம் மட்டுமே சூழ்ந்து நின்றிருந்த அந்த இருட்டில் நான் கண்களைத் திறந்தபோது, காதல் வசப்பட்டு என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு, உடலுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நிமிடத்தில் பூமியில் இல்லையென்றும், ஆகாயத்திற்கு அப்பால் ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.
உங்களுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தபோது, உங்களுடைய அந்த மூச்சு என்உடலில் இளம் வெப்பத்துடன் விழுந்து கொண்டிருந்தது. அது என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.
வார்த்தைகளால் வரைய முடியாத அந்த இரவு நேரத்தில், நீங்கள் அளித்த சந்தோஷத்திற்கு நான் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். என் உயிரின் உயிரே, அன்று என்னை முழுமையாக நான் உங்களுக்கு சமர்ப்பணம் செய்ததில் எந்தச் சமயத்திலும் எனக்கு வருத்தம் என்பதே இல்லை என்பதையும் நான் கூறிக் கொள்கிறேன்.
உங்களுடைய பணியாள் வருவதற்கு முன்பே போய்விட வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்ததால், மறுநாள் அதிகாலையிலேயே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். பிறகு நான் வேலைக்கு வேறு போக வேண்டியிருந்ததே!
வெளியேறுவதற்கு முன்பு என்னை கைகளுக்குள் ஒதுக்கி வைத்துக் கொண்டு நீங்கள் என்னுடைய கண்களையே இமைகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது முழுமையாக இல்லையென்றாலும் உங்களுடைய மனதிற்குள் ஞாபகத்தின் ஒரு கீற்றாவது தோன்றியதா? இல்லை... அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த இரவு வேளையில், சபலத்தின் சந்தோஷம் என் முக அழகை மேலும் கவர்ச்சி நிறைந்ததாக ஆக்கியது காரணமாக இருக்க வேண்டும். நீங்கள் நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தீர்கள். தொடர்ந்து என்னுடைய உதடுகளைச் சற்றுவேதனைப்படுத்திக் கொண்டு அழுத்தமாக முத்தமிட்டீர்கள். பிறகு... என்னவோ சிந்தித்ததைப்போல, எழுதக் கூடிய மேஜைமீது இருந்த தூய வெள்ளை வண்ணம் கொண்டரோஜா மலர்களை எடுத்து என்னிடம் நீட்டினீர்கள்.
அந்த மலர்களை விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தைப் போல, ஒவ்வொரு இதழிலும்முத்தமிட்டவாறு அதன் இறுதி இதழும் வாடிக் கரிந்து விழும்வரை நான் பத்திரமாக வைத்திருந்தேன்.
அன்று நாம் பிரியும்போது மேலும் ஒரு இரவு ஒன்றாகச் சேர வேண்டும் என்று உறுதிப்படுத்தினோம். அந்த இரவும் முதலிரவைப் போலவே சந்தோஷத்தில் நீராடியதைப் போல இருந்தது. அதற்குப் பிறகு மேலும் ஒரு இரவிலும் அதுதிரும்ப நடந்தது. அந்த வகையில் நடந்த மூன்றாவது இரவில் சந்திக்கும் போது நீங்கள் சிறிது காலத்திற்கு வியன்னாவை விட்டு ஒரு பயணம் செல்லவேண்டியதிருக்கிறது என்று என்னிடம் சொன்னீர்கள். என் இதயத்தைப் பிளக்கச்செய்த வார்த்தைகளாக அவை இருந்தன.
முன்பும் உங்களின் பயணங்களை நான் எந்த அளவிற்கு வெறுத்திருந்தேன்! அவை எனக்கு எந்த அளவிற்கு கவலையைத் தரக்கூடியனவாக இருந்தன தெரியுமா? பிரிவினால் உண்டாகக் கூடிய கவலை என் இதயத்தை அரித்துத் தின்ற நிமிடமாக அதுஎனக்கு இருந்தது.
திரும்ப வந்தவுடன் எனக்குத் தகவல் தெரிவிப்பதாக நீங்கள் எனக்கு உறுதி அளித்தீர்கள். அன்றும் நீங்கள் எனக்கு மலர்களைப் பரிசாகத் தந்தீர்கள்.
அந்தப் பிரிவு மிகவும் நீண்டதாக இருந்தது. அந்த இரண்டு மாதங்கள் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையோ அப்போதைய என்னுடைய ஏமாற்றங்கள், இதயத்தில் இருந்த கவலைகள் ஆகியவற்றின் ஆழம் என்ன என்பதையோ விளக்கிக் கூற என்னால்முடியவில்லை.
எது எப்படி இருந்தாலும் நீங்கள் இரண்டு மாதங்கள் முடிவதற்கு முன்பே திரும்பி வந்து விட்டீர்கள். உங்களின் இருப்பிடத்தின் அந்த சாளரங்களுக்கு அப்பால் இருந்த வெளிச்சம் எனக்கு அதை உணர்த்தியது. ஆனால், திரும்பி வந்த தகவலை நீங்கள் எனக்கு எழுதவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையையே சமர்ப்பித்த என்னுடைய அன்பிற்குரியவரே, என் வாழ்க்கையின் இந்த இறுதி நிமிடத்தில் எனக்கு நிம்மதி அளிப்பதற்கும் நினைத்துப் பார்ப்பதற்கும் உங்களுடையது என்று ஒரு கடிதம் வந்து, அந்த கையால் எழுதப்பட்ட ஒரு வரிகூட என் கையில்இல்லை. எனினும், எனக்கு உங்கள் மீது குற்றச்சாட்டு இல்லை. அதற்கு மாறாக, நான் காதலித்துக் கொண்டிருந்தேன்- இப்போதும் காதலித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் மறந்துவிடக் கூடியவராகவும், நம்பிக்கை மோசம் செய்யக்கூடியவராகவும், உணர்ச்சிகளுக்கு அடிமைப்படக் கூடியவராகவும் இருக்கும் அதேநேரத்தில் பரந்த மனம் கொண்டவர் என்பதும் எனக்குத் தெரியுமே! அவற்றையெல்லாம் அறிந்து கொண்டுதானே நான் உங்களைக் காதலித்தேன்!
நான் காத்து... காத்துக் கொண்டு இருந்தாலும் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதவில்லை. என்னை அங்கு அழைக்கவுமில்லை. ஆசையில் மண் விழுந்ததில், என் இதயம் வேதனையில் புகைந்து கொண்டிருந்தது. அன்பிற்குரியவரே, நம்முடைய அந்த அபூர்வமான இனிய மூன்று ஆனந்த இரவுகளில் ஏதோ ஒன்றில் நீங்கள் எனக்குப் பரிசாகத் தந்தீர்கள். உங்களுடைய மகன்தான் நேற்று இறந்து விட்டான். என்கண்களுக்கு முன்னால் எந்தவித சலனமும் இல்லாமல் கிடக்கும் இந்தக்குழந்தை... ஆமாம்... இவன் உங்களுடைய மகன்தான்...
நம்முடைய மகனின் பிறப்பு வரை நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தேன். உங்களுடைய அந்த கைகள் கொண்டு தொடப்பட்டதால் புனிதமடைந்த என்னை எந்தவொரு ஆணும் தொடுவதை என்னால் மனதில் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியாவிட்டாலும், அன்பாலும், எனக்கு நன்கு தெரிந்து நான் உங்கள்மீது கொண்டிருந்த ஆழமான காதலாலும் நமக்குப் பிறந்தமகன் இவன். அவன் நேற்று இந்த உலகத்திடமிருந்து விடை பெற்றுக் கொண்டான்.
நான் இப்போது கூறும் விஷயம் உண்மையாகவே உங்களை ஆச்சரியப்படச் செய்வதைவிடபதைபதைப்படையச் செய்யாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். உங்களுடையமனதில் இப்போது கேள்வியும் குழப்பமும் நிறைந்திருக்கும். நான் இதுவரைஉங்களிடம் இந்த விஷயத்தை ஏன் கூறாமல் இருந்தேன் என்றும், இப்போது இறுதியாகஎதற்கு இவள் இதைக் கூறுகிறாள் என்றும் நீங்கள் மனதில் குழப்பத்துடன்இருப்பீர்கள்.
உண்மைதான். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில் யார் என்று தெரியாத ஒரு பெண்நான். தன்னுடைய பெயரைக்கூட ஒழுங்காகக் கூறியிராத ஒருத்தி. மூன்றே மூன்றுஇரவுகளில் உங்களுடன் இன்ப விளையாட்டுகளில் மூழ்கவும், அதற்கு எந்த வொருமறுப்பையும் கூறாமல் தயாராகவும் இருந்தவள்... அழகிய பெண்களை வசீகரித்துகைக்குள் போட சிறிதும் தயங்காத உங்களுடைய சொந்தமாக நான் இருந்தேன் என்றுசொன்னால், நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். பிறகு எப்படி நான் என்னுடைய குழந்தையின் தந்தை நீங்கள்தான் என்று கூறுவேன்? இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், நீங்கள் என்னுடைய வார்த்தைகளைத் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், பிறகு இருக்கும் வாழ்நாள் முழுவதும் உங்களுடைய மனம் என்னைப்பற்றி சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னொரு மனிதனுக்கு என்னிடம் பிறந்த குழந்தையுடன் உங்களின் சொத்துக்களைக் கைப் பற்றுவதற்காக வந்திருப்பவளாக நான் இருப்பேனோ என்றும், அதற்காக உண்டாக்கிய கட்டுக்கதைகள்தான் நான் கூறும் அனைத்தும் என்றும் உங்களுடைய மனதில் சந்தேகம் உண்டாகும். அந்த வகையில் உங்களுடைய நம்பிக்கையின்மைக்குப் பாத்திரமாக ஆகக்கூடிய நிலையை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல-இன்னும்
சொல்லப் போனால்,உங்களை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைவிட அதிகமாகப் புரிந்துகொண்டிருப்பவள் நான். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனம் கொண்ட நீங்கள் பெரிய பொறுப்புகள் எதையும் ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வ மில்லாதவர் என்பதும், சொந்த மன சந்தோஷத்திற்காக மட்டுமே வாழவும் ஆனந்தத்தில் திளைக்கவும் விரும்பக் கூடியவர் என்பதும் எனக்குத் தெரியும். எங்கும்பிடித்துக் கட்டப்படாமல் சுற்றித் திரிய விரும்பும் நீங்கள், ஒரு தந்தை என்ற உண்மையை திடீரென்று அறிய நேரிட்டால், அந்த மனதில் என் மீதும் நம்முடைய மகன் மீதும் அன்பு அல்ல- வெறுப்புதான் வேகமாகப் பரவும்.உங்களுடைய மனதில் அரை நிமிடம்கூட வெறுக்கப்பட்டவளாக ஆவது என்பதை என்றென்றைக்குமாக என்னை உங்களுக்காக சமர்ப்பித்த என்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?நான் இந்த விஷயத்தைக் கூறுவதால், உங்களுக்கு நான் ஒரு கடமைப்பட்டவளாகவோ, சுமையாகவோ ஆவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது உயிரின் இறுதி மூச்சு வரை உங்களுக்கு ஒரு தொல்லையாகவோ அமைதியைக் கெடுக்கக் கூடியவளாகவோ இருக்கக் கூடாது என்று நான் ஆசைப்பட்டேன். அதனால் நம் மகனுடைய எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்றுக் கொண்டேன்.